Monday, February 22, 2010
# கேரள அரசின் தண்ணீர் அழிச்சாட்டியங்கள் தமிழகம் என்ன செய்ய வேண்டும்?
"காற்றும் நீரும் வானும் கடலும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சு கெடக்குது "
என்றார் கவிஞர் புலமைப் பித்தன் இதயக்கனி திரைப்படப் பாடலில் .
நிஜம்.
மொழிகள் பார்த்து நதிகள் பிறப்பதில்லை.
மதங்கள் பார்த்து காற்று அடிப்பது இல்லை .
நிறங்கள் பார்தது குயில் கூவுவது இல்லை .
ஆனால் மனிதன்?
அதிலும் தமிழினத்தின் எதிரிகள்?
அப்பப்பா !
நதி நீர் விசயத்தில் தமிழகத்தை அண்டை மாநிலங்கள் ஏய்க்கும் விதவிதமான ஏய்ப்புகளுக்கும் அதற்கு மத்திய அரசுகள் துணை போகும் ஆண்மையில்லாத கையாலாகாதத்தனத்துக்கும் , பல காலமாக நமது மாநில அரசுகளின் இன உணர்வற்ற , மக்கள் நலம் பாராத , சுயநல செயல்பாடுகளுக்கும் அளவே இல்லை .
கர்நாடகாவிடம் காவிரி என்ற பெரிய குடுமி , ஆந்திராவிடம் பாலாறு வடபெண்ணை போன்ற குடுமிகள் சிக்கிக் கொண்டுள்ளது என்றால் கேரளாவிடம் பவானி , பெரியாறு , அமராவதி , சிறுவாணி என்று பல குடுமிகள் சிக்கிக் கொள்ள , நமது சக்தி மிக்க அரசியல்வாதிகள் இது மக்களின் பிரச்ன என்ற உணர்வே இல்லாமல் சுவையான தேனீர் அருந்தியபடி தொலைக்காட்சியில் டப்பாங்குத்து டான்ஸ் பாக்கிற மன நிலையில் வேடிக்கை பார்க்க விவசாயத்துக்கும் குடி தண்ணீருக்கும் விவசாயத்துக்கும் நாலா திசையிலும் தண்ணீர்ப் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு அடுத்த தலை முறைத் தமிழன் போய்க்கொண்டு இருக்கிறான் .
தென் மாவட்ட தமிழர்கள் வறட்சியில் படும் கஷ்டத்தையும் அதே நேரம் பெரியாறு அணையின் தண்ணீர் கடலில் அநியாயமாக விழுந்து வீணாவதையும் , ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பார்த்த பென்னி குய்க் என்ற வெள்ளைக்கார மனிதன் மனம் நெகிழ்ந்து , அன்றைய ஆங்கில அரசின் எதிர்ப்பையும் மீறி , இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று , தென் மாவட்டத் தமிழர்களைக் கொண்டு சென்று ஏராளமான ஆபத்துகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து தனது பணம் , பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணம் இரண்டையும் இணைத்து இழைத்துக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு அணை .
அந்த அணையில் ஒவ்வொரு வருடமும் நிரம்புவது பென்னி குய்க்கின் கருணையும் தமிழர்களின் ரத்தமும்தான் என்ற நன்றி உணர்ச்சி இன்றி அந்த நீரைத்தான் தமிழர்களுக்கு தர முடியாது என்று அழிச்சாட்டிய செய்கிறது கேரளா . எப்படியாவது புதிய அணை கட்டியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து மத்திய அரசை மறைமுகமாகச் சரிகட்டி புதிய அணை கட்ட இடம் தேர்ந்தெடுத்தால் அந்த இடத்தில் அணை கட்டினால் அது மணல்வர்ர்டு மாதிரி மல்லாந்து விடும் என்று நிபுணர்கள் அண்மையில் கூறி விட்டார்கள் .
பென்னி குய்க்கும் அன்றைய தமிழர்களும் எப்பேர்ப்பட்ட மேதைகள் என்பது இப்போதாவது புரிந்திருக்கும் .
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு இடையில் பவானி நதியில் அணை கட்டி தமிழர்களுக்கு தண்ணீர் தராமல் தடுக்க முயன்றது கேரள அரசு , அந்தத் திட்டமும் அதன் கைவசம் உள்ளது .
