Sunday, April 1, 2012

மல்லிகை மகள் இதழுக்காக ராமராஜனுடன் ஒரு சந்திப்பு ....


அண்மையில் மல்லிகை மகள் இதழுக்காக ராமராஜனுடன் ஒரு சந்திப்பு ....
*******************************************

வாழ்க்கை என்பது ...
*************************** மனம் திறக்கும் (கி)ராமராஜன்
நடிகர் ராமராஜன் .....
தமிழ் சினிமாவில் வானத்தில் இருந்து குதித்ததாக கருதிக் கொண்ட பெரிய மனிதர்களையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, பாமரத்தனமும் மண் வாசனையும் கொண்ட ஓர் எளிய மனிதன்,வெள்ளித் திரையில் விஸ்வரூபம் எடுத்த வரலாற்றின் முகவரி ....

இயல்பான நடையுடை பாவனைகளால் சூப்பர் ஸ்டார்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவு வெற்றி அடைந்த அதிசயத்துக்கு சொந்தக்காரர் ,

நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஏற்றத்தை மட்டும் அல்ல.... அதே வேகத்தில் யோசிக்கக் கூட முடியாத சரிவுகளையும் சந்தித்த நவீன தியாகராஜ பாகவதர் .

ஆனாலும் ஒரு அட ....!

பதினொரு வருடங்களுக்கு பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடித்த மேதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அன்று அந்தக் காட்சி ! . இன்று மார்க்கெட்டில் உள்ள பல நடிகர்களுக்கு கூட காண முடியாத காட்சி அது . ஊர்ப்புறங்களில் இருந்து எல்லாம் வேனை எடுத்துக் கொண்டு கொடிகட்டிக் கொண்டு கரகாட்டக்காரன் போன்ற படங்களின் பாடல்களை உரத்து ஒலித்துக் கொண்டு சென்னை வந்து , விழா நடந்த அரங்கினை கலக்கிய மாறாத ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கு பார்க்க முடிந்தது .

ராமராஜனின் இன்றைய பொருளாதார சூழலில் காசு கொடுத்து அவர்களை திரட்டி இருக்க அவரால் முடியாது . அது தானாக வந்த ரசிகர் கூட்டம் என்பதால் எழுந்த ஆச்சர்யம் அது .

மேதை படமும் வெளியாகி விட்டது . அது ஒரு புறம் இருக்க ராமராஜனோடு பேசுவது இன்னும் கூட சுவையான விசயமாகவே இருக்கிறது .

நீங்கள் கிராமிய நாயகனாவே நடித்து பேர் வாங்கியது திட்டமிட்டதா ? அதுவாகவே அமைந்ததா?

நான் எந்த திட்டமும் இடவில்லை . சுமார் நாற்பது படங்களில் உதவி , இணை இயக்குனர் .. அப்புறம் ஐந்து படங்களின் இயக்குனர் என்று வாழ்க்கை போய்க்கொண்டு இருந்த போது , என்னை கதாநாயகனாக வைத்து படம் இயக்கலாம் என்று மறைந்த இயக்குனர் அழகப்பனுக்கு தோன்றியிருக்கிறது . கதை சொல்ல எஸ் என் ரவி என்பவரை அனுப்பி வைத்தார். மெரீனா கடற்கரையில் உட்கார்ந்துதான் கதை கேட்டேன் . அவர் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் முழு படத்தையும் சொல்லி முடித்த விதம் அற்புதம் . அது கிராமமா நகரமா என்று நான் பார்க்கவில்லை . அதில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது . அது ஒரு கிராமத்துக் கதை .அது நம்ம ஊரு நல்ல ஊரு என்ற பெயரில் படமாகி வெற்றி பெற்றது . அடுத்து கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் .அது பெரும் வெற்றி பெற்றது .அதுவும் கிராமியப் படம் .

