Thursday, November 11, 2010
# இளங்கோ அடிகளை கேவலப் படுத்தும் பரத முனிவர் கட்டுக் கதை
மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் தமிழக அரசு கொடுத்த ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு வசதிகளோடு நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணிய்ம் ஒரு கலாச்சார மையம் உருவாக்குகிறார்.
அப்படி அரசின் துணையோடு அதுவும் திராவிட அரசின் துணையோடு என்று அழைக்கப் முதல்வரின் பல்வேறு விதமான ஆசிகளோடு அமைக்கப் படும் அந்த கலாச்சார மையத்துக்கு பரதர் -- இளங்கோ கலாச்சார மையம் என்று பெயர் வைக்கப் பட்டிருப்பது உணமையான தமிழின உணர்வுக்கு மிகப் பெரிய அவமானத்தை இழைக்கும் செயலாகவே அமைகிறது
பரதர் - இளங்கோ கலாச்சார மையம் என்ற பெயருக்கு எந்த வலுவான எதிர்ப்பும் கிளம்பாமல் திராவிடர்கள் தோல் தடித்துக் கிடப்பதைப் பார்க்கும்போது திராவிட சிந்தனையின் நிலமை இன்னும் பரிதாப நாளைக்குப் போய் விட்டது என்பதை தெளிவாக உணர முடிகிறது .
அதுவும் அந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் துவக்க விழாவில் பேசிய முதல்வர் "பரதம் என்றாலே பரதர். பரதர் உருவாக்கியதுதான் பரதம் பரதர் தான் அதனுடைய குரு என்ற ஒரு பழைய கால வழக்கம் பாரதம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது;" என்று கூறி விட்டு "அதிலே நாம் வேறுபடவில்லை; நான் அதை மறுக்கவில்லை." என்று பேசியதுதான் இன்னும் கொடூரம் .
பரதம் என்றாலே பரதர்தானா? பரதத்தை உருவாக்கியது பரதர்தானா? பரதர்தான் அதன் குருவா?
பொதுவாக கிராமத்து வீடுகளில் பயன்படுத்தப் படும் ஒரு பெரிய கல்லை திண்டுக்கல் என்று கூறுவார்கள் . ஆக எந்த ஊரில் அந்தக் கல் இருந்தாலும் அது (திருச்சியை அடுத்த ) திண்டுக்கல் என்ற ஊருக்கு தான் உர்மையானது என்று கூறுவது எப்படியோ அப்படித்தான் பரதக் கலையை உருவாக்கியவர் பரதர் என்று கூறுவதும் .
சரி பரதக் கலையின் குருவாகக் கூறப் படுகிற --இன்று 'திராவிட' இயக்க முதல்வரும் வேறுபடாமல் மறுக்காமல் ஒத்துக் கொண்டிருக்கிற --அந்தப் பரத முனிவரின் 'கதை'யைப் பார்ப்போமா?
த்ரேதாயுகத்திலே மக்கள் இயற்கை சீற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலே இந்திர பகவானாகப் பட்டவர் , பிரம்ம தேவனிடத்திலே மக்களுடைய சந்தோஷத்திற்காக நாட்டிய சாஸ்திரத்திரத்தை படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரம்ம தேவனாகப் பட்டவர் ரிக்வேதத்தின் பாடலையும், சாம வேதத்தின் ராகத்தையும், யஜூர்வேதத்தின் நடிப்புத் திறனையும், அதர்வண வேதத்தின் ரசத்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார். பிரம்ம தேவன் பரத முனிவருக்கு அந்த நாட்டிய சாஸ்திரத்தைக் கொடுத்தார். பரத முனிவர் அந்த சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார்.
இப்படி ஏதோ பன்றிக் காய்ச்சல் பரவியது போல சொல்லப் படுகிறது இந்தக் கதை .
நமக்கு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் முனிவர்கள் எனறால் பெண்களை நெருங்க விடாதவர்கள் . அல்லது ஒரு மனைவியுடன் வாழ்பவர்கள் (ரிஷிபத்தினி ) என்று கூறப் படுகிறது தவிர முனிவரின் அருகில் சென்றதாலேயே சபிக்கப் பட்ட பெண்களைப் பற்றியும் புராணங்கள்தான் கூறுகின்றன . அப்படி இருக்க ஆண்களை விட பெண்களே அதிகம் பயன்படுத்துகிற பரதக் கலையை உருவாக்கியவர் ஒரு முனிவர் என்று கூறுவதை விட நகைச்சுவை என்ன இருக்க முடியும் ?
