Sunday, January 31, 2010

#ஈரான் திரைப்படமும் நம்ம ஊர் தேர்தலும்நாம் பார்த்த அந்த ஈரான் நாட்டுத் திரைப்படம், சில வித்தியா-ச-மான உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்தியது.

ஈரான் திரைப்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் பபக் பயாமி. அவர் இயக்கிய படம்தான் ‘ராயே மக்ஃபி’. ஆங்கிலத்-தில் ‘சீக்ரெட் பேலட்’ அதாவது ரகசிய வாக்குப் பதிவு.

வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி, ஆட்டுக்கறி விருந்து போட்டு, சத்தியம் வாங்கி, “தின்ன கறிக்குப் பங்கம் இல்லாம நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடு. மீறிப் போட்டதா தெரிஞ்சுது... அடுத்த விருந்துல உன் உடம்புக் கறி கொதிக்கும்டி மாப்ளேய்...” நாக்கைத் துருத்தி ‘அழகு’ காட்டி...

“இதுல என்ன ரகசிய வாக்கெடுப்பு வாழுது?” என்று கேட்கலாம். நம்முடையது ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி... இல்லையில்லை வீக்கம். ஆனால், முழுமையாக ஜனநாயகம் மலராத ஈரான் போன்ற நாடுகளில் வாக்குப்பதிவு இன்னும் ரகசிய-மாகவே நடக்கிறது. அப்படி ஒரு தேர்தலை ஒட்டிய சில நிகழ்வுகள்தான் ‘சீக்ரெட் பேலட்’ படம்.


ஈரான் நாட்டின் கடற்-கரையை ஒட்டிய கிஷ் தீவு. தீவு என்றதும் பசுமையான மரங்கள், குளுமையான ரெசார்ட்டுகள், வண்ணமயமான நிழற்குடைகள், கண்களைக் காதலிக்கும் நீல நிற நீச்சல் குளங்கள், அழகிய சாய்வு நாற்காலிகள்... பழரச ‘கிக்’ பானங்கள்... அருகே உடலைத் திறந்து போட்டு கண்களை மூடிப் படுத்-திருக்கும் (பின்னே... வெட்கத்தை மறைக்க வேண்டாமா?) பே--வாட்ச் பெண்கள்... என்று நீங்கள் யோசித்தால், உங்கள் மனைவியிடம் போட்டுக் கொடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. தீவின் பெயர் வேறு கிஷ். ஆனால் ஈரான் தீவுகள் எப்படி இருக்கும் என்பது நன்றாகவே தெரியும் என்பவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

சுற்றிலும் கடல். ஆனால் “வாடி உள்ள... வச்சுக்கிறேன் உன்ன..” என்பதுபோல மிரட்டும் வறண்ட பொட்டல் மணல் வெளிகள், தீவிரவாதச் சூரியக் கொடுமை. இதுதான் ஈரான் தீவுகள்.

அப்படியே ஆன கிஷ் தீவில் அதிகாலை நேரத்தில் ஒரு விமானம் வந்து பாராசூட் மூலம் ஒரு பெட்டியை போட்டுவிட்டுப் போகிறது. கள்ளக்கடத்தல்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிக் காவல் இருக்கும் இரண்டு வீரர்களில் ஒருவன் அதை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான். அதோடு அவன் டியூட்டி முடிய, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொருவன் எழுப்பப்படுகிறான். அவன் பெட்டியைப் பிரித்துப் பார்க்க, ‘இன்று தேர்தல் நாள். வாக்குகளைச் சேகரிக்க தேர்தல் அலுவலர் ஒருவர் வருவார். அவருக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருந்து மாலைவரை பணியாற்ற வேண்டியது’ என்று அரசு உத்தரவு கடிதம் இருக்கிறது.

எட்டு மணி வாக்கில் ஒரு படகு வர, அதில் இருந்து திடீரென ஒரு பெண் இறங்குகிறாள். “அஞ்சு மணிக்கு ரெடியா இரு” என்று அவளிடம் சொல்லி-விட்டு படகு கிளம்ப, “அலோ பொண்ணு... யாரு நீ... பொம்பளைங்க எல்லாம் இங்க வரக் கூடாது... போட்ல ஏறிக் கிளம்பு” என்று ராணுவ வீரன் விரட்ட “நான்தான் தேர்தல் அலுவலர்” என்கிறாள் அந்தப் பெண்.

