Tuesday, May 11, 2010

# இந்தியக் கௌபாய்களின் இனமான சிங்கம்





தமிழ் சினிமாவுக்கு கௌபாய் படங்கள் ஒன்றும் புதிதில்லை . ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் குடிசைத் தொழிலாகவே கௌபாய் படங்கள் இருந்திருக்கின்றன . ஆனால் இப்படி ஒரு அற்புதமான கௌபாய் திரைப் படம் தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே இதுவரை வந்ததில்லை . இனியும் வரப் போவதில்லை . ஒருவேளை வந்தால் மறுபடியும் அது இயக்குனர் சிம்புதேவனின் படமாக இருந்தால் மட்டுமே உண்டு .


எல்லோரும் நேசிக்கப் பட்ட கலாச்சாரங்களில் கௌபாய் கலாச்சாரமும் ஒன்று . ஸ்பெய்ன் நாட்டில் துவங்கி வட அமேரிக்கா வரை அது பரவியதை உலக வரைபடத்தில் கௌபாய் தொப்பி உருண்டு உருண்டு பறப்பதைக் காட்டும்போதே மீண்டும் ஒருமுறை நாம் பரவசப் படப் போகிற ஒரு உலகத்துக்குள் கூட்டிப் போக முடிவு செய்து விட்டார்கள் என்று புரிகிறது . இத்தாலிய கௌபாய்கள் முதற்கொண்டு தாய்லாந்து கெளபாய்கள் வரை இதுவரை கௌபாய் உலகத்துக்கு அறிமுகமில்லாத ரசிகர்களுக்கு இயக்குனர் குரலில் அறிமுகம் கொடுப்பதில் துவங்கும் சிரத்தையும் அக்கறையும் கடைசி வரை கரம் சிரம் புறம் நீட்டாமல் பொறுப்பாய் படம் முழுக்க பயணித்துக் கிடக்கிறது .

ஷோலேபுரம் ( சீரியசான கௌபாய் படங்களின் இந்திய முத்திரையாக அமைந்த இந்திப் படம் ஷோலே ஞாபகம் வருகிறதா?) என்று ஒரு கௌபாய்த்தனமான ஊர் . அங்கு இருந்த ஒரு விலை உயர்ந்த முள்ளங்கி வைரத்தை( சைஸ் அப்படி) திருடியதற்காக அல்ல ...... முட்டை பரோட்டாவும் பிரியாணியும் தின்று விட்டு நன்றாகத் தூங்கி திருடுபோகக் காரணமான குற்றத்துக்காக --- சிங்காரம் என்ற அப்பாவிக்கு ( ராகவா லாரன்ஸ்) தூக்குத் தண்டனை விதிக்கிறது , காந்தி படத்துக்குப் பதிலாக அமிதாப் ஜி படமும் ( காரணம் ஷோலே படம்) நீதிதேவதையின் கையில் உள்ள தராசுத்தட்டுக்குப் பதிலாக ஒரு லிட்டர் முகத்தல் அளவைப் பாத்திரமும் தந்திருக்கும் வித்தியாச நீதிமன்றம் .

தூக்கு போடும் தருணத்தில் டகில பாண்டி ( இளவரசு ) தலைமையிலான சிலர் சிங்காரத்தைக் காப்பாற்றுகின்றனர் . அவர்கள் இருக்கும் ஊர் ஜெய்ஷங்கர்புரம் ( தமிழில் அதிக கௌபாய் படங்களில் நடித்தவர் ) ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்களின் கௌபாய் ஹீரோக்கள் , பின்னர் கர்ணன் போன்றவர்கள் ஆண்ட ஊர் (கர்ணன் தமிழின் நிறைய கௌபாய் படங்களை இயக்கியவர் . ) எம்.ஜி .ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில் ஓகோவென்று இருந்த ஊராம் அது . (வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர் .கௌபாய் உடையில் நடித்த படம் ) ஆனாலும் ஜெய்ஷங்கர் பிற்காலத்தில் ரொம்பகாலம் ஆண்டதால் அவர் பெயரே ஊருக்கு நிலைத்து விட்டது .அங்கு இருந்த சிங்கம் என்ற தலைவனைக் காணவில்லை . ஆனால் அவர்களிடம் நம்ம ஷோலேபுரத்து சிங்காரத்துக்கு தேவையான அதே மாதிரி முள்ளங்கி வைரம் இருக்கிறது . அது கிடைத்தால் கொடுத்துவிட்டு தமது ஊர் தூக்குத்தண்டனையில் இருந்து சிங்காரம் தப்ப முடியும் . ஆனால் சிங்காரம் ஜெய்ஷங்கர் புரத்துக்கு ஒரு பெரும் உதவி செய்ய வேண்டும் .

