
அதாகப் பட்டது ....மலையாளத்தில் தயாரிக்கப் படுகிற -- தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவிருக்கிற - இன்றைய தேதியில் மலையாளத் திரை உலகின் பிரம்மாண்டமான படமாகக் கூறப் படுகிற பழஸி ராஜா என்ற படம்...
இந்தியாவிலேயே முதன்முதலாக வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன்(?),தமிழர்களும் அப்படிக் கூறிக் கொள்பவர்களும் கவனிக்க..! இந்தியாவிலேயே முதன்முதலாக வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன்... இந்தப் பழஸி ராஜாதான் என்ற உண்மையை(!)ச் சொல்ல வருகிற படமாம்.
இதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் படம் தமிழிலும் (தமிழர்களும் அப்படிக் கூறிக் கொள்பவர்களும் மறுபடியும் கவனிக்க..! ) இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப் படுகிறதாம்.அதில் சரத்குமார் நடிப்பது என்பது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவமாம்.
சரத்குமாருக்கு இது கவுரவமா இல்லையா என்பதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் அந்த கேரளத்து நபர் சொல்வது போல இந்தியாவிலேயே வெள்ளைக்காரனை எதிர்த்து முதன்முதலில் போராடியது பழஸிராஜா என்று சொல்ல வருவதுதான் அந்தப் படத்தின் நோக்கம் என்றால்..
நான் கொஞ்சம் சவுக்கை எடுக்க வேண்டியுள்ளது.!
பழஸிராஜாவின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி .சரியாகச் சொல்லப் போனால் அவர் கொல்லப் பட்டது 1805 ஆம் ஆண்டு. வீர பாண்டியக் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டது 1799.ல்.பழஸிராஜாவுக்கு ஆறுவருடம் முன்பு. பழஸிராஜாவின் பெயர் வெளிச்சத்துக்கு வருவதே 1790களின் இறுதியில்தான். ஆனால் வீரபாண்டியக் கட்ட பொம்மன் பெயர் 1780களிலேயே லண்டனையே தொட்டுவிட்டது என்பதற்கு ஆதாரங்கள் உலகறிந்த ஒன்று.
ஆக வீர பாண்டியக் கட்டபொம்மனுக்கு முந்தையவராக விட பழஸி ராஜா இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் வீர பாண்டியக் கட்ட பொம்மன் பிறந்தது 1760ஆம் ஆண்டு ஜனவரி 4ந்தேதி. பழஸிராஜா பிறந்த தேதி பற்றி சரியான குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தக் குழப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வீர பாண்டியக் கட்டபொம்மனை விட பழஸி ராஜா முந்தையவர் என்று தவறாக நிறுவ பழஸி ராஜா படம் எடுப்பவர்கள் தந்திரமாகத் திட்டமிடலாம்.
அதை வைத்து வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு முந்தையவன் என்று புதிதாகக் கதை விட அவர்கள் ஆசைப் படலாம்.
அதை தமிழ் நாட்டிலும் விட வேண்டும் என்ற ஆசை.அப்படியானால் தமிழ் நாட்டிலும் படம் ஆவலோடு பார்க்கப் படவேண்டும்.அதற்கு தமிழ்த் திரையுலகம் நன்கு அறிந்த ஒரு நடிகர் வேண்டும்.
சரத்குமார்.!
பிரபல நடிகர். நடிகர் சங்கத் தலைவர். ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பலமும் பின்னணியும் கொண்டவர். தவிர தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் கூட.போதாதா?
"இப்படியெல்லாம் பேசக் கூடாது.அதில் வரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்கட்டு, நிறம் உள்ளிட்ட பல பொருத்தங்கள் அவரிடம் உண்டு.அதனால்தான் நடிக்க அழைத்துள்ளனர் " என்று வாதாடும் நல்லவர்களுக்கு ஒரு வார்த்தை.
இதை விட... சரத்குமாருக்குப் பொருத்தமான பல வேடங்கள் மலையாளத்தில் வந்த போது எல்லாம் சரத்குமாரின் உடற்கட்டையும் நிறத்தையும் பார்த்து வியந்து அவரை அழைத்தார்களா?
நன்றாக யோசியுங்கள்...பழஸிராஜவுக்கு மட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும் ஏன்? அங்கே தான் இருக்கிறது அந்த அந்திர தந்திரம்.
"ஸரிதான் ஸாரே... ஞிங்கள் ஸொல்லும்படிப் பார்ர்க்கினும் கட்டபொம்மனுக்கும் பழஸிராஜவுக்கும் ஒரிப் பத்து வருஷம்தன்னே வித்யாசம்..? பின்னெந்துக்கு இத்தர யொரு ஆர்ட்டிக்கிள்?"என்று கேட்பவர்களுக்கு சில விசயங்கள்!
