



தெலுங்கானா தனி மாநிலமாக வரவேண்டுமா வேண்டாமா என்பதில் ஆந்திராவுக்குள் வேண்டுமானால் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் . ஆனால் ஆந்திராவுக்கு வெளியே இந்தக் கேள்வியைக் கேட்டால் தனித் தெலுங்கானாவுக்கு ஆதரவாகவே பெரும்பாலான இந்தியப 'பொது' மக்கள் கருத்துக் கூறுவார்கள்.
காரணம் 'தெலுங்கானா இத்தனை ஆண்டுகளாக மிகவும் பின் தங்கிய பகுதியாகவே உள்ளது . மற்ற ஆந்திரப பகுதிகளுக்கு இணையாக அது வளரவில்லை . மற்ற ஆந்திரப் பகுதியினர் வளர விடவில்லை .தனி மாநிலமாக அது மாறினால்தான் முன்னேற முடியும் 'என்ற கருத்து நாடு முழுக்க உள்ள மக்களிடம் விரவிக் கிடக்கிறது .
சரியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தக் கருத்தை ஆந்திராவுக்கு வெளியே கொண்டு செல்வதில் மண் பாசத்தோடு தெலுங்கானா தலைவர்களும் அங்குள்ள ஊடகங்களும் இமாலய வெற்றி பெற்று விட்டன. நம் ஊரைப் போல், ஈழ விடுதலைக்கான நியாயத்தை நம் தமிழ் நாட்டுப் பாமர ஜனங்களுக்குக் கூட கொண்டு சேர்க்காமல் நம்மில் பலரே குப்புறத் தள்ளிக் குழியும் பறித்த கொடுமை தெலுங்கானாவில் நடக்கவில்லை . இனமே அழியும்போது வேடிக்கை பார்த்தது விட்டு எல்லாம் முடிந்த பிறகு பக்கம் பக்கமாக மாய்ந்து மாறந்து வரலாறு எழுதும் மாய் மாலங்கள் தெலுங்கானாவில் நடை பெறவில்லை .
எனவே இந்திய முழுக்க பொதுவாக எல்லோருமே தனித் தெலுங்கானாவுக்கு ஆதரவான மனோநிலையில்தான் !
ஆனால் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் இப்படி எல்லோருமே கண்மூடித்தனமாக தெலுங்கானாவை ஆதரிப்பது நியாயம்தானா ? ஒரு வேளை தெலுங்கானா உருவானால அது இந்தியாவுக்குள் இருக்குமா? இந்தியாவாக இருக்குமா ? என்ற ஐயப்பாட்டை உருவாக்குகின்றன .
கடந்த 15ம் தேதி ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத்தின் பெல் நிறுவனக் குடியிருப்பில் தங்கியிருந்த சுமார் நானூறு தமிழ் நாட்டு இளைஞர்களை , நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்த தெலுங்கானா இளைஞர்கள் பயங்கரமாகத் தாக்கி படுகாயப்படுத்தி அடித்து விரட்டியுள்ளனர். தமிழக இளைஞர்கள் தங்கி இருந்த அறைகளுக்குள் உருட்டுக்கட்டை, சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த நூற்றுக்கணக்கான பேர் அடங்கிய வெறி பிடித்த தெலுங்கானா கூட்டம் , தமிழக இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது தமிழக இளைஞர்கள் வைத்திருந்த செல்போன் , நகை , பணம் போன்றவை பறிக்கப்பட்டன..
திருச்சி , நாமக்கல் , சேலம் , சென்னை , சிதம்பரம் , கடலூர் போன்ற ஊர்களில் இருந்து மிக அதிகமாகவும் மற்றும் தமிழகம் முழுக்க இருந்து பரவலாகவும் சென்றிருந்த அந்த தமிழக இளைஞர்கள் , அந்தக் கொடூரத் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு நாள் முழுக்க இரயிலில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பட்டினி கிடந்தது சென்னை வந்து சேர்ந்தார்கள் . கொஞ்சம் பேர் தப்பிக்க முடியாமல் ஹைதராபாத்துக்குள்ளேயே உயிரைக் கையில் பிடித்தபடி மறைந்து விட்டனர் . அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை .
சரி, இப்படிக் கொடூரமாகத் தாக்கப்படும் அளவுக்கு அந்த தமிழக இளைஞர்கள் செய்த தவறு என்ன?
பொழுதுபோக்கு எனும் பெயரில் அந்த மண்ணின் மக்களின் உழைப்பைச சுரண்டி உண்டு கொழுத்து விட்டு , அந்த மக்களுக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது அடையாளமாக ஆதரவுக் குரல் கொடுக்க கூப்பிட்டால் வரமுடியாது என்று முரண்டு பிடித்தார்களா? மீறி வரச் சொல்லி வற்புறுத்தினால் அந்த மாநில முதலமைச்சரின் முன்னால் ஊர் பார்க்க "அ(ய்)யா ... மிரட்டுறாங்க(ய்)யா....." என்று நீலிக் கண்ணீர் வடித்தார்களா?
இல்லை அப்படி அநியாயமாக யாராவது பேசும்போது கொஞ்சம் கூட மன சாட்சியின்றி அந்த நன்றிகெட்ட பேச்சை ஆதரித்து குதித்துக் குதித்துக் கைதட்டிப் பாராட்டினார்களா?
தவறை உணர்த்திய பின்னரும் ஒத்துக் கொள்ளாமல் வீம்பு பிடித்தார்களா?
இல்லை ... ஹைதராபாத்திலேயே மிகப் பெரிய வீடு ஒன்றை அங்கே போய் அவர்களிடம் சம்பாதித்துக் கட்டி விட்டு எங்காவது உளறுவாய் மடத்தில் நின்றபடி,"கருத்து தடித்த எருமை போன்ற ஆந்திராக்காரி " என்று பிதற்றி மனநிலை தவறிய ஒரு கும்பலை கெக்கே பிக்கே என்று சிரிக்க வைத்தார்களா?
அந்த தமிழக இளைஞர்கள் செய்த தவறுதான் என்ன?
மத்திய அரசு நிறுவனமான 'பெல்' நிறுவனத்தின் ஆந்திர மாநில அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது .அந்த நிறுவனத்தின் நான்காவது குரூப் ஊழியர்களின் வேலைக்காக கடந்த 14 ம் தேதி எழுத்துத் தேர்வு நடந்தது .தென்னிந்தியா முழுக்க வசிக்கும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள அனுமதி உள்ள தேர்வு அது . அதன்படியே தமிழ்நாட்டில் இருந்தும் நிறைய பேர் கலந்து கொண்டனர் .
தமிழ் நாட்டில் இது போல நடக்கும் தேர்வுகளில் பீகாரிகள் , அசாமியர்கள் , வங்காளிகள் கூட கலந்து கொள்கின்றனர் . இன்னும் சீனாக்காரனும் ரஷ்யாக்காரனும்தான் வரவில்லை . ஆனால் அப்போது எல்லாம் தமிழர்கள் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுவது இல்லை (முதலில் உணர்ச்சியே இல்லாதவனுக்கு காழ்ப்புணர்ச்சி எங்கிருந்து வரும்?)
ஆனால் ஹைதராபாத்தில் நடந்தது வேறு .
அந்த எழுத்து தேர்வுக்கான முடிவுகள் 15 ம் தேதி வெளியிடப்பட்டு தேர்ந்தேடுக்கப்படவர்கள் 17 ம் தேதி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தனர் . எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் தமிழகத்தில் இருந்து போன இளைஞர்கள் .காரணம் சிபாரிசா? பணமா? அரசியல் செல்வாக்கா? எதுவும் இல்லை . திறமை , அறிவு , உழைப்பு . இவைதான் .
எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் அதிக தமிழர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டது அறிவிக்கப் பட்ட அன்று இரவே , அங்கேயே தங்கி இருந்து நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு வரக் காத்திருந்த தமிழக இளைஞர்கள் மீதுதான் இந்த கொலைவெறித் தாக்குதல் நடந்தது .
எழுத்துத் தேர்வில் நல்லபடியாக திறமை காட்டி நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அந்த தமிழக இளைஞர்கள் செய்த மா......பெரும் குற்றம் ! இதற்காகத்தான் அந்த கொடூரத் தாக்குதல் .!
