Friday, October 9, 2009

# எட்டுக் கொலை சோனியாவும் பெட்டிக் கேஸ் ஒபாமாவும்




கடந்த ஒரு வாரமாக ஒரு பயங்கரத் திகிலில் நான் தவித்தேன்.

அடிக்கடி வியர்த்துக் கொட்டியது

இரவில் வரிசையாக கெட்ட கனவு.

காரணம் நான் படித்த ஒரு செய்தி.

பன்னாட்டு விழிப்புணர்வுக் கழகம் (இண்டர் நேஷனல் அவேர்னெஸ் ஆர்கனைசேஷன்) என்ற ஒரு அமைப்பு போட்டஒரு குண்டுதான் அதற்குக் காரணம்.

உலக சமாதானத்துக்கான நோபல் பரிசை சோனியா காந்திக்கு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பு ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

உங்களை எல்லாம் இப்படி ஒரு செய்தியைச் சொல்லிஅதிர வைப்பதற்கு வருத்தமாகத்தான் உள்ளது . ஆனால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லையே.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் தொடர்ந்து ஏழு வருஷங்களாக
அந்த அமைப்பு இந்த கேவலமான வேலையைச் செய்து வந்ததுதான்.(அன்பு, சமாதானம் இவற்றுக்கு எல்லாம் ஏழாம் பொருத்தமாக விளங்கும் சோனியாவை ஏழு வருடங்கலளாக சிபாரிசு செய்ய வேண்டுமானால் உள்ளுக்குள் எந்த அளவு அழுகிப் போயிருக்க வேண்டும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்)

எனக்கு குமட்டலாகவே இருந்தது .

நல்லவேளை .. சமாதானத்துக்கான நோபல் பரிசை ஒரு வழியாக ஒபாமாவுக்கு
கொடுத்ததாக அறிவிப்பு வந்திருக்கிறது.

அனேகமாக சோனியாவுக்கு கிடைக்கும் வாய்ப்புக் கூட இருந்திருக்கலாம்.
ஆனால் இந்த வருடம் கிடைக்காமல் போன‌தற்கு ஈழ அழிப்பு மட்டுமின்றி
இன்னொரு காரணமும் உண்டு.

இந்த வருடம் நோபல் பரிசுக்கு சோனியா சிபாரிசு செய்யப் பட்ட போது கூறப்பட்ட ஒரு காரணம்...........

" சோனியா உலகத்து உயிர்கள் எல்லாம் அமைதியாக வாழ்வதற்கு அன்னை தெரசாவைப் போல சேவை செய்து வருகிறார்"

என்பதுதான்.( கேள்விப் பட்ட போது எனக்கும் இப்படிதாங்க இருந்திச்சு)

அனேகமாக இறந்து பட்ட ஈழத் தமிழர்களின் ஆன்மாவோடு அன்புத் தெய்வமான அன்னை தெரசாவின் ஆன்மாவும் சேர்ந்து சோனியாவுக்கு சாபமிட்டிருக்க வேண்டும்.

ஒருமுறை அனாதைக் குழந்தைகளின் நலனுக்காகப் பணம் வேண்டி கல்கத்தா நகர வீதிடில் கையேந்திப் பிச்சை எடுத்துக் கொண்டு வந்தார் அன்னை தெரசா. ஒரு கடை வாசலில் நின்று அவர் கையேந்தியபோது அந்தக் கடைக்காரன் அன்னையின் கையில் எச்சில் துப்பி " இதோ கொடுத்து விட்டேன் " என்றார்.

சற்றும் முகம் சுளிக்காத அன்னை அந்த எச்சிலை தன் புடவையில் மெதுவாகத் துடைத்துக் கொண்டு " சரி .. இதை நான் வைத்துக் கொண்டேன்.பசியால் தவிக்கும் என் பிள்ளைகலுக்கு எதாவது கொடுப்பா" என்றார். கதறிவிட்ட அந்தக் கடைக்காரன் கல்லாப் பெட்டியில் இருந்து எண்ணிப் பார்க்காமல் அள்ளிக் கொடுத்தான்.

அந்த அன்னை எங்கே? ஒரு இனத்தின் அழிவுக்கே துணை போன இந்தத் தொன்னை எங்கே?

அந்த அன்புத் தெய்வத்தை சோனியாவோடு ஒப்பிட்ட பாவத்தை ,இவர்கள் எங்கே சென்று எந்த ஜென்மத்தில் எந்தக் கடல் நீரை மொத்தமாக ஊற்றிக் கழுவுவார்கள்?

சோனியாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தரப் படவில்லை என்ற செய்தி வந்த பின்புதான் எனக்கு நிம்மதி. " இவங்களுக்கு எங்க கிடைக்கப் போகுது ?எதுக்கு இவ்வளவு பதட்டம் ?" என்று சொல்பவர்களுக்கு வணக்கம்.அதை என் அறிவும் சொன்னது.

ஆனால் உலக நாடுகளையே வேடிக்கை பார்க்க வைத்து ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நோபல் பரிசு 'வாங்கு'வதா சிரமம் என்ற அச்சமும் எழுந்ததே!

ஒரு வேளை சோனியாவுக்குக் கிடைத்துவிட்டால் அப்புறம் அடுத்தடுத்து ராஜ பக்சே, சரத் பொன்சேகா, கருணா, மன்மோகன் சிங், எம். கே. நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோனி , ப.சிதம்பரம், கருணா நிதி , தங்க பாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் .. என்று சோனியா வகையறாக்கள் அடுத்தடுத்து சிபாரிசு செய்யப் படுமே என்ற கொடூர பயம் வேறு.

நல்ல வேளை.. நோபல் பரிசின் தலை தப்பியது !

இந்த அளவுக்காவது நோபல் பரிசு ' நோபிள்' பரிசாக இருப்பது சந்தோஷம்.

ஆனால் ஒரு எச்சரிக்கை.

ஏழு தடவை சலிக்காமல் ஜிஞ்சா அடித்தவர்கள் எட்டாவது தடவையும் சலிக்காமல் அடிப்பார்கள் .

எத்தனை தடவை அடித்தாலும் ஈழத் தமிழர்களை அழித்த பாவத்துக்காக சோனியாவுக்கு நோபல் பரிசு ' நோ' சொல்லிக் கொண்டே இருந்து விட வேண்டும். அதற்காக உலகத் தமிழர்கள் என்றும் குரல் கொடுக்க வேண்டும்.இது கட்டாயம்.

பின் குறிப்பு:‍ சமாதானத்துக்கான நோபல் பரிசை ஒபாமாவுக்கு கொடுத்தது மட்டும் நியாயமா என்று பின்னூட்டம் எழுதத் துடிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை .

ஒபாமாவும் தகுதியற்றவர் என்ற யாராவது கருத்து தெரிவித்தால் அது க்வனிக்கப் பட வேண்டிய கருத்து. ஆனால் ஒபாமாவுக்கெ தரப் படக் கூடாது என்றால் சோனியா அந்தத் திசையிலேயே நிற்கக் கூடாது .

ஏனெனில் அநியாயமாக எட்டுக் கொலை செய்தவனை ஆதரிக்க ,அவசரத்தில் பெட்டிக் கேசில் சிக்கியவனை திட்ட முடியாது அல்லவா?

Thursday, October 1, 2009

# ஆ........!


அ முதல்
ஃ வரை
ஐம்பது முறை ,

தனது
நோட்டுப் புத்தகத்தில
அழகாக எழுதிய
என்
ஐந்து வயது மகளின்
திறமைக்கு ...

அந்தத‌
தமிழாசிரியை
அளித்திருந்த
பாராட்டு வாசகம்...
v.v.good!

Friday, September 18, 2009

#மனசாட்சியில்லாத கமலஹாசன்


இப்போதுதான் உன்னைப் போல் ஒருவன் பார்த்து விட்டு வந்து இதை எழுதுகிறேன்

மூலப் படமான 'வெட்னஸ் டே'யில் அனுபம் கேர் செய்த அளவில் பாதி கூட அந்தக் கதா பாத்திரத்தை மோஹன் லால் செய்யவில்லை( இதில் 'கேரளா மட்டுமல்ல ; இதுவும் ‍ அதாவது தமிழ் நாடும் என் நாடுதான்' என்பது போன்ற வெட்டி வீராப்புகள் ஓரு பக்கம்)

கமல் நடிப்பு நன்றாக இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை. ஆனால் அந்தக் கதாபாத்திரத்துக்கு இந்தியில் நசுருதீன் ஷா 100 விழுக்காடு பொருத்தம் என்றால் , கமல் 60தான். கமலின் தோற்றம் தோரணை எல்லாம் ஒரு சாதரண மனிதன் கதா பாத்திரத்துக்கு பொருந்தி வரவில்லை.

ஆனால் இதையெல்லாம் மீறி ,கமலின் நடிப்புக்காக ரசித்து விட்டுப் போகலாம் என்று பார்த்தால் ......
கமலுக்கே அது பிடிக்கவிலை போலும்.