“வருவது பொம்பளை என்று சொல்லவே இல்லையே” என்று கோபமாகக் கிடுகிடுக்கிறான். பொம்பளைக்குக் கீழே வேலை செய்வதா? ஆனால் அரசு உத்தரவு ஆயிற்றே.

ராணுவ ஜீப்பில் பெண் அலுவலரை ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டியபடி கிளம்பு-கிறான். ஆள் அரவமற்ற பொட்டல் மணல் வெளி. தூரத்தில் ஒருவன் தெரிய... “வேகமாக ஓட்டு... அவரைப் பிடித்து ஓட்டுப்போட வைப்போம்” என்று அலுவலர் சொல்ல, ஜீப் வேகமாகப் போக, அந்த ஆள், துப்பாக்கிச் சுமந்த இந்த ராணுவ வீரரைப் பார்த்து பயந்து ஓட, ஒருவழியாக அவனைப் பிடித்து, தேசிய அடையாள அட்டையைப் பரிசோதித்த பின்பு ஓட்டுப்போட வைக்கிறாள். ஒரு ஓட்டுப் போட வைப்பதற்குள் உயிர் போய்விட்டது போன்ற உணர்வு.

“கடத்தல் பண்ற நாய்... அதான் ஓடுது” என்று ராணுவ வீரன் திட்ட, “கடத்தல்காரர்களுக்கும் ஓட்டளிக்கும் உரிமை உண்டு. அதுதான் ஜனநாயகம்” என்கிறாள். (நம்ம அரசியல்வாதிகள் இந்த ஒரு வசனத்துக்கே கைதட்டி விசில் அடித்து அமர்க்களப்படுத்தி விடுவார்கள்!) கோபம் கொண்ட அவன் ஜீப்பைவிட்டு இறங்கிப்போக, அவனைச் சமாதானப் படுத்துவதற்குள் பெரும்பாடு. படிப்பறிவு இல்லாத இருபது பெண்களை அழைத்துவரும் ஒருவர், “அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நானே அவர்கள் ஓட்டையும் போடுறேன்” என்று அடம்பிடிக்க, “அது கள்ள ஓட்டுய்யா” என்று புரிய வைப்பதற்குள் தொண்டை வறண்டு விடுகிறது அவளுக்கு.

ஓட்டுப்பெட்டியை கஷ்டப்பட்டு சுமந்து ஒரு படகில் ஏற்றி கடலுக்குள் சென்று, மீன் பிடிப்பவர்-களிடம் ஓட்டுப் போடச் சொல்கிறாள். “நான் மீன் பிடிக்கிற உருப்படியான வேலையைச் செய்றேன். தொந்தரவு பண்ணாதே” என்று கடுப்படிக்கிறான் ஒருவன். இன்னொருவனின் ஓட்டைப் பெற முயலும்போது, கடற்படை அவனைக் கைது செய்கிறது.

வழியில் ஓர் அபலைப் பெண்ணைக் கண்டு அந்த அபலையின் வீட்டுக்கு ஓட்டுப் பெட்டியைக் கொண்டு செல்கிறார் பெண் தேர்தல் அலுவலர். அதை வைத்து அந்தக் குடும்பத்தில் அனைவரையும் ஓட்டுப்போட வைக்கலாம் என்று ஆசை. ஆனால் கனவு கலைகிறது. ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வாய் வறளச் சொல்லியும் பலன் இல்லை.

ஓரிடத்தில் பாகோ அம்மையார் என்ற மூதாட்டி பல குடும்பங்களுக்குத் தொழில் சொல்லிக்கொடுத்து வாழ வைக்கிறாள். அந்த இடத்தின் ராணிபோல வாழும் அந்த அம்மையாரையே ஓட்டுப்போட அவளது கணவன் அனுமதிக்கவில்லை. எவ்வளவு போராடியும் பலன் இல்லை.

