Monday, May 30, 2011

# ஐ பி எல் விதிகள் மாறுமா?


ஐ பி எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது . மகிழ்ச்சி . ஆனால் ஐ பி எல் போட்டி விதிகளை மட்டுமல்ல உலகக் கோப்பை உட்பட இரண்டு அணிகளுக்கு மேல் மோதும் எல்லா ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் இன்னும் கூர்மையாக விதிகளை திருத்த வேண்டும் என்பதையே இந்த ஐபி எல் போட்டி நடத்தப் பட்ட விதம் காட்டுகிறது.

பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் லீக் ஆட்டங்களில் பெற்ற வெற்றிகள் ரன்களின் அடிப்படையில் பெற்ற புள்ளிகள் இவற்றின் அடிப்படையில் முதல் வரிசைப் பட்டியல் தேர்ந்தேடுக்கப் படும் . இந்த ஐ பி எல் போட்டியிலும் அதே போல ஒன்றரை மாதமாக எல்லா அணிகளும் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டதன் அடிப்படையில் முதல் நான்கு இடங்களில் முறையே பெங்களூர் அணி . சென்னை அணி மும்பை அணி கல்கத்தா அணிகள் வந்தன .

முன்பெல்லாம் உலகக் கோப்பை போட்டிகளில் இப்படி நான்கு அணிகள் வரை வடிகட்டப் பட்டதும் முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் . இதில்தான் ஒரு அநியாயம் நடக்கும் சூழல் வந்தது.

பல்வேறு போட்டிகளில் வென்று முதலிடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் கொஞ்சம் தவறினால் கூட நாலாவது இடம் பெற்ற அணியிடம் தோற்று ஆட்டத்தில் இருந்தே வெளியேற வேண்டிய நிலை . பல ஆட்டங்களில் கொஞ்சம் சுமாராகவே விளையாடி நாலாவது இடம் பெற்ற அணி ஒரு ஆட்டத்தில் நன்றாக விளையாடிய காரணத்தால் , இதற்கு முன்பு பல ஆட்டங்களில் நன்றாக விளையாடிய அணியை வெளியேற்றும் விந்தை நடந்தது . அதே போலத்தான் (வித்தியாசம் குறைவு என்றாலும் )இரண்டாவது மூன்றாவது இடத்தில் வந்த அணிகளுக்கு இடையே நடக்கும் ஆட்டங்களிலும் இதே விந்தை .

இதை மாற்ற செய்யப்பட புதிய ஏற்பாட்டின் படிதான் நடந்து முடிந்த ஐ பி எல் போட்டிகளில் ப்ளேஆப் மற்றும் அரை இறுதிப் போட்டிக நடந்தன .

அதன்படி ....முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது .

அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது .


புரியாதவர்களுக்கு இந்த பத்தியில் புரிந்து விடும் ....ப்ளே ஆப் ஆட்டத்துக்கு முன்னால் புள்ளிகள் அடிப்படையில் வந்த தர வரிசைப் பட்டியல் படி பெங்களூர் அணி முதல் இடம் . சென்னை அணி இரண்டாவது இடம் மும்பை அணி மூன்றாவது இடம் , கல்கத்தா அணி நான்காவது இடம் என்று வந்தது அல்லவா?

பெங்களூர் அணியும் சென்னை அணியும் மோதிய ஆட்டத்தில் சென்னை வென்றது . ப்ளே ஆப் பெற்றது .(ஆனால் தர வரிசைப் படி சென்னை இரண்டாவது இடத்தில்தான் இருந்தது )மும்பை கல்கத்தா அணி ஆடிய ஆட்டத்தில் (நல்ல வேளையாக ) நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியே தோற்று வெளியேறியது .

பிறகு மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும்... முதல் இடம் பெற்று இருந்தும் ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற பெங்களூர் அணியும் விளையாடி, அதில் பெங்களூர் அணியே வென்றது .

இறுதிப் போட்டியில் பெங்களூர் சென்னை அணிகள் விளையாட அதில் நமது சென்னை அணி வென்று நம்ம சந்தோஷப் படுத்தியது .

இப்போது புரிகிறதா ?

இங்கே என் கேள்வி என்னவென்றால் மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணியும் நான்காவது இடம் பெற்ற கல்கத்தா அணியும் ஆடிய ஆட்டத்தில் மும்பை அணி தோற்று இருந்தால் .. நான்காவது இட பெற்ற கல்கத்தா அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கும் . மூன்றாவது இடம் பெற்ற மும்பை அணி வெளியேறி இருக்கும் . அப்போது தரவரிசையில் மூன்றாவது இடத்தில் மும்பை அணி கல்கத்தா அணியை விட ஒருபடி மேலே இருந்ததற்கு என்ன பலன்?

அப்படித்தானே சென்னை அணியும் பெங்களூர் அணியும் விளையாடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் நடந்தது ? முதல் இடம் பெற்ற பெங்களூர் அணியை ப்ளே ஆப் ஆட்டம் என்ற ஒரு ஆட்டத்தில் வீழ்த்தியதன் மூலமே சென்னை அணி ப்ளே ஆப் தகுதி பெற்றது . அப்படியானால் அதுவரை பெங்களூர் அணி முதல் இடம் பெற்று இருந்ததற்கு என்ன பலன்? ஒன்றும் இல்லையே .

ஆக இது எப்படி முறையான தகுதி ஆகும் ?


