Tuesday, February 15, 2011

# நான் படித்தேன், குரும்பலூரில் நேற்று !

நான் படித்தேன், குரும்பலூரில் நேற்று !
**************************************

ஞாபகக் கூட்டின் உள்ளே நுழைந்து
நாலா புறமும் தேடித் பார்த்தால்
கையில் கிடைக்கும் காவியப் பொன்னேடுகள் - நம்
பள்ளியின் பெயர் சொல்லியே பளபளக்கின்றன

அரசு உயர்நிலைப் பள்ளி, குரும்பலூர்...
அது ,

ஆயிரம் கல்விக் கடவுள்கள் ஒன்றாக வசித்த இடம் .
வாழ்க்கைத் தேரை வளமையாய் இழுக்க
எங்களுக்கு கிடைத்த இணையற்ற வடம் .
இதயத்தின் கண்களும் அறிவின் காதுகளும்
ஒருசேர விழித்த உன்னத பீடம் !

சாலையின் மேலே பள்ளி --அந்த
பள்ளியே எங்கள் சோலை .

விரும்பிப் படித்த ஒரு தலைமுறையின்
விளக்குகளாய் ஒளிர்ந்த எங்கள் ஆசிரியர்கள் !

பள்ளிப் பாடத்தோடு லட்சியப் பாடத்தையும்
பக்குவமாய்ச் சொன்ன சின்னாப் பிள்ளை அய்யா.
அடியைக் கூட அன்போடு கொடுக்கும்
அற்புதம் அறிந்தவை அவரது கரங்கள் !

விஞ்ஞானியாக வேண்டியவன் என்றென்னை வாழ்த்தி
விழிகளை விரிய வைத்த ரெஜினா மேரி டீச்சர்
(என்னை மன்னியுங்கள் டீச்சர் )

பாஞ்சாலி சபதத்தை பாங்காக நடத்தி
படிக்காமலேயே மனப்பாடமாக்கிய யூசுப் அய்யா !

இயற்றமிழோடு இசைத்தமிழ் சேர்த்து
இன்பத் தமிழ் ஊற்றிய நக்கசேலம் தமிழய்யா !

கணீர்க் குரலில் பாடம் நடத்திய சொக்கநாதபுரம் அய்யா
சீறும் குரலில் பாடம் நடத்திய சின்னராணி டீச்சர்
(யப்பபபா ... உங்கள் அடி !. முதுகு இன்னும் வலிக்கிறது டீச்சர் )

கணிதப் பாடத்தை காதலிக்க வைத்த ஈ.பெரியசாமி அய்யா
உடற் பயிற்சியின் உன்னதம் அறிமுகப் படுத்திய அழகன் அய்யா ....

ஒரு பக்கம் பத்திரிகையாளன் மறுபக்கம் வரலாறு ஆசிரியர் என
நான் கண்ட முதல் பத்திரிக்கையாளர், தினமலர் சேதுராமன் அய்யா ...

அறிவியல் பாடத்தோடு அன்பியலும் புகட்டி
ஆல விழுதாய் மனதில் ஆழ விழுதாய் இறங்கி -- நான்
பத்தாவது அறிவியல் தேர்வு எழுதிச் சென்ற மதியம்
பஸ் நிறுத்தத்தில் பசியோடு காத்திருந்து ....
எங்கோ இருந்த என்னை பர்ர்க்க
எல்லா புறமும் ஆளனுப்பி வரவழைத்து .....
அறிவியல் தேர்வை நான் எழுதிய விதம் அறிய
வினாத்தாள் கேள்விகள் கேட்டு விடை சொல்ல வைத்து
திருப்தியையே உணவாக உண்டு பஸ் ஏறி ....
இமயம் போலென் மனதில் ஏறிய எம் .தர்மலிங்கம் அய்யா ..

படிக்கப் போகும் குழந்தையை கை பிடித்து
பள்ளி வாகனத்தில் ஏற்றி விடும் அம்மா போல
எனக்குள் இருந்த படைப்புத் திறமைக்கு
இனிப்பாய் ஆரம்ப அங்கீகாரங்கள் தந்து
வீட்டுக்குள் வரவழைத்து விழிகள் விரியப் பேசி
தோளில் கை போட்டு தோழமை காட்டி ,
படுத்துக் கிடப்பது போல் படித்துக் கிடக்கவும் பழக்கப்படுத்தி ,

மகன்களைக் கண்டிக்கும் கோப வேளைகளில்
"ஒரு பயலும் உங்கள பாக்க வீட்டுக்குள் வரக் கூடாது " என
ஓங்காரத்தின் உயரத்தில் நின்று முழங்கும் போதும்
"செந்திலைத் தவிர ..." என்று உடனே சேர்த்து ......

