Saturday, September 25, 2010

#இதுதாண்டா பிசினஸ் !


ரசிகர்களே ! ரோட்டில் நீங்கள் நடக்கும்போது எதிர்பாரதவிதமாக தடுக்கி விழுந்தால் , தலை மாட்டில் மூன்று தியேட்டர்களிலும் கால் பக்கம் நான்கு தியேட்டர்கள் தவிர இடது விலா எலும்பு பக்கம் இரண்டு தியேட்டரிலும் வலது விலா எலும்பு பக்கம் ஐந்து தியேட்டரிலும் எந்திரன் படம் ஓடலாம் .

தரையில் இருந்து எழும்போது ஜாக்கிரதையாக எழுங்கள் . ஏதாவது ஒரு தியேட்டரின் சன் ஷீல்டில் தலை இடித்து விடும் அபாயம் உண்டு

இதுதாண்டா பிசினஸ்
!

Friday, September 17, 2010

# மாரடைப்புக்கு சுய முதலுதவி
திடீரென்று ஏற்படும் நெஞ்சுவலி இடது கை வழியாக பரவியும் தாடை வரையும் தொடர்ந்தால்.......

அது மாரடைப்பு

---என்றதும் பயப்படத் தேவை இல்லை .

மருத்துவமான அருகில் இல்லையா ? பதட்டம் வேண்டாம் .

தொடர்ந்து தீவிரமாக இரும வேண்டும் .

முடிந்தவரை இரும வேண்டும் .

ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நன்றாக முடிந்தவரை மூச்சை இழுத்து விட வேண்டும் .

மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் போகும் . இருமுவதால் ரத்த ஓட்டம் உயிரோடு இருக்கும் .

அப்படியே விரைந்து மருத்துவரிடம் போனால் , அவர் நிச்சயம் காப்பாற்றி விடுவார் .

இதயங்கள் வாழ்க !

Tuesday, September 14, 2010

# ஈசல் பூச்சியாகும் தமிழ்ப் படங்கள்


தியாகராஜா பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் பற்றிக் கூறும்போது மூன்று தீபாவளிகளைக் கண்ட படம் என்று கூறுவார்கள் . அதாவது படம் வெளியான போது தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியிருக்கிறது அந்தப் படம்.

அதன் பின்னரும்கூட நூறுநாள் , நூற்றி ஐம்பது நாள் , வெள்ளிவிழா , பொன்விழா கண்ட படங்கள்தான் தமிழ் சினிமாவில் எத்தனை எத்தனை !

ஒரு நிலையில் இனி நூறு நாள் ஒரு படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை என்ற நிலை வந்தபோது, படம் வெளியாகும்போதே அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு , மக்கள் காத்திருக்கத் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கி , படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வடிந்து விடுவதற்குள் குறுகிய காலத்திலேயே அவர்களைப் படம் பார்க்க வைத்து, லாபம் சம்பாதிக்கிற வழக்கம் வந்தது .

ஆனால் இன்று ?

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை வெள்ளிக் கிழமை நடிகர் என்று ஒரு காலத்தில் சொல்வார்கள் . காரணம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவர் நடித்த படம் ஒன்று வெளியாகிக் கொண்டிருக்கும் . குறைவான பட்ஜெட்டில் தயாராகும் அவருடைய படங்கள் பெரும்பாலும் லாபம் கொடுத்தன. அவரது படங்களால் நஷ்டத்தை சந்தித்து ஒட்டாண்டியான தயாரிப்பாளர் என்று யாரும் இல்லை .

இன்று தமிழ் சினிமாவின் நிலை என்ன?

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் படங்கள் வெளியாகின்றன . வெள்ளிக்கிழமை புதுப் படம் என்ற அந்தஸ்தோடு களம் இறங்கி , இன்னும் சினிமாவை மட்டுமே முக்கியப் பொழுது போக்காக கொண்டிருக்கும் ரசிகர்காளால் சனிக்கிழமை கவனிக்கப்பட்டு , ஏதாவது ஒரு படம் பாப்போம் என்ற எண்ணத்தோடு ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்க வரும் ரசிகர்களை அடைந்து , அவர்களை ஏமாற்றி உதடு பிதுக்க வைத்து, திங்கள் கிழமை காலைக் காட்சியில் காற்று வாங்க ஆரம்பித்து தன் உயிர்க் காற்றை முடித்துக் கொண்டு விடுகின்றன இன்றைய பல தமிழ்ப் படங்கள் .