விருந்து பரிமாறி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ,முடியும் நேரத்தில் இலையில் கொஞ்சம் சாக்கடையை அள்ளி
ஊற்றினால் எப்படி இருக்கும்?

அதே கதை.

கடைசிக் காட்சிகளில் கமல் தீவிரவாதத்துக்கு எதிரான சாதாரண மனிதனின் நிலையில் இருந்து பேசுவார். அதில் கமல் உதிர்த்திருக்கும் முத்து .... இல்லை இல்லை , ஒரு உப்பு

" மும்பையில டில்லியில குண்டு வெடிச்சா தமிழ் நாட்டுல யாரும் அதுக்காக வருத்தப் படறது இல்ல... அங்க தான வெடிக்குது ... நம்ம ஊர்லயா வெடிக்குதுங்கற நினைப்பு. இங்க உள்ளவங்களைப் பொறுத்தவரை அது ஒரு நியூஸ். தட்ஸ் ஆல்"

என்பதுதான் அந்த வசனம்.

ஹலோ மிஸ்டர் கமல் !

எந்த ஊருல நீங்க இருகீங்க? உங்க அப்டேட்டிங் அறிவு இம்புட்டுதானா?

பிரபாகரனின் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வட இந்தியாவுக்கு காவிரி பிரச்னை பற்றியோ முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றியோ கவலை இல்லை. தமிழ் நாட்டில், ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றிக் கவலை இல்லை.

இன்றும் இலங்கையில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பி அடிமைகளாய் வாழ்வது பற்றி , அவர்கள் படும் கற்பனைக்கப்பாற்பட்ட துயரங்கள் பற்றி , தமிழ்ப் பெண்களின் கர்ப்பப் பைகள் ஆப்பரேஷன் மூலம் அகற்றப் படுவது பற்றியும் தமிழ் ஆண்கள் திட்டமிட்டுக் கொல்லப் படுவது பற்றியும் உலகத் தொலைக்காட்சிகள் எல்லாம் கண்ணீர் வடித்தாலும், உங்கள் 'இந்தி'யத் தொலைக்காட்சிகளுக்கு அது தெரியாத 'இனக் ' குருடு என்ற மன நோய் இருக்கும்.

ஆனால் தமிழ்னாட்டில் உள்ளவன் மட்டும் வட இந்தியாவில் ஒரு சைக்கிள் டியூப் வெடித்தாலும் மாரடித்துக் கொண்டு மண்ணில் புரண்டு அழ வேண்டுமா கமல்'ஜி'?

உங்கள் கருத்துப்படியே பார்த்தாலும் மும்பையிலும் டில்லியிலும் குண்டு வெடிப்பது நடப்பது இங்கே முதல் பக்க கொட்டை எழுத்துச் செய்தியாகவே அதாவது நியூச் ஆக வாவதுமாறி விடுகிறது

ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் இங்கே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது உங்கள் வட இந்தியச் சேனல்களில் நியூஸ் ஆகக் கூட வருவது இல்லையே கமல்'ஜி'?

இதை அங்கே சொல்லக் கூடிய விருமாண்டி வீரம் உங்களுக்கு உண்டா?

படத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லாலிடம் நீங்கள் ஒரு காட்சியில் சொல்வீர்களே , " நீங்க விதம் விதம அவார்டு வாங்கிக் குத்திக்கலாம் " என்று .

அது போல உங்களுக்கு இன்னும் விதம் விதமாய் அவார்டு வாங்கி உடம்பு புண்ணாகும் அளவு குத்திக்கொள்ள ஆசை இருக்கலாம் . அதற்காக ஏன் மனிதாபிமானமுள்ள தமிழர்களின் மனசைப் புண்ணாக்குகிறீர்கள்?

ஒன்று புரிகிறது கமல்....!

ஒரு காட்சியில் உங்கள் கதாபாத்திரம் பற்றிச் சொல்லும் அந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்ப இளைஞன் சொல்வானே.... " ஹி இஸ் பிரெய்னி ... ஆனா மேதை இல்ல...." என்று.

அதை சற்று மாற்றினால் , உங்களுக்கும் அது பொருந்தும்.

நீங்கள் சிறந்த நடிகராக இருக்கலாம்....

ஆனால் நியாய உணர்வுள்ள. நல்ல கலைஞன் இல்லை.!

