Sunday, March 28, 2010

#அங்காடித் தெரு --குறுகலான சந்தில் பிரம்மாண்டமான வாழ்க்கை




இயல்பில் கண்ணால் நாம் பார்க்கும் உலகம் , இயற்கை , காட்சிகள் யாவும் நமக்கு வட்ட வடிவமாகத்தான் தெரியும். (சரியாகச் சொன்னால் ஓவல் எனப்படும் நீள்வட்ட வடிவம்). ஆனால் திரைப்படம் பார்க்கும்போது திரையில் நாம் பார்க்கும் காட்சிகள் அன்று 35 எம் .எம். மில் சதுரமாகவும் இன்று சினிமாஸ்கோப்பில் செவ்வகமாகவும் தெரிந்தன; தெரிகின்றன.

ஆனால் படம் பார்க்க ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களுக்குள் நாம் புறக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் செவ்வக வடிவம் மறைந்து நாம் இதயத்தின் கண்களுக்கும் ரசனையின் கண்களுக்கும் நீள்வட்ட வடிவத்தில் காட்சிகள் நிகழ ஆரம்பித்து விட்டால் பின்னர் அதை திரைப்படம் என்று மட்டும் சொல்லக்கூடாது . வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும் . அப்படி ஒரு வாழ்க்கைதான் அங்காடித் தெரு .

அங்காடி என்ற சொல் , சிலப்பதிகாரம் தந்த சொல் . காவிரிப்பூம்பட்டினத்தின் நகர்ப்புறப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் பகலில் இருந்த கடைகளுக்கு நாளங்காடி என்று பெயர் . இரவில் இருந்த கடைகளுக்கு அல்லங்காடி என்று பொருள் . (அல் என்றால் இரவு )

அந்த அங்காடி என்ற வார்த்தையை சுமார் 17 நூற்றாண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார் வசந்தபாலன் (அங்காடித் தெரு வெளியான அன்று பகல் ஒரு மணிக்கு கே டிவியில் பூம்புகார் படம் ஒளிபரப்பியது ஒரு சுவையான பொருத்தம் )

சென்னை தி.நகரில் உஸ்மான் ரோட்டில் , பனகல் பார்க்கில் , ரெங்கநாதன் தெருவில், பிரம்மாண்டமாய் ... பிரம்மா...ண்டமாய் . பிரம்மாண்டமா....ய் , உயர்ந்து நிற்கும் பல மாடிக்கட்டிட துணிக்கடைகளில் .... ஆடை மட்டுமல்லாது ஊசி முதல் ஒட்டகம் வரை அனைத்தும் விற்கிற கடைகளில்... சிறுசும் பொடுசுமாய்.. நண்டுஞ்சிண்டுமாய் ... சுக்கும் இஞ்சியுமாய் ... ஒரே சீருடை அணிந்து பரபரப்பாய் வேலை பார்க்கும் ஆண்பெண்கள் .. அவர்தம் பாவனைகள் , நெல்லை வழக்குப் பேச்சு , உறைந்த முகங்கள் , இறந்த உதடுகள் , சலித்த கண்கள் .. !

இவையெல்லாம் கொல்லூரில் இருந்தும் நெல்லூரில் இருந்தும் துணி எடுக்க வரும் ஷெட்டிகள், ரெட்டிகள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . பல நேரம் துணி ஸ்டேண்டுகளோடு தானும் ஒரு இரும்பாய் உறைந்து நிற்கும் அந்த பெண்கள் சில சமயம் நாம் எடுத்திருக்கும் உடையைப் பார்த்து "அண்ணே . இது வேணாம் .. சீக்கிரம் கிழிஞ்சிரும் .. வேற எடுத்துக்கிருங்க .." என்று காதருகில் கிசுகிசுத்து விட்டுப் போவதுண்டு .

பல சமயம் நமக்கு துணி காட்டிக் கொண்டிருக்கும்போதே சக ஊழியர் யாரோ வந்து இமைக்கும் நேரத்துக்குள் ஏதோ சொல்லிவிட்டுப் போக கோபமாக காற்றுக்குப் பதில் சொல்வதுண்டு . பொங்கும் கண்ணீரை துடைக்காமல் தானாக மீண்டும் கண்ணுக்குள் இழுத்துக் கொள்வதுண்டு . அது என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடம் நம் மனசில் தோன்றினாலும் உடை எடுக்கும் சந்தோஷத்தில் அடுத்த நொடி அதை மறந்து விடுவதுமுண்டு .

மறக்கவில்லை வசந்தபாலன் !