ஆம் !

ஈசல் பூச்சிகளின் வாழ்க்கை ஒரு நாள் . இந்த ஈசல் திரைப் படங்களின் வாழ்க்கை மூன்று நாட்கள் . அவ்வளவுதான் வித்தியாசம் .

இந்த வருடம் ஜனவரி முதல் முடிந்த செப்டம்பர் மாதம் வரை தமிழில் சுமார் அறுபது படங்கள் வெளியாகி இருக்கின்றன . இதில் ஏழு படங்கள் மட்டுமே லாபம் கண்டவை . இந்த வரிசையில் ஏழாவதாக வந்த படம் களவாணி .

தமிழ் சினிமாவுக்கு என்ன ஆச்சு? கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது

ஒரு காலத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள் .

தயாரிப்பாளர் எனறால் யார் ? பணம் போடுபவர் என்பீர்கள் . இதுவே தப்பு . பணம் போடுவதால் மட்டுமே ஒருவர் தயாரிபாளர் ஆகி விடலாம் என்ற நிலை வந்ததுதான் தமிழ் சினிமாவின் முதல் சாபக் கேடு .

அன்றைய தயாரிப்பாளர்களுக்கு சினிமா குறித்த சகல அறிவும் ஆற்றலும் இருந்தது . கதை அறிவு , படம் இயக்கும் ஆற்றல் எல்லாம் உண்டு . ஏ வி மெய்யப்பன் , மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் , எஸ் எஸ் வாசன் , எல் வி பிரசாத் , போன்றவர்கள் பல வெற்றிப் படங்களை இயக்கி தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குனராக நிரூபித்து விட்டு , ஒரு நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் தயாரிப்பு பணிகளுக்கே நேரம் போதாத காரணத்தாலும் தயாரிப்பாளராக மட்டும் தங்களை சுருக்கிக் கொண்டவர்கள் . எனவே தங்கள் படத்தை உருவாக்கும் படைப்பாளிகள் பாதியில் தவறாகப் படத்தைக் கொண்டு போனாலும் படைப்பிலும் தலையிட்டு அதை சரிசெய்யும் திறமை அன்றைய தயாரிப்பாளர்களுக்கு இருந்தது .

முதலில் சரியான கதையை முடிவு செய்யும் ஆற்றல் , அடுத்து பொருத்தமான இயக்குனர் , பின்னர் சரியான நடிகர் நடிகைகள் , மற்ற கலை நுட்ப தொழில் நுட்ப கலைஞர்கள் என்று திட்டமிட்டு படம் எடுத்து அவர்கள் வென்றார்கள் . ஒரு வேளை சில படங்கள் தோற்றாலும் பெரிதாக கையைக் கடிக்காமல் பார்த்துக் கொண்டார்கள்

ஒரு நிலையில் தயாரிப்பாளர் என்று யாரும் இல்லாமல் போனார்கள் . தயாரிப்பாளர் என்ற பெயரில் திட்டம் உருவாக்குவோர் (ஆங்கிலத்தில் புரபோசல் மேக்கர் என்பார்கள் ) வந்தார்கள் . இவர்கள் எப்படியாவது ஒரு பிரபல நடிகர் அல்லது இயக்குனரின் கால்ஷீட்டைப் பெறுவார்கள். பின்னர் அந்த பிரபல நடிகரின் விருப்பப்படிய எல்லாம் நடக்கும் . கதையாவது மண்ணாங்கட்டியாவது . ! இந்த இடத்தில்தான் தயாரிப்பாளர்கள் சுணங்கிப் போனார்கள் .

பொதுமக்களின் ரசனைக்காக அல்லாமல் ஒரு தனிப்பட்ட நடிகரின் விருப்பத்துக்காக வைக்கப் படும் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பாதகமானது .

அதன் பின்னர் தயாரிப்பாளர் என்பவர் பைனான்சியரின் கையாளாக மாறிப் போனார் . விநியோகஸ்தர் சொன்ன படியெல்லாம் ஆடி, கரைந்து போனார் .

