Tuesday, March 23, 2010

# ஈசல் பூச்சித் தமிழ்ப் படங்கள்;"பில்டிங் ஸ்ட்ராங் : பேஸ்மென்ட் வீக் "





ஈசல் பூச்சித் தமிழ்ப் படங்கள்
-------------------------------------------
"பில்டிங் ஸ்ட்ராங் : பேஸ்மென்ட் வீக் "
**********************************************************

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு "வெள்ளிக்கிழமை நடிகர்" என்ற ஒரு [பட்டப் பெயர் உண்டு . காரணம் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் அவரது படங்கள் வெளியாகும் . ஆனால் அவை எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் . ஜெய்சங்கரும் படப்பிடிப்புக்கு அவளவு ஒத்துழைப்பு கொடுப்பார் . பெரும்பாலும் போட்ட காசு வந்து விடும் . யாருக்கும் பெரும்பாலும் நஷ்டம் இல்லை . அதனால்தான் சினிமா உலகில் அவருக்கு அவ்வளவு நண்பர்கள் .

அவரது கதாநாயக மார்கெட் காலப்போக்கில் குறைந்த போது அவரை எல்லாருமே தங்களது படங்களில் வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம்ம் என்று பல வாய்ப்புகளைக் கொடுத்து இரண்டாவது ரவுண்டிலும் அவரைத் தூக்கிப் பிடித்தார்கள் . அது பழைய கதை .

ஆனால் இன்று தமிழில் வெளிவருகிற எல்லா படங்களுமே ஒரு வாரப் படங்களாக மாறி விட்டன. நாளிதழைப புரட்டினால் கொசகொசவென்று குட்டிக்குட்டியாய் தமிழ்ப்பட விளம்பரங்கள் . ஒரு புதன் கிழமையில் விளம்பரம் வந்து வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி திங்கள் கிழமை ஈயோட்டி செவ்வாய்க் கிழமை பெட்டிக்குள் பதுங்கி விட , புதன் கிழமை மறுபடியும் புது வரிசை .

ஈசல் பூசியின் வாழ்க்கை 24 மணி நேரம் என்றால் வெளிவரும் பல தமிழ்த் திரைப்படங்களின் வாழ்க்கை 7 நாட்கள்தான் .

போகிற போக்கில் எல்லா நடிகர்களுமே வெள்ளிக்கிழமை நடிகர்கள் ஆகிவிடுவார்கள் என்று தோன்றுகிறது . அன்று குறைந்த பட்ஜெட்டில் எல்லோருக்கும் பெரும்பாலும் லாபம் சம்பாத்தித்துக் கொடுத்த ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை நடிகர் என்று சொன்னதில் கிண்டலும் இருந்தது .
ஆனால் இன்று கதையை மீறிய -- நடிகர்களின் மார்க்கெட் அளவை மீறிய செலவில் எடுக்கப் பட்டு பெரும்பாலும் மரண அடியைச் சந்திக்கிற
இந்தப் படங்களையும் இதில் நடிபவர்களையும் என்ன சொல்வது?

அதிக திரையரங்குகளில் வெளியாகி எண்ணிக்கையில் குறைந்த நாட்களே ஓடினாலும் லாபம் சம்பாதித்துக் ஓடுத்து விடுகிற அல்லது நாக்குத் தள்ளப் போராடி போட்ட காசையாவது மீட்டுக் கொடுத்து விடுகிற ஒரு சில படங்களைப் பற்றி நாம் பேச வரவில்லை . ஆனால் இப்படி பல தியேட்டர்களில் வெளியாகி எல்லா தியேட்டர்களிலும் காத்து வாங்குகிற படங்களின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டிருக்கிறதே .

தாகம் எடுத்தவன் தண்ணீர் குடிப்பதற்குப் பதில் தாகம் தீர்க்கும் என்று சாராயத்தைக் குடித்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் வயிறு வெந்து
துடிப்பதைப் போல மக்களைக் கவருகிறேன் பேர்வழி என்று வக்கிரமான சிந்தனைகளை திரையில் வடித்து அதனாலும் தோற்று .. மேலும் நஷ்டத்தைச் சந்திக்கின்றன பல படங்கள் .


தெரிந்தோ தெரியாமலோ தமிழ் நாட்டில் இன்னும் சினிமா ஒரு முக்கியப் பொழுது போக்காக இருக்கிறது , திரையில் வருபவர்கள் படத்தில் பேசுவதை எல்லாம் உண்மை என்று நம்பி , பின்னர் நம்பப்பட்ட நடிகனே , " டைரக்டர் எழுதித் தர்றத நான் பேசுறேன் . நீ ஏன் நம்புற ?" என்று கேட்ட பிறகும் மாறாத கூட்டம் இருக்கிறது . " உன் பிரச்னைக்கு நான் வர மாட்டேன் .. என்ன கூப்பிடாத " என்று சொன்ன பின்னும் தலை கிறுகிறுத்துத் திரியும் வால்கள் நிறைய உள்ளன .

எது நல்ல சினிமா என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமலே பல காலமாக ஒரு மயக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கூட்டம் இருக்கிறது .

இவர்கள் ஆராதிக்கிற சினிமா நல்ல சினிமாவாக இல்லாவிட்டாலும் அதுவும் மேலும் கெட்டு பார்க்கிறவனையும் மேலும் கெடுக்கிற சினிமாவாக மாறி விடக் கூடாதே என்ற அச்சம் வருகிறது . ஆனால் தமிழ் சினிமாவின் போக்கு தரம் , வியாபாரம் இரண்டிலும் நம்பிக்கை தருவதாக இல்லை .

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?

அண்மையில் வந்துள்ள சில திரைப்படங்கள் என்ன சொல்கிறது என்பதில் இருந்தே அது புரிய வரும்.
தீராத விளையாட்டுப் பிள்ளை என்று ஒரு படம் . ஒருவன் மூன்று பெண்களை மயக்குவனாம். ஐ லவ் யூ சொல்வானாம் . பிறகு மூன்று பேரில் யார் நல்ல பெண் என்று கண்டு பிடித்து அவளை மட்டும் திருமணம் செய்து கொள்வானாம் . மற்ற ரெண்டு பெண்களையும் அம்போ என்று விடுவானாம் . காதல் சொல்லப் பட்டு , இவன் திட்டத்தைக் கண்டு பிடித்து மனம் உடைந்த பெண்கள் , இவன் மீது கோபப்பட்டால் அவர்கள் வில்லியாம். இவன் ஹீரோவாம் .
தன்னை விரும்பும் மூன்று பெண்களிடமும் இவன் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றாமல் தனக்கு ஏற்ற பெண் யார் என்று கண்டு பிடித்து அவளிடம் மட்டும் காதல் சொன்னால் அது நியாயம். ஆனால் தீராத
விளையாட்டுப் பிள்ளை எந்த மாதிரி பிள்ளை ?


ஒரு படத்தின் முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி நன்றாக இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்து அந்த அடிப்படையில் முன்பெல்லாம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்களை எல்லாம் நாம் மசாலா இயக்குனர்கள் என்று சொல்லி , தள்ளி வைத்து விட்டோம் .

சிலசமயம் அப்படி இரண்டாம் பகுதி பிரம்மாதமாக நன்றாக இருந்து விட்டால் இடைவேளைக் காட்சி ரொம்ப சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை .
உதாரணம் காதலுக்கு மரியாதை படம் . இடைவேளைக்கு என்று ஸ்பெஷலான காட்சி ஏதும் இல்லாமல் சும்மா ஒரு தங்கச் செயினைப் பிடித்துக் கொண்டு நிற்பார் விஜய் . அப்போது ஒன்றும் அது சிறப்பாகத் தோன்றாது . ஆனால் கடைசியில் அந்த செயின் தான் கிளைமாக்சில் முக்கிய திருப்பத்தைஉருவாக்கும்


ஆனால் திரையில் வாழ்க்கையை சொல்ல வருகிறோம் என்பவர்கள் ரசிகனை திருப்திப் படுத்துவதற்கான இந்த அடிப்படை விதியை மறந்து விடுகிறார்கள் .

