Sunday, January 31, 2010

#ஈரான் திரைப்படமும் நம்ம ஊர் தேர்தலும்நாம் பார்த்த அந்த ஈரான் நாட்டுத் திரைப்படம், சில வித்தியா-ச-மான உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்தியது.

ஈரான் திரைப்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் பபக் பயாமி. அவர் இயக்கிய படம்தான் ‘ராயே மக்ஃபி’. ஆங்கிலத்-தில் ‘சீக்ரெட் பேலட்’ அதாவது ரகசிய வாக்குப் பதிவு.

வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி, ஆட்டுக்கறி விருந்து போட்டு, சத்தியம் வாங்கி, “தின்ன கறிக்குப் பங்கம் இல்லாம நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடு. மீறிப் போட்டதா தெரிஞ்சுது... அடுத்த விருந்துல உன் உடம்புக் கறி கொதிக்கும்டி மாப்ளேய்...” நாக்கைத் துருத்தி ‘அழகு’ காட்டி...

“இதுல என்ன ரகசிய வாக்கெடுப்பு வாழுது?” என்று கேட்கலாம். நம்முடையது ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி... இல்லையில்லை வீக்கம். ஆனால், முழுமையாக ஜனநாயகம் மலராத ஈரான் போன்ற நாடுகளில் வாக்குப்பதிவு இன்னும் ரகசிய-மாகவே நடக்கிறது. அப்படி ஒரு தேர்தலை ஒட்டிய சில நிகழ்வுகள்தான் ‘சீக்ரெட் பேலட்’ படம்.


ஈரான் நாட்டின் கடற்-கரையை ஒட்டிய கிஷ் தீவு. தீவு என்றதும் பசுமையான மரங்கள், குளுமையான ரெசார்ட்டுகள், வண்ணமயமான நிழற்குடைகள், கண்களைக் காதலிக்கும் நீல நிற நீச்சல் குளங்கள், அழகிய சாய்வு நாற்காலிகள்... பழரச ‘கிக்’ பானங்கள்... அருகே உடலைத் திறந்து போட்டு கண்களை மூடிப் படுத்-திருக்கும் (பின்னே... வெட்கத்தை மறைக்க வேண்டாமா?) பே--வாட்ச் பெண்கள்... என்று நீங்கள் யோசித்தால், உங்கள் மனைவியிடம் போட்டுக் கொடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. தீவின் பெயர் வேறு கிஷ். ஆனால் ஈரான் தீவுகள் எப்படி இருக்கும் என்பது நன்றாகவே தெரியும் என்பவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

சுற்றிலும் கடல். ஆனால் “வாடி உள்ள... வச்சுக்கிறேன் உன்ன..” என்பதுபோல மிரட்டும் வறண்ட பொட்டல் மணல் வெளிகள், தீவிரவாதச் சூரியக் கொடுமை. இதுதான் ஈரான் தீவுகள்.

அப்படியே ஆன கிஷ் தீவில் அதிகாலை நேரத்தில் ஒரு விமானம் வந்து பாராசூட் மூலம் ஒரு பெட்டியை போட்டுவிட்டுப் போகிறது. கள்ளக்கடத்தல்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிக் காவல் இருக்கும் இரண்டு வீரர்களில் ஒருவன் அதை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான். அதோடு அவன் டியூட்டி முடிய, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொருவன் எழுப்பப்படுகிறான். அவன் பெட்டியைப் பிரித்துப் பார்க்க, ‘இன்று தேர்தல் நாள். வாக்குகளைச் சேகரிக்க தேர்தல் அலுவலர் ஒருவர் வருவார். அவருக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருந்து மாலைவரை பணியாற்ற வேண்டியது’ என்று அரசு உத்தரவு கடிதம் இருக்கிறது.

எட்டு மணி வாக்கில் ஒரு படகு வர, அதில் இருந்து திடீரென ஒரு பெண் இறங்குகிறாள். “அஞ்சு மணிக்கு ரெடியா இரு” என்று அவளிடம் சொல்லி-விட்டு படகு கிளம்ப, “அலோ பொண்ணு... யாரு நீ... பொம்பளைங்க எல்லாம் இங்க வரக் கூடாது... போட்ல ஏறிக் கிளம்பு” என்று ராணுவ வீரன் விரட்ட “நான்தான் தேர்தல் அலுவலர்” என்கிறாள் அந்தப் பெண்.

“வருவது பொம்பளை என்று சொல்லவே இல்லையே” என்று கோபமாகக் கிடுகிடுக்கிறான். பொம்பளைக்குக் கீழே வேலை செய்வதா? ஆனால் அரசு உத்தரவு ஆயிற்றே.

ராணுவ ஜீப்பில் பெண் அலுவலரை ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டியபடி கிளம்பு-கிறான். ஆள் அரவமற்ற பொட்டல் மணல் வெளி. தூரத்தில் ஒருவன் தெரிய... “வேகமாக ஓட்டு... அவரைப் பிடித்து ஓட்டுப்போட வைப்போம்” என்று அலுவலர் சொல்ல, ஜீப் வேகமாகப் போக, அந்த ஆள், துப்பாக்கிச் சுமந்த இந்த ராணுவ வீரரைப் பார்த்து பயந்து ஓட, ஒருவழியாக அவனைப் பிடித்து, தேசிய அடையாள அட்டையைப் பரிசோதித்த பின்பு ஓட்டுப்போட வைக்கிறாள். ஒரு ஓட்டுப் போட வைப்பதற்குள் உயிர் போய்விட்டது போன்ற உணர்வு.

“கடத்தல் பண்ற நாய்... அதான் ஓடுது” என்று ராணுவ வீரன் திட்ட, “கடத்தல்காரர்களுக்கும் ஓட்டளிக்கும் உரிமை உண்டு. அதுதான் ஜனநாயகம்” என்கிறாள். (நம்ம அரசியல்வாதிகள் இந்த ஒரு வசனத்துக்கே கைதட்டி விசில் அடித்து அமர்க்களப்படுத்தி விடுவார்கள்!) கோபம் கொண்ட அவன் ஜீப்பைவிட்டு இறங்கிப்போக, அவனைச் சமாதானப் படுத்துவதற்குள் பெரும்பாடு. படிப்பறிவு இல்லாத இருபது பெண்களை அழைத்துவரும் ஒருவர், “அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நானே அவர்கள் ஓட்டையும் போடுறேன்” என்று அடம்பிடிக்க, “அது கள்ள ஓட்டுய்யா” என்று புரிய வைப்பதற்குள் தொண்டை வறண்டு விடுகிறது அவளுக்கு.

ஓட்டுப்பெட்டியை கஷ்டப்பட்டு சுமந்து ஒரு படகில் ஏற்றி கடலுக்குள் சென்று, மீன் பிடிப்பவர்-களிடம் ஓட்டுப் போடச் சொல்கிறாள். “நான் மீன் பிடிக்கிற உருப்படியான வேலையைச் செய்றேன். தொந்தரவு பண்ணாதே” என்று கடுப்படிக்கிறான் ஒருவன். இன்னொருவனின் ஓட்டைப் பெற முயலும்போது, கடற்படை அவனைக் கைது செய்கிறது.

வழியில் ஓர் அபலைப் பெண்ணைக் கண்டு அந்த அபலையின் வீட்டுக்கு ஓட்டுப் பெட்டியைக் கொண்டு செல்கிறார் பெண் தேர்தல் அலுவலர். அதை வைத்து அந்தக் குடும்பத்தில் அனைவரையும் ஓட்டுப்போட வைக்கலாம் என்று ஆசை. ஆனால் கனவு கலைகிறது. ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வாய் வறளச் சொல்லியும் பலன் இல்லை.

ஓரிடத்தில் பாகோ அம்மையார் என்ற மூதாட்டி பல குடும்பங்களுக்குத் தொழில் சொல்லிக்கொடுத்து வாழ வைக்கிறாள். அந்த இடத்தின் ராணிபோல வாழும் அந்த அம்மையாரையே ஓட்டுப்போட அவளது கணவன் அனுமதிக்கவில்லை. எவ்வளவு போராடியும் பலன் இல்லை.

இன்னொரு இடத்தில் “ஓட்டுப்போட விரும்பும் பலர் இந்த பாறைக்கு அடியில் உள்ளனர் என்று ஒருவன் கூற, கணவன்மார்களுக்குப் பயந்து பெண்கள் ரகசியமாக வந்திருப்பார்கள்... உள்ளே குகை இருக்கும். அல்லது தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்கள் பெயரை எழுதி இருப்பார்கள் என்று நினைத்து, கஷ்டப்பட்டு பாறையை நகர்த்த, ராணுவ வீரனும் உதவ, உள்ளே நான்கு வருடம் முன்பு செத்துப்-போனவர்களின் பெயர்கள் மட்டும் இருக்கிறது. வெறுத்துப்போகிறாள் அந்தப் பெண் அதிகாரி.

அத்துவான வெளியில், ஒரு தனியார் நிறுவனத்துக்காக, சூரிய அடுப்பு யூனிட்டைப் பராமரித்து வரும் ஒரு வயதான கிழவர் பெண் அலுவலரையும், ராணுவ வீரனையும் அன்போடு உபசரித்து காபி எல்லாம் தரத்தயார். ஆனால் ஓட்டுப்போடத் தயாரில்லை. “இவுனுகளுக்கு எல்லாம் ஓட்டுப்போடறது வேஸ்ட். மக்களுக்காக ஒரு துரும்புக்கூடக் கிள்ளிப் போட மாட்டானுங்க. சுய நலப் பேய்கள். என்னோட வேட்பாளர் கடவுள்தான். அவருக்கு வேண்ணா ஓட்டுப் போடறேன்” என்கிறார். ஆனால் கடவுள் வேட்பாளர் இல்லையே.

காபிகூடக் குடிக்காமல் தாகத்தோடு வெளியே வருகிறாள். ஏமாற்றம் மேலிடுகிறது. ஐந்து மணிக்குள் மீண்டும் கடற்கரையை அடைந்தால்தான் சேகரித்த ஓட்டுக்களையாவது ஓட்டு எண்ணிக்கையில் சேகரிக்க முடியும். வண்டி கிளம்பும்போது சாலையில் சிவப்பு சிக்னல்.

எப்பேர்ப்பட்ட சிவப்பு சிக்னல்?

ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு எந்தச் சாலையிலும் ஒரு ஈ காக்கா கொசுக்கூட பறக்கவில்லை. ஆனால் ரெட் சிக்னல். ‘நேரமாச்சு இன்னும் பல ஏரியாவுக்குப் போகணும்’ என்று அவள் அவசரப்படுத்த, ‘சிக்னல் மாறினால்தான் வண்டியை எடுப்பேன்’ என்று அவன் சொல்ல, ரிப்பேரான சிக்னல் சிவப்பிலேயே நிற்க, அலட்டாமல் உணச்சியின்றி, நிதானமாகச் சொல்லப்-பட்டுள்ள இந்தக் காட்சியில் நமக்குள் பீறிடுகிறது சிரிப்பு.


ஓரிடத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சைக்கிளில் வைத்து விற்கும் வியாபாரி ஒருவரைப் பிடித்து ஓட்டுப் போடச் சொல்ல, “என்கிட்ட ஏதாவது பொருள் வாங்கினா ஓட்டுப்போடுறேன்” என்று அவர் பேரம் பேச, ஆகா!

ஒரு காட்டில் பிண அடக்கம் நடைபெறுகிறது. அங்கே நாற்பது ஐம்பது பேர் திரண்டு நிற்க, தர்ம சங்கடத்தோடும் வாய்ப்பைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடும் அந்தத் துக்கத்தில் பங்கெடுத்துவிட்டு, பின்னர் ஓட்டுப்போடச் சொல்ல, அவர்கள் மறுக்க, ஒவ்வொரு-வரிடமும் கெஞ்சியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் போகின்றனர். பரிதாபம்.

வழியில் ஒரு பெண், “இங்கே பெண்களும் பிணங்களும் ஒன்று, ஓட்டாவது உரிமையாவது...” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். “கணவன் சொன்னா- அவுங்க சொல்ற ஆளுக்குத்-தான் ஓட்டுப் போடு-வோம். ஆனா அவங்க வீட்ல இல்ல. அதனால முடியாது” என்கின்றனர் சில பெண்கள்.

கொஞ்சம்கூட சுயநலமின்றி, மக்கள் நன்மைக்காக பெண் தேர்தல் அலுவலர் படும் சிரமங்களைப் பார்த்த ராணுவ வீரனுக்கு அவள் மேல் மரியாதை வருகிறது. அவன் இல்லாவிட்டால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவளும் உணர்கிறாள்.

ஓரிடத்தில் காதுகளைக் கிழிக்கிற- கல் உடைக்கும் கிரஷர் யூனிட் இரைச்சலில் மூச்சுக்-குழலைப் பதம் பார்க்கும் புழுதிப்படலத்தில், ஒரு பெரிய சரளைக்கல் மலையில் கால்கள் புதைய ஏறி நடந்து இறங்கி, மிஷினில் இருப்பவனிடம் ஓட்டுப்போடச் சொல்லி பெண் அலுவலர் கேட்க, அவன் அலட்சியமாக சைகைக் காட்டி புறக்கணிக்க, கால்கள் தள்ளாட சோர்ந்து போய் தலைகுனிந்து அவள் நடக்கும் காட்சியில் நம் கண்கள் நீர்ப்பூக்கிறது.

“எத்தனை வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வரும்?” என்று ராணுவவீரன் கேட்க, “ நான்கு வருடத்திற்கு ஒருமுறை” என்று அவள் கூற, “அடிக்கடி வராதா?” என்று கேட்கிறான். மௌனம். “அடிக்கடி பலமுறை நீ வந்தால் மகிழ்வேன்” என்று அவன் கூற, இருவரின் மெல்ல்ல்லிய முகபாவங்கள்!

அடேயப்பா... காதலின் ஈர்ப்பை இவ்வளவு மென்மையாக, கண்ணியமாக, விலகி நின்ற தன்மையில் இருந்து எந்தத் திரைப்படத்திலும் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.


கடைசியில் மீண்டும் கடற்கரையை அடைய, அவளை அழைத்துச் செல்ல விமானம் வந்திருக்க, அப்போதுதான் ராணுவ வீரனிடம் ஓட்டுப்போடச் சொல்லவில்லையே என்று அவளுக்குப் புரிகிறது. அவசர-மாகப் போடச் செல்ல, “நீ” என்று எழுதி ஓட்டுப் போடு-கிறான் ராணுவவீரன்.

விக்கித்துப்போன பெண் தேர்தல் அலுவலர், “நான் வேட்பாளர் இல்லையே?” என்று கூற, “எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரிய-வில்லை” என்கிறான். அவள் விமானம் ஏறிப்போக, மீண்டும் வழக்கம்-போல் களப் பணியில் ராணுவீரன்.

பெண் தேர்தல் அலுவலராக ராசிம் அபிதி என்ற நடிகையும், ராணுவ வீரனாக சைரஸ் அபிதி என்ற நடிகரும், நன்றாக... ‘நடித்து இருந்தனர்’ என்று சொல்வது அவர்களுக்குச் செய்யும் துரோகம்.

அடேயப்பா... ஈரானில் ஓட்டுப் பதிவுப் பணியில் தேர்தல் பணி செய்யும் அலுவலர்களுக்கு இவ்வளவு கடினமான வேலையா?! என்று மிரள வைத்த படம் இது.

நம்ம ஊரில் அரசாங்கக் கட்டடத்தில் பந்தாவாக அமர்ந்து கொண்டு பிரியாணியும் பீடாவுமாக மக்களை அலட்சியப் பார்வைப் பார்த்தபடி, கட்சிக்காரர்களிடம் கத்தைக் கத்தையாகக் கையூட்டுப் பெற்று கள்ள ஓட்டு போடத் துணைபோகும் தவறான தேர்தல் அலுவலர்-களை, நரேஷ்குப்தாவிடம் சொல்லி, ஒரு முறை ஈரான் நாட்டில் தேர்தல் பணிக்கு அனுப்பி வைக்கற தண்டனையைத் தரலாம். தப்பே இல்லை!Sunday, January 24, 2010

# பாலாவுக்கு வந்த பரிதாப (தேசிய) விருது
நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குனராக பாலா தேர்ந்தெடுக்கப் பட்டபோது சந்தோஷமாக இருந்தது . ஆனால் ரொம்ப சந்தோஷம் ஒன்றும் இல்லை.