உண்மையில் வெள்ளையரை எதிர்த்து இந்தியாவிலேயெ முதன்முதலாக வீர முழக்கமிட்டவன் கட்டபொம்மன் என்பதே சரியான வரலாறு அல்ல.
கட்டபொம்மனுக்கு முன்பே பூலித் தேவன் , தீரன் சின்னமலை என்று இரண்டு(கட்டபொம்மன்,பழஸிராஜா போன்ற)குறு நில மன்னர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போராடியிருக்கின்றனர்.இதில் பூலித்தேவனின் காலம் எது தெரியுமா?
பொல்லாப் பாண்டியக் கட்டபொம்மன் என்று அழைக்கப் பட்ட ஜெகவீர பாண்டியக் கட்டபொம்மனின் காலம்.
இந்த பொல்லாப் பாண்டியக் கட்ட பொம்மனின் பிள்ளைதான் வீரபாண்டியக் கட்டபொம்மன்.பூலித்தேவனுக்கு உதவாமல் வேடிக்கை பார்த்தவன் பொல்லாப் பாண்டியக் கட்டபொம்மன்.
பூலித்தேவனும் தீரன் சின்னமலையும் கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள்.
கொள்ளைக்காரன் போன்ற சில விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் வெள்ளைக்காரனை எதிர்ப்பதில் மாசு மருவற்று விளங்கியவன் கட்டபொம்மன். அந்தக் குறை கூடச் சொல்ல முடியாதவர்கள் தீரன் சின்ன மலையும் பூலித் தேவனும் கட்டபொம்மன் தம்பி ஊமைத் துரைக்கு அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளைக்காரனால் கருவறுக்கப் பட்ட மருது பாண்டியர்களும்.!
ஆனால் பழஸிராஜா?
ஆரம்பத்தில் வெள்ளைக்காரனுக்கு பட்டுக் கம்பளம் விரித்தவன்.அவர்களுக்கு அத்தனை வசதிகளும் செய்து கொடுத்தவன்.பின்னர் மனம் மாறி எதிர்த்தவன்.
அப்படி இருக்க இவர்களை எல்லாம் விட்டு விட்டு பழஸிராஜாவைப் போய்,'இந்தியாவில் வெள்ளைக்கரர்களை முதன்முதலாக எதிர்த்த மாவீரன் என்று சொல்கிற (உண்மையில் அப்படி சொல்ல அவர்கள் முயன்றால்)ஒரு வரலாற்றுப் புரட்டுக்கு சரத்குமார் தெரிந்தோ தெரியாமலோ துணைபோன பழி சரத்குமாருக்கு எதற்கு?
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாற்றை எழுதிய வட இந்தியர்கள் விடுதலைப் போராட்டத்தில் தென்னிந்தியாவின் பங்கை இருட்டடிப்புச் செய்தனர்.அப்போது எல்லாம் மற்ற தென் இந்திய மாநிலத்தவர்கள் டில்லிக்கு காவடி தூக்குவதிலேயே கவனமாக இருந்து தங்கள் உரிமை பறி போவதைத் தடுக்கவில்லை. இன்னொன்று 'அது எல்லாம் தமிழ் நாட்டில்தானே நடந்தது . நம் மாநிலத்தில் எல்லாம் மெதுவாகத்தானே வந்தது.இன்று தமிழன் வரலாறு மறைக்கப்படுவதற்காக நாம் ஏன் வருத்தப் படவேண்டும் ?'என்ற சிறுகுணம்.
குடிகார ஊதாரி மகனுக்கு வாரிசுப் பட்டம் சூட்ட அனுமதிக்கவில்லை என்ற சுய நலத்தால் வெள்ளைக்காரனை எதிர்த்த ஜான்ஸி ராணியையும் ,வெள்ளைக்காரப் பெண்கள் மீது கைவைத்து வெள்ளைக்காரன் பகையைச் சம்பாதித்துக் கொண்ட தாந்தியா தோப்பெயையும்(பெயர் சரிதானே)வெள்ளைக்காரனை எதிர்த்துப் போட்டியிட்ட முதல் இந்திய சுதந்திரப் போராட்ட மன்னர்களாக ...
கொஞ்சம் கூட மனசாட்சியின்றிச் சித்தரித்து அதை பாடப் புத்தகத்தில் போட்டு படிக்கவும் வைத்தார்கள்.
அந்த நிலையில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தமிழ் மண்ணில்தான் நிகழ்ந்தது என்ற உண்மையை அவசர அவசரமாக நிரூபிக வேண்டிய சூழல் ஏற்பட ...அப்போது தீரன் சின்னமலை , பூலித் தேவன் போன்றவர்களின் வரலாற்றை ஆராய்ந்து சொல்ல வேண்டிய கால அவகாசம் இல்லாத கொடுமையில் .... ம.பொ.சிவஞானம் போன்றவர்கள், சரியான குழப்பமில்லத குறிப்புகளோடு தெளிவாக இருந்த வீரபாண்டியக் கட்டபொம்மனின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிப்படுத்தினர்.அவன் அதிர்ஷ்டக்காரன்.
