Monday, February 8, 2010

# மலையாளமயமாகும் தமிழ்நாடு?





ஓடும் நீரில் சிக்குன் குன்யா கொசு பரவாது என்று மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்துவிட்ட பிறகு, கேரள ஆற்று நீரில் சிக்குன் குன்யா கொசுக்களைப் பரப்புவதாக முட்டாள் தனமான காரணம் கூறி, பல தமிழ்க் குடும்பங்களை கேரள போலீசார் அடித்து விரட்டிய சூழலில்...

தமிழன் எவனாவது தனது பிள்ளைகள், பள்ளியில் தமிழ் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவனது ரேஷன் கார்டை ரத்து செய் என்று இடுக்கி மாவட்ட கலெக்டரான ஒரு மலையாளி தனது கீழ் அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவு போட்டு, பல தமிழர்கள் பாதிக்கப்பட்ட சமயத்தில்...

ஆற்று நீரை உப்புக்கடலில் கொட்டினாலும் கொட்டுவோம்; தமிழனுக்குத் தரமாட்டோம் என்று முரண்டு பிடித்து, தமிழக அதிகாரிகளை முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில், கேரள போலீசார் தாக்கிய நேரத்தில்...

இன்னும் 90 சதவீதம் தமிழர்கள் வாழ்கிற மூணாறு, பீர்மேடு, வண்டிப் பெரியாறு பகுதிகளில் மகர சங்கராந்தி தவிர, பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் லீவு போட்டால், கேரள அரசு சம்பளத்தைப் பிடிக்கிற அந்த சூழலில்தான்...

60 லட்சம் மக்கள் வாழ்கிற சென்னையில் உள்ள ஒரு லட்சம் மலையாள ஓட்டுக்கள் தமக்கே முழுமையாக கிடைக்கும் என்ற நப்பாசையில் சென்னை முழுக்க ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை கொடுத்தார், தமிழினத் தலைவர் என்று அழைக்கப்படுகிற முதல்வர் கலைஞர்.

அன்று தொடங்கி, தமிழகத்தில், தரைக்கடியில் ஒரு விஷ நீரோட்டம் பாய்வதை உணர முடிகிறது. அதுவும் கலைஞர் தொலைக்காட்சியில் இருந்தே ஆரம்பிக்கிறது.


இப்போதெல்லாம் கலைஞர் டி.வி.யில் அடிக்கடி மலையாளப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இதன் உச்சகட்டமாக தமிழர் திருநாளான பொங்கல் சமயத்தில், அதுவும் அதை தமிழ்ப்புத்தாண்டாக முதல்வரே அறிவித்துள்ள சூழலில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று காலையில், கலைஞர் டி.வி.யில் ‘சிவபுரம்’ என்ற மலையாளப்படம் ஒளிபரப்பப்பட்டது!


பொதுவாக நல்ல படங்கள் கைவசம் இல்லாத நோஞ்சான் தொலைக்காட்சிகள், நேரத்தைக் கடத்துவதற்காக அவ்வப்போது அடிமாட்டு வேற்று மொழிப் படங்களை தமிழில் மொழிமாற்றி வெளியிடுவார்கள். அது பரிதாபமான நிலை. ஆனால், புதுப்படம் வாங்குவதில் சன் டி.வி.யைத் தோற்கடிக்கப் போராடுகிற கலைஞர் டி.வி.யில் எதற்கு மலையாளப்படம், அதுவும் பொங்கல் சமயத்தில்?

‘சன் டி.வி.யின் மலையாள சேனலான கிரன் டி.வி.யில் தமிழ்ப்படங்களையும், தமிழ்ப் பாடங்களையும் ஒளிபரப்புகின்றனர். பதிலுக்கு நாம் ஏன் மலையாளப்படங்களை காட்டக்கூடாது? என்று கேட்கலாம்.

கேரள டி.வி. ரசிகர்கள் மீது தமிழ்ப்படங்கள் திணிக்கப்படுவதில்லை. அவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள். அதனால் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், கலைஞர் டி.வி.யில் எதற்கு மலையாளப்படம்-?