காரணம் இது பிதாமகனுக்கே வழங்கப் பட்டிருக்க வேண்டிய கவுரவம்.

எப்படி காவிரித் தண்ணீர் வழியெல்லாம் பாய்ந்து விட்டு கடைமடைப் பகுதிக்கு (அது நெல் விளைச்சலில் சாதனை படைக்கும் பகுதியாக, குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் தரும் பகுதியாக இருந்தாலும் கூட ) கடைசியாக வருகிறதோ,

அது போல ''என் நடிப்பின் குருவே சிவாஜி அண்ணாதான். அவரது நடிப்புக்கும் சாதனைக்கும் முன்னால் நானெல்லாம் தூசுதான்" என்று சொன்ன கன்னட ராஜ்குமாருக்கு எல்லாம் தாதா பால் சாகேப் விருதைக் கொடுத்து முடித்து விட்டு ,

அந்த விருதுக்கும் வயதாகி அது தா'த்'தா பால் சாகேப் விருதாக மாறிய பின்னர்

கடை மடைக் கதையாக சிவாஜிக்கு வழங்கினார்கள் 'மட'த் தலைவர்கள்.
மண் தரைஎப்படி கடை மடைக்கு கடைசியாக தண்ணீரை அனுப்புமோ அது போல் மண்டையில் 'மண்' உள்ள நாங்களும் அதே போலதான் நடந்து கொள்வோம். தகுதி திறமை எல்லாம் பார்க்க மாட்டோம் என்று நிரூபித்தார்கள் .

இன்று பாலாவுக்கும் அதே நிலை.

ஆனால் எப்படி இருந்தாலும் பாலிவுட்டுக்கு 13 விருதுகள் கிடைத்திருந்தாலும் விருதுப் பட்டியலில் வழக்கம்போல‌ வங்காள , மலையாளப் படங்களின் ஆதிக்கமும் உள்ளது . காரணம் மத்திய அரசிலும் அதன் காரணமாக விருதுக் குழுவிலும் இவர்கள் செலுத்தும் ஆதிக்கமே.

வங்காளப் படமான அந்தாஹின் நல்ல படமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக இத்தனை விருதுகளா என்று நான் கேட்டால் , 'ஏன் , தகுதி இருந்தால் வாங்கக் கூடாதா?' என்று பின்னூட்டம் எழுத நீங்கள் துடித்தால் அது நியாயம்தான். ஆனால் நாயகன் படத்துக்கு இன்னும் சில விருதுகள் முறைப்படி வந்திருக்க வேண்டும் என்று குரல் வந்தபோது "சரிதான்.. ஆனால் எல்லா விருதையும் தமிழுக்கே கொடுத்தால் மற்றவர்களுகுத் தர வேண்டாமா என்று டில்லி அன்று முனகியது நியாயமா என்று யோசித்தல் நலம்.

தமிழில் சிறந்த பிராந்திய மொழிப் படம் வாரணம் ஆயிரம்! . அதற்கான காரணம் ஆயிரம் அல்ல. ஒன்றே ஒன்றுதான் . அதாவது ஒருவரே ஒருவர்தான். கௌதம் வாசுதேவ் 'மேனன்' அதை விட சிறந்த படங்களே தமிழில் இல்லையா என்ன?

சிறந்த குழந்தைகள் படமாக குப்பாச்சிகளு என்ற கன்னடப் படம் விருதளிக்கப் பட்டது . பசங்க முன்னால் அது ஒன்றுமே இல்லை என்கிறார்கள் . தவிர பல இண்டர்நேஷனல் போட்டிகளில் அது பசங்க படத்துடன் மோதி சிதறிப் போன படம்.

'மலையாளப் பட உலகம் இப்போதெல்லாம் மிக மோசமாகப் போய்க் கொண்டுள்ளது . நல்ல படங்களே வருவதில்லை ' என்று சில மலையாளப் பிரமுகர்களே மனம் திறந்து சொல்கின்றனர்.

ஆனாலும் நடுவர்களின் சிறப்பு விருது என்ற ஒரு விருதை ( எப்படி எப்படியெல்லாம் விருது தருகிறார்கள் பாருங்கள் . இது நடுவர்களின் சிறப்பு விருது என்றால் அப்ப மத்தது எல்லாம் சாதா தோசைகளா...? இல்லை அவைஎல்லாம் நடுவர்களின் விருதுகளே இல்லையா?) பயாஸ்கோப் எனற படத்துக்கு 'வாங்கி'க் கொண்டு வந்து விட்டனர். இந்தப் படத்தைத் தயாரித்தது நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன். அதில் மலையாளிகளின் ஆதிக்கம் உச்சத்தில் !

நடுவர் விருதுக்கு பயாஸ்கோப்பை விட சிறந்த படமாக தமிழில் வந்த பொக்கிஷத்தையே சொல்ல முடியும்.

இப்படி வருடா வருடம் தீபாவளி வருவது போல பெரிய ஜவுளிக் கடைகளில் இருந்து புது வருடக் காலண்டர் வருவது போல வங்காளிகளுக்கும் மலையாளிகளுக்கும் ரெண்டு விருதும் சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டு வந்து விடுகிறது .இதனால் நம்ம ஆட்களும் நல்ல சினிமான்னா அது வங்காள , மலையாள சினிமாதான் என்று சில அறிவு ஜீவிக்களூம் கொட்டாவி விடுவது போல அனிச்சையாக சொல்லிக் கொண்டே உள்ளனர். காலம் மாறி விட்டதையே புரிந்து கொள்ளாமல்.

இந்த நிலையில்தான் பாலாவுக்கு கடை மடைத் தண்ணீர் கதையாக தேசிய விருதை ரொம்ப தாமதமாகத் தந்துள்ளனர் .

இலங்கையில் தமிழினத்தை சிங்களர்கள் ராட்சஷ வெறியோடு கருவறுத்துக் கொண்டிருந்த‌ வேளையில் சிங்களப் பெண்ணான பூஜாவை நான் கடவுள் படத்தில் கதா நாயகியாக்கி பேர் வாங்கித் தந்தது ஒரு பக்கம் மனசுக்கு ஒப்பிதமில்லை என்றாலும்....

( பாலாவிடம் பூஜாவை அறிமுகப் படுத்தியது யார் தெரியுமா? மைக் செட் தமிழன் சீமான்! அதற்குமுன்பே சீமான் தனது 'தம்பி' படத்தில் இந்த பூஜாவைத்தான் கதாநாயகியாக்கி தனது தமிழ் இன உணர்வை 'வெளி'ப்படுத்தி இருந்தார். ஏனென்றால் தம்பி படத்தில் பூஜாவை சீமான் கதா நாயகியாகப் போட்டபோதும் பாலாவிடம் அறிமுகப் படுத்தியபோதும் இலங்கையில் சிங்களன் தமிழனைக் கொடுமைப்படுத்தவே இல்லை . உப்பு மூட்டைத் தூக்கி விளையாடிக் கொண்டல்லவா இருந்தான்....! சீமான் ஒரு திடீர்த் தமிழன் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?)

தேசிய விருது பெற்றிருக்கும் பாலாவை வாழ்த்துவோம்!

Friday, January 22, 2010

# ஆஸ்கார் விருதுகள் சூட்சுமக் கயிற்றின் சூத்திரம்

ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக நமது ஏ.ஆர்.ரஹ்மான் ஒன்றுக்கு இரண்டாக ஆஸ்கார் விருதுகள் பெற்ற தங்கமயமான அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் நம்மை பெருமிதத்திலும் புல்லரிப்பிலும் திளைக்க வைக்கிறது என்பதில் என்றைக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை.

வழக்கமாக ஆஸ்கார் விருது பெறுபவர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பு, அழுகை, கோணங்கித்-தனமான சேட்டைகள் எதுவும் அவர் செய்யாதது... அன்பு, வெறுப்பு என்று, உலகளாவிய ஒரு தலை-வனைப்போல பேசியது ... சென்னைக்கு வெளியே போய்விட்டாலே வாயில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு பேசும் தலைகால் புரியாத தமிழர்களைப்போல் இல்லாமல், ‘என் தாயக மொழியில் சில வார்த்தைகளைப் பேச ஆசைப்-படுகிறேன்’ என்று கூறி ‘ எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று கூறியது, இதுபோன்ற செயல்-களால் ஆஸ்கார் விருதுக்கு ரஹ்மான் ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்துவிட்டார்.

ஆனால் ரஹ்மான் கொடுத்த சந்தோஷத்திற்கு வெளியே வந்து பார்த்தால்... நாம் காலம் காலமாக ஆஸ்கார் விருதுகளுக்கு அளவுக்கு அதிகமான மரியாதை தருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ரஹ்மானின் உண்மையான ரசிகர்களுக்கு மன சாட்சியுடன் ஒரு கேள்வி. ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசைதான் இதுவரை ரஹ்மான் தந்த மிகச்சிறந்த பின்னணி இசை என்று சொல்வீர்களா? தர்மசங்கடத்துடன் அமைதி காத்த உங்கள் நேர்மைக்கு நன்றி.

‘லகான்’ படத்தில் ரஹ்மான் வழங்கிய பின்னணி இசையின் முன்னால் ‘ஸ்லம்டாக்’ ஒன்றும் பெரிய சாதனை இல்லை. ஆனால் அந்நிய மொழிப்படங்கள் பிரிவில் ‘லகான்’ ஆஸ்கார்
விருதுக்குச் சென்றபோது, அந்த வருடம் அதைப் புறக்கணித்து
’ No man's land’ என்ற சுமாரான படத்துக்கு விருது கொடுத்தனர். ஏன்?

‘லகான்’ மட்டும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு, படத்தின் இறுதிக்காட்சி மட்டும் மாற்றப்பட்டு இருந்தால், அந்த வருடமே ரஹ்மான் ஆஸ்கார் விருதை அள்ளி இருப்பார். ‘லகான்’ புறக்-கணிக்கப்பட்டது ஏன்? க்ளைமாக்ஸை மாற்றினால்தான் விருது கிடைக்கும் என்பது ஏன்?

அதேபோல் இந்தியாவே ‘ஜெய்.. ஹோ’ என்று பாடி விட்டது. குஷ்பூ, ரம்பா, கலா மாஸ்டர் வரை அந்தப்பாட்டுக்கு ஆடி, நம்மை நடு நடுங்க வைத்து விட்டனர். ஆனால் ஜெய்.. ஹோ..? அட... இன்றைய ரஹ்மானை விடுங்கள்! முதல் படமான ‘ரோஜா’வில் அவர் போட்ட ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலின் கால் தூசுக்கு ஈடாகுமா ஜெய்... ஹோ?’ ஆனால் ரஹ்மான் ஆஸ்கார் விருதுக்காக, ‘ஜெய் ஹோ’ வரை காத்திருக்க வேண்டி இருந்தது ஏன்?

இதற்கெல்லாம் பதில் சொல்லும் முன்பு ஆஸ்கார் விருது பற்றி நன்கு விவரம் தெரிந்தவர்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி.

மற்ற மொழி திரைப்படங்களைத் தழுவிய திரைக்கதை, ஒலிக்கலவை, இசை, பாடல் தவிர மற்றபடி ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் பெற்ற மற்ற ஆஸ்கார் விருதுகள் நியாயமானவை என்று நம்புகிறீர்களா? இல்லையென்றால் இத்தனை விருதுகள் ஏன்?

இங்கேதான் இருக்கிறது இந்தக் கட்டுரையின் தலைப்பு. அதாங்க, ‘சூட்சுமக் கயிற்றின் சூத்திரம்’!

உலகின் எத்தனையே நாடுகள். அவற்றில் எத்தனையோ அற்புதமான படங்கள். ஆஸ்கார் விருது பெறும் படங்கள் எல்லாம் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு மிகச்சிறந்த திரைப்படங்கள். நமது ஆங்கில மோகம், ஆஸ்கார் விருதை நம்மிடம் பிரபலப்படுத்தி விட்டது.

ஆனால் ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்றால், படத்தின் தரம் எப்படி இருந்தாலும் அது ஆங்கிலப் படமாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியத் தகுதி. போனால் போகிறது என்று எஞ்சிய உலகத் திரைப்படங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு விருது.

ஹாலிவுட் படங்களானாலும் சரி, அயல்நாட்டுப் படங்கள் என்றாலும் சரி, ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்றால் (இங்கிலாந்து- அமெரிக்க) வெள்ளைக்காரனை மட்டம் தட்டக் கூடாது. அவனை, ‘போற்றிப் பாடடி பொன்னே...’ என்று புகழ வேண்டும். இன்னொரு நாடு பற்றிய படம் என்றால்... அந்த நாட்டைக்கேவலப்படுத்தி, வெள்ளைக்காரனை உயர்த்திச் சொன்னால்தான் விருது. இதுதான் கதை.

இந்தியாவில் இருந்து அந்நிய மொழிப்பிரிவில் ஆஸ்காருக்குள் நுழைந்த முதல் படம் ‘மதர் இந்தியா’. முதல் தமிழ்ப்படம், சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த ‘தெய்வ மகன்’.

நேற்று வரை தமக்கு அடிமையாக இருந்த ஒரு சேரி தேசத்தில் இருந்து ஒரு கறுப்பன் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. “முதல் வேடமான அப்பா சிவாஜியும், மூன்றாவது வேடமான சொகுசுப் பேர்வழி சிவாஜியும் ஒரே ஆளே அல்ல. ஒரே மாதிரி சாயல் கொண்ட இருவரை வைத்து இந்தியர்கள் ஏமாற்றி விட்டனர்” என்று அன்றைய ஆஸ்கார் அண்ணாச்சிகள் ‘கமென்ட்’ செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

ஆக, ‘மதர் இந்தியா’ என்ற இந்திப்படம் முதற் கொண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்குப் போன எந்தப்படத்திலும் அவர்கள் தேடிய அம்சங்கள் இல்லை. (‘காந்தி’ படத்தைக்கூட இறுக்கித்தான் பிடித்தனர். உன் வரலாற்றைச் சொல்லக்கூட வெள்ளைக்காரன் தேவைப்படுகிறான் என்ற தற்பெருமையோடு விருது கொடுத்தார்கள்.)

‘லகான்’?

அடிமை இந்தியாவில் வெள்ளைக்-காரர்கள் செய்த கொடுமைகளைச் சொன்ன படம். தன் ஊரின் நன்மைக் காக இந்தியக் ‘காட்டான்’கள் விளை-யாட்டில் வெள்ளைக்-காரர்களை, அதுவும் கிரிக்கெட் விளை யாட்டில் வெள்ளைக்காரர்களை ஜெயிப்பதாகச் சொன்ன படம். எப்படிக் கிடைக்கும் விருது? விடுவார்களா? படத்தின் கிளைமாக்ஸை மாற்றி கிரிக்கெட்டில் இந்தியர்கள் தோற்று வெள்ளைக்காரர்கள் ஜெயிப்ப-தாகக் காட்டியிருந்தால்... கண்டிப்பாக ‘லகான்’ ஆஸ்கார் விருதோடு வந்திருக்கும்.

சரி... ‘ஸ்லம்டாக்’ படத்திற்கு ஏன் இத்தனை விருதுகள்?

மும்பையில் இந்து, முஸ்லிம் காழ்ப்புணர்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய்வரை பரிசு பெற்று-விட்ட ஒரு முஸ்லிமை போலீஸ் சந்தேகப்பட்டு கைது செய்வார்களாம். என்ன லாஜிக் இது? இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர். அறிவாளியாக இருந்தாலும் இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பிரச்னை தான். தவிர வறுமை, சகதி, நரகல், பிச்சை, பாலியல் தொழில், வன்முறை, கொடூரம், சிசுக்கொடுமை போன்றவை இந்தியாவில் இன்னும் உள்ளன என்று பிரபலப்படுத்துவதில் ஆஸ்கார்
மாமாக்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.

‘அலெக்ஸாண்டர்’ என்ற ஒரு ஹாலிவுட் படம். மாவீரன் அலெக்ஸாண்டர் எப்படி கடைசியில் அன்றைய இந்திய அரசனான போரஸிடம் கேவல-மாகத் தோற்றுப் போனான் என்பதைக் கள்ளங்கபடமில்லாமல் காட்டிய படம்.

