Friday, September 18, 2009

#மனசாட்சியில்லாத கமலஹாசன்


இப்போதுதான் உன்னைப் போல் ஒருவன் பார்த்து விட்டு வந்து இதை எழுதுகிறேன்

மூலப் படமான 'வெட்னஸ் டே'யில் அனுபம் கேர் செய்த அளவில் பாதி கூட அந்தக் கதா பாத்திரத்தை மோஹன் லால் செய்யவில்லை( இதில் 'கேரளா மட்டுமல்ல ; இதுவும் ‍ அதாவது தமிழ் நாடும் என் நாடுதான்' என்பது போன்ற வெட்டி வீராப்புகள் ஓரு பக்கம்)

கமல் நடிப்பு நன்றாக இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை. ஆனால் அந்தக் கதாபாத்திரத்துக்கு இந்தியில் நசுருதீன் ஷா 100 விழுக்காடு பொருத்தம் என்றால் , கமல் 60தான். கமலின் தோற்றம் தோரணை எல்லாம் ஒரு சாதரண மனிதன் கதா பாத்திரத்துக்கு பொருந்தி வரவில்லை.

ஆனால் இதையெல்லாம் மீறி ,கமலின் நடிப்புக்காக ரசித்து விட்டுப் போகலாம் என்று பார்த்தால் ......
கமலுக்கே அது பிடிக்கவிலை போலும்.

விருந்து பரிமாறி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ,முடியும் நேரத்தில் இலையில் கொஞ்சம் சாக்கடையை அள்ளி
ஊற்றினால் எப்படி இருக்கும்?

அதே கதை.

கடைசிக் காட்சிகளில் கமல் தீவிரவாதத்துக்கு எதிரான சாதாரண மனிதனின் நிலையில் இருந்து பேசுவார். அதில் கமல் உதிர்த்திருக்கும் முத்து .... இல்லை இல்லை , ஒரு உப்பு

" மும்பையில டில்லியில குண்டு வெடிச்சா தமிழ் நாட்டுல யாரும் அதுக்காக வருத்தப் படறது இல்ல... அங்க தான வெடிக்குது ... நம்ம ஊர்லயா வெடிக்குதுங்கற நினைப்பு. இங்க உள்ளவங்களைப் பொறுத்தவரை அது ஒரு நியூஸ். தட்ஸ் ஆல்"

என்பதுதான் அந்த வசனம்.

ஹலோ மிஸ்டர் கமல் !

எந்த ஊருல நீங்க இருகீங்க? உங்க அப்டேட்டிங் அறிவு இம்புட்டுதானா?

பிரபாகரனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வட இந்தியாவுக்கு காவிரி பிரச்னை பற்றியோ முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றியோ கவலை இல்லை. தமிழ் நாட்டில், ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றிக் கவலை இல்லை.

இன்றும் இலங்கையில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பி அடிமைகளாய் வாழ்வது பற்றி , அவர்கள் படும் கற்பனைக்கப்பாற்பட்ட துயரங்கள் பற்றி , தமிழ்ப் பெண்களின் கர்ப்பப் பைகள் ஆப்பரேஷன் மூலம் அகற்றப் படுவது பற்றியும் தமிழ் ஆண்கள் திட்டமிட்டுக் கொல்லப் படுவது பற்றியும் உலகத் தொலைக்காட்சிகள் எல்லாம் கண்ணீர் வடித்தாலும், உங்கள் 'இந்தி'யத் தொலைக்காட்சிகளுக்கு அது தெரியாத 'இனக் ' குருடு என்ற மன நோய் இருக்கும்.

ஆனால் தமிழ்னாட்டில் உள்ளவன் மட்டும் வட இந்தியாவில் ஒரு சைக்கிள் டியூப் வெடித்தாலும் மாரடித்துக் கொண்டு மண்ணில் புரண்டு அழ வேண்டுமா கமல்'ஜி'?

உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் மும்பையிலும் டில்லியிலும் குண்டு வெடிப்பது நடப்பது இங்கே முதல் பக்க கொட்டை எழுத்துச் செய்தியாகவே அதாவது நியூச் ஆக வாவதுமாறி விடுகிறது

ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் இங்கே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது உங்கள் வட இந்தியச் சேனல்களில் நியூஸ் ஆகக் கூட வருவது இல்லையே கமல்'ஜி'?

இதை அங்கே சொல்லக் கூடிய விருமாண்டி வீரம் உங்களுக்கு உண்டா?

படத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லாலிடம் நீங்கள் ஒரு காட்சியில் சொல்வீர்களே , " நீங்க விதம் விதம அவார்டு வாங்கிக் குத்திக்கலாம் " என்று .

அது போல உங்களுக்கு இன்னும் விதம் விதமாய் அவார்டு வாங்கி உடம்பு புண்ணாகும் அளவு குத்திக்கொள்ள ஆசை இருக்கலாம் . அதற்காக ஏன் மனிதாபிமானமுள்ள தமிழர்களின் மனசைப் புண்ணாக்குகிறீர்கள்?

ஒன்று புரிகிறது கமல்....!

ஒரு காட்சியில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லும் அந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்ப இளைஞன் சொல்வானே.... " ஹி இஸ் பிரெய்னி ... ஆனா மேதை இல்ல...." என்று.

அதை சற்று மாற்றினால் , உங்களுக்கும் அது பொருந்தும்.

நீங்கள் சிறந்த நடிகராக இருக்கலாம்....

ஆனால் நியாய உணர்வுள்ள. நல்ல கலைஞன் இல்லை.!