‘கலைக்கு மொழியில்லை’ என்றால், கலைஞர் டி.வி. அயல் மொழிப் படங்கள், அயல்நாட்டுப் படங்களுக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கட்டும். அதில் பன்மொழிப் படங்கள், தரமான படங்கள் வரட்டும். அதில் நல்ல தரமான மலையாளப்படங்கள் வரட்டும். ஆனால், தமிழ்ப்புத்தாண்டையே மாற்றி புதிதாய் உருவாக்கி இருக்கும் சூழலில் &கொண்டாட்டத்தில் ‘சிவபுரம்’ என்ற மலையாளப்படம் எதற்கு?
இதற்கு முன்பு தமிழ்ப்புத்தாண்டு&தைப்பொங்கல் முதல் நாளன்று கலைஞர் டி.வி.யில் ஒரு மலையாள விளம்பரமே இடம்பெற்றது. முழுக்க முழுக்க மலையாள மொழியில்.

‘‘விளம்பர வருமானமாக வரும்போது ஏன் தவிர்க்க வேண்டும்’’ என்று கேட்கலாம். அந்த ஒரு விளம்பரத்தால் வரும் வருமானம் இல்லாவிட்டால் என்ன? அன்று கொடுத்தவர்கள் மற்ற நாளில் அந்த விளம்பரத்தைக் கொடுத்தார்களா? தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு அன்று மலையாள விளம்பரம் திணிக்கப்பட்டதில் ஏதோ வஞ்சகமான குசும்பு தெரிகிறதே!
இது மட்டுமா?

நமது திரையரங்குகளில் முன்பெல்லாம், படம் துவங்குவதற்கு முன்பு நியூஸ் ரீல் போடுவார்கள். அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் இப்போது அது மாறி, அதிக பட்சம் ஓரிரு நிமிடத்திற்குள் முடிகிற துண்டுப் படங்கள்தான் இப்போது பெரும்பாலும் காட்டப்படுகின்றன. தேவேந்திர கண்டேல்வால் என்பவர் ஒட்டு மொத்தக் குத்தகையாக எடுத்துத்தரும் இந்தப் படங்கள் சமூக சேவை, ஒழுக்கமான பழக்க வழக்கங்கள், சுத்தம் சுகாதாரம் போன்றவை பற்றியதாக இருக்கும்.
அண்மையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் அப்படி ஒரு படம்... வெளியே இருந்து வீட்டுக்குள் வந்தவுடன் கைகால்களைக் கழுவ வேண்டும், சாப்பிடும்போது கைகளைக் கழுவ வேண்டும், இரவில் படுக்கப் போகும் முன்பு பல் துலக்க வேண்டும் போன்ற விஷயங்களை வலியுறுத்திய அந்தப்படம், தமிழில் இல்லை! அதில் தமிழே இல்லை. முழுக்க முழுக்க மலையாளத்தில் இருந்தது, அந்தப்படம்!!

மறைமுகமாக விசாரித்த போது, ‘இதைப் போடச் சொல்லி உத்தரவு’ என்று கூறப்பட்டது. சென்னையின் திரையரங்கில் அதுவும் குழந்தைகள் தொடர்பான ஒரு படம் மலையாளத்தில் இருந்தால், என்ன அர்த்தம்? தமிழ்நாட்டுக்குழந்தைகள் அனைத்தும் மலையாளம் படிக்க வேண்டும் என்பது இங்குள்ளவர்களின் ஆசையா? இந்தித் திணிப்பை எதிர்த்தவர்கள் இன்று மலையாளத்தைத் திணிக்கிறார்களா-?
திருவனந்தபுரம் ‘பார்த்தாஸ்’ திரையரங்கில் இதே படத்தைத் தமிழில் காட்ட முடியுமா? காட்டினால் மலையாளிகள் சும்மா விடுவார்களா? அல்லது நிஜமான மலையாள இனத்தலைவர்களான அந்த அரசியல்வாதிகள் ஒத்துக்கொள்வார்களா-?