பல்வேறு தொழில்-நுட்பங்-களி-லும் சிறப்பு வாய்ந்த அந்தப்-படத்-திற்கு, மேற்-சொன்ன கிளைமாக்ஸ் காரணமாகவே ஒரு விருதுகூட தராமல் புறக்கணித்தவர் கள்தான் ஆஸ்கார் ஆட்கள். ஆஸ்கார் தேர்வுக் கமிட்டியின் இனவெறி உணர்விற்கு இன்னும் உதாரணங்கள் சொல்லலாம். சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது கொடுத்-தார்கள். சத்யஜித்ரேவின் நோக்கம் வேறு. ஆனால் அவரது படங்களில் சொல்லப்பட்ட இந்தியாவின் வறுமை, சிறந்ததாகக் கூறப்படும் இந்தியக் குடும்ப உறவுகளில், அவரது படங்கள் சொன்ன சிக்கல்கள் இதையெல்லாம் வெள்ளையர்கள் வேறுகோணத்தில் ரசித்ததாலேயே அவருக்கு விருது கொடுத்தனர்.

அதனால்தான் அதே இந்தியக் குடும்ப உறவுகள், இந்தியச் சமுதாயம் இவற்றின் மேன்மையைச் சொன்ன சாந்தாராமை அவர்கள் கண்டு கொள்ள-வில்லை.

‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த அசாருதீன் முகமது இஸ்மாயில் என்ற சிறுவன் இன்னும் சேரியிலேயே வாழ்கிறான். ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு அவன் இந்தியா திரும்பி னான். உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் பிரமுகர்-கள் அவனைப் பார்க்க விரும்பினர். ஆனால் பயண களைப்பு மற்றும் மனநிலை மாற்றத்தால், அவன் ‘யாரையும் பார்க்க மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தபடி, வீடியோ கேம்ஸ் வைத்து விளையாடப் போய்விட.. காத்திருக்கும் பத்திரிகை-யாளர்கள் மற்றும் பிரமுகர்கள் தவறாய் நினைப்பார்களே... என்ற பதற்றத்தில் அவனது தந்தை அவனை அடித்து உதைத்துவிட்டார். ‘குழந்தையை அடித்து உதைத்தது தவறுதான் மறுக்கவில்லை. ஆனால், இந்தச் செய்திக்கும் புகைப் படங்களுக்கும் ஹாலிவுட் ஆங்கிலப் பத்திரிகைகள் தந்த முக்கியத்துவம் அபாரம்.’ ‘பாத்தீர்களா? இந்தியா என்றாலே இப்படித்தான்’.

ஒருவேளை அந்தப்பையன் யாரையும் சந்திக்க மறுத்து, சந்திப்பு ரத்து ஆகியிருந்தால்? அதையும் அவர்கள் செய்தியாக்குவார்கள். ‘நிருபர்களைச் சந்திக்க மறுத்த ஸ்லம் ஆக்டர் பார்த்தீர்களா? இந்தியா என்றாலே இப்படித்தான்’ஆஸ்கார் விருது தருவோரின் மனநிலை இதுதான்.

இருக்கட்டும். தவிர, ரொம்ப காலமாக ஆஸ்கார் விருதுகள் பற்றி ஒரு தவறான கருத்தை கமல்ஹாசன் கூறி வருகிறார். ‘அந்நிய மொழிப் பிரிவு படங்களில் அவர்கள் தரும் ஒரு ஆஸ்கார் விருது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஹாலிவுட் படங்களில் பணியாற்றி ஆஸ்கார் விருது பெறுவதுதான் சாதனை. (இதைத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் சாதித்துவிட்டார்) அதுதான் பெருமை”.

கமலின் இந்தக் கருத்து எப்படித் தவறு என்று பார்ப்போம்.

உதாரணமாக ஆந்திர அரசு தெலுங்குப் படங்-களுக்காக, ‘நந்தி ’விருது தருகிறது. ஆக, ‘நந்தி’ விருது பெறவேண்டும் என்றால் அது தெலுங்குப் படமாக இருக்க வேண்டும். தெலுங்கில் ஆண்டுக்கு எத்தனை படம் எடுக்கின்றனர். 200..? 300..? சரி 300 என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

அதே ஆந்திர அரசு, “நாங்கள் இனி ‘நந்தி’ விருதுகளில் இந்தியாவின் மற்ற அனைத்து மாநில படங்களுக்கும் சேர்த்து ஒரு விருது தருகிறோம் என்று கூறினால்... மலையாளம், இந்தி, மராத்தி, போஜ்பூரி, குஜராத்தி, அசாமி, ஒரியா என்று ஒரு ஆண்டுக்கு தயாரிக்கப்படும் படங்கள் எத்தனை? சுமார் 800?

இப்போது சொல்லுங்கள் எந்த விருதுக்குப் போட்டி அதிகம் இருக்கும்? அயல்-மொழி படங்களின் பிரிவுக்குத்தானே! அதுபோலத்தான் நேரடி ஆஸ்கார் விருது என்பது ஹாலிவுட் படங்களுக்கு மட்டும்! ஆனால், அயல்மொழி படங்களுக்கான ஆஸ்கார் விருதில், ஈரான், ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற அற்புதமான திரையுலகங்-களின் படங்கள் எல்லாம் மோதும். ஆக, அதில் ஒரு விருது என்றாலும் அதன் மதிப்பே தனி. ஆகக் கூடி...

ஆஸ்கார் விருதுகளில் வேறு எந்த இந்தியருக்கும் அல்லாத ரஹ்மானுக்கு மட்டுமே உள்ள பெருமைகள் இரண்டு.

அதாவது சத்யஜித்ரே பெற்றது கௌரவ ஆஸ்கார் விருது. போட்டியில் வென்ற ஆஸ்கார் அல்ல. தொழில்-நுட்ப ஆஸ்கார் என்றால் இதுவரை வேறு எந்த இந்தியரும் ஆஸ்கார் விருதை தனியாகப் பெற்றது இல்லை. ‘காந்தி’ படத்திற்காக உடையலங்கார விருது பெற்ற பானு அதையா கூட அதை ஜான் மோல்லோ என்ற வெள்ளைக்காரருடன் சேர்ந்துதான் பெற்றார். இப்போது விருது பெற்றுள்ள ரசூல்பூக்குட்டியும் அப்படியே. ஆனால், ரஹ்மான் பெற்றிருப்பது தனி விருது. அவருக்கு மட்டும் சொந்தம்.

இரண்டாவது ஒரே வருடம் இரண்டு விருதுகள்! எனவே, ஆஸ்காரைவிட ஏ.ஆர்.ரஹ்மான்தான் உசத்தி.

ஆதலால்... நாம் ஆஸ்கார் விருதுகளை ஓவராகக் கொண்டாடத் தேவையில்லை. விருது பெற்ற ரஹ்மான் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அதை எப்படி எதிர் கொண்டாரே... அந்த அளவு ஆஸ்கார் விருதுகளை மதித்தால் போதும்!

Wednesday, January 20, 2010

## உலக அரங்கில் தலை குனிந்த இந்தியாஇலங்கை முள்வேளி முகாம் ஒன்றில் இறந்து போன ஒரு தமிழ்ப் பெண்ணின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது, வயிற்றில் 450 மில்லி அளவு விந்து இருந்தது. அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் கொட்டப்பட்டவை அவை” என்று செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஜோசப் பிரெடரிக் என்பவர் மனம் நொந்து கொடுத்த அறிக்கையைப் படித்த பின்னரும், பதவிப் பித்திலும், அதிகார மமதையிலும், இருக்கும் நம் அரசியல்வாதிகளுக்குஒரு துளிக் கண்ணீர் கூட வரவில்லை.

இதைத்தான் ‘தேவரனையர் கயவர்; அவரும்தான் மேவன செய்தொழுகலான்’ என்று நிஜமான குறளோவியமாகச் சொன்னார் திருவள்ளுவர். இதயம், உணர்வு, மனிதாபிமானம், கண்ணீர் இவற்றோடு நியாயமும் தர்மமும் ரத்தமும் சதையுமான பொது மக்களின் மேற்சொன்ன உணர்வுகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ‘இந்தியா... இந்தியன்... ஒருமைப்பாடு...’ போன்ற வார்த்தைகளை-ஊரை ஏய்ப்பதற்காக அல்லாமல் உண்மையாக இதயசுத்தியுடன் சொல்லும் ஒவ்வோர் இந்தியனும், மனிதாபி-மான உலகம் மானசீகமாக உமிழ்கிற எச்சிலை மூச்சுத் திணற முகத்தில் ஏந்தும் நிலையை ஏற்படுத்திவிட்டது, ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கற்பனைக்கும் எட்டாத கொடுங் கொடூரக் கொடுமைகள்! அமெரிக்கா, கனடா, ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா என்று உலகம் முழுக்க தமிழர்கள், சிங்கள மிருகங்கள் செய்யும் கொடுமைகளைப் பற்றி அந்தந்த நாடுகளில் பேசும்போது, அந்த மக்கள் எல்லாம் அதற்கு செவிமடுக்கின்றனர். இதயம் சுரக்கின்றனர்.

அடுத்தடுத்த நிமிடங்களில் அறிவு சுரந்து அவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்.

“தனது நாட்டின் மூத்த தேசிய இனத்தின் வரலாற்றுப் பாரம்பரிய நீட்சியாக வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை-களுக்குத் துணை போகிற... ஆண்மையற்ற தேசமாக இந்தியா ஏன் இருக்கிறது?” என்பதுதான். ராஜீவ்காந்தியின் மரணம் என்கிற, நியாயம் மாதிரியான ஒரு தோற்றம் அங்கே எடுபடாது. ஓர் உயிருக்காக ஓர் இனமே அழிவதா? பிரதமர் என்றால் என்ன கொம்பா? மக்களின் வேலையாள்தானே அவர்? என்று யோசிக்கிற உண்மை-யான ஜனநாயக தேசங்கள் அவை.

“ராகுல் இப்போது பிரதமர் ஆக முடியாது” என்று சோனியா அர்த்தபுஷ்டியோடு பேசுவது போலவோ, “பிரதமர் ஆகும் தகுதி இப்போது எனக்கு வரவில்லை” என்று ராகுல் ஈழத்துப் பிணங்களின் குவியல் மீது உள்ள ரத்த வாடையை மணந்தபடி ஏக்கப்படுவது போலவோ அந்த தேசங்களில் முடியாதே!

உலகெங்கும் உள்ள யூதர்கள், “எங்கள் இனம் எப்படித் திட்டமிட்டு அழிக்கப்-பட்டதோ, அப்படியே இன்று தமிழினம் அழிக்கப்-படுகிறது. அந்த வலியை வேறு எவரையும் விட எங்களால் அதிகம் உணர முடியும்” என்று ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர்.

அநியாயம் செய்ததால், மற்றவரை ஏய்த்ததால் பழி-வாங்கப்பட்டு நசுக்கப்பட்ட இனம் யூத இனம். ஆனால் தமிழினம் அப்படி எதுவும் பெரிதாகச் செய்தது இல்லை. (தன்னினத்தவனைத்தான் அது காலை வாரும்.) ஆனால் யூத இனமே ஈழத்-தமிழனுக்கு இரக்கப்படும்போது, காந்தி தேசம் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து காட்டிக் கொடுக்கிறது.


ஆனால், இலங்கை என்பது குட்டி தேசம். அதிலும் பாதிதான் சிங்களனுக்குச் சொந்தமானது. ஆனால் அந்த சிங்களம், இவ்வளவு பெரிய இந்தியாவை பிளாக்மெயில் செய்து மிரட்டி, ஒரு மாபெரும் இன அழிப்புக்குத் துணை வர வைத்துவிட்டது. அதுவும் இந்தியா, தன் நாட்டின் தேசிய இனத்து மக்களையே அழிக்கத் துணை போகிறது. பரப்பளவு, பொருளா-தாரம், இன்னபிற பலங்களில் மிகவும் பின்தங்கிய சிறிய நாடான இலங்கையால் இந்தியாவை மிரட்ட முடியும் என்றால், இலங்கையை-விட பல மடங்கு உயர்ந்த - சிறந்த - வளர்ந்த - நாம் ஏன் ஏதேனும் ஒரு விஷயத்தில் நம் நலனுக்காக இந்தியாவுக்கு ஆட்டம் காட்டக் கூடாது? என்றே மற்ற சிறிய நாடுகள்கூட யோசிக்கும்.

விளைவு, எதிர்கால இந்தியா குறு நரிக் கூட்டத்திடம் சிக்கிய கிழட்டுக் குருட்டு யானை போல நிற்க வேண்டி வருமே என்ற பயம் எழுகிறது.

இதைவிட விபரீதம் ஒன்று உண்டு.

இந்தியாவின் முதல் முக்கிய பகை நாடு பாகிஸ்தான் என்றும், இரண்டாவது முக்கிய பகை நாடு சீனா என்பதும் உலகம் அறிந்த உண்மை.

ஆனால், ஈழத்தமிழனை அழிக்க பாகிஸ்தான், சீனா ஆகியவற்றோடு ஒன்றிணைந்து இந்தியா ஈடுப‌ட்டது

சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆரம்பத்தில் உலக நாடுகள் பெரிதாக மதித்துவிடவில்லை. அங்கீகரிக்கவில்லை. அப்போது இந்தியாவை உலகம் மதிக்கக் காரணமாக இருந்தது இரண்டே விஷயங்கள். ஒன்று காந்தியின் அகிம்சை. இன்னொன்று நேருவின் மனிதாபிமானம் சேர்ந்த நடுநிலைமையின் மகுடம் சூடிய அணி சேராக் கொள்கை!

அந்த இரண்டையும் அழித்து, இன்று இந்தியாவை மீண்டும் உலக அரங்கில் தலைகுப்புறத் தள்ளுவதும் இரண்டே விஷயங்கள்தான். சோனியாவின் ஏவல் ஆட்களாக மாறிப் போன அரசியல்வாதிகளால், இன்று இந்தியாவின் கைகளில் படிந்துள்ள ஈழ ரத்தம். அதனால் உலக நாடுகள் உமிழ்ந்து நம் முகம் முழுக்க வழியும் எச்சில். நம் அன்னை பூமிக்கு இந்த இழிநிலை தேவைதானா?

Monday, January 18, 2010

# எம்.ஜி.ஆரின் சுவையான பேட்டி(கள்)
அமரர் எம்.ஜி.ஆர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்த பேட்டிகளை, எஸ்.கிருபாகரன்
தொகுத்து வழங்க, 'எம்,ஜி,ஆர் பேட்டிகள்' என்ற பெயரில் ஆழி பதிப்பகம் நூலாக‌
வெளியிட்டிருக்கிறது. அதிலிருந்து கொஞ்சம்...நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம்? அதில் ஏற்ற வேடம்?


‘மனோகரா’ நாடகம். மனோகரன் வேஷம்.

பெண்வேஷம் போட்டு நாடகங்களில் நடித்தது உண்டா?

உண்டு.

உங்கள் அன்னையார் இப்போது உயிரோடு இருந்தால்?


என் நிலைமைக்காக மிகவும் அனுதாபப் பட்டிருப்பார்.

உங்கள் சொந்த வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனை?

ஒரு பெண் என்னைக் காதலித்ததுதான். தயவு செய்து இதற்குமேல் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்.

உங்களை உயர்த்தியது எது?

பருவம்.

உங்கள் தொழிலில் பெரிய சவாலாக இருந்தது எது?


என்னை அழிக்க விரும்பிய எதிரிகளின் நட்பு.

உண்மை அழிந்த பின்பு நிலைத்திருப்பது என்ன?


உண்மைதான். ஏனென்றால் அது அழிவது கிடையாது.

மதுவை விடக்கொடியது எது?

அதை அருந்தும் மனம்.

நன்றியில்லாத ஒருவனை நன்றியுள்ளவனாக ஆக்குவது எப்படி?


நாம் நன்றி உள்ளவராக நடந்துகொள்வதன் மூலம்.

உங்களால் பாதிக்கப்பட்டவர் யாராவது உண்டா?

நானே இருக்கிறேனே, போதாதா?

உங்களுக்குக் கவிதை பிடிக்குமா?


கவிதையும் பிடிக்கும்.

தங்களுக்குக் குழந்தை பிறந்தால்?


முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும்.

உங்களுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுத்தபோது அதை நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?


உண்மை.

சாதிவெறியைத் தூண்டிவிடும் தமிழ்த் தலைவர்களுக்கு உங்கள் பதில் யாது?-


அவர்கள் தமிழை வணங்காதவர்கள்.

