Sunday, March 7, 2010

# மாஞ்சா கொலை:காத்தாடியில் ஊசலாடும் உயிர்கள்
நகரின் முக்கியச் சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?

ஓவர் டேக் செய்கிறேன் பேர்வழி என்று உரச வரும் திமிரான நான்கு சக்கர வாகனங்கள் , சட்டென்று சாலையின் குறுக்காகப பாய்ந்து மூட வீரம் காட்டி முடமாகத் துடிக்கும் கோமாளிகள் , சிக்னலில் நின்று பச்சை விளக்குக்குக் காத்திருக்கும் போது சிக்னல் மாறுவதற்கு முன்பே கிளம்பச்சொல்லி ஹாரன் அடிக்கும் அநாகரீக ஆத்மாக்கள் , தனக்கு முன்னால் ஒரு இரு சக்கரவாகனம்( அது போதுமான வேகமாகப் போனாலும் கூட) பயணிப்பதை தனது ஏழேழு தலைமுறைக்கும் கவுரவக் குறைச்சலாக நினைத்து கதற வைக்கிற , கார் மற்றும் பேருந்து ஓட்டும் பிரம்மாக்கள் .....

மாரடைப்பு வரும் அளவுக்கு திடிரென்று ஏர் ஹாரனை அலறவிடும் மன நோயாளிகள் , போன ஜென்மத்தில் கொசு மருந்து அடிப்பவராகப் பிறந்ததின் விட்ட குறை தொட்ட குறையாக இப்போதும் குப் குப் என்று கரும்புகையைக் கக்கியபடி வண்டி ஓட்டுவதை குலப் பெருமையாய்க் கருதும் புகையாண்டிகள் , அளவுக்கு மீறிய வேகத்தில் வண்டி ஒட்டி ஒரு நிமிடம் நம் வண்டியைத் தள்ளாட வைக்கும் பொல்லாத ஜந்துக்கள் திடீரென்று சாலையில் மனம் தூவி கண்களைப் பதம் பார்க்கும் திறந்த லாரிகள் .......

ஓட்டை டேங்குகளில் தண்ணீர் நிரப்பி அது ஒழுக ஒழுக உள்ளே உருவாகும் வெற்றிடத்தால் ஏற்படும் சமநிலை மாறுபாட்டால் தண்ணீர் தளும்பி அதன் மூலம், தறிகெட்டுப் பாயும் தண்ணீர் லாரிகள் ...
இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஹெல்மெட் மஞ்சள் கோடு சமாசாரங்கள் மற்றும் , லாரி , டெம்போக்கள் இவர்களிடம் காசு வாங்குவதையே போக்குவரத்து சீர்படுத்தல் என்று என்னும் போக்குவரத்துக் காவல்துறை ....

இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கு அடிக்கடி தொல்லை தரும் கண்ணுக்குத் தெரிந்த தொல்லைகள் இவை .

இவற்றில் எதாவது ஒன்றிரண்டால் அல்லல் பட்டோ அல்லது சிக்னலில் சிக்கிஸ் சீரழிந்தோ அல்லது டிராபிக் ஜாமீன் கடைவாய்ப் பற்களில் சிக்கி அரைபட்டோ தப்பிய நிலையில் ஒரு ஆற்றுப் பாலம் (அது கூவமாக இருந்தாலும் சரி ), மைதானத்தை ஒட்டிய சாலை , அல்லது கடற்கரையை ஒட்டிய சாலையில் நுழையும்போது நல்ல சாலை , சுகமான காற்று , போக்குவரத்து குறைவான சூழல் உள்ள இடங்களில் வாகனத்தை செலுத்தும்போது உங்களையும் அறியாமல் கொஞ்சம் அதிகமான ஆனால் பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை செலுத்தி ரசிப்பவரா நீங்கள் ....

அய்யா கவனம் ... அய்யோ கவனம் !


மேற்சொன்ன எல்லா ஆபத்துகளையும் விட கொடூரமான கொடுமையான எதிர்பாராத கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத குரூரமான ஒரு ஆபத்து ... அதுவும் கண்ணுக்குத் தெரியாத ஆபத்து ஒரு நொடியில் வாகனம் ஓட்டுபவரின் உயிருக்கு உலை வைத்து விடும் .

