Sunday, February 28, 2010

# தெலுங்கானா வெறியர்களும் அஜீத் ரசிகர்களும் --- உப்பு வித்தியாசம்







தெலுங்கானா தனி மாநிலமாக வரவேண்டுமா வேண்டாமா என்பதில் ஆந்திராவுக்குள் வேண்டுமானால் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் . ஆனால் ஆந்திராவுக்கு வெளியே இந்தக் கேள்வியைக் கேட்டால் தனித் தெலுங்கானாவுக்கு ஆதரவாகவே பெரும்பாலான இந்தியப 'பொது' மக்கள் கருத்துக் கூறுவார்கள்.


காரணம் 'தெலுங்கானா இத்தனை ஆண்டுகளாக மிகவும் பின் தங்கிய பகுதியாகவே உள்ளது . மற்ற ஆந்திரப பகுதிகளுக்கு இணையாக அது வளரவில்லை . மற்ற ஆந்திரப் பகுதியினர் வளர விடவில்லை .தனி மாநிலமாக அது மாறினால்தான் முன்னேற முடியும் 'என்ற கருத்து நாடு முழுக்க உள்ள மக்களிடம் விரவிக் கிடக்கிறது .


சரியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தக் கருத்தை ஆந்திராவுக்கு வெளியே கொண்டு செல்வதில் மண் பாசத்தோடு தெலுங்கானா தலைவர்களும் அங்குள்ள ஊடகங்களும் இமாலய வெற்றி பெற்று விட்டன. நம் ஊரைப் போல், ஈழ விடுதலைக்கான நியாயத்தை நம் தமிழ் நாட்டுப் பாமர ஜனங்களுக்குக் கூட கொண்டு சேர்க்காமல் நம்மில் பலரே குப்புறத் தள்ளிக் குழியும் பறித்த கொடுமை தெலுங்கானாவில் நடக்கவில்லை . இனமே அழியும்போது வேடிக்கை பார்த்தது விட்டு எல்லாம் முடிந்த பிறகு பக்கம் பக்கமாக மாய்ந்து மாறந்து வரலாறு எழுதும் மாய் மாலங்கள் தெலுங்கானாவில் நடை பெறவில்லை .


எனவே இந்திய முழுக்க பொதுவாக எல்லோருமே தனித் தெலுங்கானாவுக்கு ஆதரவான மனோநிலையில்தான் !


ஆனால் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் இப்படி எல்லோருமே கண்மூடித்தனமாக தெலுங்கானாவை ஆதரிப்பது நியாயம்தானா ? ஒரு வேளை தெலுங்கானா உருவானால அது இந்தியாவுக்குள் இருக்குமா? இந்தியாவாக இருக்குமா ? என்ற ஐயப்பாட்டை உருவாக்குகின்றன .


கடந்த 15ம் தேதி ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத்தின் பெல் நிறுவனக் குடியிருப்பில் தங்கியிருந்த சுமார் நானூறு தமிழ் நாட்டு இளைஞர்களை , நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்த தெலுங்கானா இளைஞர்கள் பயங்கரமாகத் தாக்கி படுகாயப்படுத்தி அடித்து விரட்டியுள்ளனர். தமிழக இளைஞர்கள் தங்கி இருந்த அறைகளுக்குள் உருட்டுக்கட்டை, சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த நூற்றுக்கணக்கான பேர் அடங்கிய வெறி பிடித்த தெலுங்கானா கூட்டம் , தமிழக இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது தமிழக இளைஞர்கள் வைத்திருந்த செல்போன் , நகை , பணம் போன்றவை பறிக்கப்பட்டன..


திருச்சி , நாமக்கல் , சேலம் , சென்னை , சிதம்பரம் , கடலூர் போன்ற ஊர்களில் இருந்து மிக அதிகமாகவும் மற்றும் தமிழகம் முழுக்க இருந்து பரவலாகவும் சென்றிருந்த அந்த தமிழக இளைஞர்கள் , அந்தக் கொடூரத் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு நாள் முழுக்க இரயிலில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பட்டினி கிடந்தது சென்னை வந்து சேர்ந்தார்கள் . கொஞ்சம் பேர் தப்பிக்க முடியாமல் ஹைதராபாத்துக்குள்ளேயே உயிரைக் கையில் பிடித்தபடி மறைந்து விட்டனர் . அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை .


சரி, இப்படிக் கொடூரமாகத் தாக்கப்படும் அளவுக்கு அந்த தமிழக இளைஞர்கள் செய்த தவறு என்ன?

பொழுதுபோக்கு எனும் பெயரில் அந்த மண்ணின் மக்களின் உழைப்பைச சுரண்டி உண்டு கொழுத்து விட்டு , அந்த மக்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது அடையாளமாக ஆதரவுக் குரல் கொடுக்க கூப்பிட்டால் வரமுடியாது என்று முரண்டு பிடித்தார்களா? மீறி வரச் சொல்லி வற்புறுத்தினால் அந்த மாநில முதலமைச்சரின் முன்னால் ஊர் பார்க்க "அ(ய்)யா ... மிரட்டுறாங்க(ய்)யா....." என்று நீலிக் கண்ணீர் வடித்தார்களா?

இல்லை அப்படி அநியாயமாக யாராவது பேசும்போது கொஞ்சம் கூட மன சாட்சியின்றி அந்த நன்றிகெட்ட பேச்சை ஆதரித்து குதித்துக் குதித்துக் கைதட்டிப் பாராட்டினார்களா?

தவறை உணர்த்திய பின்னரும் ஒத்துக் கொள்ளாமல் வீம்பு பிடித்தார்களா?

இல்லை ... ஹைதராபாத்திலேயே மிகப் பெரிய வீடு ஒன்றை அங்கே போய் அவர்களிடம் சம்பாதித்துக் கட்டி விட்டு எங்காவது உளறுவாய் மடத்தில் நின்றபடி,"கருத்து தடித்த எருமை போன்ற ஆந்திராக்காரி " என்று பிதற்றி மனநிலை தவறிய ஒரு கும்பலை கெக்கே பிக்கே என்று சிரிக்க வைத்தார்களா?


அந்த தமிழக இளைஞர்கள் செய்த தவறுதான் என்ன?

மத்திய அரசு நிறுவனமான 'பெல்' நிறுவனத்தின் ஆந்திர மாநில அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது .அந்த நிறுவனத்தின் நான்காவது குரூப் ஊழியர்களின் வேலைக்காக கடந்த 14 ம் தேதி எழுத்துத் தேர்வு நடந்தது .தென்னிந்தியா முழுக்க வசிக்கும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள அனுமதி உள்ள தேர்வு அது . அதன்படியே தமிழ்நாட்டில் இருந்தும் நிறைய பேர் கலந்து கொண்டனர் .

தமிழ் நாட்டில் இது போல நடக்கும் தேர்வுகளில் பீகாரிகள் , அசாமியர்கள் , வங்காளிகள் கூட கலந்து கொள்கின்றனர் . இன்னும் சீனாக்காரனும் ரஷ்யாக்காரனும்தான் வரவில்லை . ஆனால் அப்போது எல்லாம் தமிழர்கள் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது இல்லை (முதலில் உணர்ச்சியே இல்லாதவனுக்கு காழ்ப்புணர்ச்சி எங்கிருந்து வரும்?)



ஆனால் ஹைதராபாத்தில் நடந்தது வேறு .

அந்த எழுத்து தேர்வுக்கான முடிவுகள் 15 ம் தேதி வெளியிடப்பட்டு தேர்ந்தேடுக்கப்படவர்கள் 17 ம் தேதி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர் . எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் தமிழகத்தில் இருந்து போன இளைஞர்கள் .காரணம் சிபாரிசா? பணமா? அரசியல் செல்வாக்கா? எதுவும் இல்லை . திறமை , அறிவு , உழைப்பு . இவைதான் .


எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் அதிக தமிழர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டது அறிவிக்கப் பட்ட அன்று இரவே , அங்கேயே தங்கி இருந்து நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு வரக் காத்திருந்த தமிழக இளைஞர்கள் மீதுதான் இந்த கொலைவெறித் தாக்குதல் நடந்தது .

எழுத்துத் தேர்வில் நல்லபடியாக திறமை காட்டி நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அந்த தமிழக இளைஞர்கள் செய்த மா......பெரும் குற்றம் ! இதற்காகத்தான் அந்த கொடூரத் தாக்குதல் .!

ஏன் ஹைதராபாத் இந்தியா இல்லையா? ஆக ,தெலுங்கானா உருவானால் அது இந்தியாவில் இருக்காததா என்பது நியாயமான சந்தேகம்தானே?


ஆனால் தமிழகத்தில் நிலைமை என்ன?


தமிழினத் தலைவர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் கூறப்படும் முதல்வர் கருணாநிதி இதுவரை நடந்த கொடுமையைக் கண்டித்து வாய் திறக்கவில்லை . தமிழன் என்ற காரணத்தால் நம்மவர்கள் செம்மையாக உதைக்கப் படுவதைக் கண்டிக்காமல் செம்மொழி மாநாடு நடத்தி என்ன பயன்? அய்யகோ!


பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது , சென்னையில் ஐ.ஐ.டி அமைக்க அவரது பெரும் முயற்சியால் திட்டம் வகுக்கப்பட்டது . திடீரென்று அதைப பிடுங்கி மாற்றி ஹைதராபாத்தில் அமைக்க தெலுங்கர்களும் பெங்களூரில் அமைக்க கன்னடர்களும் குறுக்கு சால் ஓட்ட முயன்றனர் . அன்றைய பிரதமரான நேருவும் சென்னையில் அமைக்க இருந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வதாகத தெரிய வந்ததும் துடிதுடித்துப் போனார் காமராஜர் .