இன்னொரு இடத்தில் “ஓட்டுப்போட விரும்பும் பலர் இந்த பாறைக்கு அடியில் உள்ளனர் என்று ஒருவன் கூற, கணவன்மார்களுக்குப் பயந்து பெண்கள் ரகசியமாக வந்திருப்பார்கள்... உள்ளே குகை இருக்கும். அல்லது தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்கள் பெயரை எழுதி இருப்பார்கள் என்று நினைத்து, கஷ்டப்பட்டு பாறையை நகர்த்த, ராணுவ வீரனும் உதவ, உள்ளே நான்கு வருடம் முன்பு செத்துப்-போனவர்களின் பெயர்கள் மட்டும் இருக்கிறது. வெறுத்துப்போகிறாள் அந்தப் பெண் அதிகாரி.

அத்துவான வெளியில், ஒரு தனியார் நிறுவனத்துக்காக, சூரிய அடுப்பு யூனிட்டைப் பராமரித்து வரும் ஒரு வயதான கிழவர் பெண் அலுவலரையும், ராணுவ வீரனையும் அன்போடு உபசரித்து காபி எல்லாம் தரத்தயார். ஆனால் ஓட்டுப்போடத் தயாரில்லை. “இவுனுகளுக்கு எல்லாம் ஓட்டுப்போடறது வேஸ்ட். மக்களுக்காக ஒரு துரும்புக்கூடக் கிள்ளிப் போட மாட்டானுங்க. சுய நலப் பேய்கள். என்னோட வேட்பாளர் கடவுள்தான். அவருக்கு வேண்ணா ஓட்டுப் போடறேன்” என்கிறார். ஆனால் கடவுள் வேட்பாளர் இல்லையே.

காபிகூடக் குடிக்காமல் தாகத்தோடு வெளியே வருகிறாள். ஏமாற்றம் மேலிடுகிறது. ஐந்து மணிக்குள் மீண்டும் கடற்கரையை அடைந்தால்தான் சேகரித்த ஓட்டுக்களையாவது ஓட்டு எண்ணிக்கையில் சேகரிக்க முடியும். வண்டி கிளம்பும்போது சாலையில் சிவப்பு சிக்னல்.

எப்பேர்ப்பட்ட சிவப்பு சிக்னல்?

ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு எந்தச் சாலையிலும் ஒரு ஈ காக்கா கொசுக்கூட பறக்கவில்லை. ஆனால் ரெட் சிக்னல். ‘நேரமாச்சு இன்னும் பல ஏரியாவுக்குப் போகணும்’ என்று அவள் அவசரப்படுத்த, ‘சிக்னல் மாறினால்தான் வண்டியை எடுப்பேன்’ என்று அவன் சொல்ல, ரிப்பேரான சிக்னல் சிவப்பிலேயே நிற்க, அலட்டாமல் உணச்சியின்றி, நிதானமாகச் சொல்லப்-பட்டுள்ள இந்தக் காட்சியில் நமக்குள் பீறிடுகிறது சிரிப்பு.


ஓரிடத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சைக்கிளில் வைத்து விற்கும் வியாபாரி ஒருவரைப் பிடித்து ஓட்டுப் போடச் சொல்ல, “என்கிட்ட ஏதாவது பொருள் வாங்கினா ஓட்டுப்போடுறேன்” என்று அவர் பேரம் பேச, ஆகா!

ஒரு காட்டில் பிண அடக்கம் நடைபெறுகிறது. அங்கே நாற்பது ஐம்பது பேர் திரண்டு நிற்க, தர்ம சங்கடத்தோடும் வாய்ப்பைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடும் அந்தத் துக்கத்தில் பங்கெடுத்துவிட்டு, பின்னர் ஓட்டுப்போடச் சொல்ல, அவர்கள் மறுக்க, ஒவ்வொரு-வரிடமும் கெஞ்சியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் போகின்றனர். பரிதாபம்.

வழியில் ஒரு பெண், “இங்கே பெண்களும் பிணங்களும் ஒன்று, ஓட்டாவது உரிமையாவது...” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். “கணவன் சொன்னா- அவுங்க சொல்ற ஆளுக்குத்-தான் ஓட்டுப் போடு-வோம். ஆனா அவங்க வீட்ல இல்ல. அதனால முடியாது” என்கின்றனர் சில பெண்கள்.

