
தொடரும் பைக் திருட்டுக்கள் :
'ஓடிப் போகும்' வாகனங்கள் : ஒய்யார திட்டங்கள்
********************************************************
வழக்கம் போல் பரபரப்பாக இயங்குகிற ஒரு உடற்பயிற்சிக் கூடத்தின் வாசல் அது. .தனது மோட்டார் பைக்கில் வந்து வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்த ஒருவர் மீண்டும் வீட்டுக்குப் போகும்போது நடைப் பயிற்சியாகவே வீட்டுக்குப் போனார் . காரணம் சைக்கிள் கேப்பில் அவரது பைக் திருடப்பட்டது .
கோவில் வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு சாமி கும்பிடப் போனவர் வெளியே வந்ததும் வெறுப்பில் நாத்திகராக முடிவு செய்தார் . காரணம் அவரது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்தது .
ஒரு துணிக்கடையில் பைக்கை நிறுத்தி விட்டு தள்ளுபடி விலையில் ஜீன்ஸ் எடுக்கப் போனவர் வெளியே வந்த பிறகுதான் நஷ்டப்பட்டதை உணர்ந்தார் . அது மட்டமான ஜீன்ஸ் என்பதால் அல்ல . அதற்குள் அவரது பைக்கை யாரோ தள்ளிக் கொண்டு போயிருந்தார்கள் .
70000 ருபாய் கொடுத்து 180 சிசி பைக்கை வாங்கிய நண்பர் ஒருவர் ஒரு மாத காலத்துக்குள் ஒருநாள் ,தனது விலை உயர்ந்த பைக்கை பெசன்ட் நகரில் ஒரு காப்பி ஷாப் அருகில் உள்ள சந்தில் நிறுத்தி வைத்து விட்டு, தவறாமல் ....சரியாக.... சைட் லாக் எல்லாம் போட்டு விட்டுப போய் ... காப்பி ஷாப்பில் நண்பர்களோடு அரை மணி நேரம் இருந்து விட்டு வந்த அன்று இரவு.... அதே நண்பர்களோடு டாஸ்மாக்கில் மணிக்கணக்கில் புலம்பும் பரிதாப நிலைக்கு ஆளானார் . ஆம் , அந்த விலை உயர்ந்த முரட்டு பைக்கை அவர் சரியாக லாக் செய்தும் திருடப் பட்டிருந்தது .
குறுகிய கால இடைவெளியில் சென்னை நகரின் ஒரு பகுதியில் மட்டும் ..நாம் விசாரிக்கவேல்லாம்ம் செய்யாமல் நமக்குத் தானாகத் தெரிய வந்த பைக் திருட்டுச் சம்பவங்கள் இவை .
தினசரி சென்னைப பேருந்துகளில் சோகமாக உட்கார்ந்திருக்கும் யாராவது ஒரு நபர் காதல் தோல்வி காரணமாகத்தான் அப்படி உட்கார்ந்திருக்கிறார் என்று சினிமா பார்த்த ஞாபகத்தில் நீங்களாக நினைத்துக் கொள்ளத் தேவையில்லை . அவர் பைக் தொலைத்த சோகத்திலும் கூட இருக்கலாம் . அடிக்கடி பேருந்துகளில் பைக் தொலைத்துவிட்டு அது எப்படியாவது போலீஸ் உதவியுடன் கிடைத்து விடும் என்று நம்பி பரபரப்பாக அலைந்து தோற்று நொந்து போனவர்களின் புலம்பல்கள் பேருந்து உறுமல்களையும் மீறி காதில் விழத்தான் செய்கின்றன .
ஆம் சென்னை மட்டுமல்ல எல்லா நகர்ப்புறங்களிலும் இப்போது பிரபலமான திருட்டுகள் எல்லாம் இருசக்கர வாகனத் திருட்டுகள்தான்.
ஒரு காலத்தில் நகர்ப்புறங்களில் ஜன நெரிசல் உள்ள பகுதிகளில் அதிகம் அதிர்ச்சி தருவது பிக்பாக்கேட்தான். பெரும்பாலும் அதில் வரும் கொஞ்ச தொகை திருடர்களுக்கு சலிப்பை ஏற்படுத்த ,பின்னர் அது நோகாமல் நகை திருடும் வகையாக முன்னேற்றம் கண்டது . அதிலும் ரிஸ்க் அதிகம் என்பதால் கொஞ்சம் தயங்கிய 'தேவரனைய கயவர்களுக்கு' வராது வந்த மாமணியாய் அமைந்ததன செல்போன்கள் . சற்று முயற்சி செய்தாலே வெண்ணெய்க்கட்டி போல வழுக்கிக் கொண்டு கைமாறும் செல்போன்களின் நளினம் , திருடர்களுக்கு ரொம்ப வசதி . கிட்டத்தட்ட பிக்பாக்கெட் திருடர்கள் அனைவரும் செல்போன்களுக்கு "நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தமன்பே மஞ்சன நீர் பூசை செய்ய வாராய் பராபரமே " என்று மானசீக கோவில் கட்டினார்கள் . ஒரு நிலையில் செல்போன் ஆட்கள் பௌச், இயர் போன் இணைக்கப் பட்ட ஒயர்கள் மூலம் கொஞ்சம் பாதுகாப்பை பலப் படுத்தி விட்டதால் அதிலும் ரிஸ்க் அதிகமாகி விட்டது .
