
அன்பு மிகு பண்ணுருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு !
உங்கள் அழைப்புக்கிணங்க நான் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா பார்த்தேன் . நான் முன்பே குறிப்பிட்டது போல எனக்கு உங்களை தனிப்பட்ட விதத்திலும் பிடிக்கும் (இப்படி சொல்வதால் நான் உங்கள் கட்சிக்காரனோ சாதிக்காரனோ அல்ல )
நல்ல வேளை . நேற்று உங்கள் பகுதி முடிந்து தமிழருவி மணியன் உட்காரும்போதுதான் 'ஆற்காட்டார் ' வந்தார் . எனவே அது வரை பார்க்க முடிந்தது . நல்ல பயனுள்ள நிகழ்ச்சி . கொஞ்சம் 'அரசியல்தனம் ' இருந்தாலும் உங்கள் பேச்சு அருமை .
அரசியல் பேச வேண்டியது அவசியம்தான் . ஆனால் இன்று பேசப்படும் அரசியல் எப்படி உள்ளது என்பதுதான் கேள்விக்குறி . எனது சிறு வயதில் ஏதாவது சொந்தக்காரர் வீட்டு விசேஷம் எனறால் இழவு கருமாதி எனறால் கூட நான் ஆர்வமாகப் போவேன் . காரணம் சடங்குகள் முடிந்ததும் பிரம்மாதமாக அரசியல் பேசப் படும் . ஆனால் இன்று ?
எனது சொந்த அனுபவம் ஒன்று . என்னைப் போலவே பத்திரிகைத் துறையிலும் (ஆனால் அவர் சினிமாப் பத்திரிக்கை ) திரைத் துறையிலும் பணியாற்றிய நண்பர் ஒருவர் . மிக நெருக்கமாக இருந்தவர் .அவரது அறையில் நான் கொட்டமடித்த நாட்கள் பல .
.இருவரில் யாருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தாலும் அடுத்தவருக்கு இரண்டாம் இடம் தரவேண்டும் என்பது எங்கள் முடிபு . நான் இனம் மொழி நிலம் சார்ந்த அரசியல் பேசுபவன் . அவர் கண்மூடித்தனமான திமுக அனுதாபி . அடிக்கடி நாங்கள் முட்டிக் கொண்டாலும் சற்றென்று அடங்கிப் போகும் .
ஆனால் இலங்கைப் பிரச்னைக்காக ஒன்றரை மணிநேர உண்ணாவிரத நாடகத்தை கலைஞர் நடத்திய அன்று அவரை எதிர்பாராமல் சந்தித்தேன் . அவர்தான் அரசியல் பேச ஆரம்பித்தார் . கலைஞரின் நாடகத்தை நான் தோலுரித்துப் பேச , அவர் ஒரு நிலையில் அவர் என்னை தனிப்பட்ட விதத்தில் கிண்டல் செய்து பேசினார் .
ஒரு நிலையில் கேவலமாக சிரித்தபடி " போற போக்கைப் பாத்தா நீங்க கலைஞருக்கு எதிராக குஷ்புவுக்கு கூட ஓட்டுப் போட ஏங்குவீர்கள் போல " என்றார் . நான் சொன்னேன் இப்படி ஒரு இனத் துரோகத்தை உயிர் துரோகத்தை தமிழ்க் கலாச்சார துரோகம் செய்த குஷ்பூ கூட செய்ய மாட்டார் . எனவே அப்படி ஒரு நிலை வந்தால் இந்த விசயத்தில் கலைஞருக்கு எதிராக அவருக்கு ஓட்டுப் போடுவது கூட நியாயம் ஆகலாம்" என்றேன்.
"அதுக்கு நீங்க தூக்குப் போட்டு தொங்கலாம் " என்றார் . நான் மனம் நொந்தேன் . பேசிப் பயன் இல்லை என்று வந்து விட்டேன் . அதன் பின்பு பார்க்கும்போது எல்லாம் "வாங்க .. குஷ்பூவின் அடிமையே " என்று சொல்லி விழுந்து விழுந்து சிரிப்பார் . கேவலமாய் கிண்டல் செய்வார் . என்னால் அந்தக் கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் நட்பு நிமித்தம் பொறுத்துக் கொண்டேன் . அப்போதுதான் அது நடந்தது !
திடீரென்று ஒரு நாள் குஷ்பூவுக்கு மகுடம் சூட்டி 'திராவிடக் குலக்கொடி' ஆக்கினார் கலைஞர் . பெரியாரின் கொள்கைகளை என்பதற்கு பதில் "பெரியாரின் கொள்ளைகளை " என்று குஷ்பூ உளறியபோதும் கடிதோச்சி மெல்ல எறிந்தார் . (பின்னே குஷ்பூ என்ன கடலூர் எம் பி ஆதிசங்கரா ? தீ மிதித்ததற்காக காட்டுமிராண்டி என்று திட்டு வாங்க ?)