அதாவது தமிழ் சினிமா உலகின் மிகக் கொடிய வில்லனான அசோகனின் மகன் கிழக்கு கட்டை. (நடிகர் நாசர்) பிரபல ஹாலிவுட் நடிகர் கிளின்ட் 'ஈஸ்ட் உட்' என்பதன் தமிழாக்கமே கிழக்கு கட்டை . அவன் கூட்டணியில் பத்மப் பிரியா , சாய்குமார் போன்ற வில்லன் வில்லிகள் . இந்த கொடூர வில்லன்களிடம் இருந்து ஜெய்ஷங்கர் புரத்துக்கு சிங்காரம் விடுதலை வாங்கித் தரவேண்டும் .
இடையே இவர்கள் எல்லோருமே பயப்படுகிற அளவுக்கு வாழும் செவ்விந்தியக் கூட்டம் . (நடிகர் செந்தில் , எம்.எஸ்.பாஸ்கர் , இளவரசியாக காதல் சந்தியா மற்றும் பலர் ) "ஜெய்ஷங்கர் புரா ஷப்பா ஜெர்க்கா ஷயா துர்" என்று (ஜெய்ஷங்கர் புரம் ஸ்டைல்ல ஜெர்க் அடிக்கிறமாதிரி ஒரு பாட்டு பாடு என்று பொருள் ) என்று பேசும் எம் எஸ் பாஸ்கர் . அவர் பேசுவதை மட்டுமல்லாமல் அழுவது சிரிப்பது மூச்சு வாங்குவது என்று எல்லாவற்றையும் தமிழில் மொழி பெயர்க்கும் சாம்ஸ் (மரணத் தறுவாயிலும் மொழி பெயர்ப்பது பிரம்மாதமான நகைச்சுவை)

ஜெய்ஷங்கர் புரம் மக்களுகாக செவ்விந்தியர்களின் அன்பைப் பெற்று கிழக்கு கட்டையின் ஆசைப்படி ஒரு பெரிய புதையாலை எடுத்து அவனுக்கு கொடுத்து , இடையே டகிலபாண்டியின் துரோகத்தையும் சமாளித்து ... சிங்காரம் ஜெயிக்கிறானா என்பதுதான் கதை ......

--என்று சும்மா சொல்லிவிட்டுப் போக இது ஒன்றும் வழக்கமான சினிமா அல்ல . பார்க்கும்போதுதான் படத்தில் நீள , அகல , உயர ,ஆழ கன பரிமாண பரிணாமங்கள் புரியும் .

பொதுவாக சிம்புதேவனின் கதைக் கரு வித்தியாசமாக இருக்கும். எளிமையாகவும் இருக்கும் . அதேநேரம் தேனீ கூட்டில் தேன் சேகரிப்பது போல திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியில் காட்சி அமைப்புகளில் தனித்தனி ஷாட்களில் என்று எந்த இடத்தையும் விட்டு விடாமல் எதாவது ஒரு விஷயத்தை கேலியாக கிண்டலாக இல்லை மறை காயாக சொல்லி ஒவ்வொரு கிலோவாக லோடு ஏற்றி அடர்த்தியான திரைக்கதையை நகைச்சுவையாகவும் கொண்டு வந்து அசத்தி விடுவது சிம்புதேவனின் ரகசிய சினிமா சூத்திரம் . இந்தப் படத்திலும் அதே அசத்தல் .