சில சமயம் நீங்கள் கவிஞர்களுக்கே பல்லவி எடுத்துத் தருவீர்களாமே?


பல்லவி எடுத்துக் கொடுப்பது கிடையாது. கருத்துச் சொல்வது உண்டு-.

ரசிகன், தொண்டன், உடன்பிறப்பு இம்மூன்றில், எப்படி அழைப்பது உங்களுக்குப் பிடிக்கும்?

நான் எழுதும் கடிதத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறேனே அப்படி.

கோழை எதைச் சாதிக்கிறான்?


வீரனை வெளிக்காட்டுகிறான் அல்லவா?

ஒரு தமிழ்ப்பெண் எப்படி நடந்துகொண்டால் அவளது வாழ்வு பிறர் பார்த்து மதிக்கும்படி இருக்கும்?

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பெண்ணும் திண்மைஉண் டாகப் பெறின்’ என்ற குறள் நெறியைப் பின்பற்றி நடப்பதே மதிப்புத் தருவதாகும்.

திருமணமான பெண் வேலை செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன?

திருமணமான பெண் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

உங்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?

பிறரால் அனுதாபப்பட வேண்டிய ஒருவன்.

இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைக் கொடுத்திருப்பது ஏன்?

அவன் மீதுள்ள அவ நம்பிக்கையால்.

ஜிம்மி கார்ட்டரின் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


உலக அரசியலுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என நினைக்கிறேன்.

உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன். உங்களுடைய சம்மதம் தேவை?


என் வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தைக் காப்பாற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான்.

அறிவுள்ளவன் யார்?


தன்னை அறிந்தவன்.

நண்பர்களைக் கவர்வது எப்படி?

தூய்மையான நட்பைக்கொண்டு.

முயற்சி இல்லாமல் கிடைப்பது எது-?

மரணம்!

துன்பத்திலேயே அதிகத் துன்பம் எது?


நன்றி கொன்றவர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் துன்பம்.

நீங்கள் அரசியலில் நுழையக் காரணமானவர் யார்?

சுபாஷ் சந்திரபோஸ்.

ஏழை ஒருவன் நடிகையை மணக்க முடியுமா?


நடிகையரிலும் ஏழை நடிகை இருக்கிறார் அல்லவா?

மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தது உண்டா?


உண்டு. நாடக கம்பெனியில் இருந்தபோது-.

தங்களால் வாழ்வு பெற்றவர்கள் தங்களையே தூற்றுகிறார்களே?


அது அவர்களது இயற்கை. காலம் மாறும். காத்திருப்போம்.

தாங்கள் சிறந்த நண்பர் என்று யாரைக் கருதுகிறீர்கள்?


அறிவை.

நீங்கள் இறக்கும்போது உங்கள் கடைசி ஆசை என்னவாக இருக்கும்??


பிறவாதிருக்கவேண்டும் என நினைப்பேன் என இப்போது சொல்கிறேன். அப்போது என்ன நினைப்பேனோ?

Sunday, January 17, 2010

# ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தமிழீழ முழக்கம
செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப் படத்தை தமிழ் திரையுலகின் புதிய சிகரம் என்றே சொல்லுவேன் நான்

வழக்கமாக தனது பாணியில் , இன்றைய 18 வயசு இளசுகளின் நவீன , காமம் கலந்த காதலை கொஞ்சம் வன்முறையான பூச்சில் சொல்லி கடைசி பதினைந்து நிமிடத்தில் உணர்வுக்குவியலைக் கொட்டி நம்மை நெகிழ வைத்து திருப்தி செய்யும் வித்தையிலேயே இந்த முறையும் ஜொலித்திருப்பார் செல்வராகவன் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் படம், பார்த்த பின்புதான் செல்வராகவன் நிஜமாகவே எவ்வளவு பெரிய கலை மேதை என்பதும் அதைவிட முக்கியமாக எவ்வளவு பெரிய தமிழ் இன உணர்வாளன் என்பதும் புரிய எனது இதயத்தில் ஒரு கம்பீரச் சிங்கமாய் வீற்றிருக்க ஆரம்பித்து விட்டார் செல்வா.

பிரபாகரன் மரணத்தையும் ஈசாப் போராட்டததையும் வெள்ளித் திரையில் கம்பீரமாக சுமார் 1000 ஆண்டு தமிழின வரலாற்றோடு சேர்த்து (குறியீடாகவே) மிக உயர்ந்த தரத்தில் பதிவு செய்தது செல்வா என்ற பெருமையைக் காலத்தால் அழிக்க முடியாது.

தொல்பொருள் ஆய்வுத் துறை....., வியட் நாம் அருகே உள்ள தீவுப பக்கம ஒரு ஆராய்ச்சிக்குப் போய் காணாமல் போகும் பேராசிரியர்....., அவரைக் கண்டுபிடிக்க விரும்பும் மகள் .... ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட ஒரு சகல‌கலாவல்லி பெண் அதிகாரி .....,அவளுடன் கருத்தொத்த ஒரு கம்பீரமான முன்னாள் ராணுவ அதிகாரி , எடுபிடி வேலைக்காக மதுரையில் இருந்து மண் மணம் மாறாத 30 ஆட்கள் ......என்று இன்றைய கால ஹாலிவுட் படங்களுக்கு இணையாகத் துவங்கும் படம் ,போகப் போக ஹாலிவுட் படங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு கருத்தியலின் உச்சம் தொடுகிறது.

3000 ஆண்டுகளாக தமிழன் சேர . சோழ , பாண்டியன் என்ற பிரிவினையில் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்ததன் நவீன கால நீட்சியாக கதை சொல்லி இருக்கும் செல்வாவுக்கு ஒரு அழுத்தமான கை குலுக்கல்.( நவீன கால சூழலில் சேரனை லாவகமாக கதையில் இருந்து தவிர்த்திருக்கும் இன ரோஷத்துகுப் பாராட்டுக்கள்)

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்..... சோழ பாண்டியப் போர் ....! சோழ அரசன் தனது மகனின் உயிரைக் காப்பாற்ற அவனை கடல்கடந்து அனுப்புகிறான் . அதோடு பாண்டியர்களுக்குச் சொந்தமான குலதெய்வச் சிலை ஒன்றையும் சோழ இளவரசனிடம் கொடுத்து அனுப்புகிறான். அது மீண்டும் பாண்டியர் வசம் கிடைக்கக் கூடாது என்பதற்காக .வியட்நாம் சென்று பல தீவுகளுக்கு அப்பால் சென்று காடு, மலை , நீர் , காற்று, மணல்,கொடிய விலங்குகள் , மனித மாமிசம் தின்னும் பழங்குடியினர் (இவர்கள் சோழனின் விசுவாசிகள் ) என்று எல்லா விதங்களிலும் ஆபத்துள்ள பாதை வழியே போனால்தான் அடைய முடியும் என்ற வகையில் ஒரு நிலப்பரப்பில் அதைக் கொண்டு சென்று இளவரசன் மறைத்து வைக்கிறான். அதைப் பின் தொடர்ந்து போன பாண்டிய தளபதி ஒருவன் அது குறித்து வரைந்து வைத்த வரைபடத்தின் துணையோடு இன்று இந்த நவீன குழு பயணப் படுகிறது . விபரீதமான பிரம்மாண்டமான ஆபத்துகளைக் கடந்து (படத்தில் பார்த்து பிரம்மியுங்கள்) ஒரு வழியாக சென்று அடைந்தால்.....

யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா......

அங்கு ஒரு சோழ சாம்ராஜ்யமே இன்றும் இருக்கிறது.அன்று போன சோழ இளவரசன் மற்றும் நண்பர்களின் வழிவந்த சமுதாயம்.! பழந்தமிழ் பேசிக் கொண்டு, காட்டுவாசித் தன்மைகள் ஒரு மாதிரிக் கலந்து அதே நேரம் பழந்தமிழர் முறைப்படியும் வாழ்ந்து கொண்டு .... அதே நேரம் உணவுப் பஞ்சத்துடன் ...

அவர்களுக்குத் தலைவனாக ஒரு சோழ தேவன்.. பற்பல காலமாய் வாழும் ஒரு வயது முதிர்ந்து பழுத்த மூப்பன்.

அங்கு போன பின் கதையே வேறு.

எல்லோரையும் அழைத்துப் போன அந்த சகலகலாவல்லியான பெண் அதிகாரி (ரீமா சென் )அந்தப் பாண்டிய அரசனின் வழிவந்தவள் .இத்தனை பரம்பரையாக வாழையடி வாழையாகக் குலதெய்வச் சிலையை மீட்கப் போராடி, இந்தத தலைமுறையில்தான் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது . அந்த முன்னாள் ராணுவ அதிகாரியும்(அழகம் பெருமாள்) பாண்டிய பரம்பரையில் வந்தவர்தான் . மதுரையில் இருந்து வந்த அந்த எடுபிடிக் கும்பலின் முக்கிய இளைஞன் (கார்த்தி)முற்பிறவியில் சோழ நாட்டோடு சம்மந்தப்பட்டவன் . தொல்பொருள் அதிகாரியைத் தவிர அவள் மகள்( ஆண்ட்ரியா) கூட ஒருவாறு பண்டைச் சோழ நாட்டோடு சம்மந்தப்படுகிறார்கள்.

மீண்டும் போர் ...

இதில்தான் ஈழப் போராட்டத்தை குறியீடாக , ஆனால் அழுத்தமாகச் சொல்லி கலை இமயமாய் உயர்ந்து விட்டார் செல்வராகவன்.

ஆனால் அதற்கும் முன்பே படத்தில் சிலாகிக்க எண்ணிலடங்கா விசயங்கள் உண்டு

வெற்றிகரமாக ஓடிய ஒரு பழைய படத்தின் பெயரை அல்லது பாடலை எடுத்துக் கொண்டு அந்தப் பழைய படம் சம்மந்தப் பட்ட யாருக்கும் எந்த விதத்திலும் ஒரு மரியாதைக்குக் கூட நன்றி சொல்லாமல் , அந்தப் பழைய படம் பற்றியும் பழைய கலைஞ்ரகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்கள் போல புதுப் படத்தை எடுத்து முடித்து விடும் படைப்புச சுரண்டல் பேrவழிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது .

பழைய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பெற்ற "அது அந்தப் பறவை போல பாடலை செல்வராகவன் இந்தப் புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக ஒரு கண்ணியமான பாணியில் ரீமிக்ஸ் செய்துள்ளார் .பாட்டில் எம்.ஜி.ஆர இருக்கிறார் . டி.எம் .எஸ் இருக்கிறார் .விஸ்வநாதன் இருக்கிறார். எந்தப் பழைய கலைஞரும் புறக்கணிக்கப் படவில்லை . கொத்து பரோட்டா போடப் படவில்லை.செல்வராகவனின் கருத்து நேர்மை அபாரமானது .


மணிபல்லவம், கபாடபுரம் போன்ற சரித்திர நாவல்களில் நாம் படித்துப் பிரம்மித்த‌ சூரிய ஒளி நிழல் பாதை அற்புததத்தை இதில் நடராஜப் பெருமான் நிழலாகக் காட்சி வடிவத்தில் பார்க்கும்போது ஏற்படும் பிரம்மிப்பு ....! அதே போல் காந்தளூர்ச்சாலை வரலாற்று நாவலில் நாம் படித்த கவண்கல் தொழில் நுட்பம் இங்கே காட்சியாக.!
இப்படியாக பழந்தமிழனின் அறிவியல் அறிவை இன்றைய சினிமாவின் மூலம் உலகின் முன் கம்பீரமாய்க் கொடுத்திருக்கும் செல்வாவுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.ஷாட் அமைப்பில் , ஃபிரேமிங்கில் ஹாலிவுட்டுக்கு வகுப்பெடுத்திருக்கிறார் செல்வா.

ஆனால் இது எல்லவற்றையும் விட... ஈழத் தமிழனின் போராட்டத்தை இதில் புகுத்திய விதம் பரணி பாடற்குரியது .

காட்டில் காட்டும் சோழ சாம்ராஜ்யம் பேசும் பதினெட்டாம்(பதினான்காம்?) நூற்றாண்டுத தமிழ் உரையாடல்கள்....அந்த உரையாடல்களில் ஈழத் தமிழின் பேச்சுத் தொனியையும் பல ஈழத் தமிழ் வார்த்தைகளையும் குழைத்தது ....( கதை நடப்பது ஒரு தீவில் உள்ள காட்டில்தான் .தவிர , தீவில் வாழத் துவங்கிய முதல் மனித இனமாகவும் இந்தச சோழ சமூகம் காட்டப் படுகிறது
.அதனால்தான் மொழியில்லாத நர மாமிசம் தின்னும் ஆதிவாசிகள் இவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக சொல்கிறார் செல்வா) என்று அந்த சோழ சமூகத்தை ஈழ சமூகமாகவே காட்டுகிறார் செல்வா.

அப்படியானால் எதிரியான சிங்களனைப் பாண்டியனாகக் காட்டுவது ஏன் என்று கேள்வி வரலாம

அதற்குப் பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் வரலாறு .
முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் பாண்டிய மன்னனின் மணிமுடியைச் சிங்கள மன்னன் ஒருவன் அபகரித்துச் சென்றதாகவும் பகை அரசன் என்றாலும் ஒரு தமிழ் அரசனின் மணிமுடியை சிங்களன் கவர்ந்து சென்றதற்காக ராஜராஜ சோழன் வருந்தியதாகவும் தந்தையின் ஆசைப்படி பின்னாளில் ராஜேந்திர சோழன் அந்த சிங்கள மன்னனை வீழ்த்தி அதை மீட்டு வந்ததாகவும் வரலாறு சொல்கிறது .

அதை சற்று மாற்றி குலதெய்வச் சிலை .....சோழன் பாண்டியன்... என்று கதை அமைத்து இருக்கிறார் செல்வா. நேரடியாகச் சொன்னால் நமது தணிக்கைத் துறை அனுமதிக்காதே. தவிர சிங்களனுக்கு மாமனாராக இருக்கிற நமது அரசியல்வாதிகளும் சுய நல அதிகாரவர்க்கமும் பிரச்னை செய்யுமே.

தவிர இன்றைய சுழலில் பாண்டியன் என்ற குறியீடு ஒரு விதத்தில் நம் தமிழனுக்கே துரோகியாக இருக்கும் நம்மூர்த் துரோகிகளையும் குறிக்கிறதே.

அப்படியானால் பாண்டியனின் குலதெய்வச் சிலையை சோழன் திருடினான் என்று கூறுவது.. சோழனின் மீதுதான் தவறு என்ற அர்த்தம் வரும்போது அது ஈழப் பிரச்னையில் தமிழர்கள்தான் தவறானவர்கள் என்று கூறுவது போல வருகிறதேஎன்று தோன்றலாம்.

இல்லை.

சிலை திருடப்பட்ட விசயம் சொல்லப்படும் வரை கதையாகப் பயணிக்கும் படம் அதன் பிறகுதான் குறியீடாகப் பயணிக்கிறது .இப்படியெல்லாம் குழப்பாமல் நேரடியாகச் சொல்லி இருந்தால் அடுத்து செல்வராகவன் தமிழ்இன உணர்வோடு சொல்லியிருக்கும் காட்சிகளைச் சொல்ல இங்குள்ள சிங்கள அடிவருடிகள்
அனுமதிக்க மாட்டார்கள் . தவிர சிலை கவர்தல் என்பது அவர்கள் செய்த தவறுக்குப் பழிக்குப் பழியாகத்தான் என்ற புரிதலும் வருகிறது .

