Tuesday, January 12, 2010

#ஈரானில் ஒரு காமராஜர்..!


நீங்கள் பார்க்கப்போவது ஓர் அன்னக்காவடியின் வாழ்க்கை இல்லை. எந்த வாய்ப்பும் இல்லாத ஓர் ஏழையின் கதை இல்லை. முற்றும் துறந்த முனிவனின் வரலாறு இல்லை. பற்றற்ற ஒரு துறவியின் தினசரி நடவடிக்கைகள் இல்லை.

சாமி சத்தியமாக நம்புங்கள்! உலகின் சக்தி வாய்ந்த ஒரு தேசத்து அதிபரின் அசரவைக்கிற எளிய வாழ்க்கை இது! அதற்கு முன்பு ஒரு கேள்வி.

உலகத்திலேயே மிக வறிய ஓர் ஏழையாக இருந்தாலும் காலையில் எழுந்து கண்ணாடி பார்த்ததும் என்ன நினைப்பார்கள்? “அடடா... என்ன அழகு! என்ன... இன்னும் கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம், ஆனாலும் பரவாயில்லை” என்ற ரீதியில்தானே?

ஆனால் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் டி.வி.யின் கேள்வியாளர், (வேறு) ஒரு நாட்டின் அதிபரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, அந்த அதிபர் சொன்னார்.

“கண்ணாடியில் தெரியும் முகத்தைப் பார்த்த உடன் நான் சொல்வேன். ‘ஞாபகம் வைத்துக்கொள். ஓர் எளிய சிறிய வேலைக்காரனை விட நீ ஒன்றும் பெரியவன் இல்லை. இன்று(ம்) உன் முன்னால் ஈரானிய தேசத்தின் நலனுக்காகப் பாடுபடவேண்டிய ஒரு முக்கியமான பொறுப்புணர்ச்சி காத்துக் கிடக்கிறது என்று அந்த முகத்திடம் சொல்வேன்.”

ஆம்! சொன்னவர் ஈரான் தேசத்து அதிபர் அகமதி நிஜாத்.

தன் தவறுகளை மறைக்கும் பொருட்டு மக்களை ஏமாற்ற, கவிதையிலோ அறிக்கையிலோ தன்னை மிக எளியவன் என்று நாடகத்தனமாக வர்ணித்துக் கொள்ளும் போலித்தனமான புலம்பல் இதில் சற்றும் இல்லை என்பதுதான், உலகின் எட்டாவது அதிசயம்!

அதிபராகப் பொறுப்பேற்று தன் அலுவலகம் நுழைந்த உடன், எல்லோர் விழிகளும் வியப்பால் விரிகுடாக்களாக விரியும் அளவுக்கு, அகமதி செய்த முதல் காரியம்...

ஒரே கையெழுத்தில் ஆயிரம் கோடி ரூபாயை அமுக்கிக்கொண்டதோ அல்லது தொழில் தொடங்க வந்த எம்.என்.சி. நிறுவனத்தின் 30 சதவிகித பங்கை தனது முக்கிய வாரிசின் பெயரில் முடக்கிக் கொண்டதோ அல்ல!

ஈரான் நாட்டு அதிபர் அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த ஈரானிய தரை விரிப்பு கம்பளங்களை ஒரு மசூதிக்கு வழங்கிவிட்டு, மிக விலைக் குறைவான சாதாரண கம்பளங்களை தனது அலுவலகத்தில் போட்டதுதான். அடுத்த வேலை, அதிபரைச் சந்திக்க வருகிற வி.ஐ.பி.க்கள் வரவேற்கவென்று இருந்த மிகப்பெரிய சொகுசு அறையை மாற்றி, அங்கிருந்த விலை உயர்ந்த நாற்காலிக்குப் பதிலாகச் சாதாரண நாற்காலிகளுடன் கூடிய ஒரு சிறிய அறையை மட்டும் அமைத்துக்கொண்டதுதான்.

ஒரு முறை தேர்தல் பிரசாரத்துக்குப் போய் இறங்கவே ஹெலிபேட்கள், பல லட்ச ரூபாய் செலவில் குளு குளு அறைகள், சில லட்ச ரூபாய் செலவில் பளபளப்பான ‘ஒன்ஸ் யூஸ்டு’ கழிவறைகள் அமைக்கிற நமது அரசியல்வாதிகளோடு ஈரான் அதிபரை அதிகம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். அதனால் உங்களுக்குத் தலை சுற்றலோ மாரடைப்போ வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல. ம்... எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் அடுத்த வரிகளைப் படியுங்கள். ஏங்கி ஏங்கியே உங்களுக்கு அல்சர் வரலாம்.

ஆம். தனது வீடு மற்றும் அதிபர் அலுவலகம் உள்ள தெருக்களை, முனிசிபாலிட்டி ஊழியர்களோடு சேர்ந்து பலமுறை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்யும் வேலையிலும் ஈடுபடுவார், ஈரான் அதிபர் அகமதி நிஜாத். நம்ம அரசியல் தலைவர்களும் கூட்டிப் பெருக்காமலா உள்ளனர். சொகுசு வசதிகளைக் கூட்டி, ஊழல் பணத்தைப் பெருக்கி..!

ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அனுப்ப வேண்டிய ராஜினாமாக் கடிதங்களை தான் வாங்கி வைத்துக்கொண்டு, ராஜினாமா செய்யப் போவதாகக் கபட நாடகம் ஆடுபவர் அல்ல அகமதி. அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருக்க வேண்டும் என்றால் “எத்தனை ‘சி’ கட்சிக்குத் தருவ? எத்தனை ‘சி’ வீட்டுல தருவ? எத்தனை ‘சி’ செலவழிப்ப?” என்ற ‘சீச்சி’ வேலை-யெல்லாம் செய்யமாட்டார்.

மாறாக... முதல் கண்டிஷன்... பதவிக்காலத்திலும் அந்த அமைச்சர் ஏழையாகவே இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அந்த அமைச்சரின் உறவினர்களது வங்கிக் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறும்போது, எந்த மாற்றமும் அவப்பெயரும் இல்லாமல் கௌரவமாகப் பழைய ஏழைமை நிலையிலேயே பதவி விலக வேண்டும். தவிர, அந்த அமைச்சரோ அவரது உறவினர்களோ அதிபர் அலுவலகத்தில் எந்தச் சலுகையும் எடுத்துக் கொள்வது சட்ட விரோதமாகக் கருதப்படும். வக்கணையாகப் பேசி மக்களை ஏமாற்ற காற்றில் இந்தக் கண்டிஷன்-களைப் போடுவதில்லை அகமதி. அமைச்சராகப் பதவி ஏற்பவர்களிடம் அட்சர சுத்தமாக எழுதி வாங்கிக் கொண்டுதான் மறுவேலை.

‘மக்களிடம் மாட்டிக்-கொள்ளக்-கூடாது. அதே நேரம் எப்படியாவது ஊழல் செய்து கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். மீறினால் மந்திரி பதவி காலி’ என்று மிரட்டுவதற்காக, பதவி ஏற்புக்கு முன்பே தேதியிடாத ராஜினாமாக் கடிதம் வாங்கி வைத்துக் கொள்ளும் ரகம் இல்லை அகமதி.

1977 மாடலான பியூகோ 504 ரக டப்பா கார் ஒன்று, டெஹ்ரான் நகரின் மிக மிக ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் நாற்பது வருடங்களுக்கு முன்பு அவரது தந்தையின் வாரிசுச் சொத்தாகக் கிடைத்த ஒரு பழைய தம்மாத்துண்டு வீடு, இவ்வளவுதான் அகமதி நிஜாத்தின் ‘பெரிய்ய்ய’ சொத்துக்கள்.

தவிர அவரது வங்கிக் கணக்கில் சேமிப்பு என்று ஒரு அணா பைசாக்கூட இல்லை. பல்கலைக்-கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்று-வதற்காக அவருக்கு வருகிற 250 அமெரிக்க டாலர்கள் மட்டுமே அவரது ஒரே வருமானம்.

எக்ஸ்கியூஸ்மி...

அதிபரான பிறகும் அந்தப் பழைய துக்கடா வீட்டில்தான் அகமதி இன்னும் வசிக்கிறார்!

எண்ணெய் வளமும் ஆயுத பலமும் கொண்ட, யுத்த தந்திரங்களில் பெயர் பெற்ற, பொருளாதாரம், அரசியல், மதக்கோட்பாடு இவற்றில் செழித்த முக்கியமான உலக நாடுகளில் ஒன்றான ஈரானின் அதிபரின் சொத்து மதிப்பு இவை மட்டுமே, என்றால் நம்புவதற்கு எத்தனை சிரமம்?

நம் ஊரில், ஈழத்தமிழனுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரையே யாரென்று கேட்ட அரசியல் சமூக மா... மா.. மா... மேதை வெளியே சொல்கிற சொத்து மதிப்பே... படா படா..! தனது சம்பளப் பணத்தைக்கூட அகமதி எடுப்பதில்லை. “எல்லா செல்வமும் நாட்டுக்கே. அவற்றைக் காப்பதுதான் என் வேலை” என்று அடக்கமாகச் சொல்கிறார்.

ஒரு துக்கடா கட்சியின் வட்டம், சதுரம், முக்கோணம் எல்லாம் கூட, ஒரு நேர சாப்பாட்டுக்காக, ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலையே புரட்டிப் போடுகிற தேசத்தில் வாழ்கிற வாசகர்களின் மேலான கவனத்துக்குச் சொல்லப்படும் தகவல் யாதெனில்...

அதிபர் அகமதி நிஜாத்தின் கையில் தினமும் ஒரு சின்னப் பை. அதில் காலை சிற்றுண்டி. என்ன தெரியுமா? மனைவி கொடுத்தனுப்பும் சாண்ட் விச்சுகள், இல்லை-யென்றால் வெறும் பிரெட். அதை அவ்வளவு சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டு நாட்டுக்காக உண்மையாகவே உழைக்கிறார் அகமதி நிஜாத்.