அது மட்டும் இல்லாம , நம் நடிப்பில் என்ன தனித்தன்மை கொண்டு வரலாம் என்றுநான் யோசித்த போது புரட்சித் தலைவர் . நடிகர் திலகம் , ரஜினி சார , கமல் சார் இவர்களைப் போல எனக்கு பெரிதாக ஒன்றும் தனித் தன்மையாக அமையவில்லை . சரி ....ஊரில் நாம் இருந்த மாதிரி அதே குமரேசனின் (ராமராஜனின் இயற்பெயர் ) நடையுடை பாவனைகளையே நடிப்பில் காட்டலாம் என்று தீர்மானித்தேன் . அது கிராமியப் படங்களுக்குதானே செட் ஆகும் . அதனால் அப்படியே நான் கிராமத்து நாயகனாக ஆனேன் .
நான் நகர்ப் பின்னணியில் நடித்தது ரெண்டே படங்கள்தான் .

உங்கள் சொந்த ஊரான மேலூரில் ஒரு டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிப்பவராக வாழ்ந்த போது வாழ்க்கையில் என்ன ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டீர்கள்?

பெரிதாக ஒன்றும் இல்லை .ஆனால் சினிமா மீது ஆசை . தலைவரின் எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் சினிமா ஷூட்டிங் நடப்பதை காட்சியில் காட்டுவார்கள் . அதில் ட்ராலி தள்ளுபவர்களை எல்லாம் பார்க்கும் போது 'இது மாதிரி ஒரு வேலையை சினிமாவில் செய்து பிழைத்தால்கூட போதும்' என்று தோன்றியது . செத்துப் போன பின்னும் நம் முகம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் . அது போட்டோவாக மட்டும் இருக்க கூடாது .அவ்வளவுதான் சார் என் லட்சியம் . சினிமா கொட்டாயில் வேலை பார்த்தால் சினிமா பார்க்க காசு தரத் தேவை இல்லை . திரும்ப திரும்ப ஒரே படத்தை கூட பல தடவை பார்க்கலாம் . அதனால்தான் அந்த வேலை .

சென்னைக்கு கிளம்பிய முதல் அனுபவம் எப்படி இருந்தது ?
ஒரு நிலையில் மெட்ராஸ் கிளம்பும் ஆசை அதிகம் ஆனது . என்னால் தாங்க முடியவில்லை . சினிமாவில் நடிக்க சென்னை போகிறேன் எனறால் வீட்டில் விடமாட்டார்கள் . கொட்டகையில் வேலை பார்க்க அனுமதி பெற்றதே பெரிய விஷயம் .அப்போது என் சின்னம்மா மகன் கோபால் டெல்லியில் இருந்தார் . அவருடன் இருந்து வேலை பார்க்க டெல்லி போவதாக அனுமதி பெற்று , அவரோடு டெல்லி போய் மூணு மாசம் அங்கே இருந்தேன் . அவருக்கு மெல்ல என் ஆசையை புரிய வைத்து டெல்லியில் இருந்து சென்னை வந்தேன் .
முதன் முதலில் இயக்குனர் காரைக்குடி நாராயணன் , அடுத்து காஜா பின்னர் ராஜசேகர் பின்றோரிடம் பணியாற்றி பிறகு எங்கள் இயக்குனர் ராம நாராயணிடம் பணியில் சேர்ந்து பிறகு அவர் சொந்தப் படத்தையே இயக்கும் அளவுக்கு வந்தேன் . அப்புறம்தான் கதாநாயகன் ஆனேன் .

மிகுந்த உயரத்தில் வசதியாக இருக்கும் போது கூட ஒரு பத்திரிக்கை உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று கேட்டபோது பழைய சோறும் வெங்காயமும் என்று சொன்ன உங்கள் பதிலில் எந்த போலித்தனமும் இல்லை . எப்படி வந்தது எந்த எளிமை ?

சார் .....என்னால் பந்தா பண்ண முடியாது .எனக்கு அது தெரியாது . எனக்கு கடைசிவரை அது வரவில்லை . நான் விரும்பவும் இல்லை . எளிமையாக இருப்பது கஷ்டம் இல்லாமல் சுகமாக இருந்தது . அதுதான் எனக்கு முடியும் . இன்னிக்கும் கூட அதான் சார் .