அபபடி என்ன சொல்லி இருக்கிறார் செல்வா என்கிறீர்களா?
ஈழத் தமிழினத்தின் குறியீடாக வரும் சோழ தேவனை(ரா.பார்த்திபன்) , சிங்கள இனக் குறியீடாக வரும் பாண்டிய இளவரசியான( பெண் அதிகாரி) நம்ப வைத்துக் கழுத்தறுக்கிறாள்.தியாக உணர்வோடு போரிடும் சோழர்களை பாண்டிய ஆட்கள் துப்பாக்கி ,
பாராசூட், கனரக ஆயுதம் உள்ளிட்ட வகையில் குழுக் குழுக்களாக வந்து
கொல்கிறார்கள்.(கவனிக்க: ஏழு நாட்டு ராணுவம்). சோழர்கள் வீரப் போர் தியாகப் போர் புரிகிறார்கள்(விடுதலைப் புலிகளைப் போல)

கடைசியில் சோழர்களைத் தோற்கடிக்கும் நவீன கும்பல் அப்பாவி ஆண் பெண்களைக் கட்டிவைத்து கும்பல் கும்பலாக அடைத்து வைத்து
கொடுமைப் படுத்துகிறது(முள் வேலி முகாம்கள்...!புரிகிறதா? ஆரம்பத்திலேயே சோழ‌ தேவனிடம் ஒரு பெண் ஈழத் தமிழ் வார்த்தைகளும் தொனியும் கலந்த பண்டைத் தமிழில் முறையிடுவாள் "ஒழுங்கா சோறு கிடைக்காதது மட்டுமில்ல....மலங்கழிக்கக்
கூட வழியில்லாமல் கஷ்டப் படுறோம்"என்று)

அப்பாவிப் பெண் களைக் தனித்தனியாக ஒரு கும்பலே தூக்கிச் சென்று
கூடாரங்களில் வைத்துக் கற்பழிக்கின்றனர்(சொல்லவும் வேண்டுமோ?) இறுதியில் சோழ தேவன் ஒரு நீர் நிலை ஓரத்தில் செத்து விழுகிறார்(பிரபாகரன் உடல் என்று சிங்கள ராணுவம் காட்டிய உடல் நீர் நிலை அருகில்தானே கிடந்தது) சோழ தேவனின் குடும்பம் அழிக்கப் பட கடைசி மகனை மட்டும் அந்த மதுரைக்கார ஆனால் முற்பிறவியில் சோழனாக இருந்த இளைஞன் காப்பாற்றத் தூக்கிக் கொண்டு ஓட , சோழனின் பயணம் தொடரும் என்று படத்தை முடிக்கிறார் செல்வராகவன்.

தவிர , பிரபாகரனின் குறியீடாக வரும் சோழ தேவனின் பணிப்பெண்டிரின் முகத் தோற்றமும் பாவனைகள் பெண் விடுதலைப் புலிகளின் சாயலை ஒத்துள்ளது.

ஒரு திரைப்படம் என்ற வகையில் இதை அணுகினால் வழக்கமான
செல்வராகவன் படத்துக்கே உரிய சில ஆபாச , கழிவுக் காட்சிகள் இதிலும் உண்டு.சில லாஜிக் மீறல்கள் கூட இருப்பதாக வாதிடலாம்.

வியட்னாம் பக்கத்தில் சோழ சாம்ராஜ்யம் என்று காட்டுகின்றனர். சோழன் எப்போது அங்கே போனான்? என்று ஒரு கேள்வி
ஜப்பானில் ஆஸ்திரேலியாவில் எல்லாம் சோழர் காலத்து மிகப் பிரம்மாண்டமான கோவில் மணிகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும்போது வியட்னாம் சோழனுக்கு சுண்டைக்காய்தான். காரணம் இங்கே பிராமணர்களையும் சமஸ கிருதத்தையும் ஆதரித்த
ராஜராஜசோழன் வரலாறு மட்டுமே பாதுகாக்கப்பட்டது . அதற்கு 800 ஆண்டுகளுகு முன்பு மாபெரும் விஞ்ஞானச் சாதனையாக கல்லணை கட்டிய கரிகாலச் சோழனின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப் பட்டது . ஆக வியட்னாம் குறிப்பிடப்படுவது பிரச்னை இல்லை.

இன்றைக்கும் அங்கு வாழ்கிற அந்தச் சோழர்கள் பச்சை மாமிசம் சாப்பிடுவதாகக் காட்டுவது நியாயமா? என்றொரு கேள்வி .
அங்குள்ள காட்டுமிராண்டி மக்களோடு கலந்து அவர்களை விசுவாசியாக மாற்றிவாழும் மக்களுக்கு அந்தப் பழக்கம் இருப்பதாகக் காட்டுவது பெரிய குற்றமில்லை.

கடைசியில் விமானம் மூலம் போய்த் தாக்கும் நவீன பாண்டிய வம்சம், ஆரம்பத்தில் கால் நடையாகப் போய் ஏன் இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? இந்த சாட்டிலைட் யுகத்தில் ஒரு காரின் எண்ணையே சாட்டிலைட்டிலிருந்து பார்க்க முடியும் எனும்போது ஒரு சமுதாயம் வாழ்வதை கண்டு பிடித்து விமானத்திலேயே போய்த் தாக்கலாமே என்று கூட கேட்கிறார்கள் .இதற்கும் கூட பதில் சொல்லலாம் .ஆனால்
இவ்வளவு லாஜிக் பார்த்தால் படம் எடுக்க முடியாது சினிமா எடுக்க முடியாது என்ற பதிலே இங்கு போதுமானது .

திடீரென்று அமானுஷ்யம் போல காட்சிகள் வந்து குழப்புகிறது என்கிறார்கள் .
சும்மா இருக்கும் உங்களை நைட்ரஸ் வாயுவை முகர வைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்க முடியும் என்பது விஞ்ஞானம் என்று ஒத்துக் கொள்ளூம் நாம் ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நிற்கும் நிலையில காது கிழியும் ஒலிகளை ஏற்படுத்தி ஏன் பைத்தியமாக்க முடியாது?

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சே இல்லாமல் கற்களை மட்டும் அடுக்கி கல்லணை கட்டிய இனத்தில் .... பின்னாளில் மறைந்து போன தொழில் நுட்பங்கள் எத்தனை எத்தனையோ.அப்படி ஒரு தொழில் நுட்பமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும் .

இது ஒரு வரலாற்று விஞ்ஞான அமானுஷ்ய நுட்பப் படம் .

தவிர , இத்தனைக் குழப்பங்களையும் கொடுத்தால்தான் படத்தில் காட்டப் படும் ஈழ ஆதரவை சேதாரமில்லமல் வெளிப்படுத்த முடியும்.
இல்லாவிட்டால் நமது தணிக்கைப் பிரிவும் காவடி தூக்கு அரசியல் வியாதிகளும் சும்மா இருக்க மாட்டார்களே

படத்தில் எல்லாக் கலைஞர்களும் வியப்புக்குரிய உழைப்பை வழங்கி இருந்தாலும் ......

வருடத்துக்கு பத்துப் படங்களில் நடித்து கோடிகளால் உண்டியலை நிரப்பிக் கொண்டு போகும் நமது நடிகைகளுக்கு மத்தியில் , இந்தப் படத்தின் தரத்துக்கு மரியாதை தந்து கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் இந்தப் படத்துக்கு முழு உழைப்பையும் வழங்கிய நடிகை ரீமாசென்னுக்கு ஒரு கம்பீரமான கைகுலுக்கல் .

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் பற்றி உலகமே சிலாகிக்கிறது . அவதாரில் பழங்குடி மக்களை நவீன நயவஞ்சக மனிதன் அழிக்க முயல்வதும் அதை எதிர்த்து அவர்கள் வாழ முயல்வதும் நவீன மனிதனில் ஒருவனே அதற்கு உதவுவதும் கதை .

ஆயிரத்தில் ஒருவனில் பழங்குடிக்குப் பதிலாக சோழ (ஈழ) இனம்.

அவதாரில் ஒரு நவகால மனிதனே பழங்குடி மக்களின் நியாயம் உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறான்.

இதில் மதுரைக்கார இளைஞன்.

அதில் போலவே இதிலும் ஒரு தனித்துவ சமுதாயம் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது .

அவதார் கற்பனைக் கதை ..
எனவே அதில் பழங்குடி மக்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனால் இந்த இரண்டாம் ஆயிரத்தில் ஒருவன் படம் , கடந்த மே மாதம் முதல் ஈழத்தில் ரத்தமும் சதையுமாக‌ நாம் பார்த்து வரும் தியாக வரலாறு.

அவதார் படத்தின் கதை என்னவென்றே தெரியாத காலத்தில் அப்படி ஒரு கதையை இங்கே செல்வா உருவாக்கியிருக்கிறார் .

வரைகலைத் தொழில் நுட்பம் , முப்பரிமாணத் தொழில் நுட்பம் என்று பார்த்தால் அவதார் சிகரம் தொட்ட படம். ஆனால் கருத்தியல் என்று பார்த்தால் ஆயிரத்தில் ஒருவனின் கால் தூசுக்கு ஆகாது அவதார்.

ஆனால் ஒரு கற்பனைக் கதையை , கோக்கும் பீட்ஸாவும் விழுங்கிக் கொண்டு கைதட்டி ரசித்து வசூலைக் கொட்டும் தமிழன், ஆயிரம் பிரச்னைகள் வரும் சூழலில் நேக்காக ஈழப் போராட்டத்தை திரையில் பதித்திருக்கும் ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்து 'ஒண்ணுமே புரியல ' என்று குறை சொல்லிப் புறக்கணித்து விட்டுப் போகிறான், என்னமோ எல்லா ஆங்கிலப் படங்களையும் (தமிழில் டப் செய்தாலும்) புரிந்துதான் பார்ப்பது போல.
33 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 15 கோடி ரூபாய் வசூலிக்கும் என்கிறார்கள்.இந்த நல்ல படத்துக்கு பூட்ட காசாவது வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறது மனம் .

இந்தப் படத்தை இதே பட்ஜெட்டில் ஆங்கிலத்தில் ( இண்டியன் இங்லீஷிலாவது) எடுத்து அப்படியேவோ அல்லது டப் செய்தோ வெளியிட்டிருந்தால்... அதே கோக்கும் பீட்ஸாவுமாக வந்து பார்த்து புரியாத இடங்களில் வழக்கம் போல சிரித்தோ கைதட்டியோ 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......' என்று சொல்லி இருப்பான் நம்ம
தமிழன் , மன்னிக்கவும் தமிளன் !

இந்தப் படம் தமிழனுக்குதான் புரியாது . மற்றவர்களுக்குப் புரியும்.

உணர்வு இருந்தால் படத்தின் அடிப்படையாவது புரியும்.வரலாறு நிறைய
அறிந்து திரைப்படத் தொழில் நுட்பமும் புரிந்தால் ரொம்பப் பிடிக்கும்.
என்னதான் குறைத்து மதிப்பிட்டாலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் திரை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான படம்.

படத்தில் பல குறைகள் உள்ளன என்பதை (ஒரு வாதத்துக்காக ) ஒத்துக் கொள்ளும் சூழல் சில இட‌ங்களில் வந்தால் கூட....ஈழப் போராட்டத்தை வெள்ளித் திரையில் பல இடர்ப்பாடுகளையும் மீறி அழுந்தப் பதித்திருக்கும் செல்வராகவனுக்கு ஒரு வீர வணக்கம்.

Thursday, January 14, 2010

# பொங்கலோ.....பொங்கல் ?
விறகுக்குப் பதிலாக
வாழ்வின்
விகாரங்களை எரித்து
வருகின்ற நெருப்பில்
பொங்கட்டும் பொங்கல்.
அன்றுதான்
எல்லோருக்கும்
பொங்கலும் இனிக்கும்
பொங்கல் சோறும்
இனிக்கும்.

மனிதம் உள்ள 'மனித' இனத்தவர் அனைவருக்கும் பொங்கல் நன்னாள்
வாழ்த்துகள்

Tuesday, January 12, 2010

#ஈரானில் ஒரு காமராஜர்..!


நீங்கள் பார்க்கப்போவது ஓர் அன்னக்காவடியின் வாழ்க்கை இல்லை. எந்த வாய்ப்பும் இல்லாத ஓர் ஏழையின் கதை இல்லை. முற்றும் துறந்த முனிவனின் வரலாறு இல்லை. பற்றற்ற ஒரு துறவியின் தினசரி நடவடிக்கைகள் இல்லை.

சாமி சத்தியமாக நம்புங்கள்! உலகின் சக்தி வாய்ந்த ஒரு தேசத்து அதிபரின் அசரவைக்கிற எளிய வாழ்க்கை இது! அதற்கு முன்பு ஒரு கேள்வி.

உலகத்திலேயே மிக வறிய ஓர் ஏழையாக இருந்தாலும் காலையில் எழுந்து கண்ணாடி பார்த்ததும் என்ன நினைப்பார்கள்? “அடடா... என்ன அழகு! என்ன... இன்னும் கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம், ஆனாலும் பரவாயில்லை” என்ற ரீதியில்தானே?

ஆனால் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் டி.வி.யின் கேள்வியாளர், (வேறு) ஒரு நாட்டின் அதிபரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, அந்த அதிபர் சொன்னார்.

“கண்ணாடியில் தெரியும் முகத்தைப் பார்த்த உடன் நான் சொல்வேன். ‘ஞாபகம் வைத்துக்கொள். ஓர் எளிய சிறிய வேலைக்காரனை விட நீ ஒன்றும் பெரியவன் இல்லை. இன்று(ம்) உன் முன்னால் ஈரானிய தேசத்தின் நலனுக்காகப் பாடுபடவேண்டிய ஒரு முக்கியமான பொறுப்புணர்ச்சி காத்துக் கிடக்கிறது என்று அந்த முகத்திடம் சொல்வேன்.”

ஆம்! சொன்னவர் ஈரான் தேசத்து அதிபர் அகமதி நிஜாத்.

தன் தவறுகளை மறைக்கும் பொருட்டு மக்களை ஏமாற்ற, கவிதையிலோ அறிக்கையிலோ தன்னை மிக எளியவன் என்று நாடகத்தனமாக வர்ணித்துக் கொள்ளும் போலித்தனமான புலம்பல் இதில் சற்றும் இல்லை என்பதுதான், உலகின் எட்டாவது அதிசயம்!

அதிபராகப் பொறுப்பேற்று தன் அலுவலகம் நுழைந்த உடன், எல்லோர் விழிகளும் வியப்பால் விரிகுடாக்களாக விரியும் அளவுக்கு, அகமதி செய்த முதல் காரியம்...

ஒரே கையெழுத்தில் ஆயிரம் கோடி ரூபாயை அமுக்கிக்கொண்டதோ அல்லது தொழில் தொடங்க வந்த எம்.என்.சி. நிறுவனத்தின் 30 சதவிகித பங்கை தனது முக்கிய வாரிசின் பெயரில் முடக்கிக் கொண்டதோ அல்ல!

ஈரான் நாட்டு அதிபர் அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த ஈரானிய தரை விரிப்பு கம்பளங்களை ஒரு மசூதிக்கு வழங்கிவிட்டு, மிக விலைக் குறைவான சாதாரண கம்பளங்களை தனது அலுவலகத்தில் போட்டதுதான். அடுத்த வேலை, அதிபரைச் சந்திக்க வருகிற வி.ஐ.பி.க்கள் வரவேற்கவென்று இருந்த மிகப்பெரிய சொகுசு அறையை மாற்றி, அங்கிருந்த விலை உயர்ந்த நாற்காலிக்குப் பதிலாகச் சாதாரண நாற்காலிகளுடன் கூடிய ஒரு சிறிய அறையை மட்டும் அமைத்துக்கொண்டதுதான்.

ஒரு முறை தேர்தல் பிரசாரத்துக்குப் போய் இறங்கவே ஹெலிபேட்கள், பல லட்ச ரூபாய் செலவில் குளு குளு அறைகள், சில லட்ச ரூபாய் செலவில் பளபளப்பான ‘ஒன்ஸ் யூஸ்டு’ கழிவறைகள் அமைக்கிற நமது அரசியல்வாதிகளோடு ஈரான் அதிபரை அதிகம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அதனால் உங்களுக்குத் தலை சுற்றலோ மாரடைப்போ வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல. ம்... எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் அடுத்த வரிகளைப் படியுங்கள். ஏங்கி ஏங்கியே உங்களுக்கு அல்சர் வரலாம்.

ஆம். தனது வீடு மற்றும் அதிபர் அலுவலகம் உள்ள தெருக்களை, முனிசிபாலிட்டி ஊழியர்களோடு சேர்ந்து பலமுறை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்யும் வேலையிலும் ஈடுபடுவார், ஈரான் அதிபர் அகமதி நிஜாத். நம்ம அரசியல் தலைவர்களும் கூட்டிப் பெருக்காமலா உள்ளனர். சொகுசு வசதிகளைக் கூட்டி, ஊழல் பணத்தைப் பெருக்கி..!

ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அனுப்ப வேண்டிய ராஜினாமாக் கடிதங்களை தான் வாங்கி வைத்துக்கொண்டு, ராஜினாமா செய்யப் போவதாகக் கபட நாடகம் ஆடுபவர் அல்ல அகமதி. அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் “எத்தனை ‘சி’ கட்சிக்குத் தருவ? எத்தனை ‘சி’ வீட்டுல தருவ? எத்தனை ‘சி’ செலவழிப்ப?” என்ற ‘சீச்சி’ வேலை-யெல்லாம் செய்யமாட்டார்.

மாறாக... முதல் கண்டிஷன்... பதவிக்காலத்திலும் அந்த அமைச்சர் ஏழையாகவே இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அந்த அமைச்சரின் உறவினர்களது வங்கிக் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறும்போது, எந்த மாற்றமும் அவப்பெயரும் இல்லாமல் கௌரவமாகப் பழைய ஏழைமை நிலையிலேயே பதவி விலக வேண்டும். தவிர, அந்த அமைச்சரோ அவரது உறவினர்களோ அதிபர் அலுவலகத்தில் எந்தச் சலுகையும் எடுத்துக் கொள்வது சட்ட விரோதமாகக் கருதப்படும். வக்கணையாகப் பேசி மக்களை ஏமாற்ற காற்றில் இந்தக் கண்டிஷன்-களைப் போடுவதில்லை அகமதி. அமைச்சராகப் பதவி ஏற்பவர்களிடம் அட்சர சுத்தமாக எழுதி வாங்கிக் கொண்டுதான் மறுவேலை.

‘மக்களிடம் மாட்டிக்-கொள்ளக்-கூடாது. அதே நேரம் எப்படியாவது ஊழல் செய்து கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். மீறினால் மந்திரி பதவி காலி’ என்று மிரட்டுவதற்காக, பதவி ஏற்புக்கு முன்பே தேதியிடாத ராஜினாமாக் கடிதம் வாங்கி வைத்துக் கொள்ளும் ரகம் இல்லை அகமதி.

1977 மாடலான பியூகோ 504 ரக டப்பா கார் ஒன்று, டெஹ்ரான் நகரின் மிக மிக ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் நாற்பது வருடங்களுக்கு முன்பு அவரது தந்தையின் வாரிசுச் சொத்தாகக் கிடைத்த ஒரு பழைய தம்மாத்துண்டு வீடு, இவ்வளவுதான் அகமதி நிஜாத்தின் ‘பெரிய்ய்ய’ சொத்துக்கள்.

தவிர அவரது வங்கிக் கணக்கில் சேமிப்பு என்று ஒரு அணா பைசாக்கூட இல்லை. பல்கலைக்-கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்று-வதற்காக அவருக்கு வருகிற 250 அமெரிக்க டாலர்கள் மட்டுமே அவரது ஒரே வருமானம்.

எக்ஸ்கியூஸ்மி...

அதிபரான பிறகும் அந்தப் பழைய துக்கடா வீட்டில்தான் அகமதி இன்னும் வசிக்கிறார்!

எண்ணெய் வளமும் ஆயுத பலமும் கொண்ட, யுத்த தந்திரங்களில் பெயர் பெற்ற, பொருளாதாரம், அரசியல், மதக்கோட்பாடு இவற்றில் செழித்த முக்கியமான உலக நாடுகளில் ஒன்றான ஈரானின் அதிபரின் சொத்து மதிப்பு இவை மட்டுமே, என்றால் நம்புவதற்கு எத்தனை சிரமம்?

நம் ஊரில், ஈழத்தமிழனுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரையே யாரென்று கேட்ட அரசியல் சமூக மா... மா.. மா... மேதை வெளியே சொல்கிற சொத்து மதிப்பே... படா படா..! தனது சம்பளப் பணத்தைக்கூட அகமதி எடுப்பதில்லை. “எல்லா செல்வமும் நாட்டுக்கே. அவற்றைக் காப்பதுதான் என் வேலை” என்று அடக்கமாகச் சொல்கிறார்.

ஒரு துக்கடா கட்சியின் வட்டம், சதுரம், முக்கோணம் எல்லாம் கூட, ஒரு நேர சாப்பாட்டுக்காக, ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலையே புரட்டிப் போடுகிற தேசத்தில் வாழ்கிற வாசகர்களின் மேலான கவனத்துக்குச் சொல்லப்படும் தகவல் யாதெனில்...

அதிபர் அகமதி நிஜாத்தின் கையில் தினமும் ஒரு சின்னப் பை. அதில் காலை சிற்றுண்டி. என்ன தெரியுமா? மனைவி கொடுத்தனுப்பும் சாண்ட் விச்சுகள், இல்லை-யென்றால் வெறும் பிரெட். அதை அவ்வளவு சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டு நாட்டுக்காக உண்மையாகவே உழைக்கிறார் அகமதி நிஜாத்.

இன்னொரு அதிசயம். அதிபருக்கு என்று ‘அதிபர் விமானம்’ என்று தனியாக எதற்கு? மக்களின் சொத்து ஏன் வீணாக வேண்டும்? அதை விலக்கிவிட்டு மக்களுக்கான சாதாரண விமானத்தில் அதுவும் எகனாமிக் கிளாசில்தான் பயணிக்கிறார்.

‘அமைச்சர்களின் பணிகள் மற்றும் செயல் திறன் பற்றி அறிய அடிக்கடி அவர்களை அதிபர் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதிபருக்கு என்று உள்ள மேலாளரிடம் அனுமதி பெற்றுதான் அதிபரை அமைச்சர்கள் சந்திக்க வேண்டும் என்றால் நேரம் வீணாகாதா? அந்த மேனேஜர் நாற்காலியைத் தூக்கி விடு’

விளைவு? எந்த அமைச்சரும், அனுமதி இன்றி எப்போது வேண்டும் என்றாலும் அதிபரின் அறைக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம், அதிபர் உள்பட யாருடைய அனுமதியும் இன்றி! தவிர, சிவப்புக் கம்பள வரவேற்பு போன்ற வெட்டியான வரவேற்பு விழாக்கள், புகைப்படம் எடுக்கும் சம்பிரதாயம், பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்படும்போது அதிபரைப் புகழ்ந்து செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்திற்கும் ‘தடா’ போட்டார் அகமது.

தவறுகளைச் சுட்டிக் காட்டுகிற எதிர்க்கட்சியினரை தடாவிலோ, தேசிய பாதுகாப்புச் சட்டத்திலோ பிடித்து உள்ளே போடவில்லை. எங்காவது ஹோட்டல்களில் தங்கும்போது தனக்கு ஒதுக்கப்படுவது பெரிய படுக்கையுடன் கூடிய அறையாக இருக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி உறுதி செய்து கொண்டு விடுவாராம். காரணம், அந்த மாதிரி மெத்தைகளில் படுப்பதைவிட தரையில் ஒரு சாதாரண பாயில் எளிய போர்வையை பயன்படுத்தி உறங்கவே அவருக்குப் பிடிக்கிறது.

பாருங்கள் இந்தப் புகைப்படங்களை. அன்றைய பணி முடித்து பாதுகாவலர்கள் போன பின்பு தன் வீட்டின் வரவேற்பு அறையில் தூங்குவதை! வைஃபாக் என்ற செய்தித்தாளுக்காக அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் அதிபரின் இளைய சகோதரர். வைஃபாக் இதழில் இப்படம் வெளியான மறுநாளே, அமெரிக்கா உட்பட உலகின் பல நாட்டு செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டது இந்தப் புகைப்படம். இறை வணக்கத்தின்போது கூட, முதல் வரிசையில் உட்காராமல் உள்ளே உட்கார்ந்து இருப்பதையும், தனது எளிய உணவை சாப்பிடுவதையும், பார்க்கிற பாக்கியமாவது நம் கண்களுக்குக் கிடைக்கட்டும். அதிகாரத்தில் உள்ள நமது அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குத் தரப்படும் சம்பளம், சலுகைகள், தவிர அவர்கள் லஞ்சம் ஊழல் மூலம் கொள்ளையடிக்கும் பணம் இவற்றோடு ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தின் காவிய எளிமையை ஒப்பிட்டுப் பார்க்க முயலுங்களேன்.

அதிபர் பதவிக்கே இலக்கணம் வகுக்கிறார் ஈரானின் அகமதி. அப்படி ஒரு பிரதமர் கிடைக்காவிட்டால் எதிர்கால இந்தியன் எல்லோரும் அகதி!Sunday, January 10, 2010

# அய்யய்யோ சென்னை .. குரல் வளையை நெரிக்கும் ஆட்டோ கட்டணம்
சென்னை தி.நகர் பனகல் பார்க் பேருந்து நிலையம். அலுவலக தினத்தின் பரபரப்பான காலை நேரம். ‘மருத்துவமனையில் இருந்து குணமாகி வந்து பேருந்தில் ஏறினேன். இறங்கியதும் மீண்டும் மருத்துவமனைக்கே போனேன். நான் ஏறியது மாநகரப் பேருந்தில்...’ என்ற கவிதைக்கு(?) இலக்கணம் வகுக்கும் சூழல்.

நெரிசலில் பஸ் ஏற முடியாத ஒரு பெரியவர், ஆட்டோவில் போக முடிவு செய்தார். ஓர் ஆட்டோக்காரரிடம் பேச, அவர் அநியாயக் கட்டணம் கேட்க, பெரியவர் கோபப்படவில்லை. மாறாக நியாயமான தொகையை அமைதியாகப் பெரியவர் சொன்னதும், ஆட்டோக்காரருக்கு வந்ததே கோபம்! நெருப்புத்துண்டங்களாய் வார்த்தைகள்!

‘‘யோவ்... பெரிசு... அவ்வளவுதான் தருவியா? உன்ன ‘தூக்கிட்டு’ப் போக?’’

அடுத்த நொடி பெரியவர் நெஞ்சில் கை வைத்தபடி கீழே உட்கார்ந்து கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார். ஆட்டோக்காரர் தொடர்ந்து ‘நியாயம் முழங்கிக்’ கொண்டிருந்தார். சீர்மிகு சிங்காரச் சென்னையில் அது அடிக்கடி நடக்கும் சம்பவம்தான். ஆட்டோக்காரர் கேட்கிற அநியாயத் தொகையை தராவிட்டால் இப்படிதான். ‘ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் கையில் பேட்ஜ் அணிந்து இருக்க வேண்டும். சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணக் கட்டணம் போக சரியான சில்லறையைத் தர வேண்டும். அனுமதி எல்லைக்கு உட்பட்டு பயணி எங்கே அழைத்தாலும் மறுக்காமல் போக வேண்டும். முக்கியமாக, பயணியிடம் ‘‘எங்கே போகணும்?’’ என்று அபசகுணமாகக் கேட்கக்கூடாது. பயணி சொல்லும்வரை அமைதியாக முகம் பார்க்க வேண்டும்’.

இதெல்லாம் எங்கே என்கிறீர்களா? இதே சென்னையில்தான், 1970களின் பிற்பகுதியில்! அன்றைக்கு அப்படி இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், இன்று எமனின் ஏவலர்கள் போல ‘தூக்கிக்’கொண்டு போக ஆசைப்படுவது ஏன்?

நின்று கொண்டிருக்கிற ஆட்டோவின் இடது புறம் ஏறி வலது புறம் இறங்கினால் கூட அம்பது ரூபாயில் ஆரம்-பிக்கிற அநியாயத்துக்கு யார் காரணம்? ஆட்டோக்களில் ‘மீட்டர் திருத்தப்பட்டது’ என்று எழுதியிருப்பார்கள். திருத்தப்பட்ட மீட்டரே அங்கு இருக்காது என்பது வேதனைக்குரிய தனி விஷயம்! ஆனால், ஆட்டோ டிரைவர்களை திருத்தவே முடியவில்லையே ஏன்?

பின்னணியில் பிசாசாய் இயக்கும் ஆளும் அரசியல், அதிகார வர்க்கம்தான் இதற்கெல்லாம் காரணம்.

இன்று தமிழ்நாட்டில் ஆட்டோவில் இருக்கிற எல்லா மீட்டர்களையும் ஒட்டு மொத்தமாகப் பிடுங்கி பழைய இரும்புக்கடையில் போட்டு பேரீச்சம்பழம் (தருவார்களா?) வாங்கிக்கொள்ளலாம்.

எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போடுவதில்லை. அட முன்பெல்லாம் தறிகெட்டு ஓடி, இதயத்தை தடதடக்கச் செய்யும் மீட்டராவது இருக்கும். இப்போது அது கூட இல்லை. முன்பு பயணி ஏறி, வண்டி கிளம்பியதும் ஒப்புக்காவது மீட்டர் போடுவார்கள். இப்போது அதுவும் இல்லை. புதிதாக ஆட்டோ ஓட்ட வருபவர்களுக்கு, ‘ஆட்டோவுக்கு மீட்டர் என்ற ஒரு வஸ்து இருந்ததே’ தெரியவில்லை.

‘‘ஆட்டோவுக்கு கொடுத்தே சொத்து அழிஞ்சிடும்போல இருக்கே’’ என்ற பழைய நகைச்சுவை உண்மையாகிவிடுமோ என்ற பயத்தில், இயலாத நடுத்தர வர்க்கமும் ஏழை சனமும் இன்று தவிக்கிறது. தமக்குத் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பக்கத்து மாநிலத்தோடு ஒப்பீடு அட்டவணை போடும் முதலமைச்சருக்கும், அவரை அடியொற்றும் அமைச்சர்களுக்கும், ஆட்டோ விவகாரத்தில் மட்டும் ‘கிட்டப்பார்வை’ வியாதி.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்கள் அனைத்திலும் ஆட்டோக்கள் மீட்டர் அடிப்படையில்தான் இயங்குகின்றன. நாகரிகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட மும்பையில் டாக்ஸி, ஆட்டோ இரண்டிலும் மீட்டர் உண்டு. மேற்கொண்டு போட்டுத் தருவது என்பது ஆட்டோ ஓட்டுநரின் வேண்டுகோள், பயணியின் திருப்தி இரண்டும் சம்மந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது. நம் ஊரிலோ ஆட்டோ டிரைவர்கள் தமது ஆசைப்படி பயணியை ஏலம் எடுக்கும் அவலம்! கேரளாவில் இன்றும் மீட்டர் தொகை தவிர மிச்சக் காசை சில்லரை பைசா வரை சரியாக திருப்பித் தரும் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்டு.

ஆனால், தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாமல் ஆட்டோவில் ஏறுவது என்பது கூட, இம்மையில் அப்பாவி மக்கள் அனைவருக்கும் நரகமாகவே உள்ளது. மனிதனை மனிதனே இழுக்கும் அவலமான கை ரிக்ஷாவை ஒழித்தது இன்றைய முதல்வர்தான். அவருடைய சாதனைகளில் ஒன்றாக அது குறிப்பிடப்படுகிறது. இருக்கட்டும். சந்தோஷம். சைக்கிள் ரிக்ஷாக்களில் நேரம் அதிகமாகிறது என்ற நிலையில்தான் ஆட்டோக்கள் வந்தன. பெருகின. ஆனால், இன்று ஆட்டோ ஓட்டுநர்களிடம் சிக்குகிற அப்பாவி பொதுமக்கள் அவலமோ, கைரிக்ஷா இழுத்த முந்தைய தலைமுறைத் தொழிலாளர்களை விட மோசமாக உள்ளது.

இதற்கு கைரிக்ஷாவே இருந்திருக்கலாமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. அப்பாவிகள், கண்ணியமான தோற்றம் கொண்டவர்கள், தனி மனிதர்கள், பெண்கள்... தவிர்க்க முடியாத சூழலில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டை நெருங்குவது என்பது, மிக ரிஸ்கான விஷயம்.

முதலில் நாம் சொல்லும் இடத்துக்கு வரும் ‘மூட்’ ஆட்டோக்காரர்களுக்கு இருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர்கள் கேட்கும் தொகைக்கு மறு பேச்சில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். பத்து ரூபாய் குறைந்தாலும் ‘நீங்க’ என்ற மரியாதை ‘நீ’ என்று இறங்கிவிடும். அவர்கள் கேட்கும் தொகைக்கு ஒத்துக்கொள்ள மறுத்து, நகர்ந்தால் தேவையில்லாமல் பேசுவார்கள். தப்பிக்க முயன்று அமைதியாக வந்தாலும் கிண்டல், கேலி, வசவுகள் முதுகைத் துளைக்கும். கோபம் வந்தால் யாரிடம் புகார் செய்ய முடியும்?- போலீசாரிடம் தானே. அந்த ஆட்டோவே பினாமி பெயரில் போலீசாருக்குச் சொந்தமானதாக இருக்கும். பிரச்னை இங்கேதான் ஆரம்பிக்கிறது.

