Tuesday, September 7, 2010

#சிந்து சமவெளியா ? அநாகரிகச் சிகரமா ?






தணிக்கைத் துறை என்ன புல் பிடுங்கிக் கொண்டு இருக்கிறது ...... எவ்வளவு துட்டு வாங்கிக் கொண்டு இந்தப் படத்தை அனுமதித்தார்கள் என்று , தயக்கமே இல்லாமல் சந்தேகப் படவைத்த படம் இது .

முடிந்த வரை இந்தக் கதையை கண்ணியமாக சொல்ல முயல்கிறேன் . மீறி தவறு நடந்தால் ரசிகர்கள் மன்னிக்கவே வேண்டாம்..........படம் எடுத்தவர்களையும் அனுமதித்தவ்ர்களையும் !

ஒரு ராணுவ வீரர் . பதினேழு வருட திருமண வாழ்க்கையில் ஒரு மகன் பிறந்து கல்லூரி வரை போய்விட்டாலும் மொத்தமாக முப்பது நாளே மனைவியுடன் வாழ்ந்தவர் . ராணுவ பணியின் போதும் ஒழுக்கமாக இருந்தவராம் . ஒரு போரில் சிக்கி கால் பாதிக்கப் பட்ட நிலையில் தகுதி இழந்து வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு ஊர் வருகிறார் .

தாம்பத்திய வாழ்க்கையிய இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும் என்ற சூழலில் திடீர் என அவரது மனைவி பாம்பு கடித்து இறந்து விடுகிறார் .

ராணுவ வீரரின் ராணுவ சேவையைப் பாராட்டி அரசாங்கம் கடல்புரம் ஓரமாகஅவருக்கு தரும் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு வீடு கட்டி தோட்டம் போடுகிறார் . பெரிய வீடு . மகனுக்கு அவன் காதலித்தத பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறார் .

மகன் மேல் படிப்பு படிக்க வெளியூர் போகிறான் . யாருமில்லாத பெரிய வீட்டில் மாமனாரும் மருமகளும் மட்டும் (அதற்கான காரணங்கள் எல்லாம் நொண்டிச் சாக்கு !). ஒரு நிலையில் எதிர்பாராத விதமாக மாமனாரும் மருமகளும் ... கண்றாவி , (மருமகளை வற்புறுத்தி பலாத்காரப் படுத்தி ) தவறு செய்து விடுகிறார்கள் .

அதன் பின்னர் இருவரும் வருத்தப் படுகிறார்கள் . அதோடு முடிந்து தொலைக்கவில்லை கருமம் .!

மறுநாள் இரவு மருமகளே விரும்பிப் போய் மாமனாரிடம் .. சீச்சி !.

அதோடும் முடியவில்லை .

இருவரும் புது மணத் தமபதிகள் போல இளம் ஜோடிகள் போல வாழத் துவங்குகிறார்கள் . சீண்டல் , சிணுங்கல் , சரசம் ... எல்லா இழவும் !

வீடு வருகிறான் மகன் . நடப்பது அறிவுக்குப் புரிகிறது . ஆனாலும் நம் மனைவியும் தந்தையும் அப்படி இருக்கமாட்டார்கள் ; நாம்தான் தவறாக நினைக்கிறோம் என்று நம்புகிறான் . அது மட்டுமல்ல மனைவியை சந்தேகப் பட்டதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் முடிவெடுப்பது தெரிய வர , அதை அறிந்த மனைவி மனம் தாளாமல் தண்டவாளத்தில் படுத்து உடல் துண்டாகிப் போகிறாள் .