24 மணிநேரத்தில் 48 மணி நேரத்துக்கு உழைக்கும் அந்த ஆயிரக்கணக்கான தேனீக்களின் நில்லாத ஓட்டத்தை வியர்வையும் கண்ணீருமாக ரத்தமும் சதையுமாக அலறலும் அரற்றலுமாக பாறாங்கல்லில் ஆணி அடித்தது போல பதிவு செய்துள்ளார் இயக்குனர் .

குறுகலான சந்துக்குள் ஒரு பிரமாண்டமான வாழ்க்கை !

அந்த தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் பாலியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்களை கருத்தாண்மையோடு வெளிப்படுத்தி தமிழ்நாட்டில் பெரிய புலனாய்வுப் பத்திரிக்கைகள் எல்லாம் செய்யவேண்டிய ஆனால் செய்யத் தவறிய ஒரு காரியத்தை அல்லது செய்ய விரும்புவது போல் நடித்த ஒரு காரியத்தை தான் முன்னின்று செய்திருக்கிறார் . அதே நேரம் சமூகப் பொறுப்பு என்பதற்காக அதை ஒரு ஆவணப் படம் போல் உருவாக்கி ரசனைப் பட்டினியை ஏற்படுத்தாமல் உணர்வும் உயிர்ப்புமான படைப்பாக உருவாக்கியவிதத்தில் வசந்தபாலனிடம் ஒரு கலைத் தாய்மை பிரகாசிக்கிறது .

நெல்லை மாவட்டம் ஈட்டமொழியில் சைக்கிள் டியூப்பை நறுக்கி சிறு சிறு வட்டமாக ஒன்றன் மேல் ஒன்றாக சுற்றி கிரிக்கெட் பந்து தயாரித்து வெயிலோடு விளையாடும் பனிரெண்டாம் வகுப்பு ஜோதிலிங்கம் . !

"பத்தாவது படிக்கிற புள்ள 420 மார்க்குதான் எடுக்குது . ஆனா நான் ப்ளஸ் டூவுல பத்து மார்க் சேர்த்து 430 எடுத்தும் என்னை ஏன் அடிக்கிற? "என்று பெற்ற அப்பனிடம் மல்லுக்கட்டும் பாண்டி . இருவரும் நண்பர்கள் . ஜோதிலிங்கம் 1200 க்கு 1085 எடுத்தும், திடீரென தந்தை விபத்தில் இறந்து போனதால் தங்கச்சிகளையும் அம்மாவையும் காப்பாற்ற வேலைக்குப் போகவேண்டியுள்ளது .

சென்னையில் பலமாடி துணிக்கடைக்கு வேலைக்கு ஆட்கள் வேண்டுமென்று ஈட்டமொழியில் ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி அறிவிப்பு செய்து ஆள் எடுக்க , திருனவேலி டவுனில் ஒரு ஓட்டல் மாடியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள கசாப்புக்கடைகளுக்கு போகும் தமிழ்நாட்டு அடி மாடிகள் போல நூற்றுக்கணக்கான பேரோடு சென்னை வந்து சேர்கின்றனர் இருவரும் .

அடி மாடுகளுக்காவது அடுத்த வாரத்தில் மரணம் என்னும் விடுதலை . ஆனால் இங்கே வேலை என்ற பெயரில் நரம்புகளை உருவி வயலின் செய்து வாசிக்கும் அதிகாரவர்க்கம் . கொட்டடிப் பன்றிகளைப் போல உண்ணவும் கழிக்கவும் உறங்கவும் நொந்து சந்திக்கும் அவலம் . ஆனாலும் ஊரில், வறண்ட பூமியில் காய்ந்து கிடக்கும் கண்மாய்களின் விஸ்தீரணத்தில், பாசம் வைத்திருக்கும் அம்மாவுக்கும் தங்கைகளுக்கும் அனுப்பும் கொஞ்சம் காசு நீருக்காக உதிரம் சுருக்கி உழைக்கின்றனர் இருவரும் .

அதே போல பெண்கள் . திருச்செந்தூர்க்காரி கனி .... தோழிகள் .. பெண்கள் ...

சின்னத் தவறுக்கும் சிங்களத்தனமாய்த் தண்டிக்கும் சூபர்வைசர்...! அடியாள்! வேட்டை நாய்கள் . ஆண்களுக்கு என்றால் ரத்தம் தெறிக்கும் . பெண்களுக்கு என்றால் பாலியல் கொடூரம் வக்கரிக்கும் . அங்கே பொறிபறக்கும் நிமிடங்களிலும் குறுகுறுத்து முகிழ்க்கும் காதல்கள் . அதில் ஜோதிலிங்கம் கனி காதலும் ஒன்று