இப்போது பாம்பாறு நதியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்தில் உள்ள அமராவதி அணைக்கு தண்ணீர் வராமல் தடுக்க அடுத்த திடம் தீட்டி வருகிறது கேரளா.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .47 குடிநீர் திட்டங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு தண்ணீர் தரும் பாம்பாறு நதியின் குறுக்கே அணை கட்டி தடுத்து அந்த நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தாரை வார்க்கவும் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான ஆய்வுக்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது கேரள அரசு .
மற்ற மாநிலங்களில் இதே விஷயம் நடந்தால் பொங்கி எழுந்து பக்கம் பக்கமாக எழும் பேசும் நம்ம ஊர் கம்யூனிஸ்டுக் காம்ரேடுகள் அதே தவறைக் கேரளா செய்தால் மட்டும் வாயில் அல்வா திணித்துக் கொண்டது போல் அமைதி காப்பார்கள் .
இந்த அடாவடி குறித்து வழக்கம் போலவே தமிழகத்தின் பெரிய கட்சி அரசியல்வாதிகள் பிடில் வாசித்துக் கொண்டிருக்க வை கோ மட்டும் , " இந்த ஆய்வுக்கு அனுமதி கொடுத்தால் களியக்காவிளை , செங்கோட்டை , கம்பம் , போன்ற இடங்களில் கேரளாவுக்குச் செல்லும் பாதையை மறைத்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளார்.வை.கோ
போராட்டம் செய்தால் அதை யாரை வைத்து அடக்க வேண்டும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் . இருக்கவே இருக்கிறார் தமிழ்நாட்டு பழசி ராஜா சமத்துவ வர்மா !
'"போராட்டம் கூடாது பேசித் தீர்த்துக் கொள்வோம்'" என்று என்னவோ இதுவரை தமிழக கேரள பிரச்னைகள் யாவும் பேசியே தீர்ந்து விட்டது போல பேசுவார் சரகுகுமார். அடுத்து கேரளாவில் ஒரு படமும் விருதும் அவருக்கு கொடுத்து விட்டால் போச்சு !
தமிழனை எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உதைக்கலாம் . ஆனால் தமிழன் அடி வாங்கிக் கொண்டு" நாமெல்லாம் திராவிடன் . நீ என்னை என்ன செய்தாலும் எனக்கு ரோஷம் வராது " என்று அமைதி காக்க வேண்டும். அதற்குப் பெயர "தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது " ( நல்ல ஒழுங்கு போங்க! )
இதோடு கேரள முடித்துக் கொள்ளவில்லை . அடுத்து கோவையின் சிறுவாணி நீருக்கும் குறி வைக்கிறது , ஏனென்றால் சிறுவாணி நீரின் அணை பிடிப்புப் பகுதி கேரள மழைப் பகுதியில்தான் உள்ளது .
இப்படியாக முல்லைப் பெரியாறு பிரச்னையால் தென் மாவட்டங்களும் நெய்யாற்று பிரச்னையால் குமரி மாவட்டமும் இப்போது விஸ்வரூபம் எடுக்கத துவங்கும் பாம்பாறு பிரச்னையால் கொங்கு சீமையும் கேரளாவால் பாதிக்கப் படுகிறது .
" சரி ..நதிகள் கேரளாவில் இருக்கிறது . அவங்க நதி .. அவங்க தண்ணீர் . நமக்கு சும்மா தருவாங்களா?" என்று நம்மில் பலரே வின்னர் படத்து வடிவேலு மாதிரி 'ரொம்ப நல்லவ'வங்களாக பேசும் கொடுமைகளும் தமிழகத்தில்தான் நடக்கும் .
உலகளாவிய நதி நீர்ச் சட்டங்களின்படி ஒரு நதி உருவாகும் இடத்தை விட அது சென்று சேரும் டெல்டாப் பகுதிக்கு தான் அந்த நதியில் அதிக உரிமை உண்டு . காரணம் வெள்ளப் பெருக்கின் போது அதிகம் பாதிக்கப் படுபவன் அவன்தானே .
உதாரணத்துக்கு இந்தியாவில் உருவாகும் சீலம் ,சீனாப் , ராவி , பியாஸ் , சட்லஸ் நதிகளின் நீர்தான் சிந்து நதியாக பாகிஸ்தானுக்குள் நுழைகிறது.