Thursday, July 16, 2009

# மனசெல்லாம் முதல் ஆசிரியை


அருமை நண்பர் செந்தில்வேலன், தனது பள்ளி நினைவுகள் பற்றிய ஒரு
பதிவிற்குப் பின்னூட்டமாக எனது பள்ளி நினைவுகள் பற்றிய ஒரு பதிவைக்
கேட்டிருந்தார். அந்த அன்புக்காக நான் எழுதி அவரது பதிவிற்குப் பின்னூட்டமாக
பதித்திருந்தேன்.

அதை படித்த அவர் , ' இது எனது பதிவின் பின்னூட்டமாக இருந்தால் மட்டும்
போதாது . இந்த அழகான பதிவு உங்கள் வலைப்பூவிலும் தனியாக இடம் பெற
வேண்டும் என அன்புக் கட்டளை இட்டதால் .. இதோ இங்கும்!


4 வயசு.
பாலர் பள்ளி .
எனக்கு பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது.
அம்மா கூடவே இருக்க ஆசை

முட்டை பணியாரம் நிறைய தின்று தின்று அப்பவே ரொம்ப குண்டாக இருப்பேன்.

ஆசிரியர்கள் மிகவும் கடமை உணர்ச்சியோடு பணியாற்றிய காலம் அது.

விஜயா டீச்சர் என் பாலர்பள்ளி ஆசிரியை , அம்மா அப்பவுக்குப் பிறகு என் முதல் ஆசிரியை. ரொம்ப ஒல்லியாக இருப்பார். அவருக்கு அடிக்கடி இருமல் வரும்.

என்னை பள்ளிக்கூடம் அழை(இழு)த்துப் போக அவர் வீடு தேடி வருவார்.எனக்கு அவரைப் பார்த்ததும் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்று அழுகை அழுகையாய் வரும். தெறித்து ஓடித் தப்பிக்கப் பார்க்கும் என்னை இழுத்துப் பிடித்து அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

அவர் என்னை இழுத்துப் பிடித்து இடுப்பில் உட்கார வைத்துக் கொள்வார். பள்ளி நோக்கி நடப்பார். நான் ஆத்திரம் தாளாமல் அவர் நெஞ்சில் ஆத்திரம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கிக் குத்துவேன்.

அடியின் வலி தாள முடியாது இருமிக் கொண்டே தட்டுத் தடுமாறிச் சமாளித்தபடி என்னைத் தூக்கிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளியில் போய் இற‌க்குவார்.

அழுத அழுகையில் போன உடன் காலைக்கடன் வந்து விடும். ஒரு தாயைப் போல லொஞ்சம் கூட கூசாமல் கழுவி விடுவார். பின்னர் பிஸ்கட் கொடுத்து தாலாட்டியபடி குதிரை பொமையில் உட்கார வைத்து ஆட வைத்து சமாதானப்படுத்துவார்.

நான் அவரை செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை.ஒரு நாளும் முகம் சுளித்ததாய் நினைவு இல்லை. இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கிறது.

அண்மையில் என் மகள் PreK.G. முடித்தபோது கடைசி நாள் அந்த வகுப்பறை ஆசிரியை காலில் என் மகளை விழுந்து வணங்கச் செய்தேன். ஒரு நனறி வாழ்த்து மடல் கொடுக்கச் செய்தேன்.

மனசெல்லாம் விஜயா டீச்சர்.

Wednesday, July 15, 2009

# கொலை விழுந்த வீடு



"அந்த வீட்டுக்குக்
குடி போக வேணாம் "

அம்மா சொன்னார்கள்.

"அஞ்சாறு மாசம் முன்னாடி
வயசுப் பொண்ணொருத்திய,

அந்த வீட்டுல
ரெண்டு ரவுடிப் ப்சங்க‌

கெடுத்துக்
கொலை பண்ணிட்டாங்களாம்.

குழந்தைங்க இருக்கற
நம்ம
குடும்பத்துக்கு
ஆகாது
அந்த வீடு ...!"

அய்ய்ய்யோ அம்மா....
நூற்றுக்கணக்கான
குழந்தைகளைக் கொன்று
ஆயிரக்கணக்கான
கற்பழித்து
லட்சக்கணக்கான
கர்ப்பப்பைகளைச் சிதைத்து ...

கிளி நொச்சியைக்
கிரானிகா ஆக்கி
முல்லைத்தீவை
மூலதூவா ஆக்கி...

ஓர்
இனமே இருந்த
அடையாளத்தை அழித்து
கும்பல் கும்பலாகக்
குடியமர்த்தப் போகிறானே..

அவன் இனம் மட்டும்
எப்படித் தாயே
உருப்படும்?