. இந்நிலையில் வேறொரு ஒரு காதல் ஜோடி நிர்வாகத்திடம் மாட்டிக் கொள்ள , வேலை போய்விடும் என்று பயந்து காதலித்தவனே இல்லை என்று மறுக்க , அதோடு வேசி என்றும் திட்டி விட மாடியில் இருந்து குதித்து மரணித்து ரத்தப் பூவாய் பூத்து விடுகிறாள் செல்வராணி என்ற அந்தப் பெண் . இனி ஜோதிலிங்கம் கனியின் காதல் என்ன ஆனது என்பதுதான் கதை

---என்று, வழக்கமான படங்களுக்கு விமர்சனத்தில் கதை சொல்வது போல சொல்லி முடிக்கிற படம் அல்ல இது . லட்சக்கணக்கான தலைகளுக்கு மத்தியில் இரண்டு இளநீர் இதயங்கள் என்று ஒற்றை வரியில் கதை சொல்வதுதான் நியாயம் .

நாம் பார்க்கும் வழக்கமான வாழ்வில் நம்மிடையே நமக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான கதையை கைபிடித்து அழைத்து வந்து நம் அருகே அமர வைத்து அசரவைக்கிறார் இயக்குனர் வசந்தபாலன் .

முக்கியக் கதையைச் சுற்றி , பல அற்புதமான குட்டிக் க(வி)தைகளும் குறுங்காவியங்களும் ,


நூல் பிடித்தது போல செல்லும் கதையில், தானே விரும்பி 'கட்டு'ப்படும் பூக்களைப் போல் சேர்ந்து திரைக்கதை மாலையாகின்றன . நாயகன் நாயகி கதைப்போக்குக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் எதிராகவும் எதிர்ப்பாகவும் நடக்கிற சம்பவங்கள் மாலையில் மின்னும் பட்டு நூலாய் ஜொலிக்கின்றன .


பராமரிக்கப் படாத பொதுக் கழிப்பறையை சுத்தம் படுத்தியதால் மட்டுமே சொந்தம் கொண்டாடி தொழில்தேடிக்கொள்ளும் நபர் "சிரி.. சிந்தி " என்கிறார் .

கண் இல்லாத ஆனால் இதயம் திறந்திருக்கிற தாத்தா" நினை .. நெகிழ் "என்கிறார் . பாலியல் தொழில் செய்த பெண் குட்டையான நபரின் தாம்பத்யம் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்கிறது . இப்படி பிரம்மாதமான விவரணைகளோடு விரிவாகப் பயணிக்கும் திரைக்கதை ,

அதே நேரம், இது போன்ற பெரிய கடைகளில் ரொம்பநேரம் நின்று கொண்டே வேலை செய்வதால் வரும் நோய் .. அதனால் பாதிக்கப் பட்ட கதாபாத்திரம் என்று ஆச்சர்யமூட்டும் ஆழத்திலும் பயணிக்கிறது . இப்படி ஒரு முழுமையான திரைக்கதையில் ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு .

"குழந்தை என்னைப போலவே குட்டையான உருவமா வார மாதிரி பொறந்துடுச்சே என்று அந்த மனிதன் வருந்த , மனைவியோ அப்படிப் பிறக்கனும்னுதான் நான் ஆசைப் பட்டேன் " என்று கூறி அதற்கு சொல்லும் காரணம் இதயத்தை உலுக்குகிறது .

அதே போல சென்னைக் கடையில் துணி எடுத்துக் கொண்டு டவுனில் வந்து இறங்கும் ஒரு தம்பதியிடம் சோதிலிங்கத்தின் தங்கை கடையின் பேர் போட்ட பையை காட்டி " மெட்ராஸ்ல இந்தக் கடையிலதான் எங்க அண்ணன் வேலை பாக்குது . அந்தப் பையத் தாரீயளா..." என்று கேட்டு வாங்கி மார்போடு அனைத்துக் கொண்டு ஓடும் காட்சியில் இதயத்தின் ஈரம் கண்களில் தெரிகிறது .

"விக்கத் தெரிஞ்சவந்தான் வாழத் தெரிந்தவன்" என்று ஒற்றை வரியில் உலகம் சொல்லும் ஜெயமோகனின் வசனங்கள் மறுபுறம் "கனி.. நீ இருக்க வேற பொண்ணப் பார்ப்பேனா ? கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" என்று ,

அழகான இளம்பெண்ணின் கண்ணாடி வளையல் போட்ட கையாகக் கன்னத்தைக் கிள்ளிவிட்டு செல்லமாய் குமட்டில் குத்தி விட்டும் போகிறது .

மற்ற விசயங்களை ஒப்பிடுகையில் ஒரு மாற்றுக் குறைவுதான் என்றாலும் , புருஷனுக்கு அடங்கிய பொண்டாட்டியாய் கடமை செய்திருக்கின்றன இசையும் பாடல்களும் .