படத்தில் வரும் சாராயக் கடையின் பெயர் பாஸ்மார்க் . துணை வாசகம்? 'குடி குடியை ரேப் செய்யும்'. என்பதுதான் . கெடுக்கும் என்ற வார்த்தையின் இன்னொரு உருவாக்கம் .
ஒரு கடையின் பெயர் ரிவிட் ஃப்ரெஷ் (ஞா பகம் வருகிறதா ரிலையன்ஸ் ஃப்ரெஷ் ?) ஒரு பத்திரிக்கையின் பெயர் தின ஒப்பாரி (யாராவது பதிவு பண்ணிடப் போறாங்க)

வில்லனின் ஊருக்கு தமிழில் உசா புரம் என்று பெயர் . அதன் ஆங்கில பெயர் U S A PURAM . அந்த ஊர் ஜெய்சங்கர் புரத்தோடு அணுகுண்டு ஒப்பந்தம் போட வரும் . நாங்கள் அணுகுண்டு தருவோம் . ஆனால் அதை நீங்கள் வெடிக்கக் கூடாது . தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது . சத்தமாக தும்மக் கூடாது . என்றெல்லாம் நிபந்தனைகள் . பெரியவர் ராகவன் போய்க் கேட்பார் . "வாயு கழியும்போது சத்தம் வருமே என்ன செய்வது . ?" அதற்கு u s a புரத்தார் சொல்லும பதில் "பயிறு பட்டாணி போன்றவற்றை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் " என்பதுதான் . நகைச்சுவைக் காட்சியில் உலகாளாவிய கோபக் கிண்டல் !

எதற்கெடுத்தாலும் டாட் காம் ஆரம்பிக்கும் பழக்கத்தைக் கண்டித்து ஜெய்சங்கர் சிலையில் www,jaishankar.com என்றும்அசோகன் சிலையில் www.ashokan.com என்றும் எழுதியிருப்பது முதற்கொண்டு பல இடங்களில் இந்த நகாசு நகைச்சுவை கலக்குகிறது . இப்படி படம் முழுக்க ஜொலிக்கும் இனிப்பான சிறு சிறு விமர்சன கிண்டல் விவரணைகள் அபாரம் !

ஒரு காட்சியில் செவ்விந்தியர்களின் கழிவறைகளில் தண்ணீருக்கு மாறாக பேப்பர் இருக்கும் . அந்த பேப்பர்கள் ..... நமது கட்சிகளின் தேர்தல் அறிக்கை !.

மக்கள் காலமாக வாழும் ஊரில் திடீரென்று சுங்கச் சாவடி அமைத்து அவர்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கே காசு வாங்கும் நவீன டோல்கேட்களை புரட்டி அடிக்கிறது ஒரு காட்சி . புதையல் தேடித் போகும்போது வழியில் புதையல் சாலை சுங்கச் சாவடி இருக்கும் . குதிரைக்கு பத்து ரூபாய் . ஜட்காவுக்கு இருபது ரூபாய் என்று போர்டு இருக்கும் . சிங்கிளா டபுளா என்று கேட்பான் பணம் வசூலிப்பவன் . நெடுஞ்சாலைத் துறை என்பதற்கு பதில் இங்கே கொடுஞ் சாலைத் துறை என்று போர்டு வைத்திருக்கிறார் சிம்புதேவன் . அங்கே வசூலிக்கும் மனிதன் அந்த மண்ணுக்கே சம்மந்தம் இல்லாத ஒருவனாகக் காட்டி அதன் மூலம் நமது சுங்கச் சாவடிக் கொள்ளைகளின் மூலம் எது என்பதை உணர்த்தும் தொனி, பாராட்டுக்குரியது .

புதையல் தேடித் போகும்போது பல புதிர்கள் இருக்கும் . அதில் ஒரு புதிர் .'நம் இனத்தாரை அல்லையில் குத்தி அகதி ஆக்கும்போது நாம் என்ன செய்வோம்' . நான்கு வாய்ப்புகள் . 'கிரிக்கெட் பார்தது உணர்ச்சி வசப்படுவோம் . கலக்கப் போவது யாரு பார்தது கை தட்டுவோம் . சினிமா பார்தது சீட்டி அடிப்போம் ..காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவோம் ..' என்று போகும் காட்சி சிரிக்க சீரியஸ் நகைச்சுவையின் (?) சிகரம் ! . தமிழின் மொத்த எழுத்துக்களைச் சொன்னால்தான் புதையல் எடுக்கும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் நாயகன் உட்பட யாருமே சரியான விடை தெரியாமல் தடுமாறுவது வேதனை நகைச்சுவை ( புது பரிமாணம்) தவறாக சொன்னாலும் கூட தம்மை அறியாமல் சரியான எண்ணில் கால் வைத்து தப்பிக்கும் காட்சியில் நீ தமிழைக் காக்கா விட்டாலும் தமிழ் உன்னைக் காக்கும் என்கிறார் இயக்குனர் .