ஆனால் பைக் திருட்டு அப்படியல்ல .
யாராக இருந்தாலும் பொது இடங்களுக்குப் போகும்போது பைக்கை மடியில் கட்டிக் கொண்டு போக முடியாது .' மவன..நீ எங்கயாவது நிறுத்திட்டுதான போகணும்..'
கொஞ்சம் 'தொழில் நுட்பம் ' கற்றுக் கொண்டால் போதும் . திருபி விட்டால் மற்ற எந்தப பொருளையும் விட பணம் அதிகம் கிடைக்கிறது . கவனிக்க வேண்டியவர்களைக் கொஞ்சம் கவனித்தால் போதும் ... பாதுகாப்புச் சலுகைகளும் கிடைக்கும் . அப்புறம் என்ன ?
முன்பெல்லாம் பைக்கில் வந்து நகையைப் பறித்தார்கள் இப்போது பைக்கையே பறிக்கிறார்கள் .
திருடப்படும் பைக்குகளில் 99 .99 சதவீதம் மீண்டும் உரிமையாலர்களுக்குக் கிடைப்பதே இல்லை . அதற்கான காரணங்கள் .....
திடுடப்படும் பைக்குகள் உடனடியாக உடல்தானம் ரேஞ்சுக்கு , சொல்லப் போனால் அதற்கும் மேலாகவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப் பட்டு ஸ்பேர் பார்ட்ஸ் ஆகா மாறி புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள மெக்கானிக் கடைகளுக்குப் போய்விடுகின்றன . சில மாதங்களுக்கு பின் தொலைத்தவர் வாங்கிய அடுத்த செகண்ட் ஹேன்ட் பைக்கிற்கு ஸ்பேர் பார்ட்சாக ஒன்றும் தெரியாத அப்பாவியாக அதுவே வந்து சேரலாம் . நாமும் நமக்கு உரிமையாக இருந்து அநியாயமாக திருடு போன பொருளை மீண்டும் காசு கொடுத்து வாங்கிவரும்....வடிவேலு பாணி ' ரொம்ப நல்லவராக' ஆகலாம் .
அடுத்த கட்டமாக வண்டி ரொம்பப் புதுசாக இருந்து , 'பிரிக்கவே மனசு வரல தலைவா' என்று பிரிப்புப பார்ட்டிகளே உச்சுக்கொட்டும் அளவு புதுசாக இருந்தால் உடனடியாக லாரிகள் டேம்போக்களில் ஏற்றி ஆந்திரா கர்நாடகா பக்கம் போய்விடுகிறது .
இன்னொரு விஷயம் ... கடலில் மீன் பிடிக்கப் பயன்படும் மோட்டார் வைக்கப் பட்ட படகுகளுக்கு இந்த இரு சக்கர வாகன எஞ்சின்கள் அல்வாத்துண்டு மாதிரி , அப்படி பிரமாதமாக செட் ஆகும் . எனவே அதற்காக திருடப்பட்டு, என்ஜின் பகுதி மீனவர்களிடம் விற்கப் பட்டு ,
வாகனத்தின் மற்ற பகுதிகள் முறையற்ற தவறான மக்கானிக்குகளிடமும் எஞ்சிய பகுதிகள் காயலான் கடைகளுக்கும் கூட போகின்றன . அநியாயமாக பொருட்கள் வீணாகிறதே என்று திருடியவனுக்கு என்ன கவலை? வண்டிக்கு சொந்தக்காரன் எங்கேயோ புலம்பிக்கொண்டு இருக்கப் போகிறான் . அதனால் திருடனுக்கு என்ன?
இந்தக் விஷயங்கள் கூட உங்களில் ஒரு சிலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம் . ஆனால் அடுத்து வருவதுதான் அநியாய அராஜக அக்கிரமம் !
அது பற்றி காவல் துறை நண்பர் ஒருவர் சொன்னார் .
" சார்.. வண்டி திருடு போச்சுனா உடனே போலீஸ்காரன குத்தம் சொல்றதுல மட்டும் குறியா இருக்காதீங்க . எல்லா இடத்துலயும் வாகனம் பெருத்துப் போச்சு .
எல்லா அரசியல்வாதிங்க வீட்லயும் பொறக்கும்போதே இப்ப எல்லாம் வி.ஐ.பி.யா பிறக்குதுங்க... அதுகளுக்கு எல்லாம் பந்தோபஸ்துக் கொடுக்கவே ஆட்கள் பத்தல . காயலான் கடையில குன்டூசியத் தேடுற மாதிரி பைக் திருட்டை கண்டுபிடிகறதும் இப்ப சிரமம் ஆயிருச்சி .