தவிர இந்த பரதன், பரதர் என்ற சொற்கள் பல 'கதாபாத்திரங்களில்' இருக்கிறது . இங்கே ஒரு பரத முனிவர் . ராமாயணத்தில் ராமனின் தம்பியாக (பாதுகை வைத்து ஆண்ட) பரதன் . அவன் பெயரால்தான் நம் நாடு பரதன் என்று அழைக்கப் படுவதாகவும் ஒரு கதை . ( கானகத்தில் இருந்து வந்து பல்லாண்டு பல்லாண்டுகள் சிறப்பாக ஆண்ட ராமன் பெயரை நாட்டுக்கு வைக்காமல் பதினான்கு ஆண்டுகள் மட்டும் ஆண்ட அந்தக் கால ஓ . பன்னீர் செல்வத்தின் பெயரை வைத்தது என்ன நியாயம்?)
கேட்டால் பரதன் என்ற பெயர் வட இந்தியாவின் நில அடையாளம் . சமஸ்கிருதத்தின் மொழி அடையாளம் என்பார்கள் . இதுவும் கட்டுக் கதைதான் .
இந்த பரதன் என்ற பெயரே பரதவர் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து போனதுதான் .
பரதவர் ?
மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளிடம் ஒரு செல் தாவரம் எது என்றால் கிளாமிடாமோனாஸ் என்று சரியாகச் சொலும் . ஒரு செல் உயிரி எது எனறால் அமீபா என்றும் சரியாகச் சொல்லும் . கிளாமிடா மோனாஸ் அமீபா இரண்டும் உருவான இடம் நீர் ... அதாவது கடல் !.
கிளாமிடாமோனாஸ் அமீபா இந்த இரண்டும் பல செல் உயிர்களாகப் பல்கிப் பெருகி உருவான உயிர்களின் சிகரம்தான் மனித இனம் . ஆக நீர்நிலைகளில் உருவான உயிர்களில் இருந்தே மனித இனம் வளர்ந்தது . ஆக ஆதி மனித இனம் என்பது ஏதோ ஒருவகையில் நீரோடு கடலோடு கடல் சார்ந்த தொழில்களோடு சம்மந்தப் பட்டிருக்க வேண்டும் என்கிறது அறிவியல் .
கடலும் கடல் சார்ந்த பகுதிகளையும் ஓட்டி வாழ்கிற மக்களுக்கு சுருக்கமாக சொல்லப் போனால் மீனவர்களைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்லின் பெயர் பரதவர் என்பதாகும் . தமிழினத்தின் மூத்த குடி நாகர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் . (இவர்களும் கடலோடு வாழ்ந்தவர்கள்தான் )
பரதவர் என்ற இனம் பற்றி வரலாறு என்ன கூறுகிறது என்று பார்போமா ?
'பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள்தான் .தமிழ் மூவேந்தர்களில் பழமையானவர்களாக கூறப்படும் இனம் பாண்டிய இனமே . பண்டைய என்ற சொல்லுக்கு பழைய என்று ஒரு பொருள் உண்டு . இந்த பண்டைய என்ற சொல்லே 'பாண்டிய ' என்ற சொல்லில் இருந்து உருவானதுதான் . இவர்களின் சின்னம் கடல் வாழ் உயிரான மீன் . (கடலில் இருந்து உயிர்கள் உருவாகி மனித இனம் வரை வளர்ந்தது என்ற அன்றைய தமிழர்களின் குறிப்பாக பாண்டியர்களின் அறிவியல் சிந்தனைதான் மீனை அவர்கள் கொடியில் அமைக்க வைத்தது )
இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது இந்த பரதவர்கள் போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி அரசு நிலைநாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள்.
பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.(இந்த பரதனைதான் ராமாயணத்தில் ராமனின் தம்பியாக சித்'தி'ரித்து வட இந்திய சம்ஸ்கிருத அடையாளமாக மாற்றி விட்டார்கள்)
பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.
பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாகஇவர்கள் பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், கங்கை நாட்டார், சிந்து நாட்டார் , சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு.(சிந்துச் சமவெளி எழுத்துக்களில் தமிழ் வார்த்தைகள் இருப்பது நிறுவப்பட்டதை ஞாபகப் படுத்திக் கொண்டால் கங்கை நாட்டார் சிந்து நாட்டார் போன்ற பெயர்களின் காரணம் விளங்கும் . இவர்களின் சிலருக்கும் பின்னால் ஆரிய நாட்டார் என்று பெயர் கொடுத்து குழப்பியது வட மொழி இலக்கியங்கள்)
துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் கடற்படை வீரர்களாக அரச படைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.
பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரதகுலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.'
இதுதான் பரதவர்களின் வரலாறு .
இந்த பரத(வ)ர் என்ற பெயர்தான் ராமாயண காப்பியம் வரை போனது .
இதே பரதர் என்ற பெயர்தான் பின்னாளில் எழுதப் பட்ட கதைகளில் திரேதாயுகம் அந்த யுகம் இந்த யுகம் என்றெல்லாம் போய், பரத முனிவர் என்ற கற்பனைப் பாத்திரமாக மாறியது .
இருந்து விட்டுப் போகட்டும் . அது கதையாக இருப்பதில் யாருக்கும் பேதமில்லை .
ஆனால் பரத நாட்டியக் கலையை உருவாக்கியவரே பரதர் என்ற ஒரு முனிவர்தான் . அதன் குருவே அவர்தான் என்று கூறுவதும் அதை பலரும் வேறுபடாமல் மறுக்காமல் ஒத்துக் கொள்வதும்தான் அநியாயம் . (அது என்னவோ தெரியவில்லை . ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வரலாற்றை முடிந்தவரை நிரூபித்து எழுதினால் மறுப்பவர்கள் கூட , எப்போது என்றே கூற முடியாத துவாபர யுக, திரேதா யுகக்கதைகளை மட்டும் அப்படியே நம்பி கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர். கொடுமை )
ஆக, கண் முன்னே விரியும் பரதம் என்ற அற்புதக் கலையை, இருந்திருக்க வாய்ப்பே இல்லாத ஒரு கற்பனைக் கதாபாத்திர முனிவர் எப்படி உருவாக்க முடியும் . ?
அப்படியானால் பரதக் கலையை உருவாக்கியது யார் ?
பரதம் எனும் மாபெரும் கலையை இவர்தான் உருவாக்கினர் என்று ஒரு தனிப்பட்ட நபரை - அவர் என்னதான் முனிபுங்கவராக இருந்தாலும் --- புராணத்தின் பெயரால், கட்டுக் கதைகளின் பெயரால் அடையாளம் காட்டுவதை விட அந்தக் கலையை கேவலப் படுத்தவே முடியாது . அப்படிக் கேவலப் படுத்துவதற்குப் பதில் அந்தக் கலையை ஒட்டு மொத்தமாக அழித்தே விடலாம் .
ஆதாரங்கள் இலக்கியங்களின் வரலாறுகளின் அடிப்படையில் இன்றைய அளவில் இருந்து பின்னோக்கிப் போனால், பரத நாட்டியக் கலையின் ஆதார அடையாளமாக ஒருவரைக் குறிப்பிட வேண்டும் என்றால், அது சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளையே குறிக்கும் .
தமிழின் ஆதிகாவியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரம். இதன் சிறப்பை அறிந்து, பாரதியார் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். காவியங்கள் பொதுவாக அரசனைப் பற்றியோ அல்லது தெய்வத்தைப் பற்றியோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரம் தமிழின் முதல் காவியமாக மட்டும் திகழாமல், உலக அளவில் சாதரண நிலை மாந்தர்களை வைத்து எழுந்த முதல் காவியமும் கூட. அதுவும், பெண் மகளை வைத்துப் பாடபட்ட முதல் காவியமுமாகும்.
ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அந்தக் காவியத்தை படைத்த இளங்கோவடிகள்தான், மாதவி கதாபாத்திரத்தின் மூலம் பரதக் கலையை சிலப்பதிகாரக் காவியத்தில் ஏற்றி இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுக்கும் கொண்டு வந்தவர் .
நாட்டிய சாத்திரக் கூறுகள் , அரங்க அமைப்பு , அதற்கான அணிகலன்கள் , உடைகள் என்று பரதக் கலையின் உடல் பொருள் ஆவி எல்லாம் சிலப்பதிகாரத்தினால்தான் சாகாவரம் பெற்றது .
அதிலும் கூட இளங்கோ அடிகள் "எனக்கு இந்த நாட்டியக் கலை அறிவை துவாபர யுகத்திலே இந்திரன் அருளினான் , பிரம்மன் பீச்சிக் கொடுத்தான் "என்று கதை விடவில்லை . இத்தனை காலமாக சோழ நாட்டு மக்களிடத்தில் சிறப்பாக இருக்கிற பரத சாத்திரத்தை தொகுத்துச் சொல்லி இருக்கிறேன் " என்று நேர்மையாக ஒத்துக் கொள்கிறார் இளங்கோ .
சோழ நாட்டுத் தலைநகரமான காவிரிப் பூம்பட்டினத்தில் காவிரியாறு கடலோடு கலக்கும் இடம் , மற்றும் கடற்கரைகள் , ஆற்றங்கரை இவற்றில் பவுர்ணமி நிலவில் 'இந்திர விழா' கொண்டாடுவது பழங்காலத்தில் கால கால வழக்கம் . அங்கு உருவாகி வளர்ந்ததுதான் பரதமும் கர்நாடக இசையும் .
கரை நாடக இசை என்ற தமிழ் சொல்லே கர்நாடக இசை என்று திரிந்தது . ( சமஸ்கிருதத்தில் கர்ணா எனறால் இனிமை .அடதி எனறால் காது . எனவே காதுக்கு இனிமையான இசை என்பதால் கர்நாடக இசை என்று பின்னாளில் ஒரு இட்டுக் கட்டு விளக்கம் கொடுக்கப் பட்டது . 'கர்ண'கொடூரம் என்பதும் சமஸ்கிருதம்தான் . அது வேறு எந்த சமஸ்கிருதத்தில் இனிமை என்று போரில் தருகிறதோ தெரியவில்லை )
பரதமும் அப்படி கரை நாடகக் கொண்டாட்டங்களில் உருவானதுதான் . அதனால்தான் காவிரிப் பூம்பட்டினத்தை வைத்து உருவான சிலப்பதிகாரத்தில் பரதநாட்டியம் ஒரு முக்கிய அங்கமாக இடம் பிடித்தது . தவிர நாட்டிய நன்னூல் என்று பரத நாட்டியத்துகான ஒரு தனி நூல் பற்றியே குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள் .
சிலப்பதிகாரத்துக்கும் முன்பிருந்தே, கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், பாணர், போன்றவர்கள் சங்ககாலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ் மண்ணில் நாட்டியக் கலையைக் காத்து வளர்த்து வந்திருக்கின்றனர்.
நாட்டிய சாஸ்திரம் என்ற ஒரு நூலை பரத முனிவர் எழுதினார் . அதனால் அவர்தான் பரதத்தின் குரு என்று சிலர் கூற , அதைத்தான் மறுக்கவும் இல்லை வேறுபடவும் இல்லை என்கிறார் முதல்வர்
உண்மையில் பரத முனிவரின் அந்த நாட்டிய சாத்திரம் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட நாட்டிய நன்னூலின் மொழிபெயர்ப்பு நூல்தான் .
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் அவிநயம் என்பது பலவகைக் கூததுகள் விளக்கும் ஒரு நூல் எனக் கூறியுள்ளார். அவிநயர் என்னும் சொல்லுக்குக் கூத்தர் எனப்பொருள் இருப்பதைச் சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. . எனவே தொல்காப்பியர் காலத்திலேயே அவிநயர்களால் அவிநயம் என்னும் நாட்டிய நன்னூல் எழுதப்பட்டது எனத் தெரிகிறது
இளங்கோவடிகள் குறிப்பிடும் பரத சாத்திரத் தொகுப்பு நூல் இந்த அவிநயம்தான் . .(பரதத்தின் அடிப்படை அபிநயம் பிடித்தல் . அவிநயம் என்ற தமிழ் சொல்லே அபிநயம் என்று வடமொழிக்குப் போனது .தொல்காப்பியர் காலத்திய அவிநயம் இல்லாது போனாலும் சங்ககாலத்தில் சாத்தனார் இயற்றிய கூத்தநூல், அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, பஞ்ச வாணர் இயற்றிய நாடகத்தமிழ் போன்ற பல நாட்டியக் கலை நூல்கள் தொல்காப்பியர் காலத்து அவிநயத்தின் வழி நூல்களாகத் தோன்றின. சிற்றிசை, பேரிசை, இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு போன்ற ஏராளமான நூல்கள் முத்தமிழ் வளர்க்கும் நூல்களாகத் திகழ்ந்திருக்கின்றன. கூத்த நூலும், பஞ்ச மரபும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. பரதர் தன்னுடைய நாட்டிய சாஸ்திர நூலில் கூறும் 108 கரணம் எனும் தாண்டவ நிலைகள் தமிழுக்குப் புதியன அல்ல.
பரத முனிவர் பற்றி திரேதா யுகக் கட்டுக்கதை இருக்கிறது என்பதை முன்னரே பார்த்தோம் . பின்னாளில் அதை நம்பாமல் யாரவது கேள்வி கேட்பார்கள் என்பதாலோ என்னவோ மெதுவாக வரலாற்றிலும் பரத முனிவர் பெயரை திணிக்கப் பார்த்திருகிரார்கள் .
ஆனாலும் பாவம்!
.
அதாவது , பரத முனிவர் பல்லவர் காலத்தில் கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று ஒரு கருத்து பரத முனிவரை ஏற்பவர்களாலேயே கூறப் படுகிறது .
ஆனால் பரதக் கலையை நான் உருவாக்கவில்லை என்று நேர்மையாக ஒத்துக் கொள்ளும் இளங்கோவடிகளின் காலம் ?
கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் அரசன் குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனும் சேரப்பேரரசன் . அவனது தலைநகரம் வஞ்சி மூதூர் . சேரப்பேரரசன்.அப் பெருவேந்தனுக்கு இரண்டு பிள்ளைகள்.சேரன் செங்குட்டுவன் மற்றும் இளங்கோ அடிகள் . ஆக சிலப்பதிகாரம் உருவான கால கட்டம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டு . அப்படிப் பார்த்தாலும் பரத முனிவர் பின்தங்கி விடுகிறார்
பரத முனிவர்தான் பரதக் கலையை கண்டு பிடித்தார் என்று பொய்யாக நிறுவ இளங்கோவடிகள் வாழ்ந்த காலத்தோடு கொண்டு போய் பரத முனிவரை திணித்த 'மேதைகள் '...பாவம் சிலப்பதிகாரத்தை படிக்காமல் அதற்குள் அவசரப் பட்டுத் திணித்து விட்டார்கள் .
சிலப்பதிகார காலத்துக்கு எல்லாம் முந்தைய தொல்காப்பியர் தனது மெய்ப்பாட்டியலில் பரதக்கலையின் உயிரோட்டமான அபிநய இயல்புகளை மெய்ப்பாடு என்கிறார். நாட்டியக் கலையை நாட்டிய மரபு எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது பரதக்கலை. ஆக இளங்கோ அடிகளே பரதக் கலையின் பார்வையாளன்தான் எனும்போது அவருக்குப் பின்னால் வந்ததாக கூறப் படுகிற(அதுவும் கற்பனையாக கூறப் படுகிற ) பரதர் எப்படி பரதக் கலையை உருவாக்கி இருக்க முடியும்?
ஆக பரதர் என்ற கற்பனைப் பாத்திரத்தின் பெயரால் பரதக் கலை ஆராய்ச்சிக்காக ஒரு மையம் அமைப்பது மடமை .
எல்லாம் சரிதான் . ஆனால் இன்று பரதக் கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதில் அதிகம் ஈடுபடுவதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்த்தினர்தானே'''? அப்படி இருக்க பரதத்தை உருவாக்கியது பரத முனிவர்தான் என்று அவர்கள் சொல்வது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்று தோன்றலாம் . .
அவர்களின் ஈடுபாட்டை மதிக்கலாம் . போற்றலாம் . அதற்காக இவ்வளவு அறிவியல் வளர்ந்த காலத்திலும் வரலாற்றில் பொய் வரக் கூடாது . தவிர பரதம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் புழக்கத்தில் முடங்கியதற்கும் காரணம் உண்டு .
கோவில்களில் அக்காலத்தில் தேவதாசிகள் எனப்படும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பெண்கள் இருந்தார்கள். இவர்கள்தான் பரதக் கலையை வளர்த்தவர்கள். பரதத்தை முறையாக ஆடி வந்தவர்கள்இவர்கள்தான் . இந்தக் கலை இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு நாம், அக்கால தேவதாசிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.கோவில்களில் பலர் பார்க்க ஆடுவது தேவதாசிகள் எனறால் , மற்ற பெண்களும் வீட்டில் பொழுதுபோக்காகவும் கலை வளர்ப்பாகவும் பரதம் ஆடினர். தவிர பரதம் ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட .
சோழ மன்னர்கள் காலத்தில் பரத நாட்டியம் கொடி கட்டிப் பறந்தது. இவர்களின் ஆட்சிக்காலத்தை, பரதத்தின் பொற்காலம் எனலாம். (பரதம் உருவானதே சோழ நாட்டில் இருந்துதானே )பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்திலும் பரத நாட்டியம் செழித்தது பரதத்திற்கு சதிர் என்றும் ஒரு பெயர் உண்டு. சதிராட்டம் என்றும் இது அழைக்கப் பட்டது
முன்பு இருந்த பரத நாட்டியத்திற்கும், இப்போதைய வடிவத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தன.இன்றைய பரத வடிவத்தை, தஞ்சாவூர் நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் உருவாக்கினார்கள். இவர்கள் முறைப்படுத்திய பரதம்தான் இன்று ஆடப்பட்டு வருகிறது.
அன்று பரதம் மிகப் புனிதமாக கருதப்பட்டது. பரதக் கலைஞர்களுக்கு ராஜ மரியாதைதான். பொன்னும், பொருளும் மன்னர்களால் வாரி வழங்கப்பட்டது. நல்ல ஆதரவும் இருந்தது. ஆனால் இந்த கோலாகலத்திற்கு முகலாயர்கள் வடிவில் முடிவு வந்தது.
முகலாய மன்னர்களின் வரவிற்குப் பிறகு கோவில்களில் பரதம் ஆடுவது தடைபட்டது. பெர்சிய நாடுகளிலிருந்து நடனக்காரர்களை முகலாயர்கள் இந்தியாவுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தேவதாசிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களது நடனத்தைப் பார்க்க ஆதரவு குறைந்தது.
முகலாயர்கள் போய், வெள்ளையர்கள் வந்தனர். நிலைமை இன்னும் மோசம் ஆனது. மன்னர்கள், ஜமீன்தார்களின் ஆதரவும் பரதத்துக்கு குறைந்தது. தேவதாசிகளுக்குக் கிடைத்து வந்த ஆதரவு நின்று போனது. வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டம். வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை விபச்சாரத்திற்குத் தள்ளியது. கலை என்ற பார்வையிலிருந்து வேறு மாதிரியாக பரதம் பார்க்கப்பட்டதால் பெண் பிள்ளைகள் பரதம் கற்பதை நிறுத்தினர்.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் பரதம் இழிவாகப் பார்க்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்த நிலை நீடித்தது.
வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகு நிலைமை மாறியது. பரதத்தின் உண்மை வரலாறு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.
அதே நேரம் பல்வேறு சமூகப் பெண்களின் வாழ்க்கை மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாகவும் உழைப்புக்கு அதிகம் நேரம் ஒதுக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டதாலும் பரதம் தமிழ் சமூகத்தில் இருந்து விலகியது . இந்நிலையில் உடல் உழைப்பு அதிகம் தேவைப் படாத வாழ்க்கை வாழும் சமூகப் பெண்கள் பரதத்தை கையில் எடுத்தனர் .
(இந்த மாற்றத்தால் பரதத்தை உருவாக்கியது பரத முனிவர் என்ற கட்டுக் கதை உண்மையாகிவிடாது . )
இன்று பரதர் -- இளங்கோ ஆராய்ச்சி மையம் உருவாக்கும் பத்மா சுப்பிரமணியம் பரத நாட்டியக் கலைஞராக ஆனதும் இந்த வகையில்தான் . அவரது பரதத் திறமை பாராட்டுக்குரியதுதான்
ஆனால் அவர் பரதக் கலையை உருவாக்கியது பரத முனிவர்தான் என்ற பொய்யை தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார் . தவிர பரதர் பெயரால் ஒரு பெரிய ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தி இந்த கட்டுக் கதையை உண்மையாக்கும் முயற்சியிலும் வெகு காலமாக முட்டி மோதிக் கொண்டிருந்தார் பத்மா .
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மேற்கண்ட நோக்கத்திற்காக பத்மாவுக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனால் பிறகு ஆட்சிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, பரதமுனிவர் பெயரால் அமையவுள்ள அந்த மையம் ஆரியப் பண்பாட்டைத்தான் பரப்பும் என்று தமிழறிஞர்கள் கூறியதை ஏற்று, ஜெயலலிதா கொடுத்த அனுமதியை நீக்கினார்.
இப்பொழுது அதே முதல்வர் கருணாநிதி பரதமுனிவர் பெயருடன் இளங்கோ அடிகள்; பெயரையும் சேர்த்து, பத்மா சுப்பிரமணியத்தின்; பரதா – இளங்கோ ஆசியப் பண்பாட்டு நிறுவனத்திற்கு முன்பு ஜெயலலிதாவில் கொடுக்கப் பட்டு , தன்னால் அனுமதி மறுக்கப் பட்ட அதே ஐந்து ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளார். எனறால் .....
ஏன் இந்த பல்டி என்பதுதான் புரியவில்லை .
பத்மா சுப்பிரமணியம் தமிழ்ப் பண்பாட்டு மரபும் வாழ்வியலும் சமற்கிருதத்திலிருந்து வந்தவை என்று வஞ்சகமாக வாதிடுபவர்
.மதுரையில் 1981ல் நடந்த 5 வது உலகத் தமிழ் மாநாட்டில் “இளங்கோ அடிகள் பரத முனிவரிடமிருந்து கூத்துக் கருத்துகளைப் பெற்றுத் தான் சிலப்பதிகாரத்தில் எழுதினார்.” என்று பேசி “ஆய்வுரை” வழங்கிய போது அங்கிருந்த நீதிபதி மகாராஜன் , டாக்டர் சாலை இளந்திரையன் டாக்டர் இளவரசு முதலிய தமிழறிஞர்கள் பலர் எதிர்த்துப் பேச பாதியிலேயே உரையை முடித்துக்கொண்டு உட்கார்ந்தவர்தான் இந்த பத்மா சுப்பிரமணியம் .
இப்பொழுது இளங்கோஅடிகள் பெயரை பரதர் என்ற பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டதன் மூலம் கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், பாணர், போன்றவர்களால் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வளர்க்கப் பட்டு , தொல்காப்பியர் , அவிநயர் , இளங்கோவடிகள் , சாத்தனார் , அறிவனார் , பஞ்ச வாணர் , சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு , ஆகிய காலத்தை வென்ற மேதைகளால் பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப் பட்ட கூத்து இலக்கணங்களையும் தமிழரின் நாட்டிய மரபையும் மறுத்து நாட்டியக் கலை ஆரியத்திற்கே உரியது என்ற ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த பத்மா சுப்பிரமணியம் இந்த நிறுவனத்தைத் தொடங்குகிறார்.
பரத முனிவர் என்ற பெயரில் ஒருவர் இருந்ததே இல்லை என்றும் தமிழின் கூத்துக்கலை இலக்கணங்களை சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்ட ஆரியர்கள் பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள் என்றும் பரதமுனிவர் என்பது வெறும் கற்பனைப் பெயர் என்றும் இதற்கு முன்பே தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் பலமுறை கூறியுள்ளனர்.
17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பிறந்ததாகக் கூறப்படும் இராமன் பிறந்த இடத்தைக்கண்டு பிடித்து விட்டதாகக் கூறி ஆரியப்பண்பாட்டை நிலைநாட்டுகிறார்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த மாமன்னன் இராசராசன் மறைந்த இடத்தை கண்டுபிடிக்க முடிய வில்லையே” என்று அண்மையில் கூறிய , முதல்வர் இப்போது 'பரத'ப் பொய்யில் இருந்து வேறுபடவும் இல்லை மறுக்கவும் இல்லை என்று கூறுவது என்ன திராவிட சித்தாந்தமோ , தெரியவில்லை.
பரத முனிவர் பெயருடன் துவங்கும் பத்மா சுப்பிரமணியம் தொடங்க உள்ள பரத முனிவர் நிறுவனத்திற்கு முதல்வர் கருணாநிதி அரசு நிலத்தை ஒப்படைக்கக் கூடாது . பத்மா சுப்ரமணியத்தின் தமிழ் விரோத போக்கிற்கு துணை போகக் கூடாது
உண்மையில் பரதக் கலை பற்றிய ஒரு ஆராய்ச்சி மையத்திற்கு இளங்கோ அடிகள் பெயரை வைத்தது சரிதான் . கூடவே துணைக்கு இன்னொரு பெயர் வேண்டும் எனறால் அவிநயர்கள் பெயர் வைப்பதே நியாயம் .