இது போல படம் முழுக்க பலப்பல காட்சிகள் சிந்தனைக் கண்ணுக்கு சீரிய விருந்து .

"பாஸ் நாங்க மோசம் போயிட்டோம்" என்ற அடியாட்களின் கதறலுக்கு "உங்களை கற்பழிச்ச பொண்ணுங்க யாருடா" என்ற சாய் குமாரின் எதிர்க்கேள்வியில் வசனம் புதிய ட்ரெண்டை உருவாக்கும் அதே நேரம் ,
இன்னொரு காட்சியில் நாசர் "நம்மை எதிர்க்க இங்க பல ஊரு காரனுங்களும் ஒண்ணு சேர மாட்டானுங்க . சோப்பு டப்பா விக்க வந்த ராபர்ட் கிளைவ் கும்பலுக்கு நூத்தம்பது வருஷமா கழுவற வேளை பார்த்த பசங்க தானே இவனுங்க தன்னோட இனமே நடுரோட்டுல நின்னாலும் சரி நடுக் கடல்ல நின்னாலும் சரி இவனுங்களுக்கு ரோஷமே வராது ' என்ற வசனம் எரிமலைக் குழம்பையே எச்சிலாய் உமிழ்கிறது .

"நான் செத்துப் போனதை யாருக்கும் சொல்ல வேணாம் . தலைவன் இல்லன்னு தெரிஞ்சா மக்கள் சோர்ந்து போயிடுவாங்க . அதனால என் மரணத்தை மறைச்சுடுங்க இன்னொரு தலைவன் வருவது உறுதி " என்ற ரீதியில் சொல்லிவிட்டு சிங்கம் சாகும்போது பேசாமல் அந்தக் கதாபாத்திரத்துக்கு புலி என்று பெயர் வைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் எழுகிறது .

இங்கே ஆக்ஷன் ஹீரோக்கள செய்யும் அலப்பறை களுக்கும் அறை கொடுக்க தயங்கவில்லை இயக்குனர் . ஒரு ஈ விளக்கிச் சுற்றிச சுற்றி வந்து சத்தம் போட ஹீரோ மூணு ரவுண்டு சுட்டு தள்ள , " ஒரு உயிரைக் கொல்றது பாவமில்லையா ? என்ற கேள்விக்கு "நான் அந்த ஈயோட உயிரை எடுக்கல ..இறக்கைய மட்டும்தான் சுட்டேன் " என்று சொல்வதும் அடுத்து இறக்கை இல்லாத ஈ ஊர்ந்து போவதும் வெடிச் சிரிப்பு . ( இதுக்கு பிராணிகள் நல வாரியத்துல இருந்து ஏதும் எதிர்ப்பு வரலியே ? )

இப்படி படம் முழுக்க பட்டாசு மழைதான் .

பொதுவாக பிளாஷ்பேக் என்பதை எதாவது ஒரு கதாபாத்திரம்தான் விவரிக்க முடியும் . ஆனால் கடைசியில் நாசர் டெல்லிகணேஷ் பிளாஷ்பேக் துண்டுகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இயக்குனரின் கோணத்தில் பிளாஷ்பேக் சொல்லப் படுவது இதுவரை எந்த மொழிப் படத்திலும் நாம் பார்த்திராத புது உத்தி .

இயக்குனர் சிம்பு தேவனின் பிரேம்களும் அழகப்பனின் ஒளிப்பதிவும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கின்றன .இதோடு படத்தின் டோன் பொருந்தி வர மூன்றும் சேர்ந்து ஒரு முழுமையான ஹாலிவுட் செழிப்புப் படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன .லொகேஷன்கள் தேர்வு பிரம்மாண்டம் மற்றும் பிரம்மாதம்.