தவிர கணவனுக்கு எல்லா உண்மைகளையும் தெரிய வைத்து விட்டுப் போகிறாள் . "நானும் உன் அப்பாவும் உடம்புக்கு அடிமையாகி விட்டோம் "என்று நல்ல பிள்ளையாக விளக்கமும் கூறி வைக்கிறாள்

ஒரு நிலையில் நடுக்கடலில் குடி போதையில் மகன் தந்தையிடம் உண்மை கேட்க , குடிபோதையில், எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளும் தந்தை மனைவியையும் மனைவியாகிப் போன மருமகளையும் (அதாவது மகனின் மனைவி ) உடல் ரீதியாக ஒப்பிட்டு அருவருப்பாகப் பேசுகிறான் . தவிர "உன் மனைவி உனக்கு துரோகம் செய்துவிட்டு என்னுடன் சுகம் அனுபவித்த போது என் மனைவி அதாவது உன் அம்மா மட்டும் ஒழுக்கமாக வாழ்ந்திருப்பாள் என்பது என்ன நிச்சயம் ?"என்று ஒரு மானங்கெட்ட கேள்வி வேறு கேட்கிறார் (என்ன ஒரு சாக்கடைப் புழு சிந்தனை !)

கொந்தளிக்கும் மகன் படகில் ஓட்டை போட்டு அப்பாவை ஜலசமாதியாக்கி விடுகிறான் .

கடைசியில் 'சிந்து சமவெளி காலத்திலேயே நாகரீகம் கண்டவர்கள் நாம் . எனவே ஒழுக்கம் முக்கியம்' என்ற ரீதியில் சாத்தான் வேதம் ஓதும் கதையாக கருத்துக் கூறி படத்தை முடிக்கிறார்கள்

அடத் தூ!

பெரிய வீடு ...தனிமை .. சரிதான் ,, ஆனால் என்னவோ வீட்டில் வேறு இடமே இல்லாத மாதிரி மாமானார் புழங்கும் வழியில் ஆடை விலக அலங்கோலமாக படுத்து இருக்கிறாள் மருமகள் . போங்கடாங் ! நல்லா வருது வாயில .!

குருவிக் கூடு போன்ற சிறிய வீட்டில் அப்பா அம்மா அண்ணன் தம்பி அவர்தம் மனைவியார் , அக்காள் தங்கை அவர்தம் கணவன்மார் என்று எல்லா உறவுகளும் வருடக் கணக்காய் உறங்கினாலும், மனத்தால் கூட தவறாக நினைக்காமல் வாழும் குடும்பங்கள் இருக்கும் மண்ணில் இதெல்லாம் ஒரு சாக்கு . இவர்கள் முகத்தில் உமிழ்ந்தால் அது நம் எச்சிலுக்கு அவமானம் .

உடல் சுகத்தை தவிர்க்க , விபச்சாரி வீட்டுக்கு போகிறார் மாமனார் . ஆனால் அங்கு தனி அறையில் இருக்கும் விபச்சாரி இவருக்கு போதையில் மருமகள் மாதிரி தெரிய, அதனால் விபச்சாரியையே தொடாமல் வருவாராம் மாமனார் .

அவ்வளவு நல்ல அந்த கதாபாத்திர நாய் , நிஜ மருமகளை கெடுத்து , அவள் தானே தேடி வருவதையும் அனுமதித்து ஒரு நிலையில் மனைவியாகவே குடும்பம் நடத்துவது என்ன துடைப்பக் கட்டை நியாயம் ? கழட்டி அடி !

மாமனாரவது' குடி போதையில் கெடுத்தான்... உணர்வுக் கொந்தளிப்பில் கெடுத்தான் ' என்று மருந்துக்கு ஒரு அநியாய சமாதானமாவது சொல்ல முடியும் .

ஆனால் மறுநாள் மருமகளே மாமனாரை தேடிப் போவது எப்பேர்ப்பட்ட அருவருப்பு !

உடல் சுகத்துக்கு அடிமையகிவிட்டோம் என்பது என்ன நொண்டி சாக்கு ! உடல் சுகத்தை ரசிக்க வேண்டாம் என்று யார் சொன்னது . ? கணவன் என்ன செவ்வாய் கிரகத்துக்கா போய்விட்டான் ? பக்கத்தில் ஒரு டவுனில்தான் படித்துக் கொண்டிருக்கிறான் . தேவைப் படும்போது மனைவி கணவனைத் தேடிப் போவதில் என்ன சிரமம் இருக்க முடியும் ? அல்லது கணவனை வரச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அது ஒன்றும் தவறல்லவே