இல்லை இல்லை (பரதர் பெயர் போல )ஒரு கற்பனைப் பெயரும் கூடவே அவசியம் வேண்டும் எனறால் மாதவி பெயரையே கூட வைக்கலாம் . அப்போதுதான் அரசு அந்த மையத்திற்கு உதவ வேண்டும் .
'உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவாக பரதர் -- இளங்கோ என்று பெயர் ' என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் முதல்வர் . குறைந்த பட்சம் இளங்கோ -- பரதர் என்று பெயர் வைத்திருந்தால் கூட மனது சமாதானப் பட்டிருக்கும் .
ஆனால் முழுக்க முழுக்க கற்பனையான பரதர் என்ற முனிவரின் பெயரை முதலில் வைத்து ஒரு மாபெரும் காவியத்தைத் தந்து இன்னும் காவியமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இளங்கோ அடிகளின் பெயரைப் பின்னுக்கு தள்ளியதன் மூலம் ,
தமிழ் உணர்வோடு திராவிட சித்தாந்தத்தையும் பின்னுக்குத் தள்ளி 'சரித்திரம் ' படைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி .
---------------------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமையான கட்டுரை. பரத கலைக்குள் இவ்வளவு உண்மைகள் நிறைந்துள்ளதா என இன்றே அறிந்தேன். வாழ்த்துக்கள் நண்பரே!
மிகப்பெரிய நன்றி ஜோஸ்! உங்களை மனப் பூர்வமாக ஆராதிக்கிறேன் . இந்த கட்டுரைக்கு யாரும் பின்னூட்டம் இடாத போது நான் பட்ட வேதனைக்கு அளவே இல்லை . மருந்தாக வந்தது .. சரியாக சொல்ல வேண்டுமானால் ஊட்டமாக வந்தது உங்கள் பின்னூட்டம் . இணையில்லா இனிப்பான நன்றிகள் !
இது பின்னூட்டம் மட்டுமல்ல பொன்னூட்டம்
என் பரதவர் இனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ungal pathivu uthaviyathu
பரதர் என்பது கற்பனை என்றால் எங்கள் இனத்தை பரதவர், பரதர், பரவர், பௌரவர் என்று கூறுகிறார்கள் இதுவும் கற்பனையா?
இளங்கோவடிகள் ஒரு பரதர்...
அருமையான கட்டுரை... பாராட்டுக்கள்..
பரதநாட்டியம்=பரதர்+நாட்டியம்
முந்நீர்விழா,இந்திரவிழா மற்றும் கடல் வணிகத்தில் பொருள் ஈட்டி திரும்பி வரும் பரதவர்களை மகிழ்விக்க எடுக்கப்படும் விழாக்களில் பரதவர்களை மகிழ்விக்க ஆடப்படும் நாட்டியமே பரதநாட்டியம்...
தம்பி நீங்கள் பரதவர் பற்றிய ஆய்வு செய்து பின் கட்டுரை எழுதி இருக்கலாம். பரதவர் தான் தமிழ் குடியின் கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த தமிழ் குடி இந்த இனம் இப்போது கன்னியாகுமரி முதல் ராமேஸ்வவரம் பகுதிகளில் மீனவர்களாக நல்ல செலுமையாக வாழ்கின்றனர் இவர்களே ரீக் வேதம் சொன்ன பரதவர் சங்க இலக்கியம் சொன்ன பரதவர் கருணாநிதி சொன்ன பரதவர் இன்னும் இந்த இனம் பற்றி விசயம் தெரிய வேண்டும் என்றால் 9884436365
கட்டுரை பிரமாதம். இருப்பினும் தங்கள் புரிதலில் குறைவு உள்ளது. பரதர்கள் குரு குலத்தவர். முனிவர்களே அவர்கள் குரு. பரதவர்கள் ஆடிய கூத்தை வேதமாக எழுதிய பரதவ முனியை தவறாக புரிந்து விட்டனர். இது ஒரு இனத்தின் கூத்து.. பரத முனி என்பவர் குரு குல முனிவர்கள்.. ஆனா இந்திரன் கட்டு கதைகளை நம்ப வேண்டாம்.. பரத நாட்டியம் இயற்றியது தமிழக பரத இனம் என்று பெறுமையாக சொல்லுங்கள்.
இந்திரன் கட்டுக்கதை என்றால் முருகனின் மனைவி தெய்வானை யாருடைய மகள்.பரதகுல அரசன் மச்சேந்திரர் மகள்.
இந்திரன் மகள்.
Post a Comment