பனங்காய் சுமக்கும் சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறோம் . ஹெர்குலிஸ் சுமக்க வேண்டிய உலக உருண்டையை சுமந்திருக்கிறது மகேஷ் என்னும் அறிமுக சிட்டுக்குருவி . அஞ்சலி விருது உயரங்களுக்கு வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறார் என்றால் "நிஜமாத்தான் சொல்றீங்களா ?"என்று யாரும் சந்தேகப்பட முடியாது . பாண்டி நிப்பாண்டி .

மனிதர்களைத் தள்ளி வைத்து விட்டு காற்றும் வெளிச்சமும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கும் கிராமத்து வீதிகள் , காற்றே இல்லாமல் அதிசயமாய் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் ரங்கநாதன் தெரு இரண்டையும் இருவேறு துருவங்களாக நின்று ஒரே தரத்தில் பரிமாறுகிறது ஒளிப்பதிவு.

கனியின் தங்கைக்கு வேலை செய்யும் இடத்தில் ஏதோ பிரச்னை என்பதை சொல்லும்போது வயது பதிமூணு என்று வரும் தகவல் அடுத்து அவளுக்கு நடந்தது என்ன என்று யூகிக்க வைக்கிறது . அதே போல யாருமற்ற இரவில் கடைக்குள் கனியும் ஜோதிலிங்கமும் ஆடிப் பாடும் பாடல் காட்சியில் சர்கியூட் கேமராவைக் காட்டுவது அடுத்து என்ன என்று யூகிக்க வைக்கிறது . இந்த இடங்களில் எடிட்டர் இயக்குனரை இழுத்துப் பிடித்திருக்க வேண்டும் . அந்தப் பாடல் காட்சியில் சில நடன அசைவுகள் கதாபாத்திரமான கனிக்கு பொருத்தமாக இல்லை /அங்கு நடிகை அஞ்சலி தெரிகிறார் ..இந்த இடத்தில் இயக்குனர் வசந்தபாலன் , டான்ஸ் மாஸ்டரை இழுத்துப் பிடித்திருக்க வேண்டும் .

பண்டல் விழுந்து கழுத்தில் பட்டை போட்ட சூப்பர்வைசரை கிண்டல் செய்து பாடும் அந்தப் பாடல் (என்னதான் சிறியபாடலாக நின்றுவிட்டாலும் கூட ) படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை ,

சமையலறையில் நிற்கும் அழகான பெண்ணின் முகத்தில் உள்ள சின்ன கரித்தீற்றலால் எப்படி அவளின் அழகை குலைத்து விட முடியாதோ .. அப்படி இந்த சின்னக் குறைகள் படத்தைப் பாதிக்கவில்லை .

குடும்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு நிற்கும் பிஞ்சுப் பூக்களின் ரத்தம் உறிஞ்சும் போக்கை கண்டித்த்ததோடு மட்டுமின்றி அதே படத்தில் அதே வீரியத்தில் வர்ணாசிரம ஏய்ப்பின் வக்கிரங்களைச் சுட்டிக்காட்டிய வசந்தபாலனின் அந்த தில்லுக்கு , தெனாவட்டுக்கு, ஒரு ராயல் சல்யூட் . அதே நேரம் சாமியிலும் தாய்மை சொன்ன கனிவுக்கு ஒரு கனியான (திருச்செந்தூர்க்காரி அல்ல) முத்தம் .

அங்காடித்தெரு ....
தரத்தில்
பல படிகள்
உயர்ந்தது என்றாலும்
அடையாளப்படி
ஆசியாவின் 'ஸ்லம் டாக் மில்லியனர்' !

8 comments:

butterfly Surya said...

வாழ்க்கையின் கன பரிமாணத்தில் சந்தோஷம், வலி, அன்பு, காதல், சகிப்புதன்மை, தியாகம், என்று அனைத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இதுவரை தொட்டு பார்த்திராத கதைகளத்தில் படைத்திருப்பது ஒரு அனுபவமாய் அமைந்த நல்ல திரைப்படம்.

வாழ்த்துகள் வசந்த பாலன்.

நன்றி செந்தில்.

chandru2110 said...

இது போன்ற படைப்புகளால் தமிழ் திரைப்படத் துறை பெருமை பெறுகிறது.

Unknown said...

nandri senthil

சு.செந்தில் குமரன் said...

வணக்கம் வசந்தபாலன் சார் ,
உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றிகள் .

சு.செந்தில் குமரன் said...

உண்மை சந்த்ரு . நன்றி சூர்யா

Kumar said...

Hi Senthil,

Wat I feel is that the movie is bit exaggerated.Nowadays getting the labour is very difficult and torturing is not possible, I think. Wat do you think?

சு.செந்தில் குமரன் said...

no kumar
its possbile by money and power without humanity

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment