Monday, February 1, 2010

# நமது புறம்போக்கு அரசியல்

இதனால் தமிழக மக்கள் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,உங்களுக்குப் பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்து புறம்போக்கு நிலம் ஏதும் இருக்கிறதா-? அது ஏரிப் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. தர்ம நியாயம், மான அவமானம் தயவுதாட்சண்யம் பார்க்காமல் வளைத்துப் போடுங்கள்.
மூன்று வருடம்... மூன்றே வருடம் எப்படியாவது யாரைச் சரிகட்டியாவது என்ன செய்தாவது சூழ்நிலையைச் சமாளித்து மூன்று வருடங்கள் மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும். மூன்றாவது வருடம் முடிவில் அதே இடத்திற்கு உங்கள் பெயரில் பட்டா வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

அட விளையாட்டு இல்லீங்க. நிஜம்!

இது என்னவென்று விளக்கமாகப் பார்ப்பதற்கு முன்பு-...
மத்திய அரசு செய்கிற ஒரு மக்கள் விரோதச் செயலை பார்ப்போம்.
அண்மையில் சமையல் எரிவாயு வழங்குதல் தொடர்பாக மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்து உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்படும் நுகர்வோர்கள் அதற்கான தொகையைவிட 50 ரூபாய் கட்டினால், வாரக்கணக்கில் காத்திருக்க அவசியமின்றி உடனடியாக எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு அனுப்பப்படும் என்பதுதான் அந்த மட்டமான திட்டம்.
இதுவரை சிலிண்டர் எப்படி வழங்கப்படுகிறது-? வீட்டில் இருக்கும் சிலிண்டரில் கேஸ் தீர்ந்த உடன் (அல்லது தீரும் தருணத்தில்) நாம் அடுத்த சிலிண்டர் கேட்டு பதிவு செய்தால், கோரிக்கை மூப்பு மற்றும் சிலிண்டர்களின் இருப்பு அடிப்படையில் அது வழங்கப்பட்டு வந்தது. இதிலேயே கூட அதிகாரம் மற்றும் வசதி படைத்தோர் இடையில் புகுந்து தங்கள் ‘சக்தி’யைப் பயன்படுத்தி நினைத்தபோது சிலிண்டர் பெற்று, சாதாரண மக்களுக்கு சிலிண்டர் கிடைக்கும் காலத்தைத் தாமதப்படுத்தி ஏய்த்த கொடுமை நிகழ்ந்தது.

இப்போது பணத்தின் அடிப்படையில் அரசே இந்த ஒழுக்க மீறலை உரிமையாக்கினால், எரிவாயு நிறுவன ஊழியர்கள் என்ன செய்வார்கள்? 50 ரூபாய் அதிகம் தருபவர்களுக்குத் தகவல் மூப்பையும் மீறி உடனடியாகத் தருவார்கள். சில ஆயிரம் ரூபாய் வருமானத்தில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் அப்பாவி மக்கள் 50 ரூபாய் அதிகம் தர முடியாத நிலையில் என்ன செய்வது? பதிவு செய்தும் சிலிண்டர் வராமல் ஒத்தை ரூபாய் பச்சை அரிசியை ஊற வைத்துத் திங்க வேண்டியதுதான்.