உடனடியாக டெல்லி கிளம்பினார். நேருவை நெருங்கி சம்பிரதாயமான வார்த்தைகள் எதவும் சொல்லி பேச்சை ஆரம்பிக்காமல் எடுத்த எடுப்பில் " I WANT IIT MADRAS " என்றார் .

i want I.I.T in madras என்றோ அல்லது i want I.I.T. for madras என்றோ சரியான ஆங்கிலத்தில் சொல்லக் கூடத் தெரியாத அந்தப் படிக்காத மேதை தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் " I WANT IIT MADRAS " என்று உறுதியாகவும் கோபமாகவும் திரும்பத் திரும்பச சொன்னதில் மலைத்துப் போன நேரு ஐ.ஐ.டி சென்னைக்குத்தான் என்று காமராஜரிடம் உறுதி அளித்ததோடு அதை மாற்றும் எண்ணத்தில் யாரும் தன்னை அணுகக் கூடாது என்று அன்று உத்தரவே போட்டார் .

அப்படி பச்சைத் தமிழனால் தமிழர்களுக்காகக் கொண்டு வரப் பட்ட சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று முழுக்க முழுக்க தெலுங்கர்கள் ஆதிக்கம்தான் . ஐ.ஐ.டி.யால் அதிகம் பலன் பெறுபவர்கள் ஆந்திராவில் இருந்து வந்து படிப்பவர்கள்தான் . அவ்வளவு ஏன் ..இன்று தமிழக கல்வித் துறையிலேயே தெலுங்கர்களின் ஆதிக்கம்தான் . அண்ணா யூனிவர்சிட்டியே அதில் இருந்து தப்பவில்லை என்று கூறப்படுகிறது .

இது மட்டுமா? சென்னை 'கலைஞர் கருணாநிதி' நகரில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் இன்று அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுவது ஆந்திர தெலுங்கு மாணவர்கள்தான் . அவர்கள் கேட்கிற டோநேஷனைக் கொடுத்துவிட்டு சீட் பெறுகின்றனர் . தமிழக அரசால் தமிழர்களின் வரிப் பணத்தின் சலுகைகளோடு ஆரம்பிக்கப் பட்ட அந்தப் பள்ளி இன்று தெலுங்கர்களின் சோலையாகிவிட்டது .இங்கே பணத்தைக் கொடுத்து இவன் சீட்டு வாங்குவது போல ஹைதராபாத் பெல் நிறுவனம் வைத்த தேர்வில் அறிவையும் திறமையையும் காட்டி தமிழக இளைஞர்கள் அறிவையும் திறமையையும் காட்டி தேர்வு பெற்றார்கள் . அது கேவலமில்லையே !

ஒரே ஒரு நிறுவனத்தின் சுண்டைக்காய் தேர்வான ' குரூப் நான்கு 'எழுத்துத் தேர்வில் சுமார் 400 இளைஞர்கள் தேர்வு பெற்றதற்கே உருட்டுக கட்டையாலும் சைக்கிள் செயினாலும் அடித்து நகை பணம் செல்போனை எல்லாம் பறிக்கலாம் என்றால் ...

இங்கே ஐ.ஐ.டி யிலும் அண்ணா யுநிவர்சிட்டியிலும் சென்னையின் பள்ளிகளிலும் ஆந்திரர்கள் பெறும் இடங்களைத் தடுப்பதற்கான ஆயுதம் என்னவென்று அந்தத் தெலுங்கானா ரவுடிகளே சொல்லட்டுமே .


அங்கே தெலுங்கானாவில் இளைஞர்கள் மண் உணர்வு என்ற பெயரில் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர் . ஆனால் தமிழக இளைஞர்கள் ?

"உன் உழைப்பு என்னிடம் பணமாக வந்து சேர வேண்டும் ஆனால் உனது பிரச்னைகளுக்கு நான் தார்மீக ஆதரவு தரக் கூட நேரம் ஒதுக்க மாட்டேன் . ஏன் வரணும்" என்கிறார் அஜித்.

உணர்வாளர்கள் அதை பல்வேறு விதங்களில் எதிர்க்கின்றனர் . அப்படிப்பட்ட ஒருவரான திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்தின் வீடு தாக்கப் படுகிறது . அவர் மனைவி தாக்கப் படுகிறார் . வந்தவர்கள் அஜித் ரசிகர்கள்தான் என்று கூறப் படுகிறது . இதுவரை 'இது என ரசிகர்களின் செயல் இல்லை' என்று அஜித் கூறவில்லை . தன பெயரை சொல்லி கோஷம் போட்டு விட்டுப் போனவர்களைக் கண்டித்து இன்றுவரை அஜித் பேசவில்லை .


ஆனால் அவரது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் மட்டும் " இது சமூக விரோதிகள் வேலை" என்று பசப்புகின்றனர் .இன உணர்வோடு பேசி பாதிக்கப் பட்டுள்ள ஜாக்குவார் தங்கத்துக்கு ஆதரவாக திரள இளைஞர்கள் தயாராக இல்லை . ஆனால் அஜித் வீட்டை முற்றுகையிட்டால் அவருக்கு ஆதரவாக திரண்டு அவர் வீட்டைக் காப்பாற்றுவார்களாம்.


அதாவது உனக்கு ஒரு பிரச்னை என்றால் நான் வரமாட்டேன் என்னை கூப்பீட்டால் திட்டுவேன் என்று ஒருவர் ஒரு கும்பலைப் பார்த்தது சொல்ல , அதனால் அவருக்கு சிறு பிரச்னை வந்தால் , அவரைக் காக்க வருவேன் என்று மார்தட்டுவது யார் தெரியுமா?

அவர் யாரைப் பார்த்து " உன் காசு மட்டும் எனக்கு வேண்டும். அனால் உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நாசமாபாப் போ என்று வேடிக்கை பார்ப்பேன் 'என்று கூறுகிறாரோ அந்த பாதிக்கப் படும் கும்பலே தம்மை திட்டுபவருக்கு ஆதரவாக மார்தட்டுகிறது என்றால் .....

இவர்களை எல்லாம் என்ன சொல்வது?



தெலுங்கானா இளைஞர்கள் அநியாயத்துக்க்காகவே அப்படி நடந்து கொள்ள, இவர்கள் நியாயமான சுயனலத்துக்காகக் கூட கவலைப் படமாட்டோம் என்று கண்மூடித்தனமாக நடந்து கொள்வதைப் பார்த்தால் ...

தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு எங்கிருந்து வருகிறது என்று விசாரித்து அதை கொஞ்சமாச்சும் இங்கேயும் இறக்குமதி செய்தால் தேவலை.

போகட்டும் ...

இனியும் இது போல தெலுங்கானா இளைஞர்கள் இப்படி வெறிபிடித்து நடந்து கொண்டால் தனித் தெலுங்கானா வேண்டாம் என்று ஒட்டு மொத்த இந்தியாவும் குரக் கொடுக்கும் நிலை வரலாம்

சந்திரசேகர ராவ் ... !
உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் போதாது .
உணர்வுகளிலும் நியாயம் வேண்டும்.








Monday, February 22, 2010

# கேரள அரசின் தண்ணீர் அழிச்சாட்டியங்கள் தமிழகம் என்ன செய்ய வேண்டும்?




"காற்றும் நீரும் வானும் கடலும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சு கெடக்குது "

என்றார் கவிஞர் புலமைப் பித்தன் இதயக்கனி திரைப்படப் பாடலில் .


நிஜம்.


மொழிகள் பார்த்து நதிகள் பிறப்பதில்லை.
மதங்கள் பார்த்து காற்று அடிப்பது இல்லை .
நிறங்கள் பார்தது குயில் கூவுவது இல்லை .
ஆனால் மனிதன்?
அதிலும் தமிழினத்தின் எதிரிகள்?
அப்பப்பா !



நதி நீர் விசயத்தில் தமிழகத்தை அண்டை மாநிலங்கள் ஏய்க்கும் விதவிதமான ஏய்ப்புகளுக்கும் அதற்கு மத்திய அரசுகள் துணை போகும் ஆண்மையில்லாத கையாலாகாதத்தனத்துக்கும் , பல காலமாக நமது மாநில அரசுகளின் இன உணர்வற்ற , மக்கள் நலம் பாராத , சுயநல செயல்பாடுகளுக்கும் அளவே இல்லை .


கர்நாடகாவிடம் காவிரி என்ற பெரிய குடுமி , ஆந்திராவிடம் பாலாறு வடபெண்ணை போன்ற குடுமிகள் சிக்கிக் கொண்டுள்ளது என்றால் கேரளாவிடம் பவானி , பெரியாறு , அமராவதி , சிறுவாணி என்று பல குடுமிகள் சிக்கிக் கொள்ள , நமது சக்தி மிக்க அரசியல்வாதிகள் இது மக்களின் பிரச்ன என்ற உணர்வே இல்லாமல் சுவையான தேனீர் அருந்தியபடி தொலைக்காட்சியில் டப்பாங்குத்து டான்ஸ் பாக்கிற மன நிலையில் வேடிக்கை பார்க்க விவசாயத்துக்கும் குடி தண்ணீருக்கும் விவசாயத்துக்கும் நாலா திசையிலும் தண்ணீர்ப் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு அடுத்த தலை முறைத் தமிழன் போய்க்கொண்டு இருக்கிறான் .


தென் மாவட்ட தமிழர்கள் வறட்சியில் படும் கஷ்டத்தையும் அதே நேரம் பெரியாறு அணையின் தண்ணீர் கடலில் அநியாயமாக விழுந்து வீணாவதையும் , ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பார்த்த பென்னி குய்க் என்ற வெள்ளைக்கார மனிதன் மனம் நெகிழ்ந்து , அன்றைய ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி , இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று , தென் மாவட்டத் தமிழர்களைக் கொண்டு சென்று ஏராளமான ஆபத்துகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து தனது பணம் , பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணம் இரண்டையும் இணைத்து இழைத்துக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணை .


அந்த அணையில் ஒவ்வொரு வருடமும் நிரம்புவது பென்னி குய்க்கின் கருணையும் தமிழர்களின் ரத்தமும்தான் என்ற நன்றி உணர்ச்சி இன்றி அந்த நீரைத்தான் தமிழர்களுக்கு தர முடியாது என்று அழிச்சாட்டிய செய்கிறது கேரளா . எப்படியாவது புதிய அணை கட்டியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து மத்திய அரசை மறைமுகமாகச் சரிகட்டி புதிய அணை கட்ட இடம் தேர்ந்தெடுத்தால் அந்த இடத்தில் அணை கட்டினால் அது மணல்வர்ர்டு மாதிரி மல்லாந்து விடும் என்று நிபுணர்கள் அண்மையில் கூறி விட்டார்கள் .


பென்னி குய்க்கும் அன்றைய தமிழர்களும் எப்பேர்ப்பட்ட மேதைகள் என்பது இப்போதாவது புரிந்திருக்கும் .


முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு இடையில் பவானி நதியில் அணை கட்டி தமிழர்களுக்கு தண்ணீர் தராமல் தடுக்க முயன்றது கேரள அரசு , அந்தத் திட்டமும் அதன் கைவசம் உள்ளது .


இப்போது பாம்பாறு நதியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்தில் உள்ள அமராவதி அணைக்கு தண்ணீர் வராமல் தடுக்க அடுத்த திடம் தீட்டி வருகிறது கேரளா.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .47 குடிநீர் திட்டங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு தண்ணீர் தரும் பாம்பாறு நதியின் குறுக்கே அணை கட்டி தடுத்து அந்த நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தாரை வார்க்கவும் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான ஆய்வுக்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது கேரள அரசு .


மற்ற மாநிலங்களில் இதே விஷயம் நடந்தால் பொங்கி எழுந்து பக்கம் பக்கமாக எழும் பேசும் நம்ம ஊர் கம்யூனிஸ்டுக் காம்ரேடுகள் அதே தவறைக் கேரளா செய்தால் மட்டும் வாயில் அல்வா திணித்துக் கொண்டது போல் அமைதி காப்பார்கள் .


இந்த அடாவடி குறித்து வழக்கம் போலவே தமிழகத்தின் பெரிய கட்சி அரசியல்வாதிகள் பிடில் வாசித்துக் கொண்டிருக்க வை கோ மட்டும் , " இந்த ஆய்வுக்கு அனுமதி கொடுத்தால் களியக்காவிளை , செங்கோட்டை , கம்பம் , போன்ற இடங்களில் கேரளாவுக்குச் செல்லும் பாதையை மறைத்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளார்.வை.கோ


போராட்டம் செய்தால் அதை யாரை வைத்து அடக்க வேண்டும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் . இருக்கவே இருக்கிறார் தமிழ்நாட்டு பழசி ராஜா சமத்துவ வர்மா !


'"போராட்டம் கூடாது பேசித் தீர்த்துக் கொள்வோம்'" என்று என்னவோ இதுவரை தமிழக கேரள பிரச்னைகள் யாவும் பேசியே தீர்ந்து விட்டது போல பேசுவார் சரகுகுமார். அடுத்து கேரளாவில் ஒரு படமும் விருதும் அவருக்கு கொடுத்து விட்டால் போச்சு !



தமிழனை எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உதைக்கலாம் . ஆனால் தமிழன் அடி வாங்கிக் கொண்டு" நாமெல்லாம் திராவிடன் . நீ என்னை என்ன செய்தாலும் எனக்கு ரோஷம் வராது " என்று அமைதி காக்க வேண்டும். அதற்குப் பெயர "தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது " ( நல்ல ஒழுங்கு போங்க! )


இதோடு கேரள முடித்துக் கொள்ளவில்லை . அடுத்து கோவையின் சிறுவாணி நீருக்கும் குறி வைக்கிறது , ஏனென்றால் சிறுவாணி நீரின் அணை பிடிப்புப் பகுதி கேரள மழைப் பகுதியில்தான் உள்ளது .


இப்படியாக முல்லைப் பெரியாறு பிரச்னையால் தென் மாவட்டங்களும் நெய்யாற்று பிரச்னையால் குமரி மாவட்டமும் இப்போது விஸ்வரூபம் எடுக்கத துவங்கும் பாம்பாறு பிரச்னையால் கொங்கு சீமையும் கேரளாவால் பாதிக்கப் படுகிறது .


" சரி ..நதிகள் கேரளாவில் இருக்கிறது . அவங்க நதி .. அவங்க தண்ணீர் . நமக்கு சும்மா தருவாங்களா?" என்று நம்மில் பலரே வின்னர் படத்து வடிவேலு மாதிரி 'ரொம்ப நல்லவ'வங்களாக பேசும் கொடுமைகளும் தமிழகத்தில்தான் நடக்கும் .

உலகளாவிய நதி நீர்ச் சட்டங்களின்படி ஒரு நதி உருவாகும் இடத்தை விட அது சென்று சேரும் டெல்டாப் பகுதிக்கு தான் அந்த நதியில் அதிக உரிமை உண்டு . காரணம் வெள்ளப் பெருக்கின் போது அதிகம் பாதிக்கப் படுபவன் அவன்தானே .

உதாரணத்துக்கு இந்தியாவில் உருவாகும் சீலம் ,சீனாப் , ராவி , பியாஸ் , சட்லஸ் நதிகளின் நீர்தான் சிந்து நதியாக பாகிஸ்தானுக்குள் நுழைகிறது.
அந்த தண்ணீரைத் தெம்பாகக் குடித்துவிட்டுத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையிலும் டில்லியிலும் புனே ஜேர்மன் பேக்கரியிலும் வைக்க குண்டு தயாரிக்கிறார்கள் .

அதற்காக நாம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர முடியாது என்று சட்லஸ் நதியில் அணை கட்ட முடியாது . பாகிஸ்தான் வழக்குப் போட்டால் உலக நீதி மன்றத்தில் நம்மைக் கூப்பிட்டு , கழட்டி அடிப்பார்கள் . காரணம் நதி நீர்ச் சட்டப் படி இந்தியாவில் உற்பத்தியானாலும் சிந்து நதியின் நீரில் டெல்டாப் பகுதியான பாகிஸ்தனுக்குதான் அதிக உரிமை உண்டு , நியாயப்படியே!

அதுபோல நதி நீரிலும் நதிகான நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் அனுபவ பாத்தியதை என்று ஒன்று உண்டு . அதை முறைப்படி யாரும் மறுக்க முடியாது .


உண்மையிலேயே மாநிலத்தையும் மக்களையும் நேசிக்கிற ஆட்சியாளர்கள் யாராவது இருந்தால் இதையெல்லாம் வைத்து மத்திய அரசிடம் போராடலாம் . எது எதற்கோ புள்ளி விவரம் வைத்துக் கொண்டு நைஜீரியாவை விட இங்கே உப்பு விலை கம்மி . நார்வேயை விட இங்கே புண்ணாக்கு விலை கம்மி என்று பேசுபவர்களால் இதற்காகப் பேச முடியாதா என்ன?

ஆனால் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் நாட்டில் மட்டும் அரசியல் என்பது .'
' மக்கள் நாசமாகப் போனாலும் பரவாயில்லை . மற்ற கட்சிகளுக்குப் பெயர் போய்விடக் கூடாது . வேறு யாரும் 'ஸ்கோர் 'செய்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதுதான் ' என்று ஆகி விட்டது .



தமிழகம் இப்படி தண்ணீருக்கு நாலா திசையிலும் தவிக்கக் காரணமான இயக்கத்துக்கும் கொள்கைக்கும் சொந்தக்காரர்களே இன்று அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு மேலும் வேடிக்கை பார்ப்பது இன்னும் பெரிய கொடுமை .


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது காவிரி உற்பத்தியாகும் குடகு மண்ணின் மக்கள் நாங்கள் மொழியாலும் இனத்தாலும் கன்னடத்தை விட தமிழுக்கே நெருக்கமானவர்கள் . நாங்கள் தமிழகத்தோடு இணைகிறோம் என்று போராடியும் திராவிடம் என்ற பெயரில் திராவிட நாட்டில் குடகு எந்த மாநிலத்தில் இருந்தால் என்ன என்று தமிழக அரசியல்வாதிகள் குரல் கேட்காமல் காது குடைந்து கொண்டிருக்க குடகு போராட்டம் கன்னடகளால் நசுக்கப்பட்டது . குடகு கர்நாடகாவோடு இணைந்தது . திராவிட நாடும் வரவில்லை .


குடகு தமிழகத்தொடு இணைந்திருந்தால் காவிரி பாயும் நீர் வழிப் பாதை முழுக்க தமிழ் நிலமாகவே தக்க வைக்கப் பட்டிருக்கும் . நடக்கவில்லை தமிழன் காவிரி விசயத்தில் நாமம் போட்டுக் கொண்டான் . ஒரு நீர்க் குடுமி கர்நாடகாவிடம் சிக்கியது


அதே போல தமிழர்களின் பாரம்பரிய பூமியான நந்தி மலைப் பகுதியை ஆந்திர மாநிலத்துக்குள் இழுத்துப் பறித்த போது மீண்டும் திராவிடம் சும்மா இருக்க பாலாறு , வடபெண்ணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆந்திராவிடம் போக தமிழகத்தின் இன்னொரு நீர் குடுமி ஆந்திராவிடம் சிக்கிக் கொண்டது .


கேரளாவிலும் அதே கதை . பீர் மேடு உள்ளிட்ட பகுதிகள் திட்டமிட்டு கேரளாவுக்குள் இழுக்கப் பட மீண்டும் திராவிடம் சும்மா இருக்க பல நீர் குடுமிகள் கேரளாவிடம் சிக்கின .