ஏன் ஹைதராபாத் இந்தியா இல்லையா? ஆக ,தெலுங்கானா உருவானால் அது இந்தியாவில் இருக்காததா என்பது நியாயமான சந்தேகம்தானே?
ஆனால் தமிழகத்தில் நிலைமை என்ன?
தமிழினத் தலைவர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் கூறப்படும் முதல்வர் கருணாநிதி இதுவரை நடந்த கொடுமையைக் கண்டித்து வாய் திறக்கவில்லை . தமிழன் என்ற காரணத்தால் நம்மவர்கள் செம்மையாக உதைக்கப் படுவதைக் கண்டிக்காமல் செம்மொழி மாநாடு நடத்தி என்ன பயன்? அய்யகோ!
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது , சென்னையில் ஐ.ஐ.டி அமைக்க அவரது பெரும் முயற்சியால் திட்டம் வகுக்கப்பட்டது . திடீரென்று அதைப பிடுங்கி மாற்றி ஹைதராபாத்தில் அமைக்க தெலுங்கர்களும் பெங்களூரில் அமைக்க கன்னடர்களும் குறுக்கு சால் ஓட்ட முயன்றனர் . அன்றைய பிரதமரான நேருவும் சென்னையில் அமைக்க இருந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வதாகத தெரிய வந்ததும் துடிதுடித்துப் போனார் காமராஜர் .
உடனடியாக டெல்லி கிளம்பினார். நேருவை நெருங்கி சம்பிரதாயமான வார்த்தைகள் எதவும் சொல்லி பேச்சை ஆரம்பிக்காமல் எடுத்த எடுப்பில் " I WANT IIT MADRAS " என்றார் .
i want I.I.T in madras என்றோ அல்லது i want I.I.T. for madras என்றோ சரியான ஆங்கிலத்தில் சொல்லக் கூடத் தெரியாத அந்தப் படிக்காத மேதை தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் " I WANT IIT MADRAS " என்று உறுதியாகவும் கோபமாகவும் திரும்பத் திரும்பச சொன்னதில் மலைத்துப் போன நேரு ஐ.ஐ.டி சென்னைக்குத்தான் என்று காமராஜரிடம் உறுதி அளித்ததோடு அதை மாற்றும் எண்ணத்தில் யாரும் தன்னை அணுகக் கூடாது என்று அன்று உத்தரவே போட்டார் .
அப்படி பச்சைத் தமிழனால் தமிழர்களுக்காகக் கொண்டு வரப் பட்ட சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று முழுக்க முழுக்க தெலுங்கர்கள் ஆதிக்கம்தான் . ஐ.ஐ.டி.யால் அதிகம் பலன் பெறுபவர்கள் ஆந்திராவில் இருந்து வந்து படிப்பவர்கள்தான் . அவ்வளவு ஏன் ..இன்று தமிழக கல்வித் துறையிலேயே தெலுங்கர்களின் ஆதிக்கம்தான் . அண்ணா யூனிவர்சிட்டியே அதில் இருந்து தப்பவில்லை என்று கூறப்படுகிறது .
இது மட்டுமா? சென்னை 'கலைஞர் கருணாநிதி' நகரில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் இன்று அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுவது ஆந்திர தெலுங்கு மாணவர்கள்தான் . அவர்கள் கேட்கிற டோநேஷனைக் கொடுத்துவிட்டு சீட் பெறுகின்றனர் . தமிழக அரசால் தமிழர்களின் வரிப் பணத்தின் சலுகைகளோடு ஆரம்பிக்கப் பட்ட அந்தப் பள்ளி இன்று தெலுங்கர்களின் சோலையாகிவிட்டது .இங்கே பணத்தைக் கொடுத்து இவன் சீட்டு வாங்குவது போல ஹைதராபாத் பெல் நிறுவனம் வைத்த தேர்வில் அறிவையும் திறமையையும் காட்டி தமிழக இளைஞர்கள் அறிவையும் திறமையையும் காட்டி தேர்வு பெற்றார்கள் . அது கேவலமில்லையே !
ஒரே ஒரு நிறுவனத்தின் சுண்டைக்காய் தேர்வான ' குரூப் நான்கு 'எழுத்துத் தேர்வில் சுமார் 400 இளைஞர்கள் தேர்வு பெற்றதற்கே உருட்டுக கட்டையாலும் சைக்கிள் செயினாலும் அடித்து நகை பணம் செல்போனை எல்லாம் பறிக்கலாம் என்றால் ...