ஜி.வி. பிரகாஷ்குமாரின் பாடல் இசையைவிட சபேஷ் முரளி இரட்டையரின் பின்னணி இசை பெரும்பலம் .. அதிலும் அந்த தீம் மியூசிக் படத்தின் பிரம்மாண்டத்துக்கு உற்ற தோழனாய் ஊழியம் செய்கிறது . சபாஷ் சபேஷ் முரளி

சொந்த வேகம் பாதி .. தொழில்நுட்பத்தால் வந்த வேகம் பாதி என்று துப்பாக்கி சுழற்றும் காட்சிகளில் நம் கருவிழிகளை வியப்பால் சுழற்றி அடிக்கிறார் லாரன்ஸ் . நாயகிகளுக்கு வாய்ப்புக் குறைவு ஆனால் வேலையில் நிறைவு . பாஸ்கர் சாம்ஸ் கூட்டணி நகைச்சுவையில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது .

கட்டுமாணமும் கம்பியூட்டர் கிராபிக்சுமாய் பின்னி பெடல் எடுத்திருக்கும் ஆர்ட் டைரக்டர் முத்துராஜின் பெயரில் எதாவது ஒரு ஸ்டுடியோவில் ஒரு நிரந்தர அரங்கமே போட்டு வைக்கலாம் . தப்பே இல்லை . உடையலங்கார நிபுணர் சாய் முழுமையான பாராட்டுக்குரியவர் .

இது போன்ற படங்களில் இணை உதவி இயக்குனர்கள் ராட்சஷ உழைப்பு உழைக்காவிட்டால் இந்த அளவு நுண்மையாக வர வாய்ப்பில்லை . அவர்களும் பாராட்டுக்குரிவர்கள்.

கிளின்ட் ஈஸ்ட் உட் ,. கர்ணன் , எம்.ஜி.ஆர், அசோகன் ஜெய்ஷங்கர் மேஜர் சுந்தர்ராஜன் எல்லாரையும் அடையாளப்படுத்தி விட்டு பாடல்களையும் காட்டிவிட்டு பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த புனைவுக் கதை என்று சொலவது ஒரு சறுக்கல் . அதே போல கொடுஞ்சாலைத்துறை என்ற வார்த்தையை முக்கியத்துவம் கொடுத்து காட்டியிருக்கலாம் . சமையலறையில் இருக்கும் அழகான பெண்ணின் முகத்தில் ஒட்டிய சின்ன கரித் தீற்றல்கள் இவை .

வித்தியாசமான அர்த்தமுள்ள இலட்சியமுள்ள அதேநேரம் சுவையான ரொம்ப அரிதான படைப்பு

நிஜமாகவே சிங்கம் தான் !

மகுடம் சூடும் கலைஞர்கள்
****************************************
இயக்குனர் சிம்புதேவன்
ஒளிப்பதிவு அழகப்பன் .
பின்னணி இசை சபேஷ் -- முரளி
கலை இயக்கம் முத்துராஜ்
உடையலங்காரம் சாய்
தயாரிப்பாளர் அகோரம்
முதன்மை இணை இயக்குனர் விஜய் சங்கர்
இணை இயக்குனர்கள் ஜெகதீஷ் , சிவம் , கணேஷ்
துணை இயக்குனர்கள் ராஜ்குமார் , ரவிகுமார்

8 comments:

King Viswa said...

அருமையான விமர்சனம் செந்தில் சார். முழுவதும், இரண்டு முறை ரசித்து படித்தேன்.

நன்றி.

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

//பிரபல ஹாலிவுட் நடிகர் கிளின்ட் 'ஈஸ்ட் உட்' என்பதன் தமிழாக்கமே கிழக்கு கட்டை . அவன் கூட்டணியில் பத்மப் பிரியா , சாய்குமார் போன்ற வில்லன் வில்லிகள்//

பத்ம ப்ரியா கதாநாயகி, லட்சுமிராய் தான் வில்லி.

கலக்கலான விமர்சனம் பாஸ்

சு.செந்தில் குமரன் said...

நன்றி அரசர் விஸ்வா

சு.செந்தில் குமரன் said...

பெத்துசாமி ..
நன்றி ஒன்று உங்கள் திருத்தத்துக்கு !
நன்றி இரண்டு உங்கள் பாராட்டுக்கு !!

chandru2110 said...

ஆக்கபூர்வமான விமர்சனம் .கொடுக்குற காசுக்கு மேலையே இவங்களை மாதிரி சில பேரு படம் காட்டுறாங்க .

Kumar said...

Hi Senthil,

No see for long time?... However come back with excellent blog..

சு.செந்தில் குமரன் said...

நன்றி . உண்மை சந்துரு

சு.செந்தில் குமரன் said...

s kumar .
thanks

Post a Comment