இந்த அற்பத்தனமான 50 ரூபாய் திட்டத்தால் அப்பாவி பொதுமக்கள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படப் போகிறார்கள் என்பதற்கு தமிழக அரசின் வேறொரு திட்டத்தை உதாரணமாகப் பார்க்கலாம். தமிழகத்தின் போக்குவரத்து மையமான திருச்சி மாநகரம்! மத்திய பேருந்து நிலையம். அங்கு இரவு நேரங்களில் மதுரை செல்லும் சாதாரணப் பேருந்துகளில் அந்தக் காட்சியைப் பார்க்கலாம். திடீரென்று பேருந்தின் நடத்துனர் யாராவது ஒரு பயணியைப் பார்த்து கத்துவார். ‘‘யோவ் கீழ இறங்குய்யா... உனக்கு அறிவில்ல..? சொன்னா புரியாதா-? சோறுதான திங்கற... உப்புப் போட்டு திங்கறது இல்லையா...’’ என்று ஆரம்பித்து தொடர, பயணி பரிதாபமாக நிற்பார். அந்தப் பயணி குடிபோதையில் தகராறு செய்தவராகவோ, பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ய முயன்றவராகவோ இருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள்? ரொம்பத் தப்பு. அதெல்லாம் இல்லை. அந்தப் பயணி அருகில் உள்ள விராலிமலைக்கோ, துவரங்குறிச்சிக்கோ செல்வதற்காக பேருந்தில் ஏறியிருப்பார். அதுதான் தப்பு. தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல. வயது முதிர்ந்த குடும்பஸ்தர்களும்கூட தன் மனைவி பிள்ளைகள் முன்பு இந்த அவமானத்தைச் சந்திக்க வேண்டி உள்ளது.
நன்றாகக் கவனியுங்கள். அவை விரைவுப் பேருந்துகள் அல்ல. திருச்சியில் இருந்து விராலிமலை, துவரங்குறிச்சி வழியாக மதுரை செல்கிற பேருந்துகள்தான். வழித்தட அனுமதிப்படி விராலிமலையிலும் துவரங்குறிச்சியிலும் நின்று மக்களை இறக்கியும், ஏற்றியும் செல்ல வேண்டிய பேருந்துகள்தான் அவை.

ஆனாலும் பயணிகளுக்கு ஏன் இந்த அவமானம்?

‘அதிக வசூல் பார்க்கும் நடத்துனர் ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை’ என்று தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் ஒரு திட்டம் கொண்டுவந்தது அல்லவா? அதுதான் காரணம்! விராலிமலை, துவரங்குறிச்சி போகிறவன் பேருந்தில் அமர்ந்துவிட்டால், மதுரை போகிறவன் அடுத்த பேருந்தில் போய்விடுவான். இந்த ஊர்களுக்குப் பயணத்தொகை குறைவு. எனவே வசூல் குறையும். ஓட்டுநர் நடத்துனருக்கான ‘ஊக்கத்தொகை’ குறையும்.
சற்றுத் தாமதமாக வரும் மதுரைப் பயணி ஐந்து நிமிடத்தில் கிளம்பும் அடுத்த பேருந்தில் வரட்டுமே. மதுரைக்குப் போகவா முடியாது? ‘போகலாம். ஆனால் என் வசூல் குறைந்து ஊக்கத்தொகை குறையுமே. விராலிமலை, துவரங்குறிச்சி போகிறவன் எப்படியோ போகட்டும். நான் மதுரை செல்பவரை அல்லது மதுரை டிக்கெட் வாங்குபவரைத்தான் என் பேருந்தில் ஏற்றுவேன்-’. இன்றும் இது தொடர்கதையாக நடக்கும் நிகழ்வு. இதிலேயே இவ்வளவு பிரச்னை என்றால், கேஸ் சிலிண்டர் விஷயத்தில் 50 ரூபாய் அதிகம் தர முடியாதவர்களின் கதி என்னவாகும் என்று யோசியுங்கள். எதிர்கால விபரீதம் புரியும்.

தாலுகா ஆபீசில் ஒரு சான்றிதழ் வாங்க முறைப்படியான கட்டணம் 130 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதை உடனடியாகப் பெற பியூனுக்கோ, கிளார்க்குக்கோ 50 ரூபாய் அதிகம் கொடுப்பதும் பெறுவதும்தான் லஞ்சம் என்று அழைக்கப்படுகிறது. அது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். அப்படியானால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட 50 ரூபாய் அதிகம் வைத்து கேஸ் சிலிண்டரை பெறுவதும் தருவதும் லஞ்சம்தானே? அது சட்டப்படி குற்றம்தானே? அப்படியானால் லஞ்ச ஒழிப்பு சட்டப்படி இந்தத் திட்டம் கொண்டு வந்த அதிகாரியையும், துறை அமைச்சரையும், அதை ஏற்ற பொருளாதார ‘மேதை’யையும், நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்று கேட்பது தவறா? முடியாது என்றால் விஜிலென்ஸ் துறை எதற்கு?

இந்த 50 ரூபாய் திட்டத்தால் என்னவாகும்? ஒரு நிலையில் சிலிண்டர் விலையைவிட 50 ரூபாய் அதிகம் கொடுத்தால்தான் எல்லோரும் சிலிண்டர் பெறமுடியும் என்ற நிலை உருவாகும். இது ஒரு அறிவிக்கப்படாத மறைமுக விலையேற்றமாகவே மக்களின் தலையில் விடியும்.

