Sunday, October 3, 2010

# எந்திரன் -- லாஜிக்கும் மேஜிக்கும்


முதலில் ஒரு விஷயம் . விமர்சனம் செய்வதும் கருத்துக் கூறுவதும் எளிது .ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை படைப்பும் உழைப்புமே பெரிது . எனவே ,.எந்திரன் படம் பார்த்தவர்கள் மட்டும் அல்ல ... இந்த விமர்சனத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களும் கூட , முதலில் ஒரு முறை மானசீகமாக எழுந்து நின்று ஆசிய சினிமாவின் மாபெரும் தொழில் நுட்பக் கலைஞனாக உயர்ந்து நிற்கும் இயக்குனர் சங்கருக்கு மனம் உவந்த கைதட்டல்களைத் தருவோம் .

கலாநிதிமாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஷங்கர் இயக்கியிருக்கும் எந்திரன். இந்திய சினிமாவின் நவீன திரைப்படத் தொழில் நுட்பத்தின் உச்சம் ...!.

ஒரு விஞ்ஞானி (ரஜினி ) ஓர் இயந்திர மனிதனை அதாவது ரோபோவை (எந்திர ரஜினி ) உருவாக்குகிறார் . .அது அச்சு அசலான மனிதனாக ரஜினி போலவே இருக்கிறது. நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது நம் நாட்டு ராணுவ வீரர்களின் உயிர்கள் பலியாவதைத் தடுத்து அதற்கு பதிலாக இது போல இயந்திர மனிதர்களை நிறைய படைத்து ராணுவத்துக்கு தர வேண்டும் என்பதே விஞ்ஞானி ரஜினியின் நோக்கம் .

தீவிரவாத செயல்களுக்கு தற்கொலைப் படையாக மனிதர்களுக்கு பதில் இது போன்ற ரோபோக்களைப் பயன்படுத்தி பேரழிவுகளை உருவாக்க முயல்கிறது ஒரு மேற்கத்திய தீவிரவாத கும்பல் . விஞ்ஞானி ரஜினியின் குருநாதரும் சீனியர் விஞ்ஞானியுமான இன்னொருவர் , அந்த தீவிரவாதிகளுக்காக தானும் ஒரு ரோபோவை உருவாக்க முயல்கிறார் . அவரால் முழு வெற்றி பெற முடியவில்லை .

இந்நிலையில் விஞ்ஞானி ரஜினி , தான் உருவாக்கிய ரோபோவை அகில இந்திய ஆராய்ச்சித் துறையின் பரிசோதனைக்கு அனுப்புகிறார் . ரஜினியின் ரோபோ ராணுவத்துக்கு போகக் கூடாது என்று விரும்பும் அந்த வில்லத்தனமான சீனியர் விஞ்ஞானி, சோதனையின் போது ரோபோ ரஜினிக்கு குழப்பமான கட்டளைகள் கொடுத்து விஞ்ஞானி ரஜினியையே கத்தியால் குத்த முயல்வது போல செய்து விடுகிறார் . "இது ராணுவத்துக்கு உதவாது . கட்டளைகள் மூலம் இதை குழப்பினால் அது நமது ராணுவத்துக்கே ஆபத்தாக முடிந்து விடும் . " என்று கூறி ரோபோ ரஜினியை நிராகரித்து விடுகிறார் அந்த சீனியர் விஞ்ஞானி . . பிறகு தனிமையில் விஞ்ஞானி ரஜினியிடம் தீவிரவாதிகளுக்காக பேரம் பேசுகிறார் .

அதை மறுக்கும் விஞ்ஞானி ரஜினி , மனிதர்களால் காப்பாற்ற முடியாத ஒரு பெரும் தீவிபத்தில் இருந்து பலரை காக்க ரோபோ ரஜினியை அனுப்புகிறார் . பலரை காப்பாற்றும் ரோபோ , எரியும் ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நிர்வாண நிலையில் அப்படியே காப்பாற்றி டிவி கேமராக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த , அவமானம் தாங்காமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் . மீண்டும் ரோபோ ரஜினி தகுதியற்றதாக குறிப்பிடப் படுகிறது .

உடனே விஞ்ஞானி ரஜினி ரோபோ ரஜினிக்கு மனித உணர்ச்சிகளை கற்றுத் தர .....வந்தது பிரச்னை .!