நீங்கள் புகழின் உச்சத்தில் இருந்த போது பெரிய பெரிய பட நிறுவனங்கள் எல்லாம் உங்களை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க முன்வந்தபோது அதை மறுத்து பல படங்களை இழந்தீர்கள் . புதியவர்களை தயாரிப்பளார் ஆக்கி விட்டீர்கள் . விளைவாக உங்களுக்கு என்று ஒரு பின்புலம் இல்லாமல் போய்விட்டது .உங்கள் கருத்து தவறு என்று அன்று ரஜினிகாந்தே கூறியதாக கூட ஒரு தகவல் உண்டு . பெரிய நிறுவனங்களை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இப்படி வீழ்ந்திருக்க மாட்டீர்கள் அல்லவா ?

சார் .. என்ன தான் எண்ணைய தேச்சுகிட்டு மண்ணுல விடிய விடிய பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் .

அப்புறம் ,,,, அப்ப நான் அப்படி செய்ததுக்கு காரணம் உண்டு . பெரிய தயாரிப்பாளர்களிடம் பணம் முன்பே நிறைய இருக்கு .நாம இல்லாட்டியும் அவங்க கெட்டுப் போயிட மாட்டாங்க . அதுக்கு பதிலா , புதுசா தயாரிப்பளார் ஆக ஆசைப் படறவங்களை நாம கைதூக்கி விட்டா , நாலு புது தயாரிப்பாளர் வருவாங்க . சினிமா நல்லா இருக்கும் . இது ஒரு காரணம் .

ரெண்டாவது ..நான் படத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் சிகரெட் குடிக்கிறது தண்ணி அடிக்கறது போல நடிக்க கூடாதுன்னு தீர்மானமா இருந்தேன் . ஒரே ஒரு படத்துல மட்டும் ஆரம்பத்துல தண்ணி அடிக்கிற மாதிரி நடிச்சுட்டு நான் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும் . பெரிய தயாரிப்பாளர் இயக்குனர் படங்கள்ல நடிக்க போகும்போது அவங்க அப்படி நடிக்க சொன்னா மறுக்க முடியுமா? புரட்சித் தலைவருக்கு அந்த தைரியம் இருந்தது . நமக்கு அது இல்லை .
மணிரத்னம் சார் டைரக்ஷன்ல நானும் ஸ்ரீதேவியும் ஜோடியா நடிக்கற வாய்ப்பு கூட எனக்கு அப்ப வந்தது . ஏவி எம் மேனா திரையரங்க மேலாளர் என்கிட்ட அந்த படத்தை ஒத்துக்க சொன்னார் . மணிரத்னம் சார் குடிக்கிற மாதிரி ஒரு சீன் வச்சார்னா அவர்கிட்ட கிட்ட போய் குடிக்கிற மாதிரி நடிக்க முடியாது னு சொல்ல முடியுமா ? பெரு கெட்டுப் போயிடும் .அதான் மறுத்துட்டேன் .

நான் பண்ணினது சரியானு தெரியல . ஆனா தப்புன்னு எனக்கு இப்பவும் தோணல . என்ன பண்ணினாலும் நல்ல நேரம் இருந்தா நல்லது நடக்கும் . கெட்ட நேரம் வந்தா அதையும் அனுபவிச்சுதான் ஆகணும் .

எம் ஜிஆரின் முகத்தை திரையரங்கில் அண்ணாந்து பார்தது பரவசப் பட்ட வாழ்க்கை உங்கள் ஆரம்ப வாழ்க்கை . ஆனால் உங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ஒரு அமைச்சர் வீட்டு திருமணத்தை விட்டு விட்டு அவர் வந்தார் . அன்று உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது ?