கொஞ்சம்கூட சுயநலமின்றி, மக்கள் நன்மைக்காக பெண் தேர்தல் அலுவலர் படும் சிரமங்களைப் பார்த்த ராணுவ வீரனுக்கு அவள் மேல் மரியாதை வருகிறது. அவன் இல்லாவிட்டால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவளும் உணர்கிறாள்.

ஓரிடத்தில் காதுகளைக் கிழிக்கிற- கல் உடைக்கும் கிரஷர் யூனிட் இரைச்சலில் மூச்சுக்-குழலைப் பதம் பார்க்கும் புழுதிப்படலத்தில், ஒரு பெரிய சரளைக்கல் மலையில் கால்கள் புதைய ஏறி நடந்து இறங்கி, மிஷினில் இருப்பவனிடம் ஓட்டுப்போடச் சொல்லி பெண் அலுவலர் கேட்க, அவன் அலட்சியமாக சைகைக் காட்டி புறக்கணிக்க, கால்கள் தள்ளாட சோர்ந்து போய் தலைகுனிந்து அவள் நடக்கும் காட்சியில் நம் கண்கள் நீர்ப்பூக்கிறது.

“எத்தனை வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வரும்?” என்று ராணுவவீரன் கேட்க, “ நான்கு வருடத்திற்கு ஒருமுறை” என்று அவள் கூற, “அடிக்கடி வராதா?” என்று கேட்கிறான். மௌனம். “அடிக்கடி பலமுறை நீ வந்தால் மகிழ்வேன்” என்று அவன் கூற, இருவரின் மெல்ல்ல்லிய முகபாவங்கள்!

அடேயப்பா... காதலின் ஈர்ப்பை இவ்வளவு மென்மையாக, கண்ணியமாக, விலகி நின்ற தன்மையில் இருந்து எந்தத் திரைப்படத்திலும் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.


கடைசியில் மீண்டும் கடற்கரையை அடைய, அவளை அழைத்துச் செல்ல விமானம் வந்திருக்க, அப்போதுதான் ராணுவ வீரனிடம் ஓட்டுப்போடச் சொல்லவில்லையே என்று அவளுக்குப் புரிகிறது. அவசர-மாகப் போடச் செல்ல, “நீ” என்று எழுதி ஓட்டுப் போடு-கிறான் ராணுவவீரன்.

விக்கித்துப்போன பெண் தேர்தல் அலுவலர், “நான் வேட்பாளர் இல்லையே?” என்று கூற, “எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரிய-வில்லை” என்கிறான். அவள் விமானம் ஏறிப்போக, மீண்டும் வழக்கம்-போல் களப் பணியில் ராணுவீரன்.

பெண் தேர்தல் அலுவலராக ராசிம் அபிதி என்ற நடிகையும், ராணுவ வீரனாக சைரஸ் அபிதி என்ற நடிகரும், நன்றாக... ‘நடித்து இருந்தனர்’ என்று சொல்வது அவர்களுக்குச் செய்யும் துரோகம்.

அடேயப்பா... ஈரானில் ஓட்டுப் பதிவுப் பணியில் தேர்தல் பணி செய்யும் அலுவலர்களுக்கு இவ்வளவு கடினமான வேலையா?! என்று மிரள வைத்த படம் இது.

நம்ம ஊரில் அரசாங்கக் கட்டடத்தில் பந்தாவாக அமர்ந்து கொண்டு பிரியாணியும் பீடாவுமாக மக்களை அலட்சியப் பார்வைப் பார்த்தபடி, கட்சிக்காரர்களிடம் கத்தைக் கத்தையாகக் கையூட்டுப் பெற்று கள்ள ஓட்டு போடத் துணைபோகும் தவறான தேர்தல் அலுவலர்-களை, நரேஷ்குப்தாவிடம் சொல்லி, ஒரு முறை ஈரான் நாட்டில் தேர்தல் பணிக்கு அனுப்பி வைக்கற தண்டனையைத் தரலாம். தப்பே இல்லை!2 comments:

Kumar said...

Enna Senthil ippadi solluringa...Appuram C.Chidambaram ellam eppadithaan jaikirathaam ??

சு.செந்தில் குமரன் said...

ஆஹ்ஹ்ஹாஆஆஆ...
நீங்க அப்படி வர்றீங்களா ?

Post a Comment