கேரளத்தில் உற்பத்தியாகும் ஆற்று நீரில் இருபது சதவிகித நீரை யார் நினைத்தாலும் கடலில் கலப்பதில் இருந்து தடுக்க இப்போதைக்கு முடியாது .

கேரளா பயன்படுத்துவது பதினைந்து சதவிகித நீரைத்தான் . அதற்கு மேல் பயன்படுத்த அவர்களிடம் இடமும் இல்லை . விளைநிலமும் இல்லை .

இப்போதுள்ள நிலையில் தமிழகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது பதினைந்து சதவிகித நீரை. மீதி நாற்பது சதவிகித நீர் ரொம்ப கால காலமாக தமிழ் நிலத்தின் அனுபவ பாத்தியதையில்தான் இருந்தது . ஆனால் தமிழன் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட மொழிவாரி மாநிலப் பிரிவினைகளுக்குப் பிறகு , அந்த நீரைக் கடலில் கொண்டு போய் கொட்டினாலும் கொட்டுவோம் தமிழ் நாட்டுக்குத் தர மாட்டோம் என்கிறார்கள் கேரளர்கள் . ஆனால் பிழைக்க மட்டும் அவர்களுக்குத் தமிழ் நாடு வேண்டும் .


தமிழகத்திலும் கூட வெள்ளைக்காரன் கட்டிய மேட்டூர் அணை , காமராஜர் கட்டிய வைகை அணைகளைத் தவிர யார் உருப்படியாக அணை கட்டினார்கள் ?

சும்மா சின்னச் சின்ன குட்டைகளைத் தோண்டி வைத்து அந்தக் குட்டையை விட பெரிய அளவில் அணை என்று போர்டு வைத்துக் கொண்டதைத் தவிர அதிகாரம் படைத்த நமது வாய்ப்பந்தல் அரசியல் வாதிகள் உருப்படியாக என்ன செய்தார்கள்?

தமிழகத்தில் உற்பத்தியாகும் பவானி நதி இடையில் ஒரு சிறு பகுதியில் ( மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது அநியாயமாக கேரளாவுடன் இணைக்கப் பட்ட இடத்தில் ) கேரளாவுக்குள் போகிறது .
அந்த இடத்தில் அவர்கள் அணைகட்டி அதன் பிறகு தமிழகத்துக்குள் நுழையும் இடத்துக்கு தண்ணீர் வராமல் தடுக்கப் பார்க்கின்றனர்.
சரி .. அந்த கேரளப் பகுதிக்குப் போவதற்கு முன்பு தமிசகத்துக்குள் அது பாய்கிறதே அங்கே அணை கட்டி தண்ணீரை கேரளப் பகுதிக்குள் போக விடாமல் தடுத்து தமிழகப் பகுதிக்குள் பாயச் செய்ய தமிழக முதல்வர்கள் யாராவது திட்டமிட்டார்களா ? தலை சிறந்த நிர்வாகி என்று கூவிக் கூவிப் பாராட்டப் படுகிற இன்றைய முதல்வர் யோசித்தாரா?

அது பற்றி ஒரு ஆய்வை நடத்த முடியாதா? தமிழனுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதற்காக கேரள அரசு ஓடி ஓடி செய்யும் ஆய்வுகளில் நூற்றில் ஒரு பங்கை நம் மாநில மக்களுக்காக நமது முதல்வர் செய்தாரா?
இல்லை . அதுதான் கொடுமை .

இப்படியாக நம்மைச் சுற்றியுள்ள எதிரிகள் எல்லாம் தோர்ந்து தீவிரமாக செயல்பட , நம்மிடம் உள்ளவர்களோ சுயநலப் பித்தர்களாக இருக்க தமிழகத்தின் நதி நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டு இருக்கிறது .


குறைவான நீரில் அதிக விளைச்சலுக்கு சொட்டு நீர்ப்பாசனம் செய்யச் சொல்கிறது நவீன வேளாண்மை .

தமிழனும் விரைவில் தண்ணீர் விசயத்தில் தொட்டு நீர்ப் பாசனம்தான் செய்ய வேண்டி வரும் , கண்ணில் இருந்து கன்னத்தில் !

Sunday, February 14, 2010

# தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்



இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.



* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல.
இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல் கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.


* மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு. தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.

இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.


அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!



*பெண்ணாசை

பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது
என்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம்
அதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் ,
பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை
முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால்
அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக
நிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப்
பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் .
காலகாலமாக இதை மற்றவர்கள்
பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.


* மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல், தினசரி ‘அரிவராசனம்’ பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லி& தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களை, சிங்கள அரசு ஒடுக்கியபோது, ஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.




* தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

* இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்!
நீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி!


* மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள், தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள், நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம், மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க., அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர், அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.

* இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’ என்று சொன்னார்.


ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து, ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

* ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும், காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில்? நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு, சுடுநீரில் குளிப்பாட்டி, சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்...
தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.


* காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல், ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...
தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்

Thursday, February 11, 2010

# அஜித் - ஜெயராம் - ப.சிதம்பரம் - கலைஞர் :- தமிழர்களோடு ஒரு விளையாட்டு!





அண்மையில் டெல்லியில் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார், மத்திய உள்துறை அமைச்சரும் தமிழருமான மன்னிக்கவும் தமிழ்நாட்டில் பிறந்தவருமான ப.சிதம்பரம்.
நிருபர்கள் சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, தன் தாய்மொழி(?!)யான ஆங்கிலத்தில் தானும் சரமாரியாக பதில்களை வீசுகிறார் அமைச்சர் ப.சிதம்பரம். இடையில் தமிழ் நிருபர்கள் தமிழில் கேள்வி கேட்க... சிவகங்கைச் சீமையில் பிறந்த ப.சிதம்பரத்துக்கு எரிச்சலோ எரிச்சல்! ‘‘தமிழில் கேட்காதீர்கள்; ஆங்கிலத்தில் கேளுங்கள்’’ என்று முகத்தில் அடித்தாற்போல சொல்கிறார்.

பின்பு சுதாரித்துக் கொண்டு ‘‘தமிழில் கேட்டால் மற்றவர்களுக்குப் புரியாது அல்லவா? அதனால்தான் சொன்னேன்’’ என்று சமாளித்தார்.

அதே நேரம் இந்தியில் சில நிருபர்கள் கேள்வி கேட்ட போது, தனது உதவியாளர்களின் உதவியோடு பொறுப்பான ‘இந்தி’யனாக அதற்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறார். ‘‘இந்தியில் கேட்டால் மற்ற எல்லோருக்கும் புரியாது. ஆங்கிலத்திலேயே கேளுங்கள்’’ என்று முகத்தில் அடித்தார் போலச் சொல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. மென்மையாகக் கூட மறுக்கவில்லை ப.சிதம்பரம்.

இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கூட ஒரு கேள்வி பதிலில், ‘‘பல்வேறு மொழி பேசுபவரும் இருக்கிற நிலையில் எல்லோருக்கும் தமிழ்த் தெரியாத நிலையில், பதில் புரியாமல் போக வாய்ப்பு உண்டு என்ற நிலையில், அமைச்சரின் பதில் எல்லோருக்கும் கட்டாயம் புரிய வேண்டும் என்ற நிலையில் சிதம்பரம் இருந்த நிலையில்...’’ என்ற ரீதியில் வெண்டைக்காயில் விளக்கெண்ணெய் ஊற்றி செக்காட்டியில் போடு ஆட்டிய கதையாக‌ ,பதில் சொல்லி ப.சிதம்பரத்தின் செயலை நியாயப்படுத்தியிருந்தார்.

பொதுவாக உள்ளூர் விவகாரங்களைக் கடந்த, நாடு தழுவிய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பல்வேறு மொழிக்காரர்களும் வருவார்கள். பேட்டி தருபவருக்கு எந்த மொழிகள் தெரியுமோ அந்த மொழிகளில் எல்லாம் கேள்விகள் வரும்.

அதற்கான காரணங்கள் இரண்டு

முதல் காரணம்: கேள்வி கேட்பவர் யாராக இருந்தாலும் அவர் தன் தாய்மொழியில் கேள்வி கேட்டுப் பதில் பெறும்போது அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.

இரண்டாவது காரணம்: ஒரு பத்திரிகையாளர் கேட்கும் கேள்வி எல்லாப் பத்திரிகையாளர்களும் காப்பியடிப்பதற்காக அல்ல. தனது பத்திரிகைகளுக்கான சிறப்புப் பகுதிக்காகவும் அது இருக்கலாம். இது போன்ற சமயங்களில் மொழி ஒரு ரகசிய ஆயுதம்!
இதைப் பயன்படுத்துவது பத்திரிகையாளர்களின் உரிமை. மொழி தெரியும்போது பதில் சொல்வது பிரமுகரின் கடமை. ‘‘எல்லோருக்கும் புரியாது’’ என்ற காரணம் சொல்லி இந்தியிலும் பதில் சொல்ல மறுத்து ‘‘ஆங்கிலத்தில் மட்டும் கேளுங்கள்’’ என்று ப.சிதம்பரம் சொல்லி இருந்தால் அவருடைய நோக்கத்தை நாமும் கூட ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், தமிழை மறுத்து, இந்திக்கு மட்டும் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாத நிலையிலும் உதவியாளரின் உதவியோடு தட்டுத்தடுமாறி பதில் சொல்லியிருக்கிறார் சிதம்பரம் என்றால், அது அங்குள்ள தமிழ் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு அவமானம்?