வேலைவெட்டியற்ற வெட்டிக் கும்பல் தனது உருப்படாத பொழுதைக் கழிப்பதற்காக பொழுது போக்கு என்ற பெயரில் வாகனம் ஓட்டுபவரின் கழுத்தறுத்துவிட்டுப் போய்விடும். அதுவும் தனிப்பட்ட ஒரு ஆண் அல்லது பெண்ணின் கழுத்தை அல்ல. குடும்பத்தின் , தாய் தந்தையரின் மனைவியின் , பிள்ளைகளின் , அண்ணன் தம்பிகளின் ஒரு தலைமுறையின் பல நம்பிக்கைகளின் சில இலட்சியங்களின் கழுத்தை அறுத்து விட்டுப் போய்விடும் .

ஒரு நொடியில் இப்படி பலரின் கழுத்தறுக்க அவர்கள் வாளெடுத்து வருவதில்லை : வேலேடுத்தும் வருவதில்லை . ஒரு நூல் எடுத்துதான் வருகின்றனர் .

மாஞ்சா !


பட்டம் என்றும் காத்தாடி என்றும் அழைக்கப்படுகிற நூலின் முனையில் ஒரு சிறு வாலோடு பறக்கிற காத்தாடிப் பட்டம் விடுவது ஒரு காலத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் ஒரு வண்ணமயமான பொழுது போக்காக இருந்தது . இன்றும் உள்ளது . நூல் கண்டின் முனையில் பட்டத்தை இணைத்து மேலே பறக்க விட ஒரு குறிப்பிட்ட நேக்கில் கையை அசைக்க அசைக்க வானத்தில் பறக்கும் பட்டம் . எல்லாம் சரிதான் .

ஒரு நிலைக்கும் மேல் காற்றின் வேகம் தாளாது பட்டம் இணைக்கப் பட்ட நூல் பிய்ந்து பட்டம் பறந்து போய் கண்காணாத இடத்தில் விழுந்துவிடும் . அதுவே ஒரு வெற்றி என்று கருதி அதோடு ஆட்டம் முடிந்து வந்து கொண்டிருந்தவரை இந்த பட்டம் விடும் விளையாட்டு ரசிக்கத் தக்கதாகவே இருந்தது .

ஆனால் அந்த ஒன்றரையணா பட்டம் காணாமல் போனால் வேறு பட்டம் வாங்கியும் ,
இன்னொரு நூல் கண்டு வாங்கியும் பட்டம் விட்டுக் கொள்ளலாம் என்ற
பெருந்தன்மை இல்லாமல் ,
பட்டமும் விட்டு விளையாட வேண்டும் , அது மிகுந்த உயரத்திலும் பறக்க
வேண்டும் , தொலைந்து போவதோ பிய்ந்து போவதோ கூடாது ..
யார் கழுத்தறுந்து யார் தாலியறுத்தாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும்
எந்த செலவும் இல்லாமல் அந்த பட்டத்தையே வைத்து விளையாடவேண்டும்
என்று சில காட்டுமிராண்டித்தனமான பாவ புண்ணீயம் பாராத சுய ந‌லச்
சிந்தனைகள் விஸ்வரூபம் எடுத்ததன் விளைவு....


காத்தாடி இன்பமான பொழுதுபோக்கு விளையாட்டு என்ற தகுதியை இழப்பதற்குக்
காரணமான 'மாஞ்சா'வைத் தந்தது .

மாஞ்சா?

கண்ணாடி பாட்டிலை அரைத்துக் கூழாக்கி அதில் சப்பாத்திக் கள்ளி இல்லை , வலிமையான வஜ்ரம் , மயில் துத்தம் போன்றவை கலந்து பிசின் சேர்த்து இந்தக் கலவையில் வெள்ளை நூலை முக்கி எடுக்கிறார்கள் . அதன் பின்னர் அந்த நூல் வலுவேறி முரட்டுத்தனமான கண்ணாடித துகள்கள் செறிந்த நூலாக இல்லை இல்லை கழுத்தை அறுக்கும் வாளாக மாறி விடுகிறது

ஒரு சமயத்தில் இந்த மாஞ்சா நூலால் பறவைகள் சிக்கித துடிப்பதைப் பார்த்தது அவைகளையே காப்பாற்றிய சம்பவங்கள் சில மனிதபிமானிகளாலும் ப்ளூ கிராஸ் போன்ற அமைப்பினராலும் செய்யப்பட்டன. அப்போதே இந்த மாஞ்சாவைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன .ஆனால் யாரின் செவியிலும் அது விழவில்லை .பறவைகளின் அலறலைக் கேட்கும் சக்தி அந்தக் காதுகளுக்கு இல்லாமல் இருக்கலாம் .