(உணர்ச்சிவசப்படுகிறார் ) நெனைச்சுப் பாத்தாலே சிலிர்க்குது ... நளினியை நான் திருமணம் செய்தபோது எங்களுக்கு பல மிரட்டல்கள் வந்தன . உண்மையில் எங்களால் சமாளிக்க முடியவில்லை . தாலி கட்டியதும் நேராக எம்ஜிஆர் காலில் விழுந்து விட முடிவு செய்தேன் . அன்று அவர் ஓசூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் இருந்தார் . நாங்கள் கிளம்பிப் போவதற்குள் அவர் மீட்டிங்கை முடித்து விட்டுக் கிளம்பிவிட்டார் . நாங்களும் சென்னை வந்தோம் . ராமாவரம் தோட்டத்துக்கு போனோம் . அது ஒரு மாலை நேரம், சந்திக்க அனுமதி கிடைத்தது .

நான் திரையில் பார்த்தே சிலிர்த்த உருவத்தின் முன்னாள் நான் .! அருகில் அவரது துணைவியார் ஜானகி அம்மையார் . சமோசா டீ வரவழைத்துக் கொடுத்தார் தலைவர் சோபாவை விட்டு இறங்கி அவர் காலடியில் உட்கார்ந்து விட்டேன் . அவர் சொல்லியும் எழ மனம் வரவில்லை . அவரைப் பற்றி நான் மெய் சிலிர்த்து பேசியதை அன்போடு சிரித்தபடியே கேட்டார் . எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி கொடுத்தார் .

'நீங்கள் வருவதாக இருந்தால் ரிசப்ஷன் வைப்பேன்' என்றேன் .அவர் ஒரு தேதி கொடுத்தார் .சந்தோஷமாக வந்து ஏற்பாடுகள் செய்தோம்..ஆனால் அதே தேதியில் அன்றைய அமைச்சர் கே ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமணம இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது . வரமாட்டார் என்றே நினைத்தோம் .

திடீர் என வந்தார் . அசந்து போனேன். இதில் ஆச்சர்யம் என்னன்னா , முதல்வர் அமைச்சர் வீட்டு திருமணத்துக்குதான் வருவார்னு போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் அங்கதான் இருந்தது . ஆனா அவர் எளிமையா என் திருமண வரவேற்புக்கு வந்து ஒரு உறவினர் போல அங்கு இருந்ததை மறக்கவே முடியாது . (மவுனம்)

ஒரு கிராமியப் பின்னணியில் உறவுகளோடு பிறந்து வளர்ந்தவர் நீங்கள் . ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை படு தோல்வியில் முடிந்தது. உங்கள் மகள் திருமணம் கூட நீங்கள் இல்லாமலே நடந்தது . எப்படி சமாளித்தீர்கள் ? சமாளிக்கிறீர்கள் ?

ஒத்து போகல சார் . நானும் நளினியும் பிரியா வேண்டி வந்தது . குழந்தைகளும் அவங்களோடதான் இருக்கணும்னு கோர்ட் தீர்ப்பாயிருச்சு . ஒரு வேளை தீர்ப்பு எனக்கு சாதகமா வந்து 'உங்கள் குழந்தைகளை நீங்க அம்மாவிடம் அனுப்ப வேண்டியது இல்லை'ன்னு சொல்லி இருந்தா கூட , வாரம் ரெண்டு நாள் அவங்க வீட்டுக்கு நானே என் பிள்ளைகளை கண்டிப்பா அனுப்பி இருப்பேன் சார் . ஏன்னா, நம்ம ஈகோ அப்புறம் .ஆனா குழந்தைகளுக்கு அம்மாவும் வேணுமே ... (கண் கலங்குகிறார் ..) ஆனா அவங்க அனுப்பல ... எனக்கு தாங்கவே முடியல . பழகிக்கிட்டேன் . திடீர்னு மகள் அருணாவுக்கு கல்யாணம் முடிவு ஆனப்ப, ஒரு தடவை வந்தாங்க . நல்லாத்தான் எல்லாரும் பேசினாங்க . மறுபடியும் நான் பாக்க முயன்றப்ப முடியல . அப்புறம் வரவும் இல்ல . அதையும் தாங்கிக்கிட்டேன் .