பொதுவாக சென்னை போன்ற பெரிய நகரங்களின் அரசியல் மற்றும் பன்மொழித் திரைப்பட விழாக்களில் மற்ற மொழிப் பிரபலங்கள் வரும்போது அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது ஆங்கிலத்திலோ, அல்லது தமிழ் தெரிந்தால் தமிழிலோ பேசிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒரு நிருபர் சம்மந்தப்பட்ட பிரபலத்தின் தாய் மொழியில் ஒரு கேள்வி கேட்டால் அந்த பிரபலத்தின் முகம் ஆயிரம் கோடிச் சூரியனாக பிரகாசிப்பதை பார்த்திருக்கிறோம்.

உடனே அந்த கேள்விக்கு அதே தனது தாய் மொழியில் அந்தப் பிரபலம் முன்னிலும் உற்சாகமாக, ஆர்வமாக, விளக்கமாகப் பதில் சொல்வார். உடனே, மற்றப் பத்திரிகையாளர்கள் விவரம் அறிய அந்த பத்திரிகையாளரைத் தொங்குவார்கள். அதை அந்தப் பிரபலங்கள் உள்ளுக்குள் பெருமையாக ரசிப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் இல்லாத ‘பெருந்தன்மை’ ப.சிதம்பரத்துக்கு இருப்பதாக, யாரும் விளையாட்டுக்குக் கூட விபரீதமாக தயவு செய்து வாதாட வேண்டாம்.

இப்படியெல்லாம் தமிழை இழிவு செய்வதன் மூலம் ராஜ விசுவாசம் காட்டி பலன் பெறலாம் என்பது ப.சிதம்பரத்தின் ‘தாழ்மையான’ அபிப்ராயமாக இருக்கலாம்.

ஆனால், ஒரு காலத்தில் தன் நண்பரோடு சேர்ந்து ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பை ஏற்படுத்தி நடத்தி தனக்கு தமிழ் பற்று இருப்பதாக காட்டிக் கொண்ட ப.சிதம்பரம், இன்று சுயலாபத்துக்கென்று யாரையோ திருப்திப்படுத்த இவ்வளவு தூரம் இறங்கிப்போவதும் கிறங்கிப் போவதும் என்ன மாதிரி சிந்தனையோ?


சிவகங்கையிலிருந்து அவருக்கு ஓட்டுப்போட்டு டெல்லிக்கு அனுப்பிவர்கள் ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவர்கள். தமிழ்தான் தெரிந்தவர்கள் என்ற சிந்தனையை அவருக்கு யார் ஏற்படுத்துவது? இதைக் கண்டிக்க வேண்டிய முத்‘தமிழ்’ அறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான கலைஞர் வலியப்போய் பூசி மெழுகுகிறார் என்றால் என்னவென்று சொல்வது?

நடிகர் ஜெயராம் சமாச்சாரம் முற்றிலும் வேறு.

தமிழ் சினிமாவில் மலையாளப் பெண்களை, அவர்களது உடையை, பேச்சை கிளுகிளுப்பாகப் பயன்படுத்துவது உண்டு. மறுக்கவில்லை. ஆனால், அதற்கும் முன்பிருந்தே மலையாள சினிமாக்களில் தமிழ், தமிழன், தமிழகம் போன்றவற்றைப் பற்றி கேவலமாக சித்தரித்து பலப்பல படங்கள் வந்துள்ளன.


ஒரு மலையாளப் படத்தில் துபாயில் உள்ள உயரமான ஒரு கட்டிடத்தைப் பார்த்து மோகன்லால் சொல்லும் வசனம் ‘‘அடேயப்பா... எவ்வளவு உயரமான கட்டிடம்... எல்.ஐ.சி. கட்டிடம் 14 மாடி இருக்குன்னு பீத்திக்கிற பாண்டனுங்க (தமிழனுங்க) இதைப் பார்த்தா கும்பல் கும்பலா தூக்குப் போட்டு தொங்கிடுவானுங்க’’ என்பார்.

மலையாளிகளின் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கண்ணகி நாடகமும் வேண்டும், ஆனால் அதே நேரம் தமிழைக் கேவலப்படுத்தவும் வேண்டும்.


அப்படி மலையாளிகளைச் சிரிக்க வைப்பதாக ஜெயராம் உளறியதுதான் ‘கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி’ என்ற வார்த்தை.

‘‘கறுத்த தடித்த...’’ என்ற வார்த்தை கிண்டலாகவும் பயன்படுத்தலாம். ‘‘அடையாளத்துக்காகச் சொன்னேன்’’ என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவும் செய்யலாம். எருமை என்ற வார்த்தைக் கூட அந்த வேலைக்கார பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ‘‘என் முதலாளி என்னைப் பற்றிச் சொன்னார். பரவாயில்லை. நான் தவறாக நினைக்கவில்லை’’ என்று ஜெயராம் வீட்டு வேலைக்காரப் பெண் கூறிவிட்டால் போதும், மூன்றாம் மனிதர் தலையிட முடியாது.

ஆனால், அந்த இடத்தில் ‘தமிழச்சி’ என்ற வார்த்தையை ஜெயராம் பயன்படுத்தியது நிச்சயமாக நன்றிகெட்ட இனத்துவேஷம்; மொழித் துவேஷம்; நிலத் துவேஷம்தான். மலையாளிகளைக் குஷிப்படுத்தி ஜெயராம் பேசிய அற்பத்தனமான பேச்சு அது. சம்பந்ப்பட்ட வேலைக்காரப் பெண்ணே அதை மன்னித்தாலும், எல்லோரும் மன்னிக்கத் தேவையில்லை. அது தண்டைனைக்குரிய குற்றம்தான்.


ஆனால், தமிழ்நாட்டில் தமிழனை யார் என்ன சொன்னாலும் தமிழனை அடக்கி முடக்கி, தமிழனை இழிவுபடுத்துகிறவர்களைக் காக்கிற தாயாக விளங்கும் ‘தமிழ் இனத் தலைவர்’ கலைஞர் வழக்கம் போல ஜெயராமுக்கு ஆதரவாக மறப்போம்; மன்னிப்போம்’’ என்கிறார். ஜெயராம் மீது போடப்பட்ட வழக்கையும் வாபஸ் பெறச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட, அதுவும் வாபஸ் ஆகியுள்ளது.

ஆனால், ஒரு நியாயமான காரணத்திற்காக உணர்ச்சி வசப்பட்டு ஜெயராம் வீட்டைத் தாக்கி, இனி தமிழனைக் கேலி செய்தால் உதை விழுமோ என்ற அச்சத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திய ‘நாம் தமிழர் இயக்க’த் தொண்டர்களை மட்டும் மறக்கவோ மன்னிக்கவோ ‘தமிழினத் தலைவரின் உள்ளத்தில் இடம் இல்லை.

இதையெல்லாம் பார்த்துதான் அஜித்திற்கு அந்தத் தைரியம் வந்திருக்க வேண்டும்.

பிப்ரவரி 6&ம் தேதி திரையுலகம் கலைஞருக்கு நடத்திய பாராட்டு விழாவில் பேசிய அஜித், ‘‘இந்த விழாவுக்கு நான் விரும்பி வந்திருக்கிறேன். ஆனால், மற்ற சில விஷயங்களுக்கு எங்களை வற்புறுத்தி அழைக்கின்றனர். மிரட்டுகின்றனர். காவிரி பிரச்னைக்கு நாங்கள் போராடாவிட்டால் என்ன போச்சு?அதையெல்லாம் முதல்வராகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் (பார்க்கலையே அஜித்)’’ என்று பேசியுள்ளார்.

அதாவது தமிழன் வியர்வையில் பூக்கும் பணத்துளிகள் மட்டும் தன் வீட்டு உண்டியலைப் பிளந்து கொண்டு உள்ளே கொட்டவேண்டும். ஆனால் அவனுக்கு ஒரு கஷ்டம் ஒரு பிரச்னை ஓர் அவமானம் என்றால் தான் எதையும் செய்யமாட்டேன். உதவமாட்டேன். ஒரு துளி வியர்வையும் சிந்தமாட்டேன். அதற்கு எல்லாம் கூப்பிடவும் கூடாது’’ என்ற தொனி அஜித்தின் பேச்சில் இருந்தது.
உண்மையில் அஜித்தின் பேச்சு ஜெயராமின் பேச்சை விட ஆபத்தான பேச்சு.


ஜெயராம் ஒரு தவறு செய்துவிட்டார். மலையாள சேனலில் தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தியதற்குப் பதில் கலைஞர் முன்னிலையில் தமிழை, தமிழர்களை, தமிழ் பெண்களை இன்னும் எவ்வளவு கேவலப்படுத்தியிருந்தாலும் அவருக்கு பிரச்னை வந்திருக்காது.

இப்படியாக தமிழை வைத்துப் பிழைத்தவர்கள் தமிழை வைத்து ஜெயித்தவர்கள், தமிழை வைத்து சம்பாதித்தவர்கள் தமிழனின் பணத்தை, பொருளை தமிழனின் எதிர்காலத்தை தமிழனின் அடுத்தடுத்த சந்ததிகளின் வாழ்வைச் சுரண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழோடும் தமிழனோடும் அராஜக விளையாட்டு விளையாட,

தமிழனென்று சொல்லடா!
தலை குனிந்து நில்லடா!!

Tuesday, February 9, 2010

# இதுவா சாதனை?





‘‘தமிழக முதல்வர் கலைஞரின் தொடர் வலியுறுத்தல்கள¢ காரணமாக மெட்ராஸ் ஹை கோர்ட் என்ற பெயர், இனி சென்னை ஹை கோர்ட் என்று மாற்றப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது’’ என்று ஒரு செய்தியை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.


சென்னை மட்டுமல்ல; பம்பாய் ஹைகோர்ட், மும்பை ஹைகோர்ட் ஆகிறது. கல்கத்தா ஹை கோர்ட், கொல்கத்தா ஹை கோர்ட் ஆகிறது என்றும் தகவல்கள் தொடர்கின்றன.