அந்த தண்ணீரைத் தெம்பாகக் குடித்துவிட்டுத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையிலும் டில்லியிலும் புனே ஜேர்மன் பேக்கரியிலும் வைக்க குண்டு தயாரிக்கிறார்கள் .
அதற்காக நாம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர முடியாது என்று சட்லஸ் நதியில் அணை கட்ட முடியாது . பாகிஸ்தான் வழக்குப் போட்டால் உலக நீதி மன்றத்தில் நம்மைக் கூப்பிட்டு , கழட்டி அடிப்பார்கள் . காரணம் நதி நீர்ச் சட்டப் படி இந்தியாவில் உற்பத்தியானாலும் சிந்து நதியின் நீரில் டெல்டாப் பகுதியான பாகிஸ்தனுக்குதான் அதிக உரிமை உண்டு , நியாயப்படியே!
அதுபோல நதி நீரிலும் நதிகான நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் அனுபவ பாத்தியதை என்று ஒன்று உண்டு . அதை முறைப்படி யாரும் மறுக்க முடியாது .
உண்மையிலேயே மாநிலத்தையும் மக்களையும் நேசிக்கிற ஆட்சியாளர்கள் யாராவது இருந்தால் இதையெல்லாம் வைத்து மத்திய அரசிடம் போராடலாம் . எது எதற்கோ புள்ளி விவரம் வைத்துக் கொண்டு நைஜீரியாவை விட இங்கே உப்பு விலை கம்மி . நார்வேயை விட இங்கே புண்ணாக்கு விலை கம்மி என்று பேசுபவர்களால் இதற்காகப் பேச முடியாதா என்ன?
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் நாட்டில் மட்டும் அரசியல் என்பது .'
' மக்கள் நாசமாகப் போனாலும் பரவாயில்லை . மற்ற கட்சிகளுக்குப் பெயர் போய்விடக் கூடாது . வேறு யாரும் 'ஸ்கோர் 'செய்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதுதான் ' என்று ஆகி விட்டது .
தமிழகம் இப்படி தண்ணீருக்கு நாலா திசையிலும் தவிக்கக் காரணமான இயக்கத்துக்கும் கொள்கைக்கும் சொந்தக்காரர்களே இன்று அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு மேலும் வேடிக்கை பார்ப்பது இன்னும் பெரிய கொடுமை .
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது காவிரி உற்பத்தியாகும் குடகு மண்ணின் மக்கள் நாங்கள் மொழியாலும் இனத்தாலும் கன்னடத்தை விட தமிழுக்கே நெருக்கமானவர்கள் . நாங்கள் தமிழகத்தோடு இணைகிறோம் என்று போராடியும் திராவிடம் என்ற பெயரில் திராவிட நாட்டில் குடகு எந்த மாநிலத்தில் இருந்தால் என்ன என்று தமிழக அரசியல்வாதிகள் குரல் கேட்காமல் காது குடைந்து கொண்டிருக்க குடகு போராட்டம் கன்னடகளால் நசுக்கப்பட்டது . குடகு கர்நாடகாவோடு இணைந்தது . திராவிட நாடும் வரவில்லை .
குடகு தமிழகத்தொடு இணைந்திருந்தால் காவிரி பாயும் நீர் வழிப் பாதை முழுக்க தமிழ் நிலமாகவே தக்க வைக்கப் பட்டிருக்கும் . நடக்கவில்லை தமிழன் காவிரி விசயத்தில் நாமம் போட்டுக் கொண்டான் . ஒரு நீர்க் குடுமி கர்நாடகாவிடம் சிக்கியது
அதே போல தமிழர்களின் பாரம்பரிய பூமியான நந்தி மலைப் பகுதியை ஆந்திர மாநிலத்துக்குள் இழுத்துப் பறித்த போது மீண்டும் திராவிடம் சும்மா இருக்க பாலாறு , வடபெண்ணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆந்திராவிடம் போக தமிழகத்தின் இன்னொரு நீர் குடுமி ஆந்திராவிடம் சிக்கிக் கொண்டது .
கேரளாவிலும் அதே கதை . பீர் மேடு உள்ளிட்ட பகுதிகள் திட்டமிட்டு கேரளாவுக்குள் இழுக்கப் பட மீண்டும் திராவிடம் சும்மா இருக்க பல நீர் குடுமிகள் கேரளாவிடம் சிக்கின .
