Sunday, January 3, 2010

# சபரிமலையில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகனா?


மாநிலம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சபரிமலை யாத்திரை சென்றுவருகிறார்கள் தமிழர்கள். அப்படிச் செல்லும்போது அங்கே எல்லோரையும் போல, தமிழர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான் இந்தக் கட்டுரை...

ஒன்பது முறை பெரிய பாதையில் எரிமேலி,காளைகட்டி, அழுதா நதி, அழுதா ஏற்றம் , கல்லிடுங் குன்றம், அழுதா இறக்கம், கருங்குழி மாரியம்மன் கோவில், கரிமலை ஏற்றம், கரிமலை பகவதி கோயில்,கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம், பம்பா, கன்னி மூல கணபதி , நீலிமலை ஏற்றம், நீலிமலை இறக்கம், சரங்குத்தி சபரி பீடம், சன்னிதானம், பதினெட்டு படிகள், அய்யப்பன் , புல்மேடு என்று பயணித்து ,

பம்பாவிலும் சன்னிதானத்திலும் புல் மேட்டிலும் இருந்து ஜோதி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் ஓரிரு முறை சித்திரைக் கனி தரிசனம் செய்தவன் என்ற முறையிலும் நன்கு ஆய்ந்து நான் எழுதும்
கட்டுரை இது.


சபரிமலை புனிதப்பயணம்... மெக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பக்திப் பயணம் என்ற பெருமை, சபரிமலை பெரிய பாதை சாமி தரிசனத்துக்கு உண்டு. ஆனால், சபரி மலை யாத்திரை பிரபலமான விதம்?

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மலையாளிகளின் குல தெய்வமும் முருகன்தான். சரியாகச் சொல்ல வேண்டுமானால் பழனிமலை முருகன். இன்றும் மிக வயதான மலையாளத் தாய்மார்களும், பெரியவர்களும், பக்திப் பரவசத்தோடு கண்ணில் நீர் பெருக மலையேறுவதைப் பழனியில் பார்க்க முடியும்& சற்றுக் கூர்ந்து கவனித்தால்.

தமிழுக்கு எதிராக மலையாளப் போக்கு பரபரப்பாக வளர்ந்தபோது, பக்தி என்ற பெயரில் மலையாளிகளின் பணம், பழனி உண்டியலில் விழுவதை, பொறாமை கொண்டவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒரு மாற்று தேவைப்பட்டது. மலையாளிகளின் பணம் பழனிக்கும் தமிழ் மண்ணுக்கும் வருவதைத் தடுக்க வேண்டும்.

தேடியபோது அவர்களின் கண்ணில் பட்டதுதான் மலைகளுக்கும், அருவிகளுக்கும் அடர்ந்த கானகத்துக்கும் உள்ளே இருந்த அந்த அற்புதமான சிறிய அய்யப்பன் கோயில். விடுதலை உணர்வுள்ள புலிகள் உலவிய காடு அது. பிடித்து அடைப்பது முடியாது. ஆனால் சபரிமலையில் ஆதியில் கோயில் கட்டியவர்களுக்கும், நியமங்கள் அமைத்தவர்களுக்கும், ஏன் அன்றைய அய்யப்பனுக்கும்கூட இந்தப் பிரிவினை வஞ்சகம் தெரியாது.

அதற்கு அய்யப்பனின் வரலாறே சாட்சி. அரக்கனை அழிக்க பெண் உரு பூண்ட நாராயணனுக்கும் சிவனுக்கும் உருவான அய்யப்பன், பந்தள ராசன் என்பவனின் வளர்ப்பு மகன் ஆகிறார். பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன்தான். பழசிராஜா வம்சத்திலோ, வடக்கன் வம்சத்திலோ வந்தவன் அல்ல. இதை அப்படியே சொன்னால்தான் தமிழர்கள் அய்யப்பனை நாடி வருவார்கள். மறைக்க முடியாது என்ற நிலைமை அந்தக் காலத்தில்.

தவிர ஒரு மலை ஏறி முருகனை தரிசிப்பதை விட, பல மலைகள் கடந்து அய்யப்பனை பார்க்கப் போகிற த்ரில், போதை முதலிய பழக்கங்களில் ஊறியிருக்கிற மக்களை, 42 நாள் கட்டாயமாக விரதத்தில் இருக்கச் செய்வதன் மூலம், பெண்கள் சபரிமலை பயணத்தைத் தன் வீட்டு ஆண்களிடம் ஊக்குவித்த தன்மை.