என் வாழ்க்கையே சினிமாவுக்குன்னு ஆயிப் போச்சு .... டிக்கெட் கிழிச்ச காலத்துல இருந்து இன்னிவரைக்கும் அதான் . அது என்னை இன்னும் இயக்குது . அதனால தப்பிச்சுக் கிடக்குது என் தனி மனுஷ வாழ்க்கை .

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தது அரசியல் லாபத்துக்க்காகத்தானே ...?

சத்தியமா இல்ல சார். இன்னைய விசயங்களை விடுங்க .அத நம்ப மாட்டீங்க .. ஆனா... நான் இயக்கிய முதல் படம் மண்ணுக்கேத்த பொண்ணு .அன்னிக்கு அம்மாவும் அரசியல்ல இல்ல . நானும் பிழைப்புக்காக போராடுற ஒரு புதுமுக இயக்குனர்தான் . ஆனா .அன்னிக்கே படத்துல பல இடங்கள்ல தலைவரும் அம்மாவும் இருக்கற போஸ்டர்களைதான் பயன்படுத்தினேன் .அப்பவே என்னை பொறுத்தவரை தலைவரின் வாரிசு அம்மாதான் .

அவ்வளவு ஏன்.... தலைவர் மரணத்துக்கு பிறகு அதிமுக ரெண்டா ஒடஞ்ச போது, என்னை ஜானகி அம்மா அணிக்கு வரச் சொல்லி வற்புறுத்தினாங்க . ஆனா மறுத்துட்டேன் . அம்மா பின்னாடிதான் நின்னேன் .

என் மேல அவங்க காட்டின அன்பு கொஞ்சமா சார் . எனக்கு அருண் --அருணா ரெட்டைக் குழநதைகள் பிறந்தப்ப மருத்துவமனைக்கு வந்து ரெண்டு குழந்தைகளுக்கும் தங்க செயின் போட்டு வாழ்த்தினாங்க .நான் விபத்துல சிக்கி கைல காசும் இல்லாம உயிருக்கு போராடினப்ப , அவங்கதான் எல்லா செலவையும் பாத்து என்ன காப்பாத்தி விட்டாங்க .

கடந்த பதினேழாம் தேதி தலைவரோட பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக தலைமைக் கழகம் போயிருந்தேன் .. என்னை பார்த்த உடனே 'உடம்பு நல்லா இருக்கா'ன்னுதான் கேட்டாங்க ..அவங்க என்னை பொறுத்தவரை மனித தெய்வம் ,,, (பேச முடியாமல் அமைதியாகிறார் )

ஒரு சாதாரண டூரிங் டாக்கீஸ் டிக்கெட் கிழிப்பவராக வாழ்க்கையை ஆரம்பித்த நீங்கள் ஒரு நிலையில் மதுரையின் மிகப்பெரிய தியேட்டர் காம்ப்ளக்சான நடனா நாட்டியா நர்த்தனா வை விலைக்கு வாங்கினீர்கள் . ஒரு நிலையில் அதை விற்கவும் செய்தீர்கள் ... எப்படி சார் தாங்கிக் கொள்ள முடிந்தது ?

(சில நொடிகள் கனத்த மவுனம் .....) எனக்கு ஒரு ஆசை இருந்தது சார் ...நடிகனாகி பணம் சம்பாதிக்க ஆரம்பித்த போது .... ஒரு சுமாரான திஎட்டருக்காவது ஓனர் ஆகணும்னு . ஆசை ... அதுக்குத்தான் நான் நிஜமா ஆசைப் பட்டேன் . ஆனா அவ்வளவு பெரிய தியேட்டர் காம்ப்ளக்சை வாங்க முடிஞ்சது .... பின்னாடி என்னால படங்கள் வாங்கி போட முடியல . தியேட்டர் வாடகைக்கு கூட சம்பாதிக்க முடியாத நெலமை ... அதான் .....(முற்றுப் பெறாத பதிலாகவே முடிகிறது )

பாராளுமன்ற எம்பியாகவே நீங்கள் போனது உங்கள் வாழ்கையின் உச்சம் என்று சொல்லலாமா ?