எனக்கு மட்டும் கணையாழி தந்த எத்திராஜ் அய்யா ....

அடேயப்பா ..!

அண்ணன்களையும் அக்காக்களையும்
அத்தைகளையும் மாமாக்களையும்
ஆசிரியச் செல்வங்களாய்ப் பெற்ற
அதிர்ஷ்டக்காரர்களப்பா நாங்கள் !

என் அரைக்கால் சட்டையை கணுக்கால் வரை
இழுத்து விட்டது இந்தப் பள்ளிதான் !.
டேய் என்று அழைக்கப் பட்டவன்
தம்பி என்று அழைக்கப் பட்டதும் இங்கேதான் .

எனக்கு மீசை முளைத்ததை எனக்கும் முன்பே
கண்டு பிடித்த தோழிகள் இங்கேதான் பூத்தார்கள் .

மணிக்கட்டுக் கையை மணிக்கொருதரம் பற்றி
நட்பின் உரம் ஏற்றிய நண்பர்கள்
இந்தப் பள்ளியில்தான் விளைந்தார்கள்.

சைக்கிளை விட நீளமான அலங்காரவல்லி
சைக்கிள் ஓட்டும் அதிசயம் இங்கேதான் கண்டேன் .

நான் செய்த தவறை நான் இல்லா வேளையில்
தான் செய்த தவறாய் தகைமையுடன் ஏற்று
ஐம்பது மூங்கில் அடிகளை அசராமல் வாங்கி ,
நட்புக்கு இலக்கணம் வகுத்த நாகமுத்து ...
இந்தப் பள்ளியில்தான் எனக்குக் கிடைத்தான் .

வறுமையையே உணவாய்த் தின்று
வாடிக் கிடந்த பொழுதுகளிலும் -- ஒரு
மைசூர் பாக்கு நான் தந்தாலும்
மறுத்துப் பழகிய ரவீந்திரனை
இங்கேதான் பார்தது
இதயம் வணங்கி நின்றேன் . .

ஒரு கோபத்தில் அறிமுகமாகி பின்
ஓர் உடன் பிறந்தவளாகவே மாறி
ஒரு நாள் .....
சொல்லாமல் செத்துப் போன பாளையம் சாரதாவுகாக
நான் கண்ணீர் விட்டுக் கரைந்தழுததற்குக்
காரணமானதும் இந்தப் பள்ளிதான் .

அறிவில் மட்டுமின்றி அன்பிலும் அவசரம் காட்டும்
நல்ல நண்பன் 'வாலு ' சரவணன் ...
இந்தப் பள்ளி இல்லாவிட்டால்
என்னோடு இயைந்திருப்பானா?

ஊட்டியில் இருந்து வந்த உற்சாக வைரமணி
நீலகியில் இருந்து வந்த நேரிய வீரமுத்து
காற்றில் பறந்து விடுவாளோ என்று
கவலைப் பட வைத்த விஜயலட்சுமி

கழுத்தை உடலுக்குள் புதைத்து நடக்கும் கருப்பு மணிமேகலை ....
குனிந்தபடி சிரித்து நிமிர்ந்தபடி மறைக்கும் குண்டு மணிமேகலை.....
வியர்க்க வியர்க்க சிரித்து கிடந்து -- மணமானபின்
விபத்தில் சிக்கி செத்துப் போன விமலா தேவி
விரிந்த காலில் நடக்கும் மார்ட்டின்

தன் காதுக்கு மட்டும் பேசிக் கொள்கிற சகாய மேரி
பூமிப் பந்தையே அலட்சியமாயப் பார்த்த சகாய ராஜ்
தஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டும் கலைவாணி
அதிர்ந்து பேசவே தெரியாத அன்புச் செல்வி

வீட்டருகே வீடிருக்க வெகு காலம் உடன் நடந்த
புஷ்பராஜ் , கனகராஜ் , கந்தன் , முருகேசன் .....
நாகேஷ் போல நடித்துப் பேசுவதை
வழக்கமாகவே ஆக்கிக் கொண்ட தெப்பகுளம் ரவி ......

என் முன்னால் வாழ்வில் செத்தவர்கள் ...

என்னையே கொஞ்ச காலம் சாகடித்தவர்கள் ...

எல்லோரையும் எனக்குத் தந்த பள்ளி இதுதான் .