முருகனின் தம்பியானார் அய்யப்பன், சிவன் என்ற பொதுவான தகப்பனின் மகன் என்பதால். தவிர, அய்யப்பன் கோயில் பயணத்தின் பெரும்பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதிகளாகவே இருந்தன.

எனவே, சபரிமலை என்பது தமிழர்களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு. பூஜை செய்பவர்கள் தவிர, இன்றைக்கும் பல மலையாளிகள் சபரிமலைக்கு இருமுடி சுமந்து வருவது இல்லை. பதினெட்டாம் படி ஏறாமல் பக்கவாட்டில் வந்து, ஆனால் முதல் மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள். இருக்கட்டும். ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி அய்யப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத் தமிழர். அய்யப்பனின் தீவிர பக்தர் அவர். அவரது நாடகக் குழுவில் இருந்தபோதுதான், அய்யப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரியவந்தது. அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்கிற குறுகியப் பாதைகள்கூடக் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற அய்யப்ப சாமிகள் இருமுடியோடு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.

வழியெங்கும் செடி-கொடிகளை வெட்டி பாதையமைத்துக்கொண்டே செல்வார்கள். அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள். தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வட இந்தியர்கள் வந்தனர். மலையாளிக்கும் தமிழர்கள் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு இருமுடி ஏற்றினார்கள். மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது. சபரிமலை புகழ் பெற்றது.

ஆக, உலகில் இரண்டாவது நீண்ட புனிதப்பயணம் என்கிற பெருமையுடன், சபரிமலைக்கு இவ்வளவு பெயரும், புகழும் கிடைத்ததில் தமிழர்களுக்கு கணிசமாகப் பங்கு உண்டு. ஏன்... ஆண்டவன்களுக்குப் பிறந்த ஆண்டவனான அய்யப்பனின் வளர்ப்புத் தந்தையான பந்தள ராசனே ஒரு தமிழன்தானே...

‘‘ஸ்டாப்... ஸ்டாப்.... சரண கோஷத்தில் மனம் கரையும் நேரத்தில் இதெல்லாம் இப்போது எதற்கு?’’ என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரையே. சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், அய்யப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளியீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. சும்மா ஒப்புக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். போகப் போக இதுவும் இல்லாமல் போய்விடலாம் என்ற நிலை.

அதே முன்பு அய்யப்பன் பற்றிய மலையாள வரலாற்று வெளியீடுகளில் பந்தள ராசன், அவன் பாண்டிய மன்னன், அதுவும் மூவேந்தர்களில் ஒருவன் என்று வணங்கி வணங்கி விலாவாரியாகச் சொன்ன காலங்கள் உண்டு.

இப்போது ‘‘அயாள் ஒரி பாண்டியானு...’’ என்று பாண்டி என்ற சொல்லையே கேவலமாகச் சொல்லும் மலையாளிகளால், அய்யப்பனே அந்தப் ‘பாண்டி’யின் மகன் என்ற உண்மையை ஏற்க விரும்பவில்லை. சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் ‘‘சாமியே சரணம் அய்யப்பா’’ என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.

அய்யப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்காலமான ஐதீகம். அங்கும் வழிபடும் பக்தர்கள் ஏராளம். ‘அதைத் தடுத்தால் அவர்களும் கேரளாவிற்குள் வந்து வழிபடுவார்கள். இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம்’ என்று கேரள அரசு முடிவு செய்தபோது, அய்யப்பனின் தீவிர பக்தரான செங்கோட்டை குருசாமி நாடார் என்பவர், கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.

பழைய கதையை விடுங்கள், நீங்கள் இந்த ஜோதி தரிசனத்திற்கு சபரி மலை போகிறீர்களா? கேரளாவின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் போனால் பிரச்னையில்லை. பம்பா நதி வரை வாகனம் போகலாம். அதே தமிழ்நாட்டின் பதிவு எண் கொண்ட வாகனத்தில் போனால்... அய்யோ பாவம்... வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கவேண்டும். மலையேறி சாமி கும்பிட்டு உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான் உங்கள் வாகனத்தை அடையமுடியும். ஏனென்றால் நீங்கள் தமிழன்.

இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்டாம் படிவரையே வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம். தமிழர்கள் தரிசனம் முடிந்த பின்னரும் ஒரு பெரிய பாதைப் பயணம் நடக்க வேண்டி வரலாம். பயணப்பாதைகளிலும் கோயிலிலும் பெரும்பாலும் ஐயப்பா சேவாசங்கம் நடத்துவது தமிழர்கள்தான். அங்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், மலையாளிகள் நடத்தும் கடைகள், சன்னிதானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.