இன்றைய பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பலர் எப்படிப் பட்டவர்கள் ? அவர்களுக்கு சினிமா பற்றிய புரிதலோ அறிவோ இல்லை . சரி இல்லாவிட்டால் பரவாயில்லை . பிறக்கும்போதே யாரும் சினிமா அறிவோடு பிறப்பதில்லை .

ஆனால் படம் தயாரிக்க என்று முடிவு செய்த உடன் , அனுபவப் பட்ட தயாரிப்பாளர் சினிமா பிரமுகர்களிடம் இருந்து அதை முறைப் படிக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வமோ .. குறைந்த பட்சம் நல்ல ஆலோசனை பெறவேண்டும் என்ற எண்ணமோ கூட அவர்களுக்கு . இல்லை

இப்போது படமெடுக்க வரும் பலருக்கு சினிமா நிரந்தரத் தொழிலே அல்ல . அவர்கள் வேறு ஏதாவது ஒரு தொழிலில் சம்பாதிக்கிறார்கள் . அவர்களுக்கு இருக்கும் சில பல அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அங்கு இருக்கும் வாய்ப்புகளை விட சினிமாவில் அது எளிது .என்று எண்ணுகிறார்கள் எனவே அவர்கள் படம் எடுக்க நினைக்கும்போதே படம் ஓட வேண்டும் என்பதை விட விரும்பிய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர் .

அவர்களுக்கு கதை என்று ஏதாவது ஒன்று வேண்டும் . இயக்குனர் என்று யாராவது ஒருவர் வேண்டும் . மற்றபடி ஆசைகள் நிறைவேறுவதே குறி .

அன்றைய தயாரிப்பாளர்கள் தான் கோடீஸ்வரராக இருந்தாலும் தன் படத்தில் பணியாற்ற வருபவன் ஓட்டை சைக்கிளில் வந்தாலும் திறமைகளுக்காக அவர்களை மதித்தார்கள் . முக்கியத்துவம் கொடுத்தார்கள் . ஏனெனில் அந்தத் தயாரிப்பாளர்களும் படைப்பாளியாக ஜெயித்துக் காட்டியவர்கள்தானே . எனவே அவர்களிடம் படைப்பாளிகளும் தன்னம்பிக்கையோடு பணியாற்ற முடிந்தது . படைப்பு மிளிர்ந்தது . வெற்றி கிடைத்தது .

ஆனால் இன்று படமெடுக்க வருபவர்கள் பலருக்கு படைப்பாளிகள் மீது மரியாதை இல்லை . நிஜ படைப்பாளிகளை மதிக்க வேண்டும் என்ற அவசியமும் அவர்களுக்கு இல்லை . நல்ல படைப்பாளிகள் அவர்களை நெருங்க முடிவதில்லை . ஒரு அறிமுக இயக்குனர் கதை சொல்ல வாய்ப்பு கேட்கும்போதே அவர்களை மேலும் கீழும் அலட்சியமாக பார்த்தால் அவன் எப்படி தன்னம்பிக்கையோடு கதை சொல்வான் ?

உலகின் சிறந்த படங்களைத் தரும் பல நாடுகளில் கதை திரைக் கதை ஆசிரியர்கள் ஒரு கல்லூரி பேராசிரியர் போல கம்பீரமாக கதையை விவரிக்க , இயக்குனரும் தயாரிப்பாளரும் மற்ற கலை நுட்ப மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மாணவாகள் போல அமர்ந்து கதை கேட்பது உண்டு. அங்கு உள்ள தயாரிப்பாளர்களும் பணம்தான் போடுகின்றனர் . அவர்கள் மட்டும் வெறும் காகிதத்தையா போடுகின்றனர்?

ஆனால் இங்கே பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்ல வரும் புது இயக்குனர் தன் முன்னால் நிமிர்ந்து உட்காருவதே தவறான செயலாகப் படுகிறது .

எனவே நிஜமான திறமைசாலிகள் ஒதுங்கி நின்று விட சம்மந்தப் பட்டவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் உதவத் தயாராக இருப்பவர்கள் படைப்பாளிகளாக நுழைந்து விடுகிறார்கள் . 'தயாரிப்பாளர் என்ற தனி மனிதனை எப்படியாவது திருப்திப் படுத்துவது முக்கியமல்ல ; ஒரு சமூகத்தின் கலை ரசனையை கட்டி உறவாடுகிற படைப்பே வெற்றி பெறும்' என்ற உண்மை பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை .

படம் என்ற பெயரில் எதையோ ஓட்டி வைக்க , அந்தப் படம் முடிந்ததும் அவிழ்த்து விட்ட நெல்லிகாய் மூட்டையாக அனைவரும் சிதற , வெள்ளிக் கிழமை வெளியே போன படப் பெட்டி திங்கள் கிழமை சோகமாக திரும்ப வருகிறது .

இப்படிப் பட்டவர்கள் இயக்குனர் பதவியை குறுகிய காலத்தில் அடைந்து எப்படியோ கொஞ்சம் காசும் பார்த்து விடுவதால் முறைப்படி இயக்குநராகி முன்னேற நினைக்கும் இளைஞர்களும் பொறுமைஇழந்து அவசரப் படுகிறார்கள் .

திரைப்பட இயக்கம் என்பது ஒரு வித் கலையறிவு . ஒரு இயக்குனரிடம் உதவியாளராக இருப்பதால் மட்டும் அது வந்து விடுவதில்லை . ஆனால் எப்படிப் பட்ட கதை திரைக்கதைகளையும் கையாளும் அறிவு , படப்பிடிப்பு தளத்தில் பதறாத பக்குவம் , நடிகர் நடிகைகளை வியந்து பிரம்மித்து நின்றுவிடாத தெளிவு இவையெல்லாம் வர குறைந்தது மூன்று படங்களிலாவது முழுமையாக பணியாற்றுவது அவசியம் .

ஆனால் இப்போது பலர் ஒரு படத்திலேயே அதுவும் அரைகுறையாக வேலை பார்தது விட்டு கம்பியூட்டரில் சில டிசைன்களை செய்து கொண்டு கதை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள் .

ஒரு கேமரா மேனோ எடிட்டரோ இயக்குனராவது பரவாயில்லை . சினிமாவில் ஏதாவது சின்ன சின்ன வேலை பார்த்த்வர்கள் கூட அதையும் அனுபவமாக சொல்லி இயக்குனர் ஆகும் கோதாவில் கலந்து விடுகிறார்கள் .

விளைவாக , நல்ல திறமைசாலிகள் கூட அதிவேக பயணத்தில் இறங்குகிறார்கள் . டைரக்ஷன் என்பது பேப்பரில் இருப்பதை இதயங்களில் இறக்குவது என்ற அக்கறையோ தெளிவோ இல்லாமல் சும்மா ஸ்டார்ட் கட் சொல்வது , எழுத்திய காட்சிகளை சும்மா கோர்த்து விடுவதுதான் என்று படம் எடுக்கின்றனர் . எனவே அந்தப் படங்கள் எல்லாம் உதிரிக் காட்சிகளிண் குவியலாக இருக்கின்றனவே ஒழிய ஒரு முழுமையான திரை அனுபவமாக மாறி மக்களின் ரசனையை ஈர்ப்பதில்லை .

இன்னொன்றும் கவனிக்க முடிகிறது .

முன்பெல்லாம் தமிழில் வந்த --- நாடகத்தனமான செயற்கையான படங்கள் என்று இப்போது நாம் கருத்துக் கூறும் ----படங்களில் கூட , படத்தின் இடைவேளைக்குப் பின்பு வரும் இரண்டாம் பகுதியை மக்கள் விரும்புகிற , ரசிக்கிற , பிரம்மிக்கிற ஏதோ ஒரு வகையில் உருவாக்கி படத்துக்கு வெற்றி தேடித் தருவதில் அன்றைய இயக்குனர்கள் கில்லாடிகளாக இருந்தனர் .

ஆனால் இப்போது ?

பெரும்பாலான இயக்குனர்கள் அவர்கள் உருவாக்கும் படத்தின் இரண்டாவது பாகத்தை சரியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் . இரண்டாம் பாகத்திடம் சிக்கி அவர்களும் சீரழிந்து படம் பார்க்க வருபவர்களையும் குதறி விடுகிறார்கள் . காரணம் இவர்களிடம் கற்பனை திறன் உண்டு . ஆனால் தொழில் நுட்ப ரீதியாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் அவசரப் பட்டு இயக்குனர் ஆகிவிடுவதால் வரும் ஆபத்து இது . இப்போதைய பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் 'சினிமா அறிவு'க்கு இதை வேடிக்கை பார்ப்பதைதவிர, அவர்களால் பாவம் என்ன செய்ய முடியும் ?.