உதாரணம் அவள் பெயர் தமிழரசி . தோல்பாவைக் கூத்துகே கலையின் பின்னணியில் ஒரு தனித் தன்மையோடு எளிய இலகுவான காதலைச் சொல்கிற படம் இரண்டாவது பகுதியில் எங்கே போவது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறது . கடைசியில் தானும் ஏமாறி பார்பவரையும் ஏமாற்ற , வசூல் விவகாரத்தில் ரசிகன் பழி வாங்கி விடுகிறான் .

நாம் எடுத்துக் கொள்ளும் கதைக்கு ஏற்ப எப்படிக் காட்சி அமைக்க வேண்டும் என்பதை விட அந்தக் கதையைக் கெடுக்கும் விதத்தில் எப்படிக் காட்சி அமைக்கக் கூடாது என்பதில், அட ! நல்ல இயக்குனர்களை விடுங்கள் .... மசாலாப் பட இயக்கனர்கள் என்று பரிகசிக்கப் பட்ட பல இயக்குனர்கள் கூட சென்ற தலைமுறை தமிழ் சினிமாவில் எப்படிக் கண்ணுங்கருத்துமாக இருந்தனர் என்று இப்போது திரும்பிப் பார்த்தல் வியக்க முடிகிறது . ஆனால் இப்போது அது கொடத் தெரியாத பலரின் படைப்புகள் இரண்டும் கெட்டானாகப் பல்லிளிக்கின்றன

அழகான பொண்ணுதான் என்ற ஒரு படம் .
ஒரு பெண் அழகாக இருந்தால் அவள் எப்படியெல்லாம் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டியுள்ளது என்று பாசாங்கு பண்ணிக் கொண்டு அதை அளவான கவர்ச்சியோடு யதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் சொல்லாமல் லாகிகே இல்லாமல் , விரசமான காட்சிகள் ஆபாசக் காட்சிகள் , அர்த்தமற்ற காட்சிகளோடு அரைவேக்காடாக வடிக்க , கதை சொல்லும் கருத்துக்காக நெகிழும் குணம் உள்ளவர்களையும் படம் ஈர்க்கவில்லை . அழகை ரசிப்பவனையும் ரசிக்க விடவில்லை . தவிரே பொருத்தமான காட்சிகளே இன்றி நொண்டுகிறது படம் .

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக முகம் சுளிக்க வைத்த படம் மாத்தி யோசி , இந்தக் கட்டுரை எழுத வேண்டிய பிரசவ வலியை , பேனாவுக்கு ஏற்படுத்திய படம் .
வித்தியாசமான சிந்தனையில் அன்றைய வழக்கத்துக்கு மாறாக அதே நேரம் புத்திசாலித்தனமாக மனித மதிப்பீடுகளை உள்வாங்கி மாத்தி யோசித்து அன்று முதல் பீம்சிங், ஸ்ரீதர் , கே.எஸ். கோபால கிருஷ்ணன் , பாலசந்தர் , பாரதிராஜா , மணிரதனம் உட்பட பல சினிமா மேதைகள் பல படங்களை உருவாகியுள்ளனர் , அதற்கெலாம் அவர்கள் மாத்தி யோசி என்று பெயர் வைக்கவில்லை . ஷங்கரின் இந்தியன் கதை நிஜமான மாத்தி யோசித்தலின் வெளிப்பாடு .

ஆனால் ஒன்றுக்கும் உதவாத கதை காட்சிகளை வைத்துக் கொண்டு பத்து நிமிடத்துக்கு ஒருமுறை மாத்தி யோசி மாத்தி யோசி என்று பாட்டுப் போடுகிற மாத்தியோசி படத்தில் மாத்தி யோசித்த விஷயங்கள் என்ன தெரியுமா?
உங்கள் ஊரில் உன்னை தாழ்ந்த சாதி என்று தள்ளி வைக்கிறார்களா ? சென்னைப் பட்டணம் வந்து திருடி கொள்ளையடித்து , கூலிக்குக் ஓலை செய்கிறவனாக மாறு .
தவறான ஒரு மனிதரால் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்பட இளம்பெண்ணா? இந்த தருதலைகளோடு சேர்ந்து திருடி வாழ்க்கை நடத்து .