எனவே ஒரு நிலையில் மனித உயிர்களும் பறிபோயின. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் .
கண்ணாடி பிசின் , வஜ்ரம் , மயில் துத்தம் போன்றவை வெள்ளை நூலை சூழ்ந்து ஒட்டிக் காய்ந்து பளபளப்பாக மாறி விடுவதால் , பெரும்பாலும் ரோட்டின் குறுக்கே இந்த எமன் சத்தமில்லாமல் ஆனால் வலுவான குரூரத்தோடு காத்திருப்பது இரு சக்கர வாகன ஒட்டிகளுக்குத் தெரிவதில்லை .

கத்தியை ஓங்கி கழுத்தறுப்பது ஒரு வகை . அதற்கு நீர் மாறாக கத்தியை வாகாக வலுவாக நிற்க வைத்து விட்டு அதன் மேல் கழுத்தைக் கொண்டு போய் மோதி அறுபட செய்வதை ஒரு நிமிடம் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கற்பனை செய்து பாருங்கள் . அதுதான் நடக்கிறது இங்கே .
கண்ணுக்குத் தெரியாமல் வலிமையோடு காத்திருக்கும் இந்த மாஞ்சா நூலில் வேகமாகப் பாய்ந்து வரும் வாகன ஓட்டிகள் மோதும் வேகத்தில் பெரும்பாலும் கழுத்து வாகாகச் சிக்கிக் கொள்ள வஜ்ரத்துடன் இணைந்ததால் வலுவும் கூர்மையும் ஏறி இருக்கும் கண்ணாடிப் போடு நூலின் பாதையில் கோடு போடுவது போலக் கழுத்தை கரகரவென அறுக்கிறது .


அடுத்த நொடி?
ஹேராம் படம் ஞாபகம் வருகிறதா? கொல்கொத்தா கலவரக் காட்சியில் கற்பழிக்கப் பட்டு கழுத்தறுக்கப்படும் ராணி முகர்ஜியின் கழுத்தில் இருந்து ரத்தம் ஆர்டிஷியன் ஊற்று போலப் பீய்ச்சி
அடிக்குமே அதே கொடூரம்தான் இங்கு எந்த ஆர்ட் டைரக்டரின் செட்டப்பும் இல்லாமல் , நிஜமாக ... நிஜத்திலும் நிஜமாக , நிஜமான ரத்தமாக சதையாக அலறலாக உயிராக ,,, இழப்பாக!

தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் இப்படி மாஞ்சா நூலால் எதிர்பாரதவிதமாக கொடூரமாய் உயிரிழப் போரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனது .

எனவே காத்தாடிப பட்டம் விடத் தடை விதிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்ததன் விளைவாக
சென்னை நகரில் கடந்த 2007ம் ஆண்டு பட்டம் விடுவது தடை செய்யப்பட்டது. அந்த ஆண்டு, மாஞ்சா தடவப்பட்ட பட்டக் கயிறு 8 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து பரிதாபமாக உயிரைப் பறித்ததைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்தும் இதைக் கட்டுப் படுத்த முடியாததால் 2009 ஆண்டில் பட்டம் விற்கவும் போலீஸார் தடை விதித்தனர். மேலும் பட்டம் விற்பதும், மாஞ்சா கயிற்றுடன் பட்டங்களை பறக்க விடுவதும் ஜாமீனில் வெளி வர முடியாத குற்றமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு பட்டம் விற்பனையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர் .

இதை விசாரித்த உயர்நீதிமன்றம்,அதே ஆண்டில் பட்டம் விற்பதற்குத் தடை கிடையாது என உத்தரவிட்டது. அதேசமயம், உயிரைப் பறிக்கும் ஆபத்தான மாஞ்சா தடவிய பட்டங்களை விற்பதற்கும், பறக்க விடுவதற்கும் தடையை நீக்க அது மறுத்து விட்டது.

ஆனாலும் இன்றும் மஞ்சா தடவிய பட்டம் விடுவதை காவல் துறையால் தடுக்க முடியவில்லை .
இன்றும் மஞ்சா நூலில் வெகு உயரத்தில் படங்கள் பறக்கின்றனவோ இல்லையோ , தவறாமல் கழுத்தை அறுத்துக் கொண்டுதான் உள்ளன .கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் மட்டும் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மூன்று கழுத்துகள் !