அது அம்மாவின் அருள் சார் . 1978 இல் என் சின்னம்மா மகனோடு பிழைப்பு தேடி டெல்லிக்கு போனவன் 98 இல் திருச்செந்தூர் எம்பியாகப் போனேன் . மிகக் குறைந்த வயதில் எம்பியான சிலரில் நானும் ஒருவன் .பாராளுமன்றத்தில் பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் நேரில் பார்த்தேன் .ஆனால் நான் எம்பியாக இருந்த அமைச்சரவையின் காலம் சில மாதங்கள் மட்டுமே .அதனால் என்னால் தொகுதிக்கு பெருசா ஒண்ணும் பண்ண முடியல .எனக்கு அந்த வருத்தம் உண்டு .

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிக சரியான காரியம் எது? பெரிய தவறு எது ?
சினிமாவில் மது குடிக்கிற ---சிகரெட் குடிக்கிற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தது மிக சரியான முடிவு . . இன்றும் அதற்காக பெருமைப் படுகிறேன் . . தவறு எனறால் என் சினிமா வாழ்வில் நிறைய சொல்லலாம் . ஆனால் அது தவறு என்று அப்போது தெரியாது . இனி பேசி பயன் இல்லை . ஆனால் செய்தபோது எல்லாம் அதையும் நல்ல நோக்கத்தோடுதான் செய்தேன் . இப்போது வந்திருக்கிற மேதை படத்தின் தயாரிப்பாளர்கள் டெக்னீசியன்கள் எல்லோரும் கூட புதியக்வர்கள் தான் . பிரபலமான பெரிய ஆட்கள் இல்லை . எனக்கு அதுதான் சார் அமையுது .

இன்றும் உங்களை பார்க்க கிளம்பி வருகிற ரசிகர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள் ?
(சுறுசுறுப்பாகிறார் ) நான் கடைசியா நடிச்ச படம் வெளிவந்து பதினொரு வருஷம் ஆகுது .ஆனாஇப்ப மேதை படத்த்கோட பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டம் என்னை வியக்க வச்சது . அது மட்டும் அல்ல . விழாவுக்கு அன்னிக்கு வந்த ஒரு ரசிகன் , என் பிறந்த நாளுக்கு என்னை நேரில் வந்து வாழ்த்த ஆசைப் பட்டு இருக்கான் .மறுபடியும் சென்னை வரஅவங்க வீட்டுல அனுமதி தரல. விஷம் குடிச்சு செத்தே போய்ட்டான் சார் . , தகவல் தெரிஞ்சு நான் துடிச்சிட்டேன் . ஓடிப் போய்ப் பார்தது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிட்டு., முடிஞ்ச பண உதவிட செஞ்சிட்டு வந்தேன் .
இதோ என் படத்தை இப்பவும் நண்பன் வேட்டைன்னு பெரிய படங்களோட தான் ரிலீஸ் பண்ணி இருக்கேன் .
தில்லான மோகனாம்பாள் படத்துல ஒரு காட்சி வரும் . மனோரமா கிட்ட ஒருத்தன் வந்து "இன்னிக்கு மோகனாம்பாள் னு ஒரு பெரிய ஆட்டக்காரி ஆடப் போறா .. அதனால உன் ஆட்டத்துக்கு மவுசு இருக்காது "ன்னு சொல்லுவான் . அதுக்கு மனோரமா .."இருக்கட்டும் .. அதனால் என்ன ... அவங்க பெரிய மேடையில ஆடட்டும் .... எனக்குன்னு ஒரு மூலையில கெடைக்கற எடத்துல நான் ஆடிட்டுப் போறேன்" னு சொல்லுவாங்க . அதுமாதிரி எனக்கு உள்ள கூட்டத்துக்கு என் படத்தை காட்டுவோம்னு தான் சார் , நான் பெரிய படங்க கூட என் படத்தை ரிலீஸ் பண்ணினேன் . எனக்கு இந்த தைரியம் இருக்க காரணம் என் ரசிகர்கள் ...