விஞ்ஞானி ரஜினியின் காதலியான ஐஸ்வர்யாராயை ரோபோ ரஜினியும் காதலிக்க , பிரச்னை பெரிதாகிறது . ஒரு நிலையில் விஞ்ஞானி ரஜினி கோபம் கொண்டு ரோபோ ரஜினியை பார்ட் பார்ட்டாக உடைத்து கொண்டு போய் சென்னையின் மிகப் பெரிய குப்பையில் கொட்ட, அங்கு வரும் அந்த வில்லத்தனமான சீனியர் விஞ்ஞானி மீண்டும் ரோபோ ரஜினியை அசெம்பிள் செய்து அதன் மூளையில் கொடூர குணங்களை உருவாக்கும் ஒரு மைக்ரோ (மேக்ரோ ?) சிப்பை வைத்து விட , ரோபோ ரஜினி கொடூர வில்லன் ரஜினியாகிறது .

ஐஸ்வர்யாராயை கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்து கொள்ள முயல்வது உட்பட பல தவறான செயல்களைஅது செய்ய, அதை தடுக்க விஞ்ஞானி ரஜினியும் அரசாங்கமும் முயல்கின்றனர் . அதனால் வெறி பிடித்த அந்த வில்லன் ரோபோ ரஜினி, பல கதிகலக்கும் செயல்களை செய்ய , முடிவு என்ன என்பதுதான் ....

எந்திரன் . !

விஞ்ஞானி ரஜினி ரோபோ ரஜினியை உருவாக்கும் விதம் மற்றும் ஒரு கற்பனையை உண்மை என்று நம்ப வைக்கும் அளவுக்கு விஞ்ஞானத் தொழில் நுட்பமும் கலை இயக்கமும் பின்னி விளையாடும் அந்த ஆரம்பக் காட்சிகளில் ஆரம்பிக்கிறது ஷங்கரின் சாகசம் . அதுவும் ரோபோ ரஜினிக்கான இயந்திர மாடலை அப்படியே ரஜினியின் முகம் போன்ற மாடலில் செய்திருப்பது .... மற்றும் அச்சு அசல் ரஜினியின் முகம் போன்ற மாஸ்க், அந்த டை(dye) , பேட்டன் (pattern), ரிப்ளிகா (replica ) அதோடு ரோபோவின் உடலாக காட்டப் படும் இயந்திர பாகங்கள்....

ஆகா ! இது தமிழில் இயக்கப் பட்டிருக்கும் முதல் ஹாலிவுட் படம் !.

தமிழில் அர்த்தம் மாற்றி பொருள் கூறப் படும் வார்த்தைகளை வைத்து (உதாரணமாக மாமூல் கேட்கும் போலீஸ்காரர் 'வெட்டு' என்று சொன்னால் லஞ்சம் கேட்பதாக அர்த்தம். ஆனால் தன்னிடம் அப்படிக் கேட்ட போலீசின் கையை ரோபோ ரஜினி கத்தியை எடுத்து வெட்டி விடுகிறது ) செய்கைகளிலும் , வசனங்களிலும் கொண்டு வந்திருக்கும் நகைச்சுவைகள் , (வசனம் சுஜாதா , ஷங்கர் , கார்க்கி ) கதைக்கு பொருத்தமான வெகு பிரஷ்ஷான ரசனைக்குரிய நகைச்சுவை விருந்து .

பாடல்கள் ஒவ்வொன்றும் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தில் ஜொலிக்கின்றன . 'காதல் அணுக்கள்..' பாட்டில் லொக்கேஷனும் , 'இதய்ம் முளைத்த இயந்திரம்..' பாட்டில் ஐஸ்வர்யாவின் நடனமும் , 'கிளிமாஞ்சாரோ.....' பாட்டில் காஸ்டியூமும், பிறந்த நாள் நடன இசையில் ரஜினியின் நடனமும் (கிராபிக்ஸ் வித்தை ஏதும்.....?) அரிமா அரிமா பாடலில் நவீனத்துவம் கலந்த அரங்கமும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்துகின்றன. பிரம்மாண்டப் பிரம்மாதம் ! பாடல்கள் பரவாயில்லை . கிளிமாஞ்சாரோ செம ஹிட் .. பின்னணி இசை சுமார் ரகமே. (ராகமே ?)

லோக்கேஷன்களை காட்டுவதிலும் கிராபிக்சுக்கு பொருத்தமான காட்சிகள எடுத்துக் காடுவதிலுமே ஒளிப்பதிவின் பணிபெரும்பாலும் முடிந்து விடுகிறது .

ரோபோ ரஜினி பிரசவம் பார்க்கும் அந்தக் காட்சி பிரம்மிப்பு கலந்த நெகிழ்வு . இந்தப் படத்திலேயே மிகக் சிறந்த காட்சி அதுதான் .

சின்னச் சின்ன காட்சிகளில் கூட சங்கரின் சிரத்தை சிலிர்க்க வைக்கிறது . உதாரணமாக , விஞ்ஞானி ரஜினிக்குப் போட்டியாக ரோபோ ரஜினியும் சேர்ந்து ஐஸ்வர்யாவுக்குப் பிறந்த நாள் பரிசு தரக் கிளம்பும் காட்சியில், அது தன் தலைக்கு செட் பண்ணிப் பார்க்கும் விதவிதமான ஹேர் ஸ்டைல் .... உங்கள் உழைப்பை நினைக்கும்போது எங்களுக்கே களைப்பாக வருகிறது ஷங்கர் .

"இடைவேளை முடியும்போதே ஹாலிவுட் என்ன ஹாலிவுட் .....நம்ம ஆட்கள் அதற்கும் மேலே போய் விட்டார்கள். " என்ற பெருமிதம் ஏற்பட்டுவிடுகிறது . அதுவும் அந்த சீனியர் விஞ்ஞானி பாத்திரப் படைப்பு இதுவரை இந்திய சினிமா கண்டிராத நூறு சதவீதம் முழுமையான வில்லன் கதாபாத்திரப் படைப்பு .

சங்கரின் கைவண்ணத்தில் புதுமையாக வனையப் பட்டிருக்கிறார் ரஜினி . அப்படியே ஐஸ்.

ஆனால்.....

இடைவேளைக்குப் பின்பு ,மேற்சொன்ன எந்த சந்தோஷமும் முழுமையாய நீடிக்கவில்லை .

ரோபோ ரஜினி ஐஸ்வர்யாவைக் காதலிக்க ஆரம்பித்த உடன் விஞ்ஞானிக்கும் ரோபோவுக்கும் ஏற்படும் பிரச்னைகளை அதற்கு உட்பட்ட ஒரு தளத்தில் களத்தில் விறுவிறுப்பான அக்ஷன் கலந்தவிஞ்ஞான ஜனரஞ்சகப் படமாகக் கொண்டு போய் அந்த அளவில் இப்போது படத்தில் உள்ள அந்த கிளைமாக்சுக்குப் போய் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .

ரோபோ ரஜினிக்குள் ரெட் சிப் வைக்கப் படுகிறது ..அதனால் அவர் கொடுங்க்லனாக மாறுகிறார் என்பதில் ஆரம்பிக்கிறது வில்லங்கம் .

ரஜினியை கொஞ்சம் அதிரடியான வில்லத்தனமாகக் காட்டுவது ரசிகர்களால் ரசிக்கப் படும் என்று ஷங்கர் நினைத்திருக்கலாம் . ஆனால் அதைத்தான்ஷங்கர் சிவாஜி படத்திலேயே பண்ணியாச்சே . அடுத்த படத்திலேயே உடனேயே மீண்டும் அது எதற்கு ?(கிட்டத்தட்ட கெட்டப்பும் கூட ஒரே மாதிரி )

தவிர தன் படங்களில் யாராவது ஒருவரை ஒரு காட்சியில் நிர்வாணமாகக் காட்டி (அதை கிராபிக்ஸ் மூலம் மறைத்தும் ) விடும் ஷங்கரின் செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் கூட தொடர்கிறது .

திரை முழுக்க நூற்றுக் கணக்கான ரஜினிகள் வரும் காட்சிகளை விட , அரிமா அரிமா பாடலின் கடைசியில் ஒரே காட்சியில் பலப் பல ஐஸ்வர்யாராய்கள் வரும் அந்தக் காட்சி கொள்ளை அழகாய் இருக்கிறது .

வில்லன் ரோபோ ரஜினிகளின் படை அதி நவீன ஆயுதங்களோடு போராட அவர்களை எதிர்க்கும் காவல்துறையை , ஏதோ கும்பல் கும்பலாக வந்து எலெக்ட்ரோ மேக்னட் பேட்டில் சிக்கி பொறிந்து போகும் கொசுக்கள மாதிரி காட்டுவது , அறிவிக்கப் படாத நகைச்சுவை .
நூற்றுக்கணக்கான ரஜினிகள் சேர்ந்து எடுக்கும் அந்த பல மாதிரியான இயந்திர உருவங்கள் வடிவங்கள் , கொஞ்ச நேரம் மட்டுமே காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் என்னதான் அது சிறப்பான தொழில் நுட்ப உத்தியாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சிய அமுதமாகவே போய் விடுகிறது .

படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் ஆக்ஷன் காட்சிகள் , நாம் இதுவரை பார்த்த பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களான ரோபோ (இயந்திர மனித உருவகம் ), மேட்ரிக்ஸ் (ஒரே காட்சியில் தோன்றும் நூற்றுக் கணக்கான வில்லன்கள் ) , டெர்மினேட்டர் தி ரெய்ஸ் ஆப் மெசின்ஸ் உள்ளிட்ட பல பாகங்கள் (ரஜினிகள் சேர்ந்து எடுக்கும் பல இயந்திர உருவங்கள் , வடிவங்கள் , உதைத்ததும் தரை நொறுங்குவது , சாலையின் மேன் ஹோலில் இருந்து சாலையை இடித்து எழும் பிரம்மாண்டமான உருவங்கள் போன்றவை , ) காட்சில்லா (இயந்திர உருவம் கார்களை விழுங்குவது ) போன்றவற்றின் சிறந்த காட்சிகளின் தொகுப்பாகவே இருப்பது வருத்தமான விஷயம் .

கடைசியில் ரோபோ ரஜினி, தானே தற்கொலை செய்து கொள்வது போல தன் உடலின் ஒவ்வொரு பாகமாய் கழட்டிக் கொண்டே வருவது நெகிழ்ச்சியான கவிதை.

.இப்படியாக முதல் பாதிப் படம் அவ்வளவு புதுமையாக பிரஷ்ஷாக நூறு சதவீத லாஜிக்கோடு அமைந்திருக்க , இரண்டாவது பாதிப் படமோ , சலிக்க வைக்கும் அளவு மேஜிக் செய்வதோடு , அடிக்கடி லோ பேட்டரி ஆகி தடுமாறும் ரோபோ ரஜினி போல தடுமாறிவிட்டது . படத்திலாவது ரோபோ ரஜினி எப்படியாவது மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்கிறது . ஆனால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு யாருமே கடைசிவரை முழுசாக சார்ஜ் ஏற்றாததுதான் சோகம் .

ஆயிரக் கணக்கான கன்னிகள் கற்பழிக்கப் பட்டு இன்னும் முள்வேலி முகாம்களில் முடங்கிக் கிடக்கும்போதும், என்னவோ இன்னும் கண்ணி வெடிகள்தான் உலகத்தின் பயங்கரமான ஆயுதம் என்பது போல காட்டி யாரையோ தாக்கி யாரையோ குளிர்விக்கும் தந்திரத்துக்கு ஷங்கரும் பலியாகி இருக்க வேண்டாம் . கண்ணி வெடிகளுக்கு எதிராக செயல்பட்ட ஆயுதங்கள் அவற்றை விட பயங்கரமானவை அல்லவா? (உலகம் முழுக்க கண்ணி வெடிகள் பயன்படுத்தப் படுவதைத்தான் சொன்னோம் என்று சமாதானம் சொல்லலாம் என்றாலும் கூட, உண்மை இதுதானே )

ரோபோ ரஜினியை ரிக் வேதத்தையும் ஆசாரக் கோவையையும் படிக்க வைக்கிறார் ஷங்கர் . ஆனால் திருக்குறளையும் , புறநானூற்றையும் படிக்க வைக்க அவருக்கு தோணவில்லை . ஒரு வேளை அப்படிப் படிக்க வைத்திருந்தால் அடுத்தவரின் ....அதுவும் தன்னை உருவாக்கிய மனிதரின் காதலி மீது ஆசைப் பட்டிருக்காது என்கிறாரா ? அதுவும் சரிதான் .

இரண்டாம் பகுதிப் படத்தின் திரைக்கதைக்காக இன்னும் நிறைய அக்கறை எடுத்து இருந்தால், ஹாலிவுட் அண்ணாந்து பாத்திருக்கும் .

எந்திரன் ...

பாதி மந்திரன்,தந்திரன் !.

ஆனால்... எல்லோரையும் ஈர்க்கும் சந்திரனோ , சுந்தரனோ இல்லை
.

1 comment:

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

Post a Comment