இப்போது நான் அந்த எனது நண்பரை தேடிப போனேன் இத்தனை நாள் அவர் என்னைப் பார்த்த கேவலமான பார்வைகளை ஒன்று திரட்டி பார்க்க எண்ணி , ஆளைப் பார்த்ததும் நட்பு முன்னிற்க மெல்ல சிரித்தேன் . அவ்வளவுதான் . முறைத்துக் கொண்டு போய் விட்டார் .
எனது அலைபேசிக்கு அவரிடம் இருந்து கேவலமான குறுஞ்செய்திகள் வந்தன . என்னை ஜெயலிதாவின் அடிமை என்றார் புதிதாக (ஜெயலலிதா திமுகவுக்கு போக மாட்டார் என்ற நம்பிக்கை !) சில தரக் குறைவான தாக்குதல்கள் . கெட்ட வார்த்தைகள் . என்னால் பொறுக்க முடியவில்லை . அவரை விட நிறைய சுளையான கெட்ட வார்த்தைகள் எனக்கும் தெரியும் என்பதை குறுஞ்செய்திகள் மூலம் நானும் நிரூபித்தேன் .
நான் திமுகவின் தமிழின துரோகத்தை மறக்கவில்லை . அவர் கடைசிவரை இனம் மொழி சார்ந்த அரசியலுக்கு வரவில்லை . எனது www.susenthilkumaran.blogspot.com வலைப் பக்கத்திற்கு ஒரு முறை கூட அவர் வரவில்லை . நட்பு முறிந்தது . இன்றும் பார்த்தாலும் முறைத்துக் கொள்கிறோம் .
இங்கே சரியான அரசியல் பேச முடியவில்லை . அதை கெடுக்க பலர் இருக்கிறார்கள் . கலைஞரின் தவறை குறிப்பிட்டால் உடனே அதை ஜெயலலிதாவுக்கு ஆதரவான பேச்சு என்றும் ஜெயலலிதாவின் தவறை சொன்னால் ,உடனே " அப்ப நீங்க கலைஞர் ஆதரவாளரா ?' என்றும் திசைதிருப்பும் வேசித்தனம் கூசாமல் நடக்கிறது
காரணம் இங்கே அடிமைகள் அதிகம் . ஆண்மையாளர்கள் ரொம்ப கம்மி . அடிமையாய் இருத்தலே ஆண்மை என்று எண்ணும் அற்பர்கள் கூட்டம் அதிகம்
கலைஞர் செய்த துரோகத்தை சொன்னால் ஜெயலலிதா மட்டும் கிழித்திருப்பாரா என்கிறார்கள் . ஜெயலிதா கிழிக்கவில்லை என்பதால்தானே இவரை முதல்வர் ஆக்கினோம் இவர் செய்யவில்லையே அப்படி இருக்க இவருக்கு எதற்கு மீண்டும் ஓட்டுப் போடவேண்டும். ரெண்டு பேரில் யாருக்குப் போட்டாலும் ஒன்றுதானே என்ற கேள்வியை யாரும் காதில் வாங்குவது இல்லை . அதிமுக உட்பட எல்லா கட்சிகளும் இப்படிதான் .
ஆனால் இப்படி ஒரு கேவலமான அரசியலை ஆரம்பித்து வைத்ததே கலைஞர்தான் . இப்போது கூட பாருங்கள் . அவரது குறைகளை சொன்னால் ஜெயலலிதா மட்டும் செய்வாரா என்பார் . அதை சொல்ல கலைஞருக்கு அருகதை இல்லை என்பார் ஜெயலலிதா . இன்னும் இதே கூத்துதான் .
தொண்டர்கள் என்ற பெயரில்--- இந்த குழாயடிச் சண்டையை அப்படியே பின்பற்றுகிற ---.பரதேசிகளிடம் ஆக்கபூர்வமான அரசியல் பேச முடியவில்லை . இப்படியாக அண்ணா அறிவுப்பூர்வமாக வைத்திருந்த அரசியலை கலைஞர் அடிமைகளின் கூச்சல் ஆக்கி விட்டார் . எனவே அரசியல் பேசுவது தவறு என்ற தவறான கருத்து உடையவர்களின் எண்ணத்துக்கு ஒரு அநியாயமான நியாயம் கிடைத்து விடுகிறது .
சரிதானே வேல்முருகன் . ஆனால் ஒன்று . என் சிற்றறிவுக்கு எட்டியவரை , நீங்கள் வெற்றி பெற வேண்டியவர் . வெல்ல வாழ்த்துகிறேன் .