தி.நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் , எப். எம் ரேடியோவில் வருனனையாளராகப் பணியாற்றும் கண்மணி என்ற பெண் ஒருவர் ,மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வசந்தி என்ற குடும்பத் தலைவி .. இந்த மூவரும்தான் அந்த அப்பாவிகள் . யாரோ சிலரின் விளையாட்டு இவர்களுக்கு வினையானது .

ஒரு சின்ன தாக்குதலுக்கு காரணமானவர்களையே கடுமையாகத் தண்டிக்கும் காவல்துறை , போது இடத்தில் நகம் பட்டு கீறல் விழுந்தாலே 506 ம் பிரிவைத் தூக்கி வந்து அடித்து ரத்தக் காயப் படுத்தியதாக வழக்குப் போடும் சட்டம் ,
இந்த மாஞ்சா நூல் வைத்துக் காத்தாடி விடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
எதாவது ஒரு கழுத்து அறுபட்டால்தான் மாஞ்சா விடுபவர்களைக் கைது செய்வோம் என்றால் எப்படி ?

மாஞ்சா தயாரித்துக் காத்தாடி விட்டு அதனால் யாரும் பாதிக்கப் பட்டால் அந்த மாஞ்சா காத்தாடி விட்டவர்களை வழக்கமான பிரிவுகளில் தண்டிப்பதை மாற்றி கொலைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் .

யாருக்கும் ஆபத்து வருகிறதோ இல்லையோ மாஞ்சா தயாரித்துக் காத்தாடி நூலில் ஏற்றுபவர்கள் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும் .எந்த காரனத்துக்க்காகவும் மாஞ்சா தயாரிப்பது பெறும் குற்றமாக அறிவிக்கப் படவேண்டும் .

நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே காற்றாடிகள் விடப்படவேண்டும் . அதுவும் சாதாரண நூலால் பிணைக்கப் பட்ட காற்றாடிகளாகவே இருக்க வேண்டும் என்பது சட்ட மாக்கப் படவேண்டும் .காற்றாடி விடுவோர் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சங்க அமைப்பில் இடம் பெற்றவர்களாகவே இருக்கவேண்டும் . அந்த சங்கத்திற்கு போலிஸ் அனுமதி கட்டாயம் வேண்டும் .
அந்த அமைப்பில் உள்ளவர்கள் மாஞ்சா காற்றாடி விடுவது உட்பட முறைகேடான முறையில் காத்தாடியைப் பயன்படுத்தினால் அதற்கு அந்த குறிப்பிட்ட சங்க அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். மாஞ்சா நூலால் உயிர் போவது பற்றிக் கூட கவலைப் படாமல் காத்தாடி விடுவதை தடை செய்யக் கூடாது என்று கோர்ட்டுக்குப் போனவர்கள் இந்த பொறுப்பைக் கட்டாயம் ஏற்க வேண்டும் .

வீர விளையாட்டு ஜல்லிக்கட்டால் உயிர்கள் போகின்றன அதைத் தடை செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.ஜல்லிக்கட்டில் விரும்பிக் கலந்து கொள்பவரின் உயிருக்கோ அல்லது அந்த வீர விளையாட்டின் விபரீதம் புரிந்து விரும்பி அதைப் பார்க்கப் போகிறவரோதான் ஆபத்துக்கு ஆளாகிறார் . ஆனால் அதை எதிர்த்து எழும் குரல்களில் பல விதமான நோக்கங்கள் உள்ளன .

ஆனால் மாஞ்சா என்றால் என்ன வென்றே தெரியாதவர்கள் , சில சமயம் காத்தாடி விடுவது என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிகள் தாங்கள் பாட்டுக்கு தன் வழியில் போய்க்கொண்டிருக்கும் போது அநியாயமாகச் சாவது என்ன ஒரு கொடுமை .

ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுப்பதை விட இந்த மாஞ்சாவை ஒழித்துக் கட்டவேண்டியது உண்மையாகவே நியாயமானது அவசியமானது .
சொல்லப் போனால் ரொம்ப அவசரமானது .
சட்டமும் (காக்கிச் ) சட்டையும் என்ன செய்யப் போகிறது?

2 comments:

chandru2110 said...

இதை ஒரு பண்டிகையாக கொண்டாடும் வட மாநிலங்களில் நடக்காத கொடுமை இங்கு நடக்கிறது. தன்னோட தனிப்பட்ட சுவாரஸ்யத்துக்காக மற்றவர் உயிரை பலி கொடுக்கும் கொடுமை.

சு.செந்தில் குமரன் said...

உண்மை சந்துரு

Post a Comment