Wednesday, May 23, 2012

ராஜ்ய சபாவில் ஒரு சக்களத்தி சண்டை **************************************** மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு பாராளுமன்றத்துக்குப போகிறவர்கள் மட்டுமல்லாது , தேர்தல் மற்றும் ஆரவார அரசியல் இவற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் , நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் , திறமை, ஆர்வம் இருக்கலாம் . அவர்களையும் ஆட்சிக் கட்டிலில் பயன்படுத்தி , அதன் மூலம் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மாநிலங்களில் மேலவையும் மத்தியில் ராஜ்ய சபையும் உருவாக்கப் பட்டது. ஒரு நிலையில் அந்த நோக்கமே பலகீனமாகி , கீழ் சபை செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவாவது இந்த ராஜ்யசபா பயன்பட்டது . பின்னர் இன்னும் சீரழிந்து... ஆள்வோருக்கு வேண்டியவர்களை கவுரவப் படுத்த் , அவர்களின் சமூக அக்கறை பற்றியெல்லாம் கவலைப் படாமல் ராஜ்யசபையில் இடம் கொடுக்கப் பட்டது . அவர்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் . ஆள்வோருக்கு வேண்டியவர்களாக இருக்க வேண்டும் . அவ்வளவுதான் . அதனால் இப்போது இன்னும் நிலைமை மோசம் .! கீழ் சபையில் மேசை நாற்காலிகளை உடைக்கும் எம். பிக்களே பரவாயில்லை என்று ஆகிவிட்டது ராஜ்யசபையில் நடக்கும் ஒரு கூத்தினைப் பார்க்கும்போது . . குற்றப் பின்னணி உள்ளவர்கள் எம் பிக்களாக இருப்பதே அவமானம் என்ற நிலையில், ராஜ்ய சபாவிலோ ஒரு படி மேலே போய், இப்போது சக்களத்தி சண்டையே நடந்து கொண்டி இருக்கிறது . ராஜ்யசபைக்கு இப்படி ஒரு சிறப்பைக் கொடுத்திருப்பவர் ஜெயாபச்சன் . அமிதாப் பச்சனின் மனைவி . இந்த சக்களத்தி சண்டைக்குப் ;பின்னால் ஒரு காதல் , ஒரு திருமணம் , ஒரு ரகசியக் காதல் , ஒரு பிரிவு , அதன் பின் எழுந்த பகை எல்லாம் இருக்கிறது . 1970 களில் அமிதாப் பச்சன் இந்திப் பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆகக் கொடிகட்டிப் பறந்த போது (அப்போதைய) இந்தி நடிகை ஜெயா பாதுரியோடு காதல் ஏற்பட்டது . இருவரும் இணைந்து நடித்த சஞ்சீர் , அபிமான் . ஷோலே போன்ற படங்கள் பெருவெற்றி பெற , இந்த ராசியான ஜோடிக்குள் காதல் வந்தது . இவர்கள் வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்து , 1973 ஜூன் மாதம் மூன்றாம் தேதி (கலைஞர் வாழ்த்து அனுப்பினாரா?) திருமணம் செய்து கொண்டனர் . ஜெயா பாதுரி ஜெயா பச்சன் ஆனார் . மிக உயரமான அமிதாப்புக்கும் மிகக் குளமான ஜெயா பச்சனுக்கும் வந்த காதல் , உடல் பொருத்தங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீகக் காதல் என்று அப்போது இந்தியா முழுக்க சிலாகிக்கப் பட்டது . தூங்காதே தம்பி தூங்காதே என்ற தமிழ் படத்தில் கூட, நடிகை சுலக்ஷனாவிடம் கமல்ஹாசன் "நீ ரொம்ப குள்ளம் எனக்கு பொருத்தமாக இல்லை" என்று சொல்ல , அதற்கு பதிலாக சுலக்ஷ்னா சொல்லும் " அமிதாப் ரொம்ப உயரம் . ஜெயா பாதுரி ரொம்ப குள்ளம் . அவங்க கல்யாணம் கட்டிக் கொண்டு ஊரு மெச்ச வாழலியா?" என்ற வசனம் தமிழகத்தில் கூட கைதட்டலோடு ரசிககப் பட்டது . ஆனாலும் அமிதாப்பும் ஜெயாபச்சனும் ஒரேயடியாக ஊரு மெச்ச வாழவில்லை . காரணம் இந்தி நடிகை . ரேகா . நம்ம காதில் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் . 1976 ஆம் ஆண்டு தோ அஞ்சனே என்ற படத்தில் அமிதாப்புடன் முதன் முதலில் ஜோடியாக நடித்தார் ரேகா. அதே வருடத்தில் இருவரும் இணைந்து நடித்த முக்குவாதா சிக்கந்தர் என்ற படம் பெரும் வெற்றி பெற்றது . அமிதாப் --ரேகா ராசியான ஜோடி ஆனார்கள் . அதோடு போயிருந்தால் கூட நம்ம ராஜ்யசபா அசிங்கப் பட்டிருக்காது . இருவருக்கும் இடையே காதல் வந்தது ; (ரேகா சுமாரான உயரம்). அமிதாப் பலநாட்கள் ரேகா வீட்டிலேயே தங்கினார் . பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின ."அமிதாப்தான் என் கணவர்" என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார் ரேகா .