அங்கொன்றும் இங்கொன்றும் தவறுகள் நடக்கலாம் . ஆனால் அதை பல கோடி பணம் இசையமைத்து போட்டு நல்ல ஒளிப்பதிவோடு கலை இயக்கத்தோடு சினிமாஸ்கோப் திரையில் விலாவாரியாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இப்படி யோசித்துப் பாருங்கள்

வாழ்வில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் மகன் மனைவிக்காக பணம் சம்பாதிக்க ராணுவத்தில் உழைத்தான் ஒரு கணவன் . வாழ்வில் பின் பகுதியையாவது மனைவியுடன் பக்குவப் பட்ட பாலியல் உறவைச் சுகித்து வாழ ஆசைப் பட்டு வந்தால் எதிர்பாராவிதமாக மனைவி மரிக்கிறாள் .

மகனுக்கு திருமணம் . மருமகள் வருகிறாள் . அவளோடு தனிமையில் இருப்பு . ஏதோ ஒரு அசந்தர்ப்ப சூழலில் (அதுதான் , இருக்கவே இருக்கிறதே , குடி போதை எனும் சாக்கு !) மருமகளை தவறாக நினைக்கும் கேவல சலனம் ஏற்படுகிறது .

மருமகளும் அதை உணர்ந்து பதற , அருவருப்பான் சூழல் . அடுத்த நொடியே மாமனார் மனம் மாறி தவறை உணர்ந்தாச்சு .

ஆனால் இந்த நிலையில் எப்படியோ மகனுக்கு எதிர்பாராத விதமாக சந்தேகம் ஏற்பட ,

தன்னுடைய ஒரு நொடி மன சலனத்தால் மகன் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்கி , மகனையும் மருமகளையும் நல்லபடியாக வாழ வைக்க , அந்த ராணுவ வீரன் தன் உயிரையே கொடுத்து சாதித்தான்

---என்ற ரீதியில் இவர்கள் கதை சொல்லி இருந்தால் இந்தப் படத்தின் படைப்பாளிகளை கோவில் கட்டிக் கொண்டாடி இருக்கலாம் .

தவிர கண்ணியமான உறவுகளில் சலனத்துக்கு ஆளாகிறவர்களுக்கும் அது ஒரு பாடமாக இருந்திருக்கும் .

அதை விட்டு விட்டு எங்கோ நடக்கும் ஒரு சில தவறுகளை சாக்காக வைத்து உண்மையைத்தானே சொல்கிறேன் என்ற பெயரில் இப்படி ஒரு கேவலமான படம் எடுத்ததன் மூலம் ,

வருடக் கணக்கில் கணவனைப் பிரிந்த நிலையிலும் உடல் இச்சையை அடக்கி ஒரே வீட்டில் மாமனாருடன் மற்ற உறவுகளுடன் , பத்தரை மாற்றுத் தங்கமாய் வாழும் பெண்களை மட்டுமின்றி , குடும்ப வாழ்வின் கண்ணியம் மிக்க உயர்ந்த உறவுகளையும் அசிங்கப் படுத்தி யுள்ளது இந்தப் படம் .

இவர்களை விட ரகசியப் பயன்பாட்டிற்காக நீலப் படம் எடுப்பவர்கள் எவ்வளவோ மேல் . ஆனால் அது குற்றம் . இப்படி ஒரு படத்தை எடுத்து அதனை தணிக்கைத் துறையும் அனுமதித்து படம் ஓட்டினால் அது குற்றமில்லை .

எதிரிகளாலும் துரோகிகளாலும் நசுக்கப் பட்ட ஈழ விடுதலைக் குரலை ஆதரித்து ஒரு வார்த்தை பேசினால் கூட உடனே கததரிக்கோல் தூக்கிக் கொண்டு வரும் சென்சார் போர்டு , இந்தப் படத்தை அனுமதித்தது எப்படி?

ஒருவேளை...................!?

2 comments:

chandru2110 said...

யாராச்சும் இதை சொல்லமட்டாங்கலோன்னு எனக்குள் பெரிய ஆதங்கத்தை போக்கிட்டீங்க. இவனங்களை திட்ட கெட்ட வார்த்தையே கிடைக்கமாட்டீங்குது.

சு.செந்தில் குமரன் said...

உண்மை . நன்றி சந்த்ரு

Post a Comment