தவிர்க்க முடியாதது மலையாள போலீஸாரின் அராஜகம். எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளிடம் மென்மையாகவும், தமிழர்களிடம் கடுமையாகவும் நடந்துகொள்வார்கள். இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி ஐயப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.

அந்த ஆசையில் தமிழ் பக்தர்கள் கீயூவில் நிற்க , அது நடை அடைக்க
வேண்டிய நேரமாகவும் இருந்து , அந்த சமயத்தில் தமிழ் பக்தர்களுக்குப் பின்னால்
மலையாளிகள் வந்து.. அவர்கள் நடை அடைக்கும்முன்பு அய்யப்பனைப் பார்க்க
ஆசைப் பட்டு விட்டால் போச்சு. மலையாள போலிசாரிடம் கண் காட்டினால்,
போலிசார் தமிழ் பக்தர்களை பிடித்து வெளியே இழுத்துத் தள்ளி விட்டு , மலையாள‌ பக்தர்கள் பார்க்க வசதி செய்து தருவார்கள் .பாவம் பாண்டிய பந்தள ராசன்!


இப்படியாக, தமிழன் வளர்த்த சபரிமலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது. சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக் கொண்டிருக்கிறது சபரிமலையில்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கடவுள் மறுப்புக்கொள்கையை வெளியே முழங்கிக்கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய இரட்டை வேடக்காரர்களே மக்களிடம் ஆரவாரச் செல்வாக்கு பெற்றிருந்தனர். எனவே கண்ணகிக் கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காளஹஸ்தி போன்ற தமிழனின் பக்தி கலாசாரச் செல்வங்கள் வேறு மாநிலங்களுக்குப் பறிபோனதை வேடிக்கை பார்த்தனர். தமிழன் எல்லாம் இழந்தான்.

ஒருவேனை இவர்கள் மக்களை வாழ வைக்கிற நல்லாட்சி கொடுத்திருந்தால் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கையாவது குறைந்திருக்கும்.

அப்படியில்லை. விளைவு?-

இவர்களை நம்புவதைவிட, கடவுளை நம்புவது மேல் என்ற மனநிலைக்கு தமிழன் வந்தான். அந்தக் கடவுள்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று ஓடி வணங்கி, தான் சிறுகச் சிறுக சம்பாதிக்கும் பணத்தின் ஒருபகுதியை வேற்று மாநில அரசுகளுக்குக் கொட்டிவிட்டு அவப்பெயரையும் சம்பாதித்து வருகிறான்.

அதன் விளைவுதான் திருப்பதி, சபரிமலை என்று அபயம் தேடிப்போகிற இடங்களிலும்கூட தமிழன் அவலம் சுமக்கும் நிலை.

சரணம் சொல்வதும் சரணம் அடைவதுமே தமிழனின் தலையெழுத்தாகிவிட்டது.


3 comments:

butterfly Surya said...

இதுவரை சபரிமலைக்கு சென்றதில்லை. அத்தனை தகவல்களுக்கும் புதியது.

பகிர்விற்கு நன்றி செந்தில்.

Unknown said...

இவ்வளவு எழுதி என்ன பயன்?? முதல்முறை இந்த புரட்டு தெரிந்த உடனே அங்கு போவதை நிறுத்த வேண்டியது தானே?? எதுக்குய்யா 9 முறை போக வேண்டும்?? அதனால் தான் தமிழர்கள் என்றால் ரவுண்டு கட்டி மிளகாய் அரைக்கிறார்கள்! நீங்க மானமுள்ள தமிழன்னு டைட்டில் கார்டு வேற போட்டிருக்கீங்க.. அப்படீன்னா கார்டு போடாதவன் எந்த அளவு சிந்தித்து செயல்படுவான்??

:)

சு.செந்தில் குமரன் said...

நன்றி சூர்யா.
நண்பர் இசைக்கு ...
உங்கள் உணர்வை மதிக்கிறேன்.
//சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் ‘‘சாமியே சரணம் அய்யப்பா’’ என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.//

நான் போனது அந்தக் காலத்தில். தமிழ் இருந்த காலத்தில் !
இப்போது நடப்பதெல்லாம் விசாரித்து எழுதியது. புரியுதா?
சரி .. ஒரு விசயம் எழுதினால் அதன் உண்மையை பரப்ப முயலாமல் இருக்கிற
விவரங்களில் இருந்தெல்லாம் தேடி தனி மனித தாக்குதல் நடத்த நாக்கைத்
தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் உங்க புத்திகளையெல்லாம் எப்ப
மாத்திக்கப் போறீங்க?

Post a Comment