நான் ஒரு கேள்வி கேட்குறேன் ... 70000 , 80000 ம்னு கொடுத்து பைக் வாங்குறீங்க . அத லாக் பண்ண அவன் ஒரு சிஸ்டம்ல லாக் ரெடி பண்றான் . அதுக்கு உள்ள எல்லா சாவியையும் உங்க கிட்டயே கொடுத்துடறான் . 70000 ரூபா பொருளுக்கு அந்த லாக் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கனும் ?.. ஆனா ரோட்ல நிறுத்தி வச்சிட்டு காப்பி குடிசசிட்டு வர்ற நேரத்துல அத எவனோ ஒருத்தன் ஈசியா திருட முடியுதுன்னா .. அப்புறம் என்ன அது பொல்லாத லாக்? அது என்ன சேப்டி?
அந்த மாதிரி விலை உயர்ந்த பைக்குக்கு காமா சோமான்னு லாக் போடுற கம்பெனிக்காரனையும் டீலரையும் நீங்க எப்பவாவது போய் கேள்வி கேட்கறீங்களா?
இல்ல . ஏன்?
விஷயம் தெரியுமா?
பெரிய பெரிய பைக் நிறுவனங்கள் வேணும்னே திட்டம் போட்டே காஸ்ட்லியான வண்டிகளுக்குக் கூட இப்படி உருப்படாத லாக் போடுறாங்க . பைக் தொலையனும்னு அவங்களே ஆசைப்படறாங்க .
அப்பதான அடுத்த பைக் சீக்கிரம் வாங்குவாங்க . அவங்களுக்கு வியாபாரம் ஆகும்.
தொலைச்சவன் நஷ்டப்பட்டா அவங்களுக்கு என்ன?
அது மட்டுமில்ல பெரும்பாலும் இன்ஷ்யூரன்ஸ் எடுத்தவங்களுக்கு அந்த நிறுவனம் பணம் தருது .
அந்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் அரசு நிறுவனமாவோ அல்லது அரசு உதவி பெறும் நிறுவனமாவோ இருந்தா பைக்கை திருட்டுக் கொடுத்தவர் இன்ஷ்யூரன்ஸ் மூலம் வாங்கும் அடுத்த பைக்கிற்கு, பைக்
தயாரிப்பு நிறுவனங்களுக்கு தரப்படும் பணத்தில்....
மற்ற மக்களின் வரிப்பணமும் கலந்திருக்கு .
திடுடமுடியாத படி லாக் போட இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கு ? என்ன தொழில் நுட்பத்த பயன்படுத்தியிருக்கு ? ஒன்னும் செய்ய மாட்டாங்க . வேணும்னே மறைமுகமா திருடு போவதை அவங்களே ஊக்குவிக்கிறாங்க .
திருட்டுக் கொடுதவன் கண்ணீர் விக்கிறான் . இத முதல்ல எல்லாருக்கும் புரியவச்சிட்டு அப்புறம் எங்ககிட்ட வாங்க " என்றார் அந்த காவல்துறை நண்பர் .
ஆக.. வண்டியோட்டும் மகாஜனங்களே !
புதிதாக ஒரு தொழிற்சாலை வர விரும்பினால் தங்களுக்கு 30 சதவீதமோ 40 சதவீதமோ டீல் போட்டுக்கொண்ட பிறகே அந்த கம்பெனிக்கு இடம் தருகிற அரசியல் அறிஞர்கள் உள்ள நம்மூரில்
எந்த நிறுவனமும் இரு சக்கர வாகனங்களின் லாக் சிஸ்டத்தை மேம்படுத்தப் போவதில்லை .
ஒரு இரு சக்கர வாகனத்தை நீங்கள் வாங்கி ரோட்டில் இறக்கி விட்ட அடுத்த நொடியே அதன் விலை மதிப்பில் 25 சதவீதம் குறைந்து விடுகிறது எனும்போது , இன்னும் திருடனுக்கு உதவியாக லாக் சிஸ்டங்களை எப்படி பலவீனபடுத்தலாம் என்றுதான் அவர்கள் யோசிப்பார்கள் .
ஆக வண்டி வாங்கியதும் இன்ஷ்யூரன்ஸ் போடுவதும் முடிந்தவரை பத்திரமாக பார்த்துக் கொள்வதுமே நம்மால்; முடிந்த விஷயங்கள் . வேறு ஒன்றும் இல்லை
வேண்டுமானால் இந்த கட்டுரையையும் சம்பிரதாயமாக இப்படி முடிக்கலாம் .
'பெருகி வரு இருசக்க்கர வாகனத் திருட்டைத் தடுக்க காவல்துறையும் அரசும் முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் '
போதுமா?
4 comments:
தங்களின் இந்த கட்டுரை பலரின் சோகத்தை எடுத்துரைத்தது. ஏதாவது எலக்ட்ரானிக்ஸ் லாக் உபயோக படுத்துதல் நல்லது. நம்மை நாம் தான் பாதுகாக்கனும்.
உண்மை சந்த்ரு , நன்றி
It is true that the indian bike locking system is absolutely very poor..
Infact, my Yamaha bike key can easily open my friend's new spender bike..he is helpless by seeing this.
It is really very funny...
s kumar . its very bad
Post a Comment