தவிர, முன்பே வடக்கு தெற்கு பேதங்களாலும், மாநில காழ்ப்புணர்ச்சிகளாலும், இனத் துரோகங்களாலும் பிரிந்து கிடக்கும் இந்தியனை பொருளாதார அடிப்படையிலும் பிரித்து ஒருவனோடு ஒருவன் முட்டிக்கொண்டு நிற்கும் நிலையையே இதுபோலத் தவறான திட்டங்கள் ஏற்படுத்தும்.

அடுத்து புறம்போக்கு விஷயம்...

புறம்போக்கு நிலத்தில் மூன்று வருடங்களோ அதற்கு மேலாகவோ குடியிருப்போர்க்குஅந்த இடத்தை உரிமையாக வழங்கிவிடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. ஆக, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்ற கருத்துக்குச் சாவுமணியடித்துவிட்டது தமிழக அரசு. சமூகத்தில் இன்றும் புறம்போக்கு என்பது ஒரு கேவலமான வார்த்தையாகவே கருதப்படுகிறது.

யாருக்கும் தெரியாமல் செய்வதுதான் திருட்டு. ஆனால் ஊரறிய ஒரு திருட்டைச் செய்ய முடியுமென்றால் அதுதான் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது. இப்படிச் செய்வது அவமானம் என்று மக்களே நினைத்த காலம் உண்டு.
வீடில்லாத ஏழைமக்களுக்குக் குடியிருக்கும் கொஞ்ச இடத்தை தருவது என்பது வேறு. ஆனால், ஒரு நிலையில் முறையின்றி ஏக்கர் கணக்கில் புறம்போக்கு நிலத்தை அரசியல் திருடர்கள் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டது. அதுவே ஒரு தொழிலானது. பின்னர் தன் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது, சாதாரண கட்சிக்காரனும் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

அரசுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடங்கள் திருடர்கள் வசமாயின. புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நீர் வரும் வழிகளை, நீர் நிலைகளையெல்லாம் மறித்து தூர்த்து வீடுகள் கட்டப்பட்டதால், தண்ணீர்ப் பஞ்சம், மழைக்காலங்களில் தறிகெட்டு பாயும் வெள்ளம் என்று பல பிரச்னைகள்.

போரூர் ஏரியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகட்டி, அப்பாவி மக்களிடம் விற்று ஏமாற்றிய பின்பு, மக்களை ஒட்டுமொத்தமாக செம்பரப்பாக்கம் ஏரிப்பக்கம் ‘ஏரி கடத்திய’ கொடுமையும் தமிழ்நாட்டில் நடந்தது அல்லவா? வள்ளுவருக்குக் கோட்டம் கட்டியது தவறில்லை. ஆனால், ஒரு ஏரியையே தூர்த்து அந்த இடத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டியதுதான் கொடுமை. இப்போதும் அந்த இடத்திற்கு லேக் ஏரியா என்றுதான் பெயர்.
புறம்போக்கு நில ஆக்கிரமிப்பால் ஏற்படும் பிரச்னைகள், அரசுக்கான எதிர்கால இழப்புகள் பல. இந்த நிலையில் மூன்று வருடம் குடியிருந்து விட்டால் அந்த நிலத்தைச் சட்டப்படி உரிமையாக்கிக் கொள்ள முடியுமென்றால், அது நிலத் திருட்டை மேலும் ஊக்குவிக்காதா?

இனி புறம்போக்கு நிலங்கள் தப்புமா? திருட்டுக்கு அரசே அங்கீகாரம் வழங்கிவிட்ட பின்பு என்ன கஷ்டம்? ஆக, வாசகர்களே... உங்கள் கண் போகும் திசையில் 100 அடி புறம்போக்கு நிலம் இருந்தால் கூட விட்டுவிட வேண்டாம். கோட்டை உள்ள திசை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு, பூமி பூஜை போட்டு... ஆக்கிரமியுங்கள்!
அட, பின்னாளில் அதை விற்றாவது கேஸ் சிலிண்டருக்கு மேற்கொண்டு 50 ரூபாயோ 200 ரூபாயோ கொடுக்க உதவும் அல்லவா?

2 comments:

Post a Comment