Wednesday, January 6, 2010

# விஷம் தோய்க்கும் விளம்பரங்கள்


திரையரங்குகளில், படம் தொடங்கும் முன்பாக விளம்பரப்படங்களோ, அரசின் செய்தித் தொகுப்போ முடியும் தருவாயில், பலத்த விசில் சத்தம் கிளம்பும். அடுத்து படம் தொடங்கப் போகிற சந்தோஷத்தில்! இதுதான் நாம் விளம்பரங்களுக்குத் தரும் முக்கியத்துவம்.

ஆனால், தொலைக்காட்சிகள் வந்த பிறகு- அதுவும் தனியார் தொலைக்காட்சிகள் பார்த்தீனியச் செடிகள்போல முளைத்த பிறகு, விளம்பரப்படங்கள் நம் வீட்டில் நுழைந்து தோளில் ஏறி, முடியைப் பிடித்து உலுக்கி அதகளம் பண்ண ஆரம்பித்தன.

எரிச்சலாக இருந்தாலும் நமக்குப் பிடிக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளைத் தயாரிக்க, பிடித்தமான படங்களை ஒளிபரப்ப அவர்களுக்கு ஆகும் செலவை சமாளிக்கும் வருமானம் அது என்பதால் அவற்றை தவிர்க்க முடியாது என்பதைத் தெலைக்காட்சி நேயர்களும் புரிந்துகொண்டனர்.

பொதுவாக பல விளம்பரப் படங்கள் யதார்த்தமின்றியே இருக்கும்.

ஓர் உதாரணம்..!

அரண்மனைச் சோலை ஒன்றில் ஒரு ராஜகுமாரன் காத்திருப்பான். வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அழகிய தேரில் வந்து இறங்கும் ராஜகுமாரி வெட்கத்தோடு சிரிக்க, அவன் சிலிர்க்க, ராஜகுமாரி சந்தோஷமாக ஓடி வர, ராஜகுமாரன் கைகளை விரிக்க, அவனைப் புறக்கணித்து ஓடும் கதாநாயகி, ஒரு நிறுவனத்தின் செருப்பை எடுத்து அணைத்துக்கொண்டு, அந்தச் செருப்பு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ‘ஐ லவ் யூ’ என்பாள். ஒரு கதை அல்லது படம் என்று பார்க்கும் போது, இது கேலிக் கூத்தாகத் தெரிந்தாலும், ஒரு பொருளின் தயாரிப்பாளர் தன் பொருளைப் பிரபலப்படுத்த எடுக்கும் விளம்பரப் படத்தில், ராஜகுமாரிக்கு, ராஜகுமாரனைவிட அந்தப் பொருள்தான் முக்கியம் என்றே சொல்ல முடியும். அது செருப்பாக இருந்தாலும் கூட!

எனவே, ஆரம்பத்தில் இதுபோன்ற விளம்பரங்களை மக்கள் தாழ்ப்பார்வை பார்த்தாலும் பின்னர் அவற்றையும் ஜீரணிக்கக் கற்றுக்கொண்டனர்.

ஆனால்,அண்மைக்காலமாக நமது தொலைக்-காட்சிகளில் வரும் விளம்பரப் படங்களில் ஒழுக்க மீறல்களைத் தூண்டுகிற மாதிரியான காட்சிகள், வசனங்கள் அதிகமாகிக் கொழுத்துக் கொண்டே போகின்றன.

நடிகை அசின், ஒரு குளிர்பான விளம்பரத்தில் பெண் பார்க்க வந்திருப்பவர்கள் முன்னால் கும்மாங்குத்து நடனம் ஆடுகிறார். அப்படி ஆடுவது பெண்ணுரிமையா அல்லது ஒழுக்க மீறலா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், குளிர்பானத்தின் பெயரைச் சொல்லி, “கண்ணு கொஞ்சம் கலாட்டா பண்ணு” என்கிறார். இது இளைஞர்கள் மத்தியில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்று விளக்க வேண்டியதில்லை.

இன்னொரு குளிர்பான விளம்பரத்தில் நடிகை ஜெனிலியா அந்தக் குளிர்பானத்தின் ‘சிக்னல் லவுட் (றீஷீதபீ) கட்டடிக்க அல்லோவ்டு (ணீறீறீஷீஷ்மீபீ)!’ என்கிறார். குளிர்பானத்தில் என்ன சிக்னல் உள்ளது... அதனால் எப்படி கட் அடிக்க அனுமதிக்கப்படுகிறது? என்பது புரியவில்லை.

இவை மட்டுமின்றி நாகரிகமற்ற வார்த்தைகள், ஆபாசமான அசைவுகள், அருவருப்பான காட்சி அமைப்புகளும் பல விளம்பரப்படங்களில் கடை விரிக்கப்படுகின்றன.

மிக்ஸி விளம்பரம் ஒன்றில், ஒரு வீட்டில் புது மிக்ஸி ஒன்று இருக்கும். ஓர் அழகான இளம்பெண் கவர்ச்சியான உடையில் ஆடிக்கொண்டு இருப்பாள். உள்ளே நுழையும் கணவன் (அல்லது காதலன்) வியந்துபோய், “அடேங்கப்பா... என்னா கலரு... என்னா ஃபிகரு...” என்பான். அவன் வர்ணிப்பது மிக்ஸியைத்தான் என்பதுபோல கடைசியில் முடிந்தாலும், அவன் பேசப்பேச பெண் ஆடுவதைத்தான் காட்டுகிறார்கள். பொதுவாக ஒரு பெண் இருக்கும் இடத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வார்த்தையைச் சொன்னால் அது ஈவ் டீசிங் குற்றமோ, அதே வார்த்தைகள், அந்த விளம்பரத்தில் வந்து திகைக்க வைக்கின்றன.

நறுமணத் திரவம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரம், ஆபாசத்தின் உச்சம்! ஓர் இளைஞன் அந்தத் திரவத்தைத் தன் மேல் பீய்ச்சி அடித்ததும், அவன் முழு உடம்பும் சாக்லேட்டாக மாறிவிடுகிறது. அவனை வழியில் பார்க்கும் பெண்கள் எல்லாம் நாக்கைச் சுழற்றி, உதட்டை ஈரமாக்கி காமவெறி பிடித்ததுபோல, அவனைப் பின்தொடர்கிறார்கள். ஓர் அறைக்குள் கடைசியாக அவன் நுழைகிறான். அங்கே ஒரு பெண் கட்டிலில் படுத்திருக்கிறாள். உடலின் மேல்பாதி மட்டும் தெரிகிறது. மிச்சப்பகுதியை மறைத்தபடி அந்த இளைஞன் ஒரு பெட்டியைக் காட்டி, அதைத் திறந்து, உள்ளே இருந்து சாக்லெட் பூசிய தனது விரல்களை மேலும் கீழும் ஆட்டுகிறான். அந்தப் பெண் உடல் குலுக்கிக் குலுக்கிச் சிரிக்கிறாள். கருமம்! கண்றாவி!!

சில நகை விளம்பரங்களும் இதேபோல் எலலை மீறுகின்றன. சில விளம்பரப் படங்களில் கடைசியில் தேவையே இல்லாமல் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் யாராவது ஒரு பெண் வந்து நின்று, தன்னைச் சுழற்றி, உதட்டை நெளித்து தப்பான பார்வை பார்த்து கண்ணடித்து முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அவையெல்லாம் மனநிலை தவறியவர்கள் எடுத்த படங்களோ அல்லது ஏதாவது மனநோய் மருத்துவமனைக்கான விளம்பரங்களோ என்ற சந்தேகம்கூட எழுகிறது.