ஆக, இந்தியா முழுவதும் இந்த மாற்றம் நடக்கிறது எனும்போது, முதல்வர் வலியுறுத்தாவிட்டாலும் மெட்ராஸ் ஹைகோர்ட், சென்னை ஹைகோர்ட் என்று மாறியிருக்கத்தான் போகிறது. இதில் முதல்வர் வலியுறுத்த என்ன இருக்கிறது? உண்மையில் இந்தப் பெயர் மாற்றங்கள் என்பது இந்தியா முழுக்க சென்னை, மும்பை, கொல்கத்தா, குவகாத்தி போன்ற இடங்களில் நடக்கிறது.


அடுத்த சட்டமன்றத் தேர்தலைப்பற்றி இப்போதே யோசித்துக் களம் இறங்கிவிட்டது தி.மு.க.. எனவே வரும் சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. அரசின் சாதனைப் பட்டியலில், இந்தப் பெயர் மாற்றமும் சேர்ந்துவிடும். கழகக் கண்மணிகள் பிரசார மேடைகளில், ‘‘மெட்ராஸ் ஹைகோர்ட் என்று இருந்த பெயரை சென்னை ஹைகோர்ட் என்று மாற்றிய பெருமை தமிழக முதல்வர் கலைஞரையே சாரும்’’ என்று சோடா குடித்தபடி முழங்கத்தான் போகின்றனர்.


உண்மையில் இதுவா முதல்வரின் சாதனை?

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்றவை பிரிந்தன. தமிழர்கள் வாழும் பகுதிகளையும் சேர்த்து தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் பிடுங்கியது போக, மிச்சமுள்ள பகுதி அப்படியே கிடந்தது, சென்னை மாகாணம் என்ற பெயரில்! அண்ணா முதல்வர் ஆனபோது, சட்டமன்றத்தில் அதற்கு ‘தமிழ்நாடு மாநிலம்’ என்று பெயரிட்டார்.

அதோடு சரி.


நம்மிடம் இருந்து (நம்மையும் ஏய்த்து) பிரிந்துபோன மாநிலங்களின் உயர்நீதி மன்றங்கள் எல்லாம் மாநிலத்தின் பெயரையே உயர்நீதி மன்றங்களுக்கு வைத்தன. அதோடு தத்தம் மாநில மொழியையும் தமது உயர்நீதிமன்றத்தில் சரியாசனம் தந்து பெருமை பெற்றன. உதாரணம்: கர்நாடக உயர் நீதிமன்றம். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையே கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் என்று பெரிய எழுத்தில் கன்னடத்திலும், HIGH COURT OF KARNATAKA என்று சிறிய எழுத்தில் ஆங்கிலத்திலும் இருக்கும்.

மற்ற மாநிலங்களிலும் அப்படியே!


ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்நாடு மாநில உயர் நீதிமன்றம் என்று, 42 ஆண்டுகளாக இன்னும் பெயர் மாற்றவில்லை. MADRAS HIGH COURT என்று ஆங்கிலத்தில் மட்டும் உள்ளது. ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ என்று தமிழில்கூட இல்லை. ஆங்கிலம் மட்டுமே! சரி HIGH COURT OF TAMIL NADU என்றாவது ஆங்கிலத்தில் உள்ளதா என்றால் அதுவும் இல்லை.


தவிர உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக இல்லை.பயன்மொழியாக இல்லை. உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. தமிழ் இல்லை. ஏன் MADRAS HIGH COURT என்ற ஆங்கிலப் பெயரை மெட்ராஸ் ஹைகோர்ட் என்றுகூட தமிழில் எழுதவில்லை.


இந்த நிலையில் மத்திய அரசின் முடிவின் பெயரில் மும்பையிலும், கொல்கத்தாவிலும் குவகாத்தியிலும் நடைபெறும் அதே மாற்றம் அதே காரணத்தால், சென்னையிலும் நடக்கிறது. இதில் முதல்வர் வலியுறுத்த என்ன இருக்கிறது?

இந்த முடிவால் என்ன மாற்றம் வரப்போகிறது?

MADRAS HIGH COURT என்ற பெயரில் MADRAS என்ற ஆங்கில வார்த்தையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக CHENNAI என்று மாற்றப்போகின்றனர். இதைச் செய்ய பச்சை மையும், இந்திய அரசு இலச்சினை ரப்பர் ஸ்டாம்பும் கொண்ட ஓர் அதிகாரியே போதுமே.MADRAS என்ற ஆறெழுத்து ஆங்கில வார்த்தையை CHENNAI என்று ஏழு எழுத்து ஆங்கில வார்த்தையாக மாற்ற மாநிலமுதல்வரின்‘வலியுறுத்தல்’ எதற்கு?


அதை ஒரு சாதனையாகவும் பெருமையாகவும் கூறிக்கொண்டு செய்தி தருவது என்ன மனோநிலை?


மும்பையிலும் கொல்கத்தாவிலும் குவகாத்தியிலும் கூட இதே மாற்றம் நடக்கிறது என்றாலும், நமது உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பதைப்போல, அங்கெல்லாம் வங்காள மொழியும், அசாமிய மொழியும் புறக்கணிக்கப்படுவதில்லையே.


உண்மையிலேயே முதல்வர் கலைஞர் இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்?


கர்நாடக, கேரள உயர் நீதிமன்றங்களைப்போல... MADRAS HIGH COURT என்பதை HIGH COURT OF TAMILNADU STATE என்று ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்து, அதையே ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என்று தமிழிலும் பெயர்ப்பலகையில் இடம் பெற ஆவன செய்யவேண்டும். இதுதான் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவுள்ள இந்த நேரத்தில் செய்யவேண்டிய ஆக்கபூர்வமான பணியாக இருக்க முடியும்.

வெறுமனே MADRAS என்று இருக்கும் இடத்தில் CHENNAI என்று மாற்றுவதால் மட்டும் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.


தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதங்கம் கலந்த குரல் இது.

கவனிக்க வேண்டும்.

Monday, February 8, 2010

# மலையாளமயமாகும் தமிழ்நாடு?





ஓடும் நீரில் சிக்குன் குன்யா கொசு பரவாது என்று மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்துவிட்ட பிறகு, கேரள ஆற்று நீரில் சிக்குன் குன்யா கொசுக்களைப் பரப்புவதாக முட்டாள் தனமான காரணம் கூறி, பல தமிழ்க் குடும்பங்களை கேரள போலீசார் அடித்து விரட்டிய சூழலில்...

தமிழன் எவனாவது தனது பிள்ளைகள், பள்ளியில் தமிழ் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவனது ரேஷன் கார்டை ரத்து செய் என்று இடுக்கி மாவட்ட கலெக்டரான ஒரு மலையாளி தனது கீழ் அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவு போட்டு, பல தமிழர்கள் பாதிக்கப்பட்ட சமயத்தில்...

ஆற்று நீரை உப்புக்கடலில் கொட்டினாலும் கொட்டுவோம்; தமிழனுக்குத் தரமாட்டோம் என்று முரண்டு பிடித்து, தமிழக அதிகாரிகளை முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில், கேரள போலீசார் தாக்கிய நேரத்தில்...

இன்னும் 90 சதவீதம் தமிழர்கள் வாழ்கிற மூணாறு, பீர்மேடு, வண்டிப் பெரியாறு பகுதிகளில் மகர சங்கராந்தி தவிர, பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் லீவு போட்டால், கேரள அரசு சம்பளத்தைப் பிடிக்கிற அந்த சூழலில்தான்...

60 லட்சம் மக்கள் வாழ்கிற சென்னையில் உள்ள ஒரு லட்சம் மலையாள ஓட்டுக்கள் தமக்கே முழுமையாக கிடைக்கும் என்ற நப்பாசையில் சென்னை முழுக்க ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை கொடுத்தார், தமிழினத் தலைவர் என்று அழைக்கப்படுகிற முதல்வர் கலைஞர்.

அன்று தொடங்கி, தமிழகத்தில், தரைக்கடியில் ஒரு விஷ நீரோட்டம் பாய்வதை உணர முடிகிறது. அதுவும் கலைஞர் தொலைக்காட்சியில் இருந்தே ஆரம்பிக்கிறது.


இப்போதெல்லாம் கலைஞர் டி.வி.யில் அடிக்கடி மலையாளப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இதன் உச்சகட்டமாக தமிழர் திருநாளான பொங்கல் சமயத்தில், அதுவும் அதை தமிழ்ப்புத்தாண்டாக முதல்வரே அறிவித்துள்ள சூழலில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று காலையில், கலைஞர் டி.வி.யில் ‘சிவபுரம்’ என்ற மலையாளப்படம் ஒளிபரப்பப்பட்டது!


பொதுவாக நல்ல படங்கள் கைவசம் இல்லாத நோஞ்சான் தொலைக்காட்சிகள், நேரத்தைக் கடத்துவதற்காக அவ்வப்போது அடிமாட்டு வேற்று மொழிப் படங்களை தமிழில் மொழிமாற்றி வெளியிடுவார்கள். அது பரிதாபமான நிலை. ஆனால், புதுப்படம் வாங்குவதில் சன் டி.வி.யைத் தோற்கடிக்கப் போராடுகிற கலைஞர் டி.வி.யில் எதற்கு மலையாளப்படம், அதுவும் பொங்கல் சமயத்தில்?

‘சன் டி.வி.யின் மலையாள சேனலான கிரன் டி.வி.யில் தமிழ்ப்படங்களையும், தமிழ்ப் பாடங்களையும் ஒளிபரப்புகின்றனர். பதிலுக்கு நாம் ஏன் மலையாளப்படங்களை காட்டக்கூடாது? என்று கேட்கலாம்.