முன்பு ஆட்டோ என்பது, சார்பில்லாத பொதுமக்கள் ஈடுபட்ட தொழிலாக இருந்தது. அதுவரை எல்லாமே நன்றாக இருந்தது. பின்னர் அது மாறி கட்சிகளின் வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள் அதில் இறங்கின. பிரச்னை வந்து போலீசிடம் போனால் அரசியல் காரணமாக போலீசார் கண்டும் காணாமல் போக வேண்டி இருந்தது. பார்த்தது காவல்துறை. ‘நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும்? தனி கடை வைப்போம்’ அடுத்த கட்டமாக பெரிய போலீஸ் அதிகாரிகளின் பெயரிலோ அல்லது பினாமிகளின் பெயரிலோ ஆட்டோக்கள் பெருகுவதாகச் செய்திகள் வந்தன. இப்படியாக ஆட்டோ என்பது அரசியல்-வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் தொழிலானது.

இது தவிர, இருக்கவே இருக்கிறது நடிகர்களின் பெயர்கள், கட்சிகளின் அடையாளம், சாதிச்சங்கம் ஆதரவு போன்றவை. இவற்றில் ஏதோ ஒன்றின் பெயரில் ஒரு பலகையைத்திறந்து வைத்து, கும்பலாக பத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து விட்டால் போதும்.

பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம். வயிற்றில் அடிக்கலாம். யாரும் தட்டிக் கேட்க முடியாது. தவிர தேர்தல் சமயங்களில் ஊர்வலம் அணுப்புவது முதற்கொண்டு பணப்பட்டுவாடா வரை இந்த ஆட்டோக்காரர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள அரசியல்வாதிகளால் முடிகிறது. பிரதிபலனாக அடுத்த தேர்தல் வரை மக்களைச் சுரண்ட அரசியல்வாதிகளிடமிருந்து இந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி. ஆட்டோக்களால் பொதுமக்கள் அநியாயமாகச் சுரண்டப்படுவதற்கு இதுவே காரணம். தட்டிக் கேட்க ஆள் இல்லாததால் ஆட்டோ எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரனாக ஆகிறார்கள்.

இன்றும் நேர்மையான நல்ல ஆட்டோ டிரைவர்கள் இல்லாமல் இல்லை. லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பயணிகள் தவற விட்டாலும் ஒரு பைசா குறையாமல் திரும்ப ஒப்படைத்து, தருகிற வெகுமதியையும் மறுத்துவிட்டுப் போகிற நல்ல இதயங்களுக்கும் உண்டு. ஆனால், தவறானவர்கள் எழுப்பும் அராஜக ஆரவாரத்தால் பொதுமக்களின் மனம் கதறும் கதறல் ஒலிகளில், இந்த மனிதாபிமான மெல்லிசைகள் நம் காதுகளை எட்டுவதேயில்லை. என்ன செய்தால் நிலை மாறும்?

அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் பினாமிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அரசுப் பேருந்துப் போல ஆட்டோக்கள் அரசு வாகனமாக்கப்பட வேண்டும். டிரைவர்களுக்கு மாதச் சம்பளம். அல்லது படித்த இளைஞர்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி, ஆட்டோ வாங்க அரசுக்கடன். காவல் துறையில் உள்ளவர்கள், அவர்தம் குடும்பத்தினர் ஆட்டோ உரிமையாளராக இருக்கக்கூடாது. மீட்டருக்கு மேல் கேட்டு வற்புறுத்தினால் சிறைத் தண்டனை. இவையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை.

எல்லா ஆட்டோக்-களிலும் மீட்டர், சரியான கட்டணம், பயணிகளை தரக்குறைவாகப் பேசியதாகப் புகார்கள் வந்தால் விசாரித்து தயவு தாட்சண்யமற்ற தண்டனை..! இவற்றையாவது செய்ய வேண்டியது அரசின் கடமை.

மிகப் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர் தினசரி சந்திக்கும் இந்த அவல நிலையை மாற்றி, வெளியில் தெரியாமல் அவர்கள் வடிக்கும் கண்ணீரைத் துடைக்க வேண்டியது அந்த அரசின் கடமை. ஆட்டோக்களில் மீட்டர் பொறுத்துவோம் என்ற தனது முந்தைய அறிவிப்பை மனதில் நிறுத்தி தமிழக அரசு உடனடியாக இதைச் செய்து தனது தைரியத்தையும் நேர்மையையும் நிரூபிக்க வேண்டும்!

# புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்


நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்


1) தகவல்பெறும் உரிமைச் சட்டம் பயன்படுத்துவது எப்படி?/ சிவ.இளங்கோ/மக்கள் சக்தி பதிப்பகம் info@makkalsakthi.net


2) கைதானால் உங்கள் உரிமைகள்/ மக்கள் கண் காணிப்பகம்/info@pwtn.net

3)சென்னை குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம் பெயர்த்துக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலை/அ.மார்க்ஸ்/குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம், 573, 9வது தெரு,சௌத்திரி நகர்,வளசரவாக்கம்,சென்னை 87


4) சர்வாதிகாரி ( The Great Dictator என்ற) சார்லி சாப்ளின் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் கட்டுரைகள்(தமிழில்)/விஸ்வாமித்ரன்/கருத்துப்பட்டறை/ viswamithran@gmail.com


5)எம்.ஜி.ஆர் .கொலை வழக்கு(சிறுகதைகள்)/ஷோபா சக்தி/கருப்புப் பிரதிகள் பதிப்பகம்/shobasakthi@hotmail.com


6)தமிழகத்தில் என்கௌண்டர் (போலி மோதல்) என்ற அரச பயங்கரவாதம்/தமிழக மக்கள் உரிமைக் கழகம்/tprt@savukku.net


7)ஈழம் அழிப்பில் இந்தியா -- துணை போகும் ம.க.இ.க/அ.சின்னப்பா தமிழர்/ தமிழம்மா பதிப்பகம்/044 24753373


8)ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க/கோபினாத்/சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன் /sixthsensepub@yahoo.com


9)தினம் ஒரு தியான மலர்/தேவநாதசுவாமிகள்(காஞ்சிபுரம் கோயில் அல்ல)/ நர்மதா பதிப்பகம்,சென்னை/ 044- 24334397


10) Census of india/Dr.Chandra mouli/dcotn@vsnl.net


11)புதிய திருவிளையாடற்புராணம் - காஞ்சி ச்ங்கராச்சாரியார் கொலை வழக்கு --- ஏன்? எதற்கு? எப்படி?/கி.வீரமண /திராவிடர் கழக வெளியீடு,பெரியார் திடல், 50, ஈ.வி.கே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 www.viduthalai.net


12) நடுங்கும் கடவுளின் கரங்களில் இருந்து/பின்னி மோசஸ்/வம்சி புக்ஸ் /vamsibooks @yahoo.com


13) எம்.ஜி.ஆர் .பேட்டிகள்/தொகுப்பு.எஸ்.கிருபாகரன்/ஆழி பப்ளிஷர்ஸ் /aazhieditor@gmail.com


14) நேர்காணல் --- காலாண்டிதழ் -- புஞ்சையிலிருந்து புரிசைக்கு/பவுத்த அய்யனார் /ayyapillai@gmail.com


15) மலச்சிக்கலைத் தவிர்க்க 6 வழிகள்/இயற்கைப் பிரியன் இரத்தின சக்திவேல்/ காளீஸ்வரி பதிப்பகம்/044- 24314347


16) நான் சந்தித்த மரணங்கள் /மரண கானா விஜி/கருப்பு பிரதிகள் / karuppu2004@rediffmail.com


17)துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்/புதிய கலாச்சாரம் வெளியீடு/044 -- 23718706, 28412367


18) பிரபாகரன் சிந்தனைகள்/ ஆரூர் தமிழ் நாடன் - இளைய செல்வன்/ நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் /044 --- 43993029


19) பாதுகாப்பைத் தேடும் மனம், 19அ)துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா?, 19 ஆ)போராட்டமின்றி வாழ முடியாதா?/ஜே.கிருஷ்ணமூர்த்தி/ krishnamurthy foundation of india publications@kfionline.com


20) செந்தமிழ் அகராதி (மாற்றுத் தமிழ்ச் சொற்கள்)/யோ.கில்பட்/தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்/stlouispress@gmail.com


21) ஈழம் மவுனத்தின் வலி/தொகுப்பு :த.செ. ஞானவேல்/ நல்லேர் பதிப்பகம்/ nallaerpathippagam@gmail.com


22)சூரிய கதிர் மாதமிருமுறை இதழ் ‍‍ (பிரபாகரன் கன்னத்தில் அறைந்தது யார்?கட்டுரைக்காக/editor@suriyakathir.com


23)உன்னதம் மாத இதழ் ‍‍ ( நாடு கடந்த அரசுகள் கட்டுரைக்காக)/ www.unnadhamblogspot.com


24) தமிழ் எழுத்துப் பயிற்சி /மதுரை பாபாராஜ் -- லட்சுமிப்ரியா/info@applebooks.com


ந‌ண்பர்களே !

புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்ததா? என்ன புத்தகம் வாங்கினீர்கள்?இது போல் , விரும்பினால் வாங்க முடியும் அளவுக்கு முழு விவரங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

பரிமாறிப் பயன் பெறுவோம். வருக வருக!

Friday, January 8, 2010

# வீரத்தின் அப்பன் வேலுப்பிள்ளைக்கு....


மாவிரன் பிரபாகரனின் தந்தையார்
திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு
என் அஞ்சலி
*************


வீரத்தின்
அப்பனுக்கு..

வரலாற்றில் வாழும்
திருவேங்கடம்
வேலுப்பிள்ளைக்கு...

எல்லாரின்
உயிர்த்துளியும்
இளஞ்சூட்டில்
இருக்குமாம்.

ஆனால்
உன்னுடைய
ஒரு துளி
எரிமலைக் குழம்பின்
திலகம்.

ஆம்!
அய்யா..

நீ
கருப்பைக்குள்
ஒரு
நெருப்பை
விதைத்தவன்.

'இப்படி ஒரு
பிள்ளை
வேண்டும்'
எல்லோரும்
ஆசைப் பட்டனர்
உன்
பிள்ளையைப் பார்த்து .

'இப்படி ஒரு
தந்தை வேண்டும்'
வீரர்களை
ஏங்க வைத்தவன் நீ!

போர்க்களத்தில்
பிள்ளை இருக்க‌
அமைதிக் குளத்தில்
நானா
என
ஈழம் கிளம்பி ,
பாசத்தையும்
வீரத்தையும்
பக்குவமாய்க்
கலந்தவன் நீ.

நீ
நடக்கும்போது
முதுமையில்
தள்ளடுவாயா?

நான் பார்த்ததில்லை.

ஆனால்
சாகும்வரை
உன்
பாசமும் வீரமும்
தள்ளாடவே இல்லை.


விழுதுகள்
பழுதானபோதும்
வீரியமாய் நின்ற
வேர் ஆலம் நீ

உன்னை
உருக்குலைத்த
உளுத்தர்கள்
உளுத்துப் போகும்
நாள்
விரைவில்.

பொன்னியின் செல்வனில்
வரும்
பெரிய பழுவேட்டரையன்
உன்
மகனுக்குப் பிடித்த
மாவீரன்.

ஆனால்
பிரபாகர மாவீரனைப்
பெற்ற நீ ....
நாங்கள் பார்த்த
நவீன
பழுவேட்டரையன்!

Wednesday, January 6, 2010

# விஷம் தோய்க்கும் விளம்பரங்கள்


திரையரங்குகளில், படம் தொடங்கும் முன்பாக விளம்பரப்படங்களோ, அரசின் செய்தித் தொகுப்போ முடியும் தருவாயில், பலத்த விசில் சத்தம் கிளம்பும். அடுத்து படம் தொடங்கப் போகிற சந்தோஷத்தில்! இதுதான் நாம் விளம்பரங்களுக்குத் தரும் முக்கியத்துவம்.

ஆனால், தொலைக்காட்சிகள் வந்த பிறகு- அதுவும் தனியார் தொலைக்காட்சிகள் பார்த்தீனியச் செடிகள்போல முளைத்த பிறகு, விளம்பரப்படங்கள் நம் வீட்டில் நுழைந்து தோளில் ஏறி, முடியைப் பிடித்து உலுக்கி அதகளம் பண்ண ஆரம்பித்தன.

எரிச்சலாக இருந்தாலும் நமக்குப் பிடிக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளைத் தயாரிக்க, பிடித்தமான படங்களை ஒளிபரப்ப அவர்களுக்கு ஆகும் செலவை சமாளிக்கும் வருமானம் அது என்பதால் அவற்றை தவிர்க்க முடியாது என்பதைத் தெலைக்காட்சி நேயர்களும் புரிந்துகொண்டனர்.

பொதுவாக பல விளம்பரப் படங்கள் யதார்த்தமின்றியே இருக்கும்.

ஓர் உதாரணம்..!

அரண்மனைச் சோலை ஒன்றில் ஒரு ராஜகுமாரன் காத்திருப்பான். வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அழகிய தேரில் வந்து இறங்கும் ராஜகுமாரி வெட்கத்தோடு சிரிக்க, அவன் சிலிர்க்க, ராஜகுமாரி சந்தோஷமாக ஓடி வர, ராஜகுமாரன் கைகளை விரிக்க, அவனைப் புறக்கணித்து ஓடும் கதாநாயகி, ஒரு நிறுவனத்தின் செருப்பை எடுத்து அணைத்துக்கொண்டு, அந்தச் செருப்பு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ‘ஐ லவ் யூ’ என்பாள். ஒரு கதை அல்லது படம் என்று பார்க்கும் போது, இது கேலிக் கூத்தாகத் தெரிந்தாலும், ஒரு பொருளின் தயாரிப்பாளர் தன் பொருளைப் பிரபலப்படுத்த எடுக்கும் விளம்பரப் படத்தில், ராஜகுமாரிக்கு, ராஜகுமாரனைவிட அந்தப் பொருள்தான் முக்கியம் என்றே சொல்ல முடியும். அது செருப்பாக இருந்தாலும் கூட!

எனவே, ஆரம்பத்தில் இதுபோன்ற விளம்பரங்களை மக்கள் தாழ்ப்பார்வை பார்த்தாலும் பின்னர் அவற்றையும் ஜீரணிக்கக் கற்றுக்கொண்டனர்.

ஆனால்,அண்மைக்காலமாக நமது தொலைக்-காட்சிகளில் வரும் விளம்பரப் படங்களில் ஒழுக்க மீறல்களைத் தூண்டுகிற மாதிரியான காட்சிகள், வசனங்கள் அதிகமாகிக் கொழுத்துக் கொண்டே போகின்றன.

நடிகை அசின், ஒரு குளிர்பான விளம்பரத்தில் பெண் பார்க்க வந்திருப்பவர்கள் முன்னால் கும்மாங்குத்து நடனம் ஆடுகிறார். அப்படி ஆடுவது பெண்ணுரிமையா அல்லது ஒழுக்க மீறலா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், குளிர்பானத்தின் பெயரைச் சொல்லி, “கண்ணு கொஞ்சம் கலாட்டா பண்ணு” என்கிறார். இது இளைஞர்கள் மத்தியில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.

இன்னொரு குளிர்பான விளம்பரத்தில் நடிகை ஜெனிலியா அந்தக் குளிர்பானத்தின் ‘சிக்னல் லவுட் (றீஷீதபீ) கட்டடிக்க அல்லோவ்டு (ணீறீறீஷீஷ்மீபீ)!’ என்கிறார். குளிர்பானத்தில் என்ன சிக்னல் உள்ளது... அதனால் எப்படி கட் அடிக்க அனுமதிக்கப்படுகிறது? என்பது புரியவில்லை.

இவை மட்டுமின்றி நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான அசைவுகள், அருவருப்பான காட்சி அமைப்புகளும் பல விளம்பரப்படங்களில் கடை விரிக்கப்படுகின்றன.