வயசுப் பெண்ணான தன் மகளை யாராவது கடத்தி விட்டுப் போய்விட்டார்களா? பணம் கொடுத்து மீட்டு வரப போகும் கணவனிடம்
"அவ போனாப் போறாயா .. பணம் போனா திரும்ப வருமா? இன்னும் புள்ளை பெத்துத் தர நான் ரெடி . உனக்கு உடம்புல தெம்பு இருக்கா?" என்று வசனம் பேசு . அப்பத்தான் நீ பெண் ரவுடி .

தொழில் செய்ய விடாமல் தடுக்கிற இன்ஸ்பெக்டரைப் பழிவாங்க ரவுடிகளுக்கு ஐடியா வேண்டுமா? இதோ ..

இன்ஸ்பெக்டரின் மனைவியைக் கடத்திக் கோடு வந்து கட்டிப் போட்டு விட்டு , அவள் கண் முன்னால் உனது ஆசை நாயகியோடு விரசமாக உறவாடி அதை இன்ஸ்பெக்டரின் மனைவியைப் பார்க்க வை . இப்படி இன்ஸ்பெக்டரைப் பழி வாங்கு .

இது போல ஏகப்பட்ட மாத்தி யோசிப்புகள் .


இப்படி ஏராளாமான கொடுமைகள் படங்களாக வந்துகொண்டிருக்கின்றன .

யார் காரணம்? என்ன காரணம்?

ஆரம்பத்தில் சினிமா எழுத்தாளர்களின் கையில் இருந்தது . பின்னர் நல்ல எழுத்தாளர்களாகவும் இருக்கிற நேரம் கேமரா மொழி தெரிந்த படைப்பாலிகலின் கைக்கு வந்தது . அத்ன பின்னர் நல்ல ரசிகர்களாக
மட்டுமாவது உள்ளவர்கள் படமெடுக்க வந்தார்கள்
இப்போது இயக்குனராக வருபவர்களுக்கு படிக்கிற பழக்கமே இல்லை . வாழ்க்கையைப் படிக்கிற , சமூகத்தைக் கூர்ந்து கவனிக்கிற இயல்போ அறிவோ இல்லதவர்களாக உள்ளனர்

தயாரிப்பாளர்களும் திறமைசாலிகளுக்குப் படம் தருவதற்குப் பதில் தனனை பல்வெறு விதஙகளிலும்
குளிர்விக்கிற திருப்தி செய்கிற நபர்களுக்குப் பட வாய்ப்பை பிச்சையாக எறிவதிலேயே இன்பம் காணுகின்றனர்

விளைவு ? படம் பப்படமாகிறது .

மாத்தி யோசி போன்ற படங்களை இயக்கியவர்களை விட .அதைப் படமாக எடுக்க முன்வந்து
பண‌த்தையும் கொட்டிய தயாரிப்பாளர்களின் சினிமா அறிவை எண்ணிதான் வியக்க வேண்டியுள்ளது.

இலக்கிய ரசனை , நல்ல படம் ககுரித்த தெளிவு இல்லாதது மட்டுமல்ல ; யாரிடமும் உதவி இயக்குனாரகப்
பணியாற்றி தொழில் கற்றுக் கொண்ட அனுபவம் எதுவுமெ இல்லாத இயக்கம் குறித்த படிப்பும் கூட இல்லாத
பலபேர் பல படஙகளில் இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டுள்ளனர என்றால் எப்படி அந்த வாய்ப்பு தரப் படுகிறது?

வாய்ப்புக் கேட்டு வருபவன் அடிமையைப் பொல் நடந்து கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் நல்ல படைப்பாளிகளைத் தள்ளியே வைக்கிறது .

இது போன்ற காரணங்களால் இப்போது தமிழ் சினிமாவின் நிலமை ஒருபடத்தில் வடிவேலு சொன்ன மாதிரி
தொழில்னுட்பம் என்ற பில்டிங ஸ்ட்ராங்காகவும் கதை திரைக்கதை உள்ளிட்ட கலை நுட்பம் , என்னும்
பேஸ்மெண்ட் வீக்காகவும் ஆகிக் கிடக்கிறது .
மாற்றம் வரவில்லை யெனில் நிலவரம் கலவரம் ஆகலாம் !

No comments:

Post a Comment