ஒது துணிக்கடை விளம்பரத்துக்காக, அண்ணி, அண்ணன் அவர்களது மகள் பற்றி எல்லாம் விளக்கிவிட்டு கடைசியில் நடிகை சிநேகா “போலாமா?” என்று கேட்கிறபோது, ‘போ’வுக்கு முன்னால் சேர்க்கப்படுகிற ஒரு சில ‘ப்’கள், “லா” என்ற எழுத்தைச் சொல்கிற குழைவு, அப்போது அவரது கைகள் காட்டுகிற சைகை, கண்களின் அலைப்பாய்ச்சல், வெட்டுகிற வெட்டு இவையெல்லாம், ‘துணி எடுக்கப் போலாமா?’என்று கேட்பதுபோல, சாமி சத்தியமாக இல்லை.

“திரைப்படங்களில் இல்லாத ஆபாசமா விளம்பரப்படங்களில் உள்ளது?” என்று கேட்கலாம். இல்லைதான். ஆனால் நாம் திரையரங்குக்குப் போனால்தான் அங்கே பிரச்னை. ஆனால், தொலைக்காட்சி விளம்பரங்கள் நம் வீட்டுக்குள்ளேயே, எல்லாவித உறவுகளோடும் ஒன்றாக அமர்ந்து பார்க்கிற சூழ்நிலையில் வருகின்றன.

தொலைக்காட்சிகளில் போடப்படுகிற படங்கள் பாடல்காட்சிகளிலும்கூட ஒழுக்க மீறல் ஆபாசம் உண்டு. அவையும் தடுக்கப்பட வேண்டியவைதான். ஆனால், ஒரு காட்சி ஒருமுறை வந்துவிட்டுப் போவதற்கும், விளம்பரப்படங்களில் முன்னுரிமையோடு அதிகபட்ச ஒலியோடு மீண்டும் மீண்டும் வரும்போது, அது பலரது சிந்தனையை ஆக்கிரமிக்கிறது.

மேற்சொன்ன விளம்பரங்கள் ஒரு நாளில் குறைந்தது பத்து முறையாவது ஒளிபரப்பாகின்றன. சிறப்பு தினங்கள், பிரபல படங்களின் ஒளிபரப்பு தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பொதுவாகத் தொலைக்காட்சியில் படங்களுக்கு இடையே விளம்பரம் வருவது பார்வையாளர்களுக்கு எரிச்சலாக இருப்பது உண்மைதான். ஆனால், படங்களில் வரும் காட்சிகளை விலகி நின்று கதையாகப் பார்க்கிற மக்கள், தாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கான விளம்பரங்களை மனதுக்கு நெருக்கமான ஒன்றாகவே கருதுகின்றனர். அதில் ஒழுக்க மீறல்களை ஊக்குவிக்கும் ஆபாசம், வக்கிரம் சேருவது, போகப்போக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உடனடியாகச் சாட்டையைச் சுழற்ற வேண்டிய விஷயம் இது. ஒரு நிமிடத்தில் அற்புதமான கதை, தொழில்நுட்ப நேர்த்தி, நல்ல நகைச்சுவை என்று அசத்தும் பல நல்ல விளம்பரப்படங்களும் உண்டு. ஆனால், இந்தத் துளி விஷங்கள் குடம் பாலைக் கெடுக்கின்றன.

தொலைக்காட்சி விளம்பரப்படங்கள் மூலம் வீட்டுக்கு வீடு விஷம் பரப்பும் இந்தச் சீர்கேட்டை எப்போது சரி செய்யப் போகிறது சென்சார்? புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வரும்போது மட்டும், ‘உடல் நலத்துக்குத் தீங்கானது’ என்று காட்டுவதோடு, முடிந்தது கடமை என்று, நினைப்பது கயமை!