இல்லாவிட்டால் உலகப் பெரு நடிகர்(பட்டம் வழங்கியது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்)நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவனுக்குக் கிடைப்பாரா? உலகப் புகழ் கிடைத்தது கட்ட பொம்மனுக்கும்!
இன்று உலகெங்கும் உள்ள பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் தங்கள் ஜென்ம எதிரிகளான வெள்ளைக்காரர்களின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்ற அந்தப் படத்டை சப் டைட்டிலோடு உலகம் முழுக்க காட்டுகின்றனர்.
இதுதான் உண்மையிலும் உண்மையான வரலாற்று உண்மைகள்.
இப்படி இருக்க தமிழனின் வரலாற்றைத் தந்திரமாக மறைத்து பொய்யாக பழஸி ராஜாவுக்கு அந்தப் பெயரைத் தவறாகத் தர முயலும் ஒரு படத்தை தமிழ் மக்களிடமே அறிமுகப் படுத்தும் ஒரு சதிக்கு சரத்குமாரை அவர்கள் பயன்படுத்திவிடக் கூடாது.
அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் ...
அதாவது இந்தப் படத்தின் மூலம் 'இந்தியாவில் வெள்ளைக்காரனை எதிர்த்துப் போராடிய முதல் அரசன் பழஸி ராஜாதான்' என்றபொய்யை அவர்கள் சொல்லவில்லை என்றால் ....
ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின் கதை என்ற வகையில் பழஸி ராஜாவை நானும் கொண்டாடத் தயார்.
3 comments:
ஓஹோ உங்களுக்கு அப்படி ஆகிப்போச்சா? வரலாறு 2000சொல்லுமுங்க, அதுக்கு என்ன செய்யறது? நமக்குன்னு ஒரு ஞாயமிருக்குது இல்லையா? கண்ணகி கோயில்ல கேரள போலிஸ் பாதுகாப்புல வருஷ வருஷம் பொங்கல் வைக்கிறீங்கள்ள! போனா போகுதுன்னு அனுப்பற உபரி நீர்ல விவசாயம் செய்யறீங்கள்ள? அன்று முதல் இன்று வரை நடிப்பு தெரிஞ்ச தமிழ் பெண்களே கிடையாது. தாராள மனசோட இங்க வந்து கஷ்டப்பட்டு நடிக்கறது யாரு? இங்கிருக்கற உங்க தமிழ் காக்கா தொண்டைகளுக்கு பதிலா அன்றூ தாஸேட்டன் தொடங்கி, சின்ன குயில் சித்ரா, கங்கா, மகதின்னு தமி இசைய காப்பாத்தறக்குன்னே பிறவி எடுத்தவங்க! இசைக்குயிலெல்லாம் வேண்டாம், ஒரு இசை சிட்டுக்குருவி இருக்கா உங்ககிட்ட? இப்பிட் கலைல எல்லாமே பக்கத்து மாநிலத்துலர்ந்து கடன் வாங்கி வாழ்ற உங்களுக்கெல்லாம் கோபம் வர்றதே தப்பு! அத ஒரு பிரைவேட் ப்ளாக்ல் எழுதுனா, யாரு படிப்பா? பொலிடிக்க்ஸ் தெரியுமா? பின்நவீனத்துவம் தெரியுமா? அதிகமா தேவையேயில்லாம நிறைய தகவல்கள் தெரிஞ்சு வைத்திருக்கீங்க! அதனால நிங்க நான் சொல்லற படி செய்யுங்க! இப்பிட் பல தகவைகள தெரிஞ்சுக்குங்க, but No Politics!!!! கிசு கிசு எழுதுங்க! வாழ்ற வழியப்பாருங்க சார்!!
நீங்கள் மருது சகோதரர்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது, எனக்கு சின்ன மருதுவின் 15 வயது மகன் துரைச்சாமிதான் நினைவுக்கு வருகிறார். அவரையும், அவரோடு சேர்த்து 73 கிளர்ச்சியாளர்களையும் பிரின்ஸ் ஓஃப் வேல்ஸ் (பினாங்கு, மலேசியா) எனும் இடத்திற்கு நாடு கிடத்தினர் ஆங்கிலேயர்கள். உணவு, நீர் ஏதும் கொடுக்கப்படாமல் அங்கு கைவிடப்பட்டனர். அவர்களின் வழித்தோன்றல்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை.
விடாதீர்கள் சதீசு குமார்.கண்டுபிடியுங்கள்.வெளிக்கொண்டு வாருங்கள்.வரலாற்றைப் புலப்படுத்துங்கள். நண்பர் தங்கமணி பிரபு போன்ற நல்ல தமிழ் உணர்வாளர்கள் வயிறெரிந்து நொந்து போவதற்குள் நிறையச் செய்ய வேண்டியுள்ளது.
Post a Comment