உண்மையில் திருவனந்தபுரத்தில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட சென்னையில் மலையாளிகள் இல்லை. அப்படி இருக்க, சென்னை திரையரங்கில் விளம்பரப்படத்தை மலையாளத்தில் போடுவது எந்த வகையில் நியாயம்?
இதோடும் முடியவில்லை.

கேரளாவில் ஆபத்தில்லாத அளவுக்கு மேல் ஆற்றுமணலைத் தோண்ட அங்குள்ள அரசுகள் அணுமதிப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் தட்டிக்கேட்டால் காரேற்றிக் கொல்ல வருவார்கள். இதனால் தமிழக குவாரிகளில் மலையாளிகள் ஆதிக்கம் அதிகம். நம் மாநிலத்தில் மலைகளை உடைத்து பெறப்படும் ஜல்லிகற்களையோ, ஆற்றுமணலையோ மற்ற மாநிலத்திற்கு கொண்டு செல்ல நேரடியாக யாரும் அனுமதியை சட்டப்பூர்வமாக இதுவரை தந்ததுமில்லை. இதனால் மலைவளம், மண்வளம் பாதிப்படைந்து, எதிர்காலத்தில் பெரும் பிரச்னைகள் ஏற்படும் என்பதுதான் காரணம்.

இந்நிலையில் தமிழக தொழில் துறை செயலாளர், ‘கேரளத்துக்கு குவாரி பொருட்களை கொண்டு செல்ல இனி தடை இல்லை’ என்று 23.11.2009 அன்று குமரி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார். குமரி மாவட்ட கலெக்டருக்கு மட்டும் எழுதினாலும், இது தமிழகம் முழுவதுமே பொருந்தும். (கவனிக்க வேண்டியது. அனுமதி கேரள மாநிலத்திற்கு மட்டும்)

அன்று எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்த போது, ‘‘தமிழகத்தை ஒரு மலையாளி ஆள முடியாது. இந்தியாவில் இரண்டு கேரளத்தை நான் அணுமதிக்க மாட்டேன்’’ என்றார், அன்றும் முதல்வராக இருந்த கலைஞர்.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வள்ளலாக மாறியதன் மூலம்
தமிழின வரலாற்றில் தலையாய இடத்துக்குப் போய் விட்டார் எம்ஜிஆர்

ஆனால் அப்படிச் சொன்ன கலைஞர் இன்று தமிழகத்தையே கேரளாவுக்குள் திணித்து, அகண்ட கேரளம் உருவாக்க முடிவு செய்து விட்டாரோ
என்று சந்தேகப்படும் அளவுக்கு...

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி டி.வி., சினிமா முதல் கல்குவாரி வரை மலையாளிகளுக்கு மகுடம் சூட முயல்வதும் தன்மானத் தமிழர்கள் ஏற்க முடியாத ஒன்று என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது உணர்வார்களா?

6 comments:

Kumar said...

Senthil, Please dont compare MGR with this cheap mentality MK, it is an insult to great MGR

Uthamaputhra Purushotham said...

அருமையான கேள்வி, பதிவு. தொடருங்கள். கருணாநிதியின் மறைமுகத் திட்டங்களையெல்லாம் அம்பலப் படுத்துங்கள். உண்மை முகங்களை வெளிக் கொணருங்கள். அது ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனின் கடமை. எனவே பாராட்டுக்கள்.

படிக்கும் தமிழர்களாவது திருந்தட்டும்.

சு.செந்தில் குமரன் said...

u r right kumar

சு.செந்தில் குமரன் said...

நன்றி உத்தம புத்ரா

ஆனால் உருப்படியா எழுதினா யார் படிக்கிறாங்க?
நானும் மாஞ்சு மாஞ்சு எழுதறேன்
உங்களையும் குமாரையும் தவிர யார் படிக்குறா?
எதாவது மட்டமா அர்த்தம் இல்லாம எழுதினா நிறைய பின்னூட்டம் வருது
உருப்படியா எழுதினா யாரும் கண்டுக்கறது இல்ல‌

Senthu VJ said...

நல்ல பதிவு, தமிழனுக்கு தமிழனால்தான் அழிவு மாற்றமே இல்லை.

சு.செந்தில் குமரன் said...

அதுதான் வருத்தமே

Post a Comment