Wednesday, January 20, 2010

## உலக அரங்கில் தலை குனிந்த இந்தியா



இலங்கை முள்வேளி முகாம் ஒன்றில் இறந்து போன ஒரு தமிழ்ப் பெண்ணின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது, வயிற்றில் 450 மில்லி அளவு விந்து இருந்தது. அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் கொட்டப்பட்டவை அவை” என்று செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஜோசப் பிரெடரிக் என்பவர் மனம் நொந்து கொடுத்த அறிக்கையைப் படித்த பின்னரும், பதவிப் பித்திலும், அதிகார மமதையிலும், இருக்கும் நம் அரசியல்வாதிகளுக்குஒரு துளிக் கண்ணீர் கூட வரவில்லை.

இதைத்தான் ‘தேவரனையர் கயவர்; அவரும்தான் மேவன செய்தொழுகலான்’ என்று நிஜமான குறளோவியமாகச் சொன்னார் திருவள்ளுவர். இதயம், உணர்வு, மனிதாபிமானம், கண்ணீர் இவற்றோடு நியாயமும் தர்மமும் ரத்தமும் சதையுமான பொது மக்களின் மேற்சொன்ன உணர்வுகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ‘இந்தியா... இந்தியன்... ஒருமைப்பாடு...’ போன்ற வார்த்தைகளை-ஊரை ஏய்ப்பதற்காக அல்லாமல் உண்மையாக இதயசுத்தியுடன் சொல்லும் ஒவ்வோர் இந்தியனும், மனிதாபி-மான உலகம் மானசீகமாக உமிழ்கிற எச்சிலை மூச்சுத் திணற முகத்தில் ஏந்தும் நிலையை ஏற்படுத்திவிட்டது, ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கற்பனைக்கும் எட்டாத கொடுங் கொடூரக் கொடுமைகள்! அமெரிக்கா, கனடா, ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா என்று உலகம் முழுக்க தமிழர்கள், சிங்கள மிருகங்கள் செய்யும் கொடுமைகளைப் பற்றி அந்தந்த நாடுகளில் பேசும்போது, அந்த மக்கள் எல்லாம் அதற்கு செவிமடுக்கின்றனர். இதயம் சுரக்கின்றனர்.

அடுத்தடுத்த நிமிடங்களில் அறிவு சுரந்து அவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்.

“தனது நாட்டின் மூத்த தேசிய இனத்தின் வரலாற்றுப் பாரம்பரிய நீட்சியாக வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை-களுக்குத் துணை போகிற... ஆண்மையற்ற தேசமாக இந்தியா ஏன் இருக்கிறது?” என்பதுதான். ராஜீவ்காந்தியின் மரணம் என்கிற, நியாயம் மாதிரியான ஒரு தோற்றம் அங்கே எடுபடாது. ஓர் உயிருக்காக ஓர் இனமே அழிவதா? பிரதமர் என்றால் என்ன கொம்பா? மக்களின் வேலையாள்தானே அவர்? என்று யோசிக்கிற உண்மை-யான ஜனநாயக தேசங்கள் அவை.

“ராகுல் இப்போது பிரதமர் ஆக முடியாது” என்று சோனியா அர்த்தபுஷ்டியோடு பேசுவது போலவோ, “பிரதமர் ஆகும் தகுதி இப்போது எனக்கு வரவில்லை” என்று ராகுல் ஈழத்துப் பிணங்களின் குவியல் மீது உள்ள ரத்த வாடையை மணந்தபடி ஏக்கப்படுவது போலவோ அந்த தேசங்களில் முடியாதே!

உலகெங்கும் உள்ள யூதர்கள், “எங்கள் இனம் எப்படித் திட்டமிட்டு அழிக்கப்-பட்டதோ, அப்படியே இன்று தமிழினம் அழிக்கப்-படுகிறது. அந்த வலியை வேறு எவரையும் விட எங்களால் அதிகம் உணர முடியும்” என்று ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர்.

அநியாயம் செய்ததால், மற்றவரை ஏய்த்ததால் பழி-வாங்கப்பட்டு நசுக்கப்பட்ட இனம் யூத இனம். ஆனால் தமிழினம் அப்படி எதுவும் பெரிதாகச் செய்தது இல்லை. (தன்னினத்தவனைத்தான் அது காலை வாரும்.) ஆனால் யூத இனமே ஈழத்-தமிழனுக்கு இரக்கப்படும்போது, காந்தி தேசம் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து காட்டிக் கொடுக்கிறது.


ஆனால், இலங்கை என்பது குட்டி தேசம். அதிலும் பாதிதான் சிங்களனுக்குச் சொந்தமானது. ஆனால் அந்த சிங்களம், இவ்வளவு பெரிய இந்தியாவை பிளாக்மெயில் செய்து மிரட்டி, ஒரு மாபெரும் இன அழிப்புக்குத் துணை வர வைத்துவிட்டது. அதுவும் இந்தியா, தன் நாட்டின் தேசிய இனத்து மக்களையே அழிக்கத் துணை போகிறது. பரப்பளவு, பொருளா-தாரம், இன்னபிற பலங்களில் மிகவும் பின்தங்கிய சிறிய நாடான இலங்கையால் இந்தியாவை மிரட்ட முடியும் என்றால், இலங்கையை-விட பல மடங்கு உயர்ந்த - சிறந்த - வளர்ந்த - நாம் ஏன் ஏதேனும் ஒரு விஷயத்தில் நம் நலனுக்காக இந்தியாவுக்கு ஆட்டம் காட்டக் கூடாது? என்றே மற்ற சிறிய நாடுகள்கூட யோசிக்கும்.

விளைவு, எதிர்கால இந்தியா குறு நரிக் கூட்டத்திடம் சிக்கிய கிழட்டுக் குருட்டு யானை போல நிற்க வேண்டி வருமே என்ற பயம் எழுகிறது.

இதைவிட விபரீதம் ஒன்று உண்டு.

இந்தியாவின் முதல் முக்கிய பகை நாடு பாகிஸ்தான் என்றும், இரண்டாவது முக்கிய பகை நாடு சீனா என்பதும் உலகம் அறிந்த உண்மை.

ஆனால், ஈழத்தமிழனை அழிக்க பாகிஸ்தான், சீனா ஆகியவற்றோடு ஒன்றிணைந்து இந்தியா ஈடுப‌ட்டது

சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆரம்பத்தில் உலக நாடுகள் பெரிதாக மதித்துவிடவில்லை. அங்கீகரிக்கவில்லை. அப்போது இந்தியாவை உலகம் மதிக்கக் காரணமாக இருந்தது இரண்டே விஷயங்கள். ஒன்று காந்தியின் அகிம்சை. இன்னொன்று நேருவின் மனிதாபிமானம் சேர்ந்த நடுநிலைமையின் மகுடம் சூடிய அணி சேராக் கொள்கை!

அந்த இரண்டையும் அழித்து, இன்று இந்தியாவை மீண்டும் உலக அரங்கில் தலைகுப்புறத் தள்ளுவதும் இரண்டே விஷயங்கள்தான். சோனியாவின் ஏவல் ஆட்களாக மாறிப் போன அரசியல்வாதிகளால், இன்று இந்தியாவின் கைகளில் படிந்துள்ள ஈழ ரத்தம். அதனால் உலக நாடுகள் உமிழ்ந்து நம் முகம் முழுக்க வழியும் எச்சில். நம் அன்னை பூமிக்கு இந்த இழிநிலை தேவைதானா?

No comments:

Post a Comment