
அருமை நண்பர் செந்தில்வேலன், தனது பள்ளி நினைவுகள் பற்றிய ஒரு
பதிவிற்குப் பின்னூட்டமாக எனது பள்ளி நினைவுகள் பற்றிய ஒரு பதிவைக்
கேட்டிருந்தார். அந்த அன்புக்காக நான் எழுதி அவரது பதிவிற்குப் பின்னூட்டமாக
பதித்திருந்தேன்.
அதை படித்த அவர் , ' இது எனது பதிவின் பின்னூட்டமாக இருந்தால் மட்டும்
போதாது . இந்த அழகான பதிவு உங்கள் வலைப்பூவிலும் தனியாக இடம் பெற
வேண்டும் என அன்புக் கட்டளை இட்டதால் .. இதோ இங்கும்!
4 வயசு.
பாலர் பள்ளி .
எனக்கு பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது.
அம்மா கூடவே இருக்க ஆசை
முட்டை பணியாரம் நிறைய தின்று தின்று அப்பவே ரொம்ப குண்டாக இருப்பேன்.
ஆசிரியர்கள் மிகவும் கடமை உணர்ச்சியோடு பணியாற்றிய காலம் அது.
விஜயா டீச்சர் என் பாலர்பள்ளி ஆசிரியை , அம்மா அப்பவுக்குப் பிறகு என் முதல் ஆசிரியை. ரொம்ப ஒல்லியாக இருப்பார். அவருக்கு அடிக்கடி இருமல் வரும்.
என்னை பள்ளிக்கூடம் அழை(இழு)த்துப் போக அவர் வீடு தேடி வருவார்.எனக்கு அவரைப் பார்த்ததும் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்று அழுகை அழுகையாய் வரும். தெறித்து ஓடித் தப்பிக்கப் பார்க்கும் என்னை இழுத்துப் பிடித்து அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
அவர் என்னை இழுத்துப் பிடித்து இடுப்பில் உட்கார வைத்துக் கொள்வார். பள்ளி நோக்கி நடப்பார். நான் ஆத்திரம் தாளாமல் அவர் நெஞ்சில் ஆத்திரம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கிக் குத்துவேன்.
அடியின் வலி தாள முடியாது இருமிக் கொண்டே தட்டுத் தடுமாறிச் சமாளித்தபடி என்னைத் தூக்கிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளியில் போய் இறக்குவார்.
அழுத அழுகையில் போன உடன் காலைக்கடன் வந்து விடும். ஒரு தாயைப் போல லொஞ்சம் கூட கூசாமல் கழுவி விடுவார். பின்னர் பிஸ்கட் கொடுத்து தாலாட்டியபடி குதிரை பொமையில் உட்கார வைத்து ஆட வைத்து சமாதானப்படுத்துவார்.
நான் அவரை செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை.ஒரு நாளும் முகம் சுளித்ததாய் நினைவு இல்லை. இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கிறது.
அண்மையில் என் மகள் PreK.G. முடித்தபோது கடைசி நாள் அந்த வகுப்பறை ஆசிரியை காலில் என் மகளை விழுந்து வணங்கச் செய்தேன். ஒரு நனறி வாழ்த்து மடல் கொடுக்கச் செய்தேன்.
மனசெல்லாம் விஜயா டீச்சர்.