மிக்ஸி விளம்பரம் ஒன்றில், ஒரு வீட்டில் புது மிக்ஸி ஒன்று இருக்கும். ஓர் அழகான இளம்பெண் கவர்ச்சியான உடையில் ஆடிக்கொண்டு இருப்பாள். உள்ளே நுழையும் கணவன் (அல்லது காதலன்) வியந்துபோய், “அடேங்கப்பா... என்னா கலரு... என்னா ஃபிகரு...” என்பான். அவன் வர்ணிப்பது மிக்ஸியைத்தான் என்பதுபோல கடைசியில் முடிந்தாலும், அவன் பேசப்பேச பெண் ஆடுவதைத்தான் காட்டுகிறார்கள். பொதுவாக ஒரு பெண் இருக்கும் இடத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வார்த்தையைச் சொன்னால் அது ஈவ் டீசிங் குற்றமோ, அதே வார்த்தைகள், அந்த விளம்பரத்தில் வந்து திகைக்க வைக்கின்றன.

நறுமணத் திரவம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரம், ஆபாசத்தின் உச்சம்! ஓர் இளைஞன் அந்தத் திரவத்தைத் தன் மேல் பீய்ச்சி அடித்ததும், அவன் முழு உடம்பும் சாக்லேட்டாக மாறிவிடுகிறது. அவனை வழியில் பார்க்கும் பெண்கள் எல்லாம் நாக்கைச் சுழற்றி, உதட்டை ஈரமாக்கி காமவெறி பிடித்ததுபோல, அவனைப் பின்தொடர்கிறார்கள். ஓர் அறைக்குள் கடைசியாக அவன் நுழைகிறான். அங்கே ஒரு பெண் கட்டிலில் படுத்திருக்கிறாள். உடலின் மேல்பாதி மட்டும் தெரிகிறது. மிச்சப்பகுதியை மறைத்தபடி அந்த இளைஞன் ஒரு பெட்டியைக் காட்டி, அதைத் திறந்து, உள்ளே இருந்து சாக்லெட் பூசிய தனது விரல்களை மேலும் கீழும் ஆட்டுகிறான். அந்தப் பெண் உடல் குலுக்கிக் குலுக்கிச் சிரிக்கிறாள். கருமம்! கண்றாவி!!

சில நகை விளம்பரங்களும் இதேபோல் எலலை மீறுகின்றன. சில விளம்பரப் படங்களில் கடைசியில் தேவையே இல்லாமல் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் யாராவது ஒரு பெண் வந்து நின்று, தன்னைச் சுழற்றி, உதட்டை நெளித்து தப்பான பார்வை பார்த்து கண்ணடித்து முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அவையெல்லாம் மனநிலை தவறியவர்கள் எடுத்த படங்களோ அல்லது ஏதாவது மனநோய் மருத்துவமனைக்கான விளம்பரங்களோ என்ற சந்தேகம்கூட எழுகிறது.

ஒது துணிக்கடை விளம்பரத்துக்காக, அண்ணி, அண்ணன் அவர்களது மகள் பற்றி எல்லாம் விளக்கிவிட்டு கடைசியில் நடிகை சிநேகா “போலாமா?” என்று கேட்கிறபோது, ‘போ’வுக்கு முன்னால் சேர்க்கப்படுகிற ஒரு சில ‘ப்’கள், “லா” என்ற எழுத்தைச் சொல்கிற குழைவு, அப்போது அவரது கைகள் காட்டுகிற சைகை, கண்களின் அலைப்பாய்ச்சல், வெட்டுகிற வெட்டு இவையெல்லாம், ‘துணி எடுக்கப் போலாமா?’என்று கேட்பதுபோல, சாமி சத்தியமாக இல்லை.

“திரைப்படங்களில் இல்லாத ஆபாசமா விளம்பரப்படங்களில் உள்ளது?” என்று கேட்கலாம். இல்லைதான். ஆனால் நாம் திரையரங்குக்குப் போனால்தான் அங்கே பிரச்னை. ஆனால், தொலைக்காட்சி விளம்பரங்கள் நம் வீட்டுக்குள்ளேயே, எல்லாவித உறவுகளோடும் ஒன்றாக அமர்ந்து பார்க்கிற சூழ்நிலையில் வருகின்றன.

தொலைக்காட்சிகளில் போடப்படுகிற படங்கள் பாடல்காட்சிகளிலும்கூட ஒழுக்க மீறல் ஆபாசம் உண்டு. அவையும் தடுக்கப்பட வேண்டியவைதான். ஆனால், ஒரு காட்சி ஒருமுறை வந்துவிட்டுப் போவதற்கும், விளம்பரப்படங்களில் முன்னுரிமையோடு அதிகபட்ச ஒலியோடு மீண்டும் மீண்டும் வரும்போது, அது பலரது சிந்தனையை ஆக்கிரமிக்கிறது.

மேற்சொன்ன விளம்பரங்கள் ஒரு நாளில் குறைந்தது பத்து முறையாவது ஒளிபரப்பாகின்றன. சிறப்பு தினங்கள், பிரபல படங்களின் ஒளிபரப்பு தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பொதுவாகத் தொலைக்காட்சியில் படங்களுக்கு இடையே விளம்பரம் வருவது பார்வையாளர்களுக்கு எரிச்சலாக இருப்பது உண்மைதான். ஆனால், படங்களில் வரும் காட்சிகளை விலகி நின்று கதையாகப் பார்க்கிற மக்கள், தாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கான விளம்பரங்களை மனதுக்கு நெருக்கமான ஒன்றாகவே கருதுகின்றனர். அதில் ஒழுக்க மீறல்களை ஊக்குவிக்கும் ஆபாசம், வக்கிரம் சேருவது, போகப்போக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உடனடியாகச் சாட்டையைச் சுழற்ற வேண்டிய விஷயம் இது. ஒரு நிமிடத்தில் அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, நல்ல நகைச்சுவை என்று அசத்தும் பல நல்ல விளம்பரப்படங்களும் உண்டு. ஆனால், இந்தத் துளி விஷங்கள் குடம் பாலைக் கெடுக்கின்றன.

தொலைக்காட்சி விளம்பரப்படங்கள் மூலம் வீட்டுக்கு வீடு விஷம் பரப்பும் இந்தச் சீர்கேட்டை எப்போது சரி செய்யப் போகிறது சென்சார்? புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது மட்டும், ‘உடல் நலத்துக்குத் தீங்கானது’ என்று காட்டுவதோடு, முடிந்தது கடமை என்று, நினைப்பது கயமை!

“இளைதாக முள் மரம் தொல்க” என்றார் வள்ளுவர். முள் மரத்தைச் செடியாக இருக்கும்போதே வெட்டிவிட வேண்டுமாம். நன்கு வளரவிட்டுவிட்டால் பின்னர் அழிக்கிற சக்தி தணிக்கைத் துறையின் ‘கத்திரிகோல்’களுக்கு இல்லாமல் போய்விடலாம்!
Tuesday, January 5, 2010

தமிழகத்தையும் இரண்டாகப் பிரிக்கலாமா?

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பிரச்னை பெரிதாக வெடித்து போராட்டம், வன்முறை, தீ வைப்பு எல்லாம் நடந்து, கடைசியில், ‘‘இன்னும் நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்கத் தயார்’’ என்று சந்திரசேகர ராவும் அறிவித்துவிட்டார்.

தெலுங்கானா போராட்டம் பக்கத்து மாநிலப் பிரச்னையாக இருந்தாலும் சென்னை நகரச் சமைய-லறைகளையும் அது பாதித்தது. லாரிகள் ஸ்டிரைக் காரணத்தால், ஆந்திராவில் இருந்து காய்கறிகள் வராமல் போக, கத்திரிக்காயும், சேனைக்கிழங்கும் விலை எகிறியது என்கிறது கோயம்பேட்டுச் செய்திகள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தையும்நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கலாம்; தப்பில்லைஎன்ற தனது பழைய கோஷத்தை முன்னெடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். உடனே முதல்வர் கலைஞர் அதை மறுக்க, ஜெயலலிதாவும் அத்தி பூத்தாற்போல, கலைஞர் கருத்தையே கூறியுள்ளார். உடனே எல்லோரும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர். தங்கபாலுகூட தமிழகத்தின் மீதுஅக்கறைஇருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்- என்றால், பார்த்துக்கொள்ளுங்களேன்.

நிர்வாக வசதிக்காக மாநிலங்களைப் பிரிப்பது தவறு அல்ல. ஆனால், நோக்கம் முக்கியம். ‘‘காலகாலமாக நாங்கள் ஏனைய ஆந்திராவால் ஏமாற்றப்படுகிறோம். எங்கள் வறண்ட பகுதி மேலும் வறண்டு போகிறது’’ என்று தெலுங்கானா மக்கள் பிரிவினை கேட்பதில் கொஞ்சம் நியாயம் உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில்? எந்தப்பகுதி வாழ்கிறது? காலம்காலமாக இங்கே ஆளும் அரசியல்வாதிகள், தங்கள் சொந்த வசதிக்காகவும் சுயநலத்துக்காகவும் எல்லா கட்டுமானங்களையும் முன்னேற்றங்களையும் சென்னையிலேயே ஏற்படுத்தி மற்ற பகுதிகளை ஏய்த்து சென்னையையும் அளவுக்கு மீறி, வீங்க வைக்கின்றனர். இங்கே எந்தப் பகுதி பொறாமைப்படும்படி, எந்தப்பகுதி வாழ்கிறது? எதுவுமே இல்லை.

அப்படியானால் ராமதாஸ் சொல்லும்நிர்வாக வசதிஎது? வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று இரண்டாகப் பிரித்தால் அவருக்கு நல்லது. எவ்வளவு போராடியும் எல்லா முக்கியக் கட்சிகளோடும் மாறி மாறி கூட்டணி வைத்தும் தென் தமிழ்நாட்டில் அவரால் கட்சி வளர்க்க முடியவில்லை. வட தமிழகம் தனியாகப் பிரிந்தால் சாதி அரசியல் பலத்தால் இங்கே ஆட்சி பிடிப்பது அவரது கனவு. அட, முதலமைச்சர் ஆக முடியாவிட்டாலும் கூட்டணி ஆட்சியில் பங்குபெறலாமே. அவரிடமே தமிழகத்தை நெடுக்கு வாக்கில் வடக்கிருந்து தெற்காக, கிழக்குத் தமிழ்நாடு மேற்குத் தமிழ்நாடு எனப் பிரிக்கலாமா கேளுங்கள். அலறி அடித்து வேண்டாம் என்பார்.

‘‘40 எம்.பி.க்களாக இருக்கும்போதே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. பல பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை. இரண்டாகப் பிரிந்தால் பலம் குறைந்து எதையும் சாதிக்க முடியாமல் போய்விடும்’’ என்ற, பி.ஜே.பி. துணைத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து யோசிக்க வைக்கிறது. ஆனால், முன்னாள் பி.ஜே.பி. அமைச்சரான ஜஸ்வந்த்சிங் மேற்கு வங்காளத்தை இரண்டாகப் பிரித்து கூர்க்காலாண்ட் மாநிலம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். உணர்வு ரீதியாக அவர்கள் எப்போதோ பிரிந்து விட்டனர் என்கிறார். இதையொட்டி நடந்த பந்த் காரணமாக டார்ஜிலிங் நகரமே ஸ்தம்பித்துப் போனது.

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகள் தமிழகம் பிரிக்கப்படலாமா என்ற கருத்தை எதிர்த்தும் ஆதரித்தும் கூறும் கருத்துக்கள் எல்லாம் சுயநல அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தைப் போல, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கருத்து, செயல்படுத்த வேண்டிய ஒன்று. ‘‘மொழிவாரி மாநிலங்களைத் திருத்தி அமைக்க வேண்டும்’’ என்கிறார் அவர். அதற்கு ஏற்ப பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பீகாரில் இருந்து பிரிந்து போன ஜார்க்கண்ட் மாநிலத்தை மீண்டும் பீகாருடன் இணைக்க வேண்டும் என்கிறார் அவர். அதோடு ‘‘மாநில மறுசீரமைப்பு கமிஷன் வேண்டும்’’ என்கிறார் அவர்.

உண்மையில் மாநில மறுசீரமைப்பு கமிஷன் கோரிக்கையை எழுப்ப அதிகத் தகுதி, உரிமை, அவசியம் எல்லாம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். ஏனெனில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதிகம் ஏமாற்றப்பட்டது தமிழ்நாடுதான். மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக முதலில் அமைக்கப்பட்ட ஒரு கமிஷன் சொன்னபடி ‘‘நிலம் யாருக்குச் சொந்தம் என்பது முக்கியமல்ல. வாழும் மக்களில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கிறார்களோ, அந்த மாநிலத்தோடு இணைக்கப்படும்’’ என்று கூறி, தமிழர்களின் பாரம்பரிய நிலமான ராயலசீமாவைதெலுங்கு மக்களைத் தொடர்ந்து குடியேற்றியே சாதித்து ஆந்திராவுடன் சேர்த்தனர்.

அதே தமிழககேரளப் பிரச்னையின்போது, ‘‘மக்கள் பேசும்மொழி முக்கியம் இல்லை. நிலத்தின் உரிமையாளர்கள் யார் என்பதே முக்கியம்’’ என்று புதிய கமிஷன் அமைத்து அப்படியே திருப்பிப் போட்டு, நெய்யாறு, நெடுமங்காடு, முல்லைப்பெரியாறு, பீர்மேடு போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களையும் அடித்து உதைத்து கேரளாவுடன் சேர்த்துக்கொண்டனர். கண்ணகி கோயிலே கேரளாவுக்குள் போனது. இன்னும் கொடுமையாக பெங்களூர் என்ற தமிழ் நிலப்பகுதி கர்நாடகாவின் தலைநகராகவே மாறியது. குடகு மக்கள் கலாசாரம் பூர்வீகம் காரணமாக, தமிழகத்தோடு இணையவேண்டும் என்று விரும்பியும், வலுக்கட்டாயமாக கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டனர். தமிழகத்துடன் சேரவேண்டிய காவிரி உற்பத்தியாகும் குடகுமலை கர்நாடகாவோடு போனது. இதைச் சாதித்துக் கொடுத்தவர் விஸ்வேஸ்வரய்யா. தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அன்று அதை வேடிக்கை பார்த்தனர்.

அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நமக்கு காவிரி பிரச்னையே கிடையாது. காவிரி உற்பத்தியாகும் நிலம் தொடங்கி முடியும் வரை தமிழகமாகவே இருந்திருக்கும்.

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை விட வலுவான குரலில் மாநில மறு சீரமைப்புக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழக முதல்வர் கலைஞரோ, ‘‘மாநிலப் பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்ற சொல்லோடு தனது கடமையை முடித்துக்கொள்கிறார். அவர் மட்டுமல்ல...

தமிழையும், தமிழ் இனத்தையும், தமிழ் நிலத்தையும் நேசிப்பதாக வாய்ச்சவடால் பேசும் எல்லா தமிழக அரசியல்வாதிகளும், இந்த நேரத்தில் தெலுங்கானா பிரச்னையைப் பயன்படுத்தி நிதீஷ்குமாரைப்போலவே மாநில மறுசீரமைப்புக்குக் குரல்கொடுத்து, தமிழகம் இழந்த நிலங்களை மீட்கப் போராடவேண்டிய தருணம் இது.

அரசியல்வாதிகளுக்கு முன்பு மக்களே இதை ஆரம்பித்துவிட்டனர். அன்று அநியாயமாக ஆந்திராவிடம் சிக்கிக்கொண்ட தமிழகப் பகுதிகளில் சத்தியவேடு, நாகலாபுரம், பிச்சாட்டூர் உள்பட 163 கிராமங்களை தமிழகத்துடன் இணைக்கக்கோரி கடந்த 13, 14ம் தேதிகளில் மக்களே நான்கு மணிநேரம் போக்குவரத்தை நிறுத்திப் போராடியுள்ளனர். ஈழத்தமிழருக்காகப் போராடிய சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்துத் துவைத்ததுபோல், இந்தப் போராட்டத்தையும் ஒடுக்காமல் இருப்பது அனைவரின் கடமையாகும்.

ஆக, தமிழக அரசியல் தலைகளே! ஏற்கெனவே பிரிந்து கிழிந்துப்போன பகுதிகளை மீண்டும் இழுத்துப்பிடித்து இறுக்கமாகத் தைக்கிற வழியைப் பாருங்கள். இருப்பதைப் பிரித்துக் கிழிப்பது இருக்கட்டும்!