ஜெயா பச்சன் கொதித்து எழுந்து மோதினார் .. ஒரு படப் பிடிப்பில் ரேகாவின் மேகப் அறைக்குள் நுழைந்து ஜெய பச்சன் சண்டை போட , இருவரும் கைகலந்ததாகவும் அப்போது மும்பை (சரி .. பம்பாய் ) ப் பத்திரிக்கைகள் கிசுகிசுத்தன . 1981 யாஷ் சோப்ராவின் சில் சிலா என்ற படத்தில் ஜெயா பச்சன் அமிதாப்பின் மனைவியாகவும் ரேகா அமிதாப் பின் காதளியாகவுமே நடித்தனர் .. அதுதான் ரேகா அமிதாப் இணையின் கடைசி படம் . (இது யாஷ் சோப்ராவின் குசும்பு ) அதன் பின்னரும் மோதல் நிற்கவில்லை . "இனி ரேகா என் கண்ணெதிரில் வந்தால் செருப்பால் அடிப்பேன் "என்று ஜெயா பச்சனும் , "ஜெயாவை பார்த்தால் கடித்துக் குதறுவேன் "என்று ரேகாவும் 'மிக கண்ணியமாக ' பேட்டி கொடுத்த நாட்களும் உண்டு . அதன் பின்னர் சுமார் 20 வருடம் ௦ அடங்கிப் போயிருந்த சண்டையை மீண்டும் தூண்டிய பெருமை, நம்ம ராஜ்யசபவையே சேரும் . முன்பே சொன்னது போல , யாரை வேண்டுமானாலும் ராஜ்ய சபா எம்பியாக ஆக்கலாம் என்ற புதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சி மூலம் ஜெயா பச்சன் ராஜ்ய சபா எம்பியானார் . . அதற்கு எதிர்கட்சியாக இருந்த காரணத்தாலோ என்னவோ , காங்கிரஸ் அந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் . ஜெயாபச்சனின் 'குடும்ப எதிர்க்கட்சியான' ரேகாவை ராஜ்யசபா எம்பியாக்கியது காங்கிரஸ் . (நல்ல அரசியல்) ஐயோ... பத்திகிச்சு ! "அவையில் ஜெயா பச்சனின் இருக்கை எண் 91 . ரேகாவின் இருக்கை எண் 99 ..இதற்கே "ரேகாவுக்குப் பக்கத்துப் பக்கத்தில் உட்கார முடியாது "என்றார் ஜெயா பச்சன் (ஒரு வேளை அடுத்தடுத்த இருக்கை வந்திருந்தால் சொன்ன படியே அடித்தும் கடித்தும் கொண்டிருப்பார்களோ என்னவோ ?). மாற்று இருக்கை வேண்டும் என்று 143 எண் இருக்கையைகே கேட்டு வாங்கிக் கொண்டார் ஜெயா பச்சன் . .ராஜ்யசபா எத்தனை ஏக்கரில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார் என்பதை அவர் சொல்லவே இல்லை இதோடு முடிந்திருநதால் கூட .பரவாயில்லை . சரி விட்ட குறை ....(அமிதாப் ) தொட்ட குறையாக கோபம் இருக்கும் என்று நினைத்து விடலாம் . ஆனால் அடுத்து நடந்ததுதான் கோளாறு . ரேகா ராஜ்யசபாவில் எம் பியாகப் பதவி ஏற்றுக் கொண்டது வழக்கப் படி ராஜ்யசபா டிவியில் ஒளிபரப்பப்பட்டது அப்போது அவையில் அமர்ந்திருந்த ஜெயா பச்சனையும் டிவியில் காட்டினார்களாம் . இதற்குப் போய் ஆத்திரமடைந்த ஜெயாபச்சன் , ராஜ்ய சபா டிவி ஒளிபரப்புச் செயலாளர் மீது '"என்னை தேவை இல்லாமல் காட்டினார்கள் " என்று குற்றம் சாட்டிப் புகார் கொடுத்துள்ளார் . தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் அந்த டிவி ஒளிபரப்பாளர்கள்; ஒரு நடிகையாக இருந்தவர் தன் முகத்தைக் காட்டியதற்காக கோபப் படும் அதிசயம் எல்லாம் நம்ம ராஜ்யசபாவில்தான் நடக்கும் ஜெயலிதா தலைமை ஏற்கும் விழாவுக்கு (ஒருவேளை ) கலைஞர் வந்து அமர்ந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு பாராட்டு வாசிக்கப் படும்போது கலைஞரின் முக பாவனை எப்படி இருக்கும் என்று காட்டுவதும், ஒரு விழாவில் விஜய்க்கு விருது வழங்கினால் அப்போது அங்கு இருக்கும் அஜீத்தின் முகபாவனை எப்படி இருக்கும் என்று காட்டுவதும் ஊடகப் பணியின் ஓர் அங்கம் . ஒரு வேளை இவர்கள் எல்லாம் அப்படி ஒரு விழாவுக்கு வருவதையே கண்ணியமாக தவிர்ப்பர்களே தவிர , "என்னை ஏன் காட்டினாய்?' என்று நேரடியாக புகாரெல்லாம் செய்ய மாட்டார்கள் . ஆனால் ஜெயா பச்சனோ ராஜ்யசபாவை சக்களத்தி சண்டைக் களமாக மாற்றுகிறார் . அங்கு பணியாற்றுபவர்களையும் உள்ளே இழுத்து விடுகிறார் ."இந்த பக்குவம் கூட இல்லாத இவர்களை குறை சொல்வதா ? அல்லது இவர்களை எல்லாம் உறுப்பினராக்கிய அரசியல் கட்சிகளைச் சொல்வதா" என்று வேதனைப் படுகிறார்கள் நியாயமான உறுப்பினர்கள் . பேசாமல் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மேலவையைக் கலைத்தது போல , ராஜ்ய சபாவையும் கலைத்து விடலாம் தப்பே இல்லை .

No comments:

Post a Comment