கேரள டி.வி. ரசிகர்கள் மீது தமிழ்ப்படங்கள் திணிக்கப்படுவதில்லை. அவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள். அதனால் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், கலைஞர் டி.வி.யில் எதற்கு மலையாளப்படம்-?

‘கலைக்கு மொழியில்லை’ என்றால், கலைஞர் டி.வி. அயல் மொழிப் படங்கள், அயல்நாட்டுப் படங்களுக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கட்டும். அதில் பன்மொழிப் படங்கள், தரமான படங்கள் வரட்டும். அதில் நல்ல தரமான மலையாளப்படங்கள் வரட்டும். ஆனால், தமிழ்ப்புத்தாண்டையே மாற்றி புதிதாய் உருவாக்கி இருக்கும் சூழலில் &கொண்டாட்டத்தில் ‘சிவபுரம்’ என்ற மலையாளப்படம் எதற்கு?
இதற்கு முன்பு தமிழ்ப்புத்தாண்டு&தைப்பொங்கல் முதல் நாளன்று கலைஞர் டி.வி.யில் ஒரு மலையாள விளம்பரமே இடம்பெற்றது. முழுக்க முழுக்க மலையாள மொழியில்.

‘‘விளம்பர வருமானமாக வரும்போது ஏன் தவிர்க்க வேண்டும்’’ என்று கேட்கலாம். அந்த ஒரு விளம்பரத்தால் வரும் வருமானம் இல்லாவிட்டால் என்ன? அன்று கொடுத்தவர்கள் மற்ற நாளில் அந்த விளம்பரத்தைக் கொடுத்தார்களா? தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு அன்று மலையாள விளம்பரம் திணிக்கப்பட்டதில் ஏதோ வஞ்சகமான குசும்பு தெரிகிறதே!
இது மட்டுமா?

நமது திரையரங்குகளில் முன்பெல்லாம், படம் துவங்குவதற்கு முன்பு நியூஸ் ரீல் போடுவார்கள். அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் இப்போது அது மாறி, அதிக பட்சம் ஓரிரு நிமிடத்திற்குள் முடிகிற துண்டுப் படங்கள்தான் இப்போது பெரும்பாலும் காட்டப்படுகின்றன. தேவேந்திர கண்டேல்வால் என்பவர் ஒட்டு மொத்தக் குத்தகையாக எடுத்துத்தரும் இந்தப் படங்கள் சமூக சேவை, ஒழுக்கமான பழக்க வழக்கங்கள், சுத்தம் சுகாதாரம் போன்றவை பற்றியதாக இருக்கும்.
அண்மையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் அப்படி ஒரு படம்... வெளியே இருந்து வீட்டுக்குள் வந்தவுடன் கைகால்களைக் கழுவ வேண்டும், சாப்பிடும்போது கைகளைக் கழுவ வேண்டும், இரவில் படுக்கப் போகும் முன்பு பல் துலக்க வேண்டும் போன்ற விஷயங்களை வலியுறுத்திய அந்தப்படம், தமிழில் இல்லை! அதில் தமிழே இல்லை. முழுக்க முழுக்க மலையாளத்தில் இருந்தது, அந்தப்படம்!!

மறைமுகமாக விசாரித்த போது, ‘இதைப் போடச் சொல்லி உத்தரவு’ என்று கூறப்பட்டது. சென்னையின் திரையரங்கில் அதுவும் குழந்தைகள் தொடர்பான ஒரு படம் மலையாளத்தில் இருந்தால், என்ன அர்த்தம்? தமிழ்நாட்டுக்குழந்தைகள் அனைத்தும் மலையாளம் படிக்க வேண்டும் என்பது இங்குள்ளவர்களின் ஆசையா? இந்தித் திணிப்பை எதிர்த்தவர்கள் இன்று மலையாளத்தைத் திணிக்கிறார்களா-?
திருவனந்தபுரம் ‘பார்த்தாஸ்’ திரையரங்கில் இதே படத்தைத் தமிழில் காட்ட முடியுமா? காட்டினால் மலையாளிகள் சும்மா விடுவார்களா? அல்லது நிஜமான மலையாள இனத்தலைவர்களான அந்த அரசியல்வாதிகள் ஒத்துக்கொள்வார்களா-?

உண்மையில் திருவனந்தபுரத்தில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட சென்னையில் மலையாளிகள் இல்லை. அப்படி இருக்க, சென்னை திரையரங்கில் விளம்பரப்படத்தை மலையாளத்தில் போடுவது எந்த வகையில் நியாயம்?
இதோடும் முடியவில்லை.

கேரளாவில் ஆபத்தில்லாத அளவுக்கு மேல் ஆற்றுமணலைத் தோண்ட அங்குள்ள அரசுகள் அணுமதிப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் தட்டிக்கேட்டால் காரேற்றிக் கொல்ல வருவார்கள். இதனால் தமிழக குவாரிகளில் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம். நம் மாநிலத்தில் மலைகளை உடைத்து பெறப்படும் ஜல்லிகற்களையோ, ஆற்றுமணலையோ மற்ற மாநிலத்திற்கு கொண்டு செல்ல நேரடியாக யாரும் அனுமதியை சட்டப்பூர்வமாக இதுவரை தந்ததுமில்லை. இதனால் மலைவளம், மண்வளம் பாதிப்படைந்து, எதிர்காலத்தில் பெரும் பிரச்னைகள் ஏற்படும் என்பதுதான் காரணம்.

இந்நிலையில் தமிழக தொழில் துறை செயலாளர், ‘கேரளத்துக்கு குவாரி பொருட்களை கொண்டு செல்ல இனி தடை இல்லை’ என்று 23.11.2009 அன்று குமரி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார். குமரி மாவட்ட கலெக்டருக்கு மட்டும் எழுதினாலும், இது தமிழகம் முழுவதுமே பொருந்தும். (கவனிக்க வேண்டியது. அனுமதி கேரள மாநிலத்திற்கு மட்டும்)

அன்று எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்த போது, ‘‘தமிழகத்தை ஒரு மலையாளி ஆள முடியாது. இந்தியாவில் இரண்டு கேரளத்தை நான் அணுமதிக்க மாட்டேன்’’ என்றார், அன்றும் முதல்வராக இருந்த கலைஞர்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வள்ளலாக மாறியதன் மூலம்
தமிழின வரலாற்றில் தலையாய இடத்துக்குப் போய் விட்டார் எம்ஜிஆர்

ஆனால் அப்படிச் சொன்ன கலைஞர் இன்று தமிழகத்தையே கேரளாவுக்குள் திணித்து, அகண்ட கேரளம் உருவாக்க முடிவு செய்து விட்டாரோ
என்று சந்தேகப்படும் அளவுக்கு...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி டி.வி., சினிமா முதல் கல்குவாரி வரை மலையாளிகளுக்கு மகுடம் சூட முயல்வதும் தன்மானத் தமிழர்கள் ஏற்க முடியாத ஒன்று என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது உணர்வார்களா?

Monday, February 1, 2010

# நமது புறம்போக்கு அரசியல்

இதனால் தமிழக மக்கள் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,உங்களுக்குப் பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்து புறம்போக்கு நிலம் ஏதும் இருக்கிறதா-? அது ஏரிப் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. தர்ம நியாயம், மான அவமானம் தயவுதாட்சண்யம் பார்க்காமல் வளைத்துப் போடுங்கள்.
மூன்று வருடம்... மூன்றே வருடம் எப்படியாவது யாரைச் சரிகட்டியாவது என்ன செய்தாவது சூழ்நிலையைச் சமாளித்து மூன்று வருடங்கள் மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும். மூன்றாவது வருடம் முடிவில் அதே இடத்திற்கு உங்கள் பெயரில் பட்டா வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

அட விளையாட்டு இல்லீங்க. நிஜம்!

இது என்னவென்று விளக்கமாகப் பார்ப்பதற்கு முன்பு-...
மத்திய அரசு செய்கிற ஒரு மக்கள் விரோதச் செயலை பார்ப்போம்.
அண்மையில் சமையல் எரிவாயு வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்து உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்படும் நுகர்வோர்கள் அதற்கான தொகையைவிட 50 ரூபாய் கட்டினால், வாரக்கணக்கில் காத்திருக்க அவசியமின்றி உடனடியாக எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு அனுப்பப்படும் என்பதுதான் அந்த மட்டமான திட்டம்.
இதுவரை சிலிண்டர் எப்படி வழங்கப்படுகிறது-? வீட்டில் இருக்கும் சிலிண்டரில் கேஸ் தீர்ந்த உடன் (அல்லது தீரும் தருணத்தில்) நாம் அடுத்த சிலிண்டர் கேட்டு பதிவு செய்தால், கோரிக்கை மூப்பு மற்றும் சிலிண்டர்களின் இருப்பு அடிப்படையில் அது வழங்கப்பட்டு வந்தது. இதிலேயே கூட அதிகாரம் மற்றும் வசதி படைத்தோர் இடையில் புகுந்து தங்கள் ‘சக்தி’யைப் பயன்படுத்தி நினைத்தபோது சிலிண்டர் பெற்று, சாதாரண மக்களுக்கு சிலிண்டர் கிடைக்கும் காலத்தைத் தாமதப்படுத்தி ஏய்த்த கொடுமை நிகழ்ந்தது.

இப்போது பணத்தின் அடிப்படையில் அரசே இந்த ஒழுக்க மீறலை உரிமையாக்கினால், எரிவாயு நிறுவன ஊழியர்கள் என்ன செய்வார்கள்? 50 ரூபாய் அதிகம் தருபவர்களுக்குத் தகவல் மூப்பையும் மீறி உடனடியாகத் தருவார்கள். சில ஆயிரம் ரூபாய் வருமானத்தில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் அப்பாவி மக்கள் 50 ரூபாய் அதிகம் தர முடியாத நிலையில் என்ன செய்வது? பதிவு செய்தும் சிலிண்டர் வராமல் ஒத்தை ரூபாய் பச்சை அரிசியை ஊற வைத்துத் திங்க வேண்டியதுதான்.