"அதற்கு என்ன செய்வது ? தர வரிசை என்பது தனிப்பட்ட அணி பெறுவது . ஆனால் இரண்டு அணிகள் சேர்ந்துதானே ஆட முடியும்?" என்று நீங்கள் கொந்தளிப்பது காதில் கேட்கிறது .
அப்படியானால் முன்பு இருந்தது போல முதலிடம் பெற்ற அணியும் நான்காவது இடம் பெற்ற அணியும் ஒரு அரை இறுதியில் மோத இரண்டாவது மூன்றாவது இடம் பெற்ற அணிகள் இன்னொரு அரை இறுதியில் மோதி வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு வரும் பழக்கத்தையே பயன்படுத்தலாமே .

அது முறையல்ல என்பதால்தானே ...முதலாவது இடம் பெற்ற அணியும் இரண்டாவது இடம் பெற்ற அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . ....ஆனால் அதில் தோற்கும் அணி (முந்தைய வழக்கம் போல) வெளியேற்றப் படவில்லை . மாறாக அரை இறுதிக்கு இருத்தி வைக்கப் பட்டது..... .

அதே போல மூன்றாவது நான்காவது இடங்களில் இருந்த அணிகள் ஆடிய ப்ளே ஆப் ஆட்டத்தில் தோற்ற அணி வெளியேற வேண்டும் என்றும் வென்ற அணி முன்பு இருத்தி வைக்கப் பட்ட அணியோடு விளையாட வேண்டும் என்றும் முடிவு செய்யப் படுகிறது . .

ஆக நியாயம் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அது முழுமையாக இருக்க வேண்டும் அல்லவா?

என்ன செய்யலாம் ?

நான் ஒரு திட்டம் சொல்லவா? இதை கிரிக்கெட் உலக மேதைகள் ஏற்பார்களா?
இப்போது தர வரிசைப் படி முதல் நான்கு அணிகளை அப்படியே எடுப்போம் .
1 )பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி
2 )சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
3 ) மும்பை இந்தியன்ஸ் அணி
4 )கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி

முதல் ப்ளே ஆப் ஆட்டம் பெங்களூர் அணி க்கும் சென்னை அணிக்கும் நடந்தது அல்லவா?
அதன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கும் முன்பு ஒரு காரிய செய்ய வேண்டும் .

பெங்களூர் அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) மொத்தத்தில் அதிக ரன் எடுத்தது ? தவிர சென்னையோடு ஆடிய எந்த ஆட்டத்தில் குறைவான ரன்கள் எடுத்தது ?இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது முதகுள் விடை (ரெண்டு ஒரே ஆட்டமாக கூட இருக்கலாம் தப்பில்லை )
அதே போல இரண்டாவது இடம் பெற்ற சென்னை அணி எந்த லீக் ஆட்டத்தில்(எதிர் அணி எதுவாக இருந்தாலும் ஓகே ) மிக குறைவான ரன் எடுத்தது பெங்களூர் அணியோடு ஆடிய எந்த ஆட்டத்தில் அதிக ரன் எடுத்தது ?(முதல் இடம் பெற்ற அணிக்கும் இரண்டாவது இடம் பெற்ற அணிக்கும் இடையே தேர்ந்தெடுக்கப் படும் ஆட்டங்களில் சின்ன வித்தியாசம் இருக்கிறது ... கவனியுங்கள் . முதல் இடத்துக்கும் இரண்டாவது இடத்துக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?)இரண்டையும் கூட்டி இரண்டால் வகுக்க வேண்டும் . இது இரண்டாவது விடை .
(ஓராண்டு கணக்கீட்டிலுமே டை ஆட்டங்கள் சேர்ப்பு இல்லை . டாக் வொர்த் லீவிஸ் விதியில் முடிவு காணப்பட்ட ஆட்டங்கள் சேர்க்கக் கூடாது )

பெரிய விடையில் இருந்து சின்ன விடையை கழிக்க வரும் புது விடையை புள்ளிகள் அடிப்படையில் ரன்களாக மாற்றம் செய்ய வேண்டும் . அப்படி செய்யும்போதுஏழு ரன்கள் என்று ஒரு விடை வருகிறது என்று வைத்துக் கொள்வோம் .
இப்போது பாருங்கள் ....
ப்ளே ஆப் ஆட்டத்தில் சென்னையும் பெங்களூர் அணியும் மோதியது . தரவரிசைப் படி முதல் இடத்தில் உள்ள அணி பெங்களூர் அணி . எனவே டாஸ் போட்டு ஆட்டம் நடந்து பெங்களூர் அணி சேஸ் செய்கிறது எனறால் சென்னை அணி எடுத்திருக்கும் ரன்களை விட ஏழு ரன்கள் குறைவாக எடுத்தாலே பெங்களூர் அணி வென்றதாக பொருள் .
அதே நேரம் சென்னை அணி சேஸ் செய்தால் பெங்களூர் அணியை விட ஏழு ரன்கள் கூட ஒரு ரன் ஆக எட்டு ரன் எடுத்தால்தான் வென்றதாகப் பொருள் .
இப்படி முடிவுகளை அறிவிக்க வேண்டும் .

இது இறுதிப் போட்டி வரை போகவேண்டும் . இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் இப்படி கணக்கீடு செய்யவேண்டும்.
அப்படி செய்தால்தான் ஆரம்பம் முதலே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு அணி வெல்வது அல்லது தோற்பதன் பலன் கடைசிவரை பயனாகும் . எல்லா ஆட்டத்திலும் ஒழுங்காக விளையாடுவார்கள் . எந்த ஆட்டமும் போர் அடிக்காமல் இருக்கும் . தேர்வு மிக அறிவுப் பூர்வமானது என்றும் பொருள் .

இதுதான் உண்மையான தேர்வும் கூட .


கிரிக்கெட் அறிவாளிகள் சிந்திப்பார்களா?

No comments:

Post a Comment