பத்தாம் வகுப்பில் நான் முதல் மதிப்பெண் பெற்றபோது
பாராட்டக் கூச்சப் பட்டு பேசாமல் நின்ற
பக்கத்து வகுப்பு மாணவிகள் பற்றி
இப்போதைய மாணவிகளே! நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள் .

கன்யாகுமரி ஊரின் கரம் பிடித்து நான்
ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில்
அசத்தியது இங்கேதான் .

சுயமாய் எழுதி தமிழ்ப் பேச்சுப் போட்டியில்
நானாக வென்று நாயகனானதும் இங்கேதான் .

ஆண்டு விழா நாடகத்தில் குடுமி வைத்த அய்யராய் ....
அரசுக் கல்வி அலுவலர்கள் முன் ஆடிப் பாடும் பையனாய்
கொடிகாத்த குமரனாய் ....குவலய மாமன்னனாய்
ஒதேல்லோவாய் ....ஜூலியஸ் சீசராய்....
நான் கூடு விட்டுக் கூடு பாய்ந்த
காலங்கள்தான் மறக்குமோ ?

ஆங்கில எழுத்துக்களை அவசரமாய்க் சொல்லி வருகையில்
உயிர் எழுத்துக்கள் வரும்போது மட்டும்
"வெற்றி" என்று சொல்லும் போட்டியில் ,
ஆறு முதல் பத்து வரை நான்
அத்தனை மாணவர்களையும் தோற்கடித்து
சின்னாப் பிள்ளை ஐயாவிடம் சில்லென்ற முத்தம் பெற்று ....
பல நூறு கைகள் ஒன்றாய் என்னை
பாராட்டி கை தட்டிக் கொண்டிருந்த பொன் பொழுதில் ...
'வெற்றியாளனிடமே உலகம் மயங்கும்' என்ற
உன்னத பாடத்தை நான் உருவேற்றிக் கொண்டதும்......
இதே பள்ளிக் கூடத்தில்தான் .

ஒன்பதாம் வகுப்பு A யும் பத்தாம் வகுப்பு B யும்
இப்போதும் என் கனவில் எப்போதும் வரும் .

எப்போதோ எங்கோ கேட்கும் குரல்கள் கூட
என் பள்ளிக் கூ(ட்)டத்து நினைவைத் தந்து
பரவசப் பட வைக்கும் இன்றும் .

நெட்டிலிங்க மரங்களை எங்கே பார்த்தாலும்
என் நெஞ்சுக்குள் தெரியும் பள்ளியின் நெருக்கம் .

அன்று அரசு உயர்ந்ளைப் பள்ளி ....
இன்று அரசு மேல்நிலைப் பள்ளி . !

வளையாது வாழ வழி காட்டிய பள்ளி முன்னால்
இப்போது ஒரு வளைவு ......
இருக்கட்டும் ...!

அதுவும் ஒரு அழகுதான் .
வளர்ச்சிதானே வாழ்க்கை .

ஆனாலும் ஒரு கோரிக்கை .

புதிய கால்கோல்கள் கட்ட
பழைய மண்ணை அள்ளியவர்களே!
அதன் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு ?
அந்த மண்ணுக்கும் திருநீற்றுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை .

புதிய கட்டிடங்களைக் கட்ட
பழைய கட்டிடங்களை இடிப்பவர்களே !

அந்த செங்கற்களை அப்புறப்படுத்துகையில் ....

பதவியில் இருக்கும்போதே செத்துப்போன
பிரதமர் முதல்வரின் உடல்களைப் போல ........

பதவிசாய்... பக்குவமாய்... பரிவோடு கையாளுங்கள்! .

இதயங்களின் வாழ்க்கையும் மூளைகளின் வேட்கையும்
இணைந்து கிடப்பது அந்த செங்கற்களில்தான் .

மொத்தத்தில் அந்தப் பள்ளி ....

பல தலைமுறைகளின் மேல்
படிந்திருந்த அறியாமை இருட்டை
ஒரே திறப்பில் துடைத்தெறிந்த
உன்னத விடிவெள்ளி .!

2 comments:

King Viswa said...

மனதை நெகிழ வைத்த ஒரு பதிவு.

அதுவும் இந்த வரிகள் //புதிய கால்கோல்கள் கட்ட
பழைய மண்ணை அள்ளியவர்களே!
அதன் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு ?
அந்த மண்ணுக்கும் திருநீற்றுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை // மனதை பிசைந்துக்கொண்டே இருக்கின்றன.

கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

சு.செந்தில் குமரன் said...

நன்றி விஸ்வா
உங்கள் பின்னூட்டம் என்னை கண் கலங்க வைத்தது

Post a Comment