இந்த அற்பத்தனமான 50 ரூபாய் திட்டத்தால் அப்பாவி பொதுமக்கள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படப் போகிறார்கள் என்பதற்கு தமிழக அரசின் வேறொரு திட்டத்தை உதாரணமாகப் பார்க்கலாம். தமிழகத்தின் போக்குவரத்து மையமான திருச்சி மாநகரம்! மத்திய பேருந்து நிலையம். அங்கு இரவு நேரங்களில் மதுரை செல்லும் சாதாரணப் பேருந்துகளில் அந்தக் காட்சியைப் பார்க்கலாம். திடீரென்று பேருந்தின் நடத்துனர் யாராவது ஒரு பயணியைப் பார்த்து கத்துவார். ‘‘யோவ் கீழ இறங்குய்யா... உனக்கு அறிவில்ல..? சொன்னா புரியாதா-? சோறுதான திங்கற... உப்புப் போட்டு திங்கறது இல்லையா...’’ என்று ஆரம்பித்து தொடர, பயணி பரிதாபமாக நிற்பார். அந்தப் பயணி குடிபோதையில் தகராறு செய்தவராகவோ, பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ய முயன்றவராகவோ இருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள்? ரொம்பத் தப்பு. அதெல்லாம் இல்லை. அந்தப் பயணி அருகில் உள்ள விராலிமலைக்கோ, துவரங்குறிச்சிக்கோ செல்வதற்காக பேருந்தில் ஏறியிருப்பார். அதுதான் தப்பு. தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல. வயது முதிர்ந்த குடும்பஸ்தர்களும்கூட தன் மனைவி பிள்ளைகள் முன்பு இந்த அவமானத்தைச் சந்திக்க வேண்டி உள்ளது.
நன்றாகக் கவனியுங்கள். அவை விரைவுப் பேருந்துகள் அல்ல. திருச்சியில் இருந்து விராலிமலை, துவரங்குறிச்சி வழியாக மதுரை செல்கிற பேருந்துகள்தான். வழித்தட அனுமதிப்படி விராலிமலையிலும் துவரங்குறிச்சியிலும் நின்று மக்களை இறக்கியும், ஏற்றியும் செல்ல வேண்டிய பேருந்துகள்தான் அவை.

ஆனாலும் பயணிகளுக்கு ஏன் இந்த அவமானம்?

‘அதிக வசூல் பார்க்கும் நடத்துனர் ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை’ என்று தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் ஒரு திட்டம் கொண்டுவந்தது அல்லவா? அதுதான் காரணம்! விராலிமலை, துவரங்குறிச்சி போகிறவன் பேருந்தில் அமர்ந்துவிட்டால், மதுரை போகிறவன் அடுத்த பேருந்தில் போய்விடுவான். இந்த ஊர்களுக்குப் பயணத்தொகை குறைவு. எனவே வசூல் குறையும். ஓட்டுநர் நடத்துனருக்கான ‘ஊக்கத்தொகை’ குறையும்.
சற்றுத் தாமதமாக வரும் மதுரைப் பயணி ஐந்து நிமிடத்தில் கிளம்பும் அடுத்த பேருந்தில் வரட்டுமே. மதுரைக்குப் போகவா முடியாது? ‘போகலாம். ஆனால் என் வசூல் குறைந்து ஊக்கத்தொகை குறையுமே. விராலிமலை, துவரங்குறிச்சி போகிறவன் எப்படியோ போகட்டும். நான் மதுரை செல்பவரை அல்லது மதுரை டிக்கெட் வாங்குபவரைத்தான் என் பேருந்தில் ஏற்றுவேன்-’. இன்றும் இது தொடர்கதையாக நடக்கும் நிகழ்வு. இதிலேயே இவ்வளவு பிரச்னை என்றால், கேஸ் சிலிண்டர் விஷயத்தில் 50 ரூபாய் அதிகம் தர முடியாதவர்களின் கதி என்னவாகும் என்று யோசியுங்கள். எதிர்கால விபரீதம் புரியும்.

தாலுகா ஆபீசில் ஒரு சான்றிதழ் வாங்க முறைப்படியான கட்டணம் 130 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதை உடனடியாகப் பெற பியூனுக்கோ, கிளார்க்குக்கோ 50 ரூபாய் அதிகம் கொடுப்பதும் பெறுவதும்தான் லஞ்சம் என்று அழைக்கப்படுகிறது. அது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். அப்படியானால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட 50 ரூபாய் அதிகம் வைத்து கேஸ் சிலிண்டரை பெறுவதும் தருவதும் லஞ்சம்தானே? அது சட்டப்படி குற்றம்தானே? அப்படியானால் லஞ்ச ஒழிப்பு சட்டப்படி இந்தத் திட்டம் கொண்டு வந்த அதிகாரியையும், துறை அமைச்சரையும், அதை ஏற்ற பொருளாதார ‘மேதை’யையும், நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று கேட்பது தவறா? முடியாது என்றால் விஜிலென்ஸ் துறை எதற்கு?

இந்த 50 ரூபாய் திட்டத்தால் என்னவாகும்? ஒரு நிலையில் சிலிண்டர் விலையைவிட 50 ரூபாய் அதிகம் கொடுத்தால்தான் எல்லோரும் சிலிண்டர் பெறமுடியும் என்ற நிலை உருவாகும். இது ஒரு அறிவிக்கப்படாத மறைமுக விலையேற்றமாகவே மக்களின் தலையில் விடியும்.

தவிர, முன்பே வடக்கு தெற்கு பேதங்களாலும், மாநில காழ்ப்புணர்ச்சிகளாலும், இனத் துரோகங்களாலும் பிரிந்து கிடக்கும் இந்தியனை பொருளாதார அடிப்படையிலும் பிரித்து ஒருவனோடு ஒருவன் முட்டிக்கொண்டு நிற்கும் நிலையையே இதுபோலத் தவறான திட்டங்கள் ஏற்படுத்தும்.

அடுத்து புறம்போக்கு விஷயம்...

புறம்போக்கு நிலத்தில் மூன்று வருடங்களோ அதற்கு மேலாகவோ குடியிருப்போர்க்குஅந்த இடத்தை உரிமையாக வழங்கிவிடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. ஆக, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்ற கருத்துக்குச் சாவுமணியடித்துவிட்டது தமிழக அரசு. சமூகத்தில் இன்றும் புறம்போக்கு என்பது ஒரு கேவலமான வார்த்தையாகவே கருதப்படுகிறது.

யாருக்கும் தெரியாமல் செய்வதுதான் திருட்டு. ஆனால் ஊரறிய ஒரு திருட்டைச் செய்ய முடியுமென்றால் அதுதான் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது. இப்படிச் செய்வது அவமானம் என்று மக்களே நினைத்த காலம் உண்டு.
வீடில்லாத ஏழைமக்களுக்குக் குடியிருக்கும் கொஞ்ச இடத்தை தருவது என்பது வேறு. ஆனால், ஒரு நிலையில் முறையின்றி ஏக்கர் கணக்கில் புறம்போக்கு நிலத்தை அரசியல் திருடர்கள் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டது. அதுவே ஒரு தொழிலானது. பின்னர் தன் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது, சாதாரண கட்சிக்காரனும் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

அரசுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடங்கள் திருடர்கள் வசமாயின. புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நீர் வரும் வழிகளை, நீர் நிலைகளையெல்லாம் மறித்து தூர்த்து வீடுகள் கட்டப்பட்டதால், தண்ணீர்ப் பஞ்சம், மழைக்காலங்களில் தறிகெட்டு பாயும் வெள்ளம் என்று பல பிரச்னைகள்.

போரூர் ஏரியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகட்டி, அப்பாவி மக்களிடம் விற்று ஏமாற்றிய பின்பு, மக்களை ஒட்டுமொத்தமாக செம்பரப்பாக்கம் ஏரிப்பக்கம் ‘ஏரி கடத்திய’ கொடுமையும் தமிழ்நாட்டில் நடந்தது அல்லவா? வள்ளுவருக்குக் கோட்டம் கட்டியது தவறில்லை. ஆனால், ஒரு ஏரியையே தூர்த்து அந்த இடத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டியதுதான் கொடுமை. இப்போதும் அந்த இடத்திற்கு லேக் ஏரியா என்றுதான் பெயர்.
புறம்போக்கு நில ஆக்கிரமிப்பால் ஏற்படும் பிரச்னைகள், அரசுக்கான எதிர்கால இழப்புகள் பல. இந்த நிலையில் மூன்று வருடம் குடியிருந்து விட்டால் அந்த நிலத்தைச் சட்டப்படி உரிமையாக்கிக் கொள்ள முடியுமென்றால், அது நிலத் திருட்டை மேலும் ஊக்குவிக்காதா?

இனி புறம்போக்கு நிலங்கள் தப்புமா? திருட்டுக்கு அரசே அங்கீகாரம் வழங்கிவிட்ட பின்பு என்ன கஷ்டம்? ஆக, வாசகர்களே... உங்கள் கண் போகும் திசையில் 100 அடி புறம்போக்கு நிலம் இருந்தால் கூட விட்டுவிட வேண்டாம். கோட்டை உள்ள திசை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு, பூமி பூஜை போட்டு... ஆக்கிரமியுங்கள்!
அட, பின்னாளில் அதை விற்றாவது கேஸ் சிலிண்டருக்கு மேற்கொண்டு 50 ரூபாயோ 200 ரூபாயோ கொடுக்க உதவும் அல்லவா?