கேரளத்தில் உற்பத்தியாகும் ஆற்று நீரில் இருபது சதவிகித நீரை யார் நினைத்தாலும் கடலில் கலப்பதில் இருந்து தடுக்க இப்போதைக்கு முடியாது .
கேரளா பயன்படுத்துவது பதினைந்து சதவிகித நீரைத்தான் . அதற்கு மேல் பயன்படுத்த அவர்களிடம் இடமும் இல்லை . விளைநிலமும் இல்லை .
இப்போதுள்ள நிலையில் தமிழகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது பதினைந்து சதவிகித நீரை. மீதி நாற்பது சதவிகித நீர் ரொம்ப கால காலமாக தமிழ் நிலத்தின் அனுபவ பாத்தியதையில்தான் இருந்தது . ஆனால் தமிழன் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட மொழிவாரி மாநிலப் பிரிவினைகளுக்குப் பிறகு , அந்த நீரைக் கடலில் கொண்டு போய் கொட்டினாலும் கொட்டுவோம் தமிழ் நாட்டுக்குத் தர மாட்டோம் என்கிறார்கள் கேரளர்கள் . ஆனால் பிழைக்க மட்டும் அவர்களுக்குத் தமிழ் நாடு வேண்டும் .
தமிழகத்திலும் கூட வெள்ளைக்காரன் கட்டிய மேட்டூர் அணை , காமராஜர் கட்டிய வைகை அணைகளைத் தவிர யார் உருப்படியாக அணை கட்டினார்கள் ?
சும்மா சின்னச் சின்ன குட்டைகளைத் தோண்டி வைத்து அந்தக் குட்டையை விட பெரிய அளவில் அணை என்று போர்டு வைத்துக் கொண்டதைத் தவிர அதிகாரம் படைத்த நமது வாய்ப்பந்தல் அரசியல் வாதிகள் உருப்படியாக என்ன செய்தார்கள்?
தமிழகத்தில் உற்பத்தியாகும் பவானி நதி இடையில் ஒரு சிறு பகுதியில் ( மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது அநியாயமாக கேரளாவுடன் இணைக்கப் பட்ட இடத்தில் ) கேரளாவுக்குள் போகிறது .
அந்த இடத்தில் அவர்கள் அணைகட்டி அதன் பிறகு தமிழகத்துக்குள் நுழையும் இடத்துக்கு தண்ணீர் வராமல் தடுக்கப் பார்க்கின்றனர்.
சரி .. அந்த கேரளப் பகுதிக்குப் போவதற்கு முன்பு தமிசகத்துக்குள் அது பாய்கிறதே அங்கே அணை கட்டி தண்ணீரை கேரளப் பகுதிக்குள் போக விடாமல் தடுத்து தமிழகப் பகுதிக்குள் பாயச் செய்ய தமிழக முதல்வர்கள் யாராவது திட்டமிட்டார்களா ? தலை சிறந்த நிர்வாகி என்று கூவிக் கூவிப் பாராட்டப் படுகிற இன்றைய முதல்வர் யோசித்தாரா?
அது பற்றி ஒரு ஆய்வை நடத்த முடியாதா? தமிழனுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதற்காக கேரள அரசு ஓடி ஓடி செய்யும் ஆய்வுகளில் நூற்றில் ஒரு பங்கை நம் மாநில மக்களுக்காக நமது முதல்வர் செய்தாரா?
இல்லை . அதுதான் கொடுமை .
இப்படியாக நம்மைச் சுற்றியுள்ள எதிரிகள் எல்லாம் தோர்ந்து தீவிரமாக செயல்பட , நம்மிடம் உள்ளவர்களோ சுயநலப் பித்தர்களாக இருக்க தமிழகத்தின் நதி நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டு இருக்கிறது .
குறைவான நீரில் அதிக விளைச்சலுக்கு சொட்டு நீர்ப்பாசனம் செய்யச் சொல்கிறது நவீன வேளாண்மை .
தமிழனும் விரைவில் தண்ணீர் விசயத்தில் தொட்டு நீர்ப் பாசனம்தான் செய்ய வேண்டி வரும் , கண்ணில் இருந்து கன்னத்தில் !
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Senthil, porumaiya iruka..Delhi'ku kaditham ezhuthi irukirar...Viraivill pathil varum...
Evalavoo pannitar, itha panna mattara..enna?
enna kodumai saravanan ... sorry kumar!
Post a Comment