இங்கே ஐ.ஐ.டி யிலும் அண்ணா யுநிவர்சிட்டியிலும் சென்னையின் பள்ளிகளிலும் ஆந்திரர்கள் பெறும் இடங்களைத் தடுப்பதற்கான ஆயுதம் என்னவென்று அந்தத் தெலுங்கானா ரவுடிகளே சொல்லட்டுமே .
அங்கே தெலுங்கானாவில் இளைஞர்கள் மண் உணர்வு என்ற பெயரில் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர் . ஆனால் தமிழக இளைஞர்கள் ?
"உன் உழைப்பு என்னிடம் பணமாக வந்து சேர வேண்டும் ஆனால் உனது பிரச்னைகளுக்கு நான் தார்மீக ஆதரவு தரக் கூட நேரம் ஒதுக்க மாட்டேன் . ஏன் வரணும்" என்கிறார் அஜித்.
உணர்வாளர்கள் அதை பல்வேறு விதங்களில் எதிர்க்கின்றனர் . அப்படிப்பட்ட ஒருவரான திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்தின் வீடு தாக்கப் படுகிறது . அவர் மனைவி தாக்கப் படுகிறார் . வந்தவர்கள் அஜித் ரசிகர்கள்தான் என்று கூறப் படுகிறது . இதுவரை 'இது என ரசிகர்களின் செயல் இல்லை' என்று அஜித் கூறவில்லை . தன பெயரை சொல்லி கோஷம் போட்டு விட்டுப் போனவர்களைக் கண்டித்து இன்றுவரை அஜித் பேசவில்லை .
ஆனால் அவரது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் மட்டும் " இது சமூக விரோதிகள் வேலை" என்று பசப்புகின்றனர் .இன உணர்வோடு பேசி பாதிக்கப் பட்டுள்ள ஜாக்குவார் தங்கத்துக்கு ஆதரவாக திரள இளைஞர்கள் தயாராக இல்லை . ஆனால் அஜித் வீட்டை முற்றுகையிட்டால் அவருக்கு ஆதரவாக திரண்டு அவர் வீட்டைக் காப்பாற்றுவார்களாம்.
அதாவது உனக்கு ஒரு பிரச்னை என்றால் நான் வரமாட்டேன் என்னை கூப்பீட்டால் திட்டுவேன் என்று ஒருவர் ஒரு கும்பலைப் பார்த்தது சொல்ல , அதனால் அவருக்கு சிறு பிரச்னை வந்தால் , அவரைக் காக்க வருவேன் என்று மார்தட்டுவது யார் தெரியுமா?
அவர் யாரைப் பார்த்து " உன் காசு மட்டும் எனக்கு வேண்டும். அனால் உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நாசமாபாப் போ என்று வேடிக்கை பார்ப்பேன் 'என்று கூறுகிறாரோ அந்த பாதிக்கப் படும் கும்பலே தம்மை திட்டுபவருக்கு ஆதரவாக மார்தட்டுகிறது என்றால் .....
இவர்களை எல்லாம் என்ன சொல்வது?
தெலுங்கானா இளைஞர்கள் அநியாயத்துக்க்காகவே அப்படி நடந்து கொள்ள, இவர்கள் நியாயமான சுயனலத்துக்காகக் கூட கவலைப் படமாட்டோம் என்று கண்மூடித்தனமாக நடந்து கொள்வதைப் பார்த்தால் ...
தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு எங்கிருந்து வருகிறது என்று விசாரித்து அதை கொஞ்சமாச்சும் இங்கேயும் இறக்குமதி செய்தால் தேவலை.
போகட்டும் ...
இனியும் இது போல தெலுங்கானா இளைஞர்கள் இப்படி வெறிபிடித்து நடந்து கொண்டால் தனித் தெலுங்கானா வேண்டாம் என்று ஒட்டு மொத்த இந்தியாவும் குரக் கொடுக்கும் நிலை வரலாம்
சந்திரசேகர ராவ் ... !
உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் போதாது .
உணர்வுகளிலும் நியாயம் வேண்டும்.