இதுவரை என் எந்தப் படமும் பூஸ்ட் பண்ணி ஓட்டப்பட்டது இல்ல . தானாதான் ஓடுச்சு . அதுக்கு காரணம் என் ரசிகர்கள் . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாருக்கு பிறகு, ஒரே நாளில் ஒரு கதாநாயகனாக நடித்த ரெண்டு படங்கள் வெளியாகி ரெண்டுமே நூறுநாள் ஓடின வரலாறு எனக்கு மட்டும்தான் இன்னிக்கு வரை இருக்கு . அதுக்கு காரணம் என் ரசிகர்கள் ......

....அந்த மாதிரி இருக்கற ரசிகர்களுக்கு நீங்க பதிலுக்கு என்ன பண்ணப் போறீங்க?

(துள்ளலோடு ) பண்ணனும் சார் .. ஏதாவது நல்லது பண்ணனும் ... இன்னிக்குவரை எந்த தூண்டுதலும் இல்லாம அவங்களாவே புதுசு புதுசா எனக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பிச்சுட்டு எனக்கு தகவல் கொடுத்துட்டு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்காங்க ..(ஆதாரங்களைக் காட்டுகிறார் ) செய்வேன் சார். அத பத்தின யோசனையில்தான் இருக்கேன் ....

திரைத்துறையில் அடுத்து ...?

என்கிட்ட இப்ப முப்பது படங்களுக்கான கதைகள் ரெடியா இருக்கு . சுமார் 250 படப் பெயர்களை செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் . என்னைப் பொறுத்தவரை படத்துக்கு பேருதான் முக்கியம். அதே மாதிரி நான் எப்பவும் ஹீரோவாதான் நடிப்பேன் . அத மாத்திக்க முடியாது .

திருக்குறள்னா அது ரெண்டு அடிதான் இருக்கும் . அது ஏன் நாலடியா இல்லைன்னு கேட்கக் கூடாது . நாலடியார்னா அது நாலடியாதான் இருக்கும் . அது ஏன் ரெண்டு அடியா இல்லைன்னு கேட்பீங்களா? . ராமராஜன்னா ஹீரோதான் . அவன்கிட்ட போய் நீங்க ஏன் மத்த கேரக்டர்ல நடிக்க கூடாதுன்னு கேட்கக் கூடாது .

நீங்க பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழித்த காலமும் உண்டு . 'ஐநூறு ரூபா கூட கையில் இல்லை 'என்று கலங்கி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்ததும் உண்டு . வாழ்க்கை எனும் ரங்க ராட்டினத்தில் சரேலென மேலே ஏறி அதே வேகத்தில் சரிந்தவர் நீங்கள் .. உங்க பார்வையில வாழ்க்கைன்னா என்ன சார்?

சரேலென மேலே ஏறினது உண்மைதான் . ஆன மெதுவாதான் இறங்கினேன் . அதனாலேயே வலி ஜாஸ்தி .

ஒண்ணே ஒண்ணு சொல்றேன் .. எனக்கு கார்ல பயணம் பண்றதே புடிக்காது . பொதுவா பஸ் , ரயில் இல்லன்னா விமானம் இப்படிதான் பயணம் செய்வேன் . ஆனா ஒருதடவை வேற வழியில்லாம கார்ல போனேன் . என்ன ஆச்சு ? கொடுமையான விபத்த்துல சிக்கி உயிர் பிழைக்கவே கஷ்டம்னு ஆகி, கடைசியில ஒரு வழியா மறுஜென்மம் எடுத்தேன் . நான் என்ன விரும்பியா கார்ல போனேன் . ஆனா போக வேண்டி வந்தது இல்லையா ?

அதே மாதிரித்தான் .... வாழ்க்கையில நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் கஷ்டம் வரணும்னு இருந்தா வரத்தான் செய்யும் . அதை யாரும் மாத்த முடியாது . ஆனா அதை தைரியமா எதிர்கொண்டு ஜெயிக்கணும் ... இதுதான் வாழ்க்கை .