இன்னொரு அதிசயம். அதிபருக்கு என்று ‘அதிபர் விமானம்’ என்று தனியாக எதற்கு? மக்களின் சொத்து ஏன் வீணாக வேண்டும்? அதை விலக்கிவிட்டு மக்களுக்கான சாதாரண விமானத்தில் அதுவும் எகனாமிக் கிளாசில்தான் பயணிக்கிறார்.

‘அமைச்சர்களின் பணிகள் மற்றும் செயல் திறன் பற்றி அறிய அடிக்கடி அவர்களை அதிபர் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதிபருக்கு என்று உள்ள மேலாளரிடம் அனுமதி பெற்றுதான் அதிபரை அமைச்சர்கள் சந்திக்க வேண்டும் என்றால் நேரம் வீணாகாதா? அந்த மேனேஜர் நாற்காலியைத் தூக்கி விடு’

விளைவு? எந்த அமைச்சரும், அனுமதி இன்றி எப்போது வேண்டும் என்றாலும் அதிபரின் அறைக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம், அதிபர் உள்பட யாருடைய அனுமதியும் இன்றி! தவிர, சிவப்புக் கம்பள வரவேற்பு போன்ற வெட்டியான வரவேற்பு விழாக்கள், புகைப்படம் எடுக்கும் சம்பிரதாயம், பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்படும்போது அதிபரைப் புகழ்ந்து செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்திற்கும் ‘தடா’ போட்டார் அகமது.

தவறுகளைச் சுட்டிக் காட்டுகிற எதிர்க்கட்சியினரை தடாவிலோ, தேசிய பாதுகாப்புச் சட்டத்திலோ பிடித்து உள்ளே போடவில்லை. எங்காவது ஹோட்டல்களில் தங்கும்போது தனக்கு ஒதுக்கப்படுவது பெரிய படுக்கையுடன் கூடிய அறையாக இருக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி உறுதி செய்து கொண்டு விடுவாராம். காரணம், அந்த மாதிரி மெத்தைகளில் படுப்பதைவிட தரையில் ஒரு சாதாரண பாயில் எளிய போர்வையை பயன்படுத்தி உறங்கவே அவருக்குப் பிடிக்கிறது.

பாருங்கள் இந்தப் புகைப்படங்களை. அன்றைய பணி முடித்து பாதுகாவலர்கள் போன பின்பு தன் வீட்டின் வரவேற்பு அறையில் தூங்குவதை! வைஃபாக் என்ற செய்தித்தாளுக்காக அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் அதிபரின் இளைய சகோதரர். வைஃபாக் இதழில் இப்படம் வெளியான மறுநாளே, அமெரிக்கா உட்பட உலகின் பல நாட்டு செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டது இந்தப் புகைப்படம். இறை வணக்கத்தின்போது கூட, முதல் வரிசையில் உட்காராமல் உள்ளே உட்கார்ந்து இருப்பதையும், தனது எளிய உணவை சாப்பிடுவதையும், பார்க்கிற பாக்கியமாவது நம் கண்களுக்குக் கிடைக்கட்டும். அதிகாரத்தில் உள்ள நமது அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குத் தரப்படும் சம்பளம், சலுகைகள், தவிர அவர்கள் லஞ்சம் ஊழல் மூலம் கொள்ளையடிக்கும் பணம் இவற்றோடு ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தின் காவிய எளிமையை ஒப்பிட்டுப் பார்க்க முயலுங்களேன்.

அதிபர் பதவிக்கே இலக்கணம் வகுக்கிறார் ஈரானின் அகமதி. அப்படி ஒரு பிரதமர் கிடைக்காவிட்டால் எதிர்கால இந்தியன் எல்லோரும் அகதி!7 comments:

Anonymous said...

இந்திய அரசியல் வியாதிகளின் முதல் எதிரி இவராகத்தான் இருக்கும்...

மனைவிகள்... துணைவிகள்... என்று ஒவ்வொரு வேளை உணவையும் ஒரு வீட்டில் சாப்பிடும் தமிழ்நாட்டு தலைவர்கள் ஒரே மனைவி சமைத்த உணவை உண்ணும் இவரை நிச்சயம் கேலி செய்வார்கள்...

கட்டுரை அருமை....

சு.செந்தில் குமரன் said...

நன்றி பிரபாகரன்.

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

சு.செந்தில் குமரன் said...

உங்களுக்கு எனது மனப் பூர்வமான தைத்திரு நாள் பொங்கல் திருவள்ளுவர் தின , தமிழர் திரு நாள் வாழ்த்துகள் .நன்றி

butterfly Surya said...

அருமையான பகிர்விற்கு நன்றி செந்தில்.

சு.செந்தில் குமரன் said...

நன்றி சூர்யா
சூரிய கதிரில் கட்டுரை படித்தேன் .அபாரம். தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் . சூரிய கதிரில் சூர்யா நல்ல பொருத்தம்

Uyiravan Nazeer said...

நீண்ட நாட்கள் படிக்க மறந்தது நன்றி...

Post a Comment