அதனால்தான் திரைக்கு வந்து சில 'நொடி'களே ஆன படங்கள் கூட தொலைக்காட்சிகளுக்கு வந்து விடுகின்றன .

இது இப்படி இருக்க , அதிகார , பண , படை பலம் கொண்ட சிலர் தமிழ் சினிமாவில் நுழைந்து தொழிலை ஆக்கிரமித்து , திரையரங்குகளையும் ஆக்கிரமித்து விட்டனர் . தாங்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்களுக்காக மொத்தமாக திரையரங்குகளை தங்களுக்கென முடகிக் கொள்கின்றனர் . வித்தியாசமான சில படங்கள் எடுத்தால் கூட மக்களிடம் நேரடியாக போக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது . . இந்த நபர்களிடம் போய் , தான் எடுத்த படத்தை கொடுத்து "எப்படியாவது ரிலீஸ் செய்ய வைத்து நீங்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள் " என்று கெஞ்சிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு . .

இதனால் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் பெட்டியில் தூங்கி , கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு வட்டி ஏறி , பெட்டிக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கும் படங்கள் பல .

இது போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வரும்போது எல்லா தியேட்டர்களையும் அவர்கள் கைக்குப் போய்விடும் என்பதால் அதற்கு முன்பே கும்பல் கும்பலாக படங்களை வெளியிட வேண்டிய நிலைமை சிறிய தயாரிப்பாளர்களுக்கு ஏற்பச்டுகிறது .

ஓட்டப் பந்தயம் வைத்தால் மைதானத்தில் வைக்கவேண்டும் . தி நகர் ரங்கநாதன் தெரு ஜனத்திரளுக்கு நடுவில் ஓட்டப் பந்தயம் வைத்தால் ? அந்தக் கதையாய் கும்பல் கும்பலாக ரிலீஸ் ஆகும்போது , ஓகே ரக படங்களும் காணாமல் போய் விடுகின்றன

'என்ன இது .. இப்படி ஒரு அபத்தமான கட்டுரை . !

படம் ஓடாததற்கு இவைகளா காரணம் ? அன்று மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை . இன்று எத்தனையோ உண்டு , பெருகும் விலைவாசி . திருட்டு வீடியோ , ஆதிக்கம் . தொலைக்காட்சியில் மூழ்கும் மக்கள் இவை தானே திரைப்படங்கள் ஓடாததற்கு காரணம் . இந்தக் கட்டுரையில் என்னென்ன்னவோ சொல்கிறார்களே.....'

----என்று நினைப்பது மடமை .

இவைகளும் படங்கள் ஓடாததற்கு காரணம்தான் , மறுக்க வில்லை . ஆனால் நமக்கு முன்பே இவைகளை சந்தித்த ஹாலிவுட் பட உலகம் எப்படி சிக்கலில் இருந்து மீண்டது ?

உலகைக் கலக்கிய நேற்றைய ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கலக்கியிருக்கும் எக்ஸ்பெண்டபிள் போன்ற படங்கள் இங்கே ஏன் சாத்தியமில்லை ? அவர்களுக்கு எல்லாம் இல்லாமல் இங்கே இருப்பவர்களுக்கு மட்டும் தலையில் எந்தக் கொம்பு முளைத்திருக்கிறது ?

தமிழ் சினிமா ஏன் நிஜமான படைப்பாளிகளின் கையில் இருந்து வேகமாக நழுவுகிறது ?

இன்றைய கூவம் எப்படி இருக்கிறது ? இப்போது இதை சுத்தப் படுத்த பல நூறு கோடிகள் வேண்டுமென்று கூறப் படுகிறது . ஆனால் இதே கூவத்தில் ஒரு நாள் சுகமான படகுப் படகுப் போக்குவரத்து நடந்தது . எப்போது சாக்கடை கலக்க ஆரம்பித்ததோ அந்தக் காலத்திலேயே தடுத்து வேறு வழி செய்து தீர்வு கண்டிருந்தால் இன்று கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆகும் என்று திட்டம் போட்டு கனவு கண்டுகொண்டிருக்க தேவை இல்லை .

தமிழ் சினிமாவில் இப்போது தரம் அழித்தல் வேகமாகவே நடக்கிறது . கூவத்திலாவது இப்போது சாக்கடை ஓடுகிறது .

ஆனால் திரையுலக நிலைமை இப்படியே போனால் தமிழ் சினிமா இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகலாம் .

தமிழ் படங்கள் எனும் ஈசல் பூச்சிகளின் ஆயுள் இன்னும் குறையலாம்

Tuesday, September 7, 2010

#சிந்து சமவெளியா ? அநாகரிகச் சிகரமா ?


தணிக்கைத் துறை என்ன புல் பிடுங்கிக் கொண்டு இருக்கிறது ...... எவ்வளவு துட்டு வாங்கிக் கொண்டு இந்தப் படத்தை அனுமதித்தார்கள் என்று , தயக்கமே இல்லாமல் சந்தேகப் படவைத்த படம் இது .

முடிந்த வரை இந்தக் கதையை கண்ணியமாக சொல்ல முயல்கிறேன் . மீறி தவறு நடந்தால் ரசிகர்கள் மன்னிக்கவே வேண்டாம்..........படம் எடுத்தவர்களையும் அனுமதித்தவ்ர்களையும் !

ஒரு ராணுவ வீரர் . பதினேழு வருட திருமண வாழ்க்கையில் ஒரு மகன் பிறந்து கல்லூரி வரை போய்விட்டாலும் மொத்தமாக முப்பது நாளே மனைவியுடன் வாழ்ந்தவர் . ராணுவ பணியின் போதும் ஒழுக்கமாக இருந்தவராம் . ஒரு போரில் சிக்கி கால் பாதிக்கப் பட்ட நிலையில் தகுதி இழந்து வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு ஊர் வருகிறார் .

தாம்பத்திய வாழ்க்கையிய இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும் என்ற சூழலில் திடீர் என அவரது மனைவி பாம்பு கடித்து இறந்து விடுகிறார் .

ராணுவ வீரரின் ராணுவ சேவையைப் பாராட்டி அரசாங்கம் கடல்புரம் ஓரமாகஅவருக்கு தரும் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு வீடு கட்டி தோட்டம் போடுகிறார் . பெரிய வீடு . மகனுக்கு அவன் காதலித்தத பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறார் .

மகன் மேல் படிப்பு படிக்க வெளியூர் போகிறான் . யாருமில்லாத பெரிய வீட்டில் மாமனாரும் மருமகளும் மட்டும் (அதற்கான காரணங்கள் எல்லாம் நொண்டிச் சாக்கு !). ஒரு நிலையில் எதிர்பாராத விதமாக மாமனாரும் மருமகளும் ... கண்றாவி , (மருமகளை வற்புறுத்தி பலாத்காரப் படுத்தி ) தவறு செய்து விடுகிறார்கள் .

அதன் பின்னர் இருவரும் வருத்தப் படுகிறார்கள் . அதோடு முடிந்து தொலைக்கவில்லை கருமம் .!

மறுநாள் இரவு மருமகளே விரும்பிப் போய் மாமனாரிடம் .. சீச்சி !.

அதோடும் முடியவில்லை .

இருவரும் புது மணத் தமபதிகள் போல இளம் ஜோடிகள் போல வாழத் துவங்குகிறார்கள் . சீண்டல் , சிணுங்கல் , சரசம் ... எல்லா இழவும் !

வீடு வருகிறான் மகன் . நடப்பது அறிவுக்குப் புரிகிறது . ஆனாலும் நம் மனைவியும் தந்தையும் அப்படி இருக்கமாட்டார்கள் ; நாம்தான் தவறாக நினைக்கிறோம் என்று நம்புகிறான் . அது மட்டுமல்ல மனைவியை சந்தேகப் பட்டதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் முடிவெடுப்பது தெரிய வர , அதை அறிந்த மனைவி மனம் தாளாமல் தண்டவாளத்தில் படுத்து உடல் துண்டாகிப் போகிறாள் .

தவிர கணவனுக்கு எல்லா உண்மைகளையும் தெரிய வைத்து விட்டுப் போகிறாள் . "நானும் உன் அப்பாவும் உடம்புக்கு அடிமையாகி விட்டோம் "என்று நல்ல பிள்ளையாக விளக்கமும் கூறி வைக்கிறாள்

ஒரு நிலையில் நடுக்கடலில் குடி போதையில் மகன் தந்தையிடம் உண்மை கேட்க , குடிபோதையில், எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளும் தந்தை மனைவியையும் மனைவியாகிப் போன மருமகளையும் (அதாவது மகனின் மனைவி ) உடல் ரீதியாக ஒப்பிட்டு அருவருப்பாகப் பேசுகிறான் . தவிர "உன் மனைவி உனக்கு துரோகம் செய்துவிட்டு என்னுடன் சுகம் அனுபவித்த போது என் மனைவி அதாவது உன் அம்மா மட்டும் ஒழுக்கமாக வாழ்ந்திருப்பாள் என்பது என்ன நிச்சயம் ?"என்று ஒரு மானங்கெட்ட கேள்வி வேறு கேட்கிறார் (என்ன ஒரு சாக்கடைப் புழு சிந்தனை !)

கொந்தளிக்கும் மகன் படகில் ஓட்டை போட்டு அப்பாவை ஜலசமாதியாக்கி விடுகிறான் .

கடைசியில் 'சிந்து சமவெளி காலத்திலேயே நாகரீகம் கண்டவர்கள் நாம் . எனவே ஒழுக்கம் முக்கியம்' என்ற ரீதியில் சாத்தான் வேதம் ஓதும் கதையாக கருத்துக் கூறி படத்தை முடிக்கிறார்கள்

அடத் தூ!

பெரிய வீடு ...தனிமை .. சரிதான் ,, ஆனால் என்னவோ வீட்டில் வேறு இடமே இல்லாத மாதிரி மாமானார் புழங்கும் வழியில் ஆடை விலக அலங்கோலமாக படுத்து இருக்கிறாள் மருமகள் . போங்கடாங் ! நல்லா வருது வாயில .!

குருவிக் கூடு போன்ற சிறிய வீட்டில் அப்பா அம்மா அண்ணன் தம்பி அவர்தம் மனைவியார் , அக்காள் தங்கை அவர்தம் கணவன்மார் என்று எல்லா உறவுகளும் வருடக் கணக்காய் உறங்கினாலும், மனத்தால் கூட தவறாக நினைக்காமல் வாழும் குடும்பங்கள் இருக்கும் மண்ணில் இதெல்லாம் ஒரு சாக்கு . இவர்கள் முகத்தில் உமிழ்ந்தால் அது நம் எச்சிலுக்கு அவமானம் .

உடல் சுகத்தை தவிர்க்க , விபச்சாரி வீட்டுக்கு போகிறார் மாமனார் . ஆனால் அங்கு தனி அறையில் இருக்கும் விபச்சாரி இவருக்கு போதையில் மருமகள் மாதிரி தெரிய, அதனால் விபச்சாரியையே தொடாமல் வருவாராம் மாமனார் .

அவ்வளவு நல்ல அந்த கதாபாத்திர நாய் , நிஜ மருமகளை கெடுத்து , அவள் தானே தேடி வருவதையும் அனுமதித்து ஒரு நிலையில் மனைவியாகவே குடும்பம் நடத்துவது என்ன துடைப்பக் கட்டை நியாயம் ? கழட்டி அடி !

மாமனாரவது' குடி போதையில் கெடுத்தான்... உணர்வுக் கொந்தளிப்பில் கெடுத்தான் ' என்று மருந்துக்கு ஒரு அநியாய சமாதானமாவது சொல்ல முடியும் .

ஆனால் மறுநாள் மருமகளே மாமனாரை தேடிப் போவது எப்பேர்ப்பட்ட அருவருப்பு !

உடல் சுகத்துக்கு அடிமையகிவிட்டோம் என்பது என்ன நொண்டி சாக்கு ! உடல் சுகத்தை ரசிக்க வேண்டாம் என்று யார் சொன்னது . ? கணவன் என்ன செவ்வாய் கிரகத்துக்கா போய்விட்டான் ? பக்கத்தில் ஒரு டவுனில்தான் படித்துக் கொண்டிருக்கிறான் . தேவைப் படும்போது மனைவி கணவனைத் தேடிப் போவதில் என்ன சிரமம் இருக்க முடியும் ? அல்லது கணவனை வரச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அது ஒன்றும் தவறல்லவே

அங்கொன்றும் இங்கொன்றும் தவறுகள் நடக்கலாம் . ஆனால் அதை பல கோடி பணம் இசையமைத்து போட்டு நல்ல ஒளிப்பதிவோடு கலை இயக்கத்தோடு சினிமாஸ்கோப் திரையில் விலாவாரியாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இப்படி யோசித்துப் பாருங்கள்

வாழ்வில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் மகன் மனைவிக்காக பணம் சம்பாதிக்க ராணுவத்தில் உழைத்தான் ஒரு கணவன் . வாழ்வில் பின் பகுதியையாவது மனைவியுடன் பக்குவப் பட்ட பாலியல் உறவைச் சுகித்து வாழ ஆசைப் பட்டு வந்தால் எதிர்பாராவிதமாக மனைவி மரிக்கிறாள் .

மகனுக்கு திருமணம் . மருமகள் வருகிறாள் . அவளோடு தனிமையில் இருப்பு . ஏதோ ஒரு அசந்தர்ப்ப சூழலில் (அதுதான் , இருக்கவே இருக்கிறதே , குடி போதை எனும் சாக்கு !) மருமகளை தவறாக நினைக்கும் கேவல சலனம் ஏற்படுகிறது .

மருமகளும் அதை உணர்ந்து பதற , அருவருப்பான் சூழல் . அடுத்த நொடியே மாமனார் மனம் மாறி தவறை உணர்ந்தாச்சு .

ஆனால் இந்த நிலையில் எப்படியோ மகனுக்கு எதிர்பாராத விதமாக சந்தேகம் ஏற்பட ,

தன்னுடைய ஒரு நொடி மன சலனத்தால் மகன் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்கி , மகனையும் மருமகளையும் நல்லபடியாக வாழ வைக்க , அந்த ராணுவ வீரன் தன் உயிரையே கொடுத்து சாதித்தான்

---என்ற ரீதியில் இவர்கள் கதை சொல்லி இருந்தால் இந்தப் படத்தின் படைப்பாளிகளை கோவில் கட்டிக் கொண்டாடி இருக்கலாம் .

தவிர கண்ணியமான உறவுகளில் சலனத்துக்கு ஆளாகிறவர்களுக்கும் அது ஒரு பாடமாக இருந்திருக்கும் .

அதை விட்டு விட்டு எங்கோ நடக்கும் ஒரு சில தவறுகளை சாக்காக வைத்து உண்மையைத்தானே சொல்கிறேன் என்ற பெயரில் இப்படி ஒரு கேவலமான படம் எடுத்ததன் மூலம் ,

வருடக் கணக்கில் கணவனைப் பிரிந்த நிலையிலும் உடல் இச்சையை அடக்கி ஒரே வீட்டில் மாமனாருடன் மற்ற உறவுகளுடன் , பத்தரை மாற்றுத் தங்கமாய் வாழும் பெண்களை மட்டுமின்றி , குடும்ப வாழ்வின் கண்ணியம் மிக்க உயர்ந்த உறவுகளையும் அசிங்கப் படுத்தி யுள்ளது இந்தப் படம் .

இவர்களை விட ரகசியப் பயன்பாட்டிற்காக நீலப் படம் எடுப்பவர்கள் எவ்வளவோ மேல் . ஆனால் அது குற்றம் . இப்படி ஒரு படத்தை எடுத்து அதனை தணிக்கைத் துறையும் அனுமதித்து படம் ஓட்டினால் அது குற்றமில்லை .

எதிரிகளாலும் துரோகிகளாலும் நசுக்கப் பட்ட ஈழ விடுதலைக் குரலை ஆதரித்து ஒரு வார்த்தை பேசினால் கூட உடனே கததரிக்கோல் தூக்கிக் கொண்டு வரும் சென்சார் போர்டு , இந்தப் படத்தை அனுமதித்தது எப்படி?

ஒருவேளை...................!?