“இளைதாக முள் மரம் தொல்க” என்றார் வள்ளுவர். முள் மரத்தைச் செடியாக இருக்கும்போதே வெட்டிவிட வேண்டுமாம். நன்கு வளரவிட்டுவிட்டால் பின்னர் அழிக்கிற சக்தி தணிக்கைத் துறையின் ‘கத்திரிகோல்’களுக்கு இல்லாமல் போய்விடலாம்!
7 comments:

வெண்காட்டான் said...

have u ever noticed ads from ithayam and some compaies always show small girls undergarments...
this is also a marketting stragery...
no one notice this.

PPattian : புபட்டியன் said...

நல்ல ஆய்வு.. நல்ல கோரிக்கை. அண்மையில் வந்த Axe விளம்பரம் (Elevator) உச்சம்..

கட்டாயம் தணிக்கை வேண்டும். விளம்பரங்களுக்கு மட்டுமில்லை.. தொல்லைக்காட்சி தொடர்களுக்கும் (சீரியல்கள்).

raja said...

nobody care that hamaam soap add for attacking sick and poor childrens... for that old men mentioned autodriving to school children

raja said...

நீங்க அந்த ஹமாம்... சோப் விளம்பரத்த மறந்து எழுதிட்டிங்க....

அந்த பணக்கார கிழவன் சொல்லுவான்.. கண்ட பசங்களோட.. ஆட்டோவுல.. உரசிகிட்டு போனா... அப்படினு.........அவன் சுட்டிகாட்டுறது ஏழ்மைகூடிய மற்றும் தலித் குழந்தைகளை.... ...இந்த நாசகார பாவிகளுக்கு யார் தண்டனை கொடுக்கறது....?

வரதராஜலு .பூ said...

நல்லா சொன்னிங்க.

ஒரு விளம்பரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞன் ஒரு பெண்ணை கடந்து செல்லும்போது அப்பெண் தனது தாலியை மறைத்துக்கொள்வாள். இப்படியெல்லாமா விளம்பரம் எடுப்பார்கள்?

புதுகைத் தென்றல் said...

இப்போ விளம்பரங்கள் வரம்பு மீறி தான் வருது. மக்கள் அதைபார்ப்பாங்கன்னு எப்படி நம்பறாங்க. இவர்களை பற்றி புகார் எங்க சொல்வது???

சு.செந்தில் குமரன் said...

u r right வெண்காட்டான்

புபட்டியன் சொல்வது மிகச் சரி.

//அந்த பணக்கார கிழவன் சொல்லுவான்.. கண்ட பசங்களோட.. ஆட்டோவுல.. உரசிகிட்டு போனா... அப்படினு.........அவன் சுட்டிகாட்டுறது ஏழ்மைகூடிய மற்றும் தலித் குழந்தைகளை.... ...இந்த நாசகார பாவிகளுக்கு யார் தண்டனை கொடுக்கறது....?//
உண்மை ராஜா.
இது போல நிறைய இருக்கு.
இன்னொரு விளம்பரத்துல வேலைக்காரன் பேரு முருகன் . ஒரு இன்ஸூரன்ஸ்
தமிழ் விளம்பரத்துல நல்ல படிப்பாளின்னு தெலுங்கு ஆள காட்டுவாங்க.
ஒரு காப்பி விளம்பரத்துல முருக பக்தர எம்.ஜி.ஆர் ரசிகரா ஆக்குவாங்க. அய்யப்ப‌
பக்தர சிவாஜி ரசிகரா ஆக்க முடியுமா?

ஆனா நான் அந்தக் கோணத்துல இந்தக் கட்டுரைய எழுதல. அந்த கோணத்துல
எழுதினா அப்புறம் நீங்க எல்லாம் கத்தி எடுத்துகிட்டு கிளம்பிப் போயிடுவீங்க.

//ஒரு விளம்பரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞன் ஒரு பெண்ணை கடந்து செல்லும்போது அப்பெண் தனது தாலியை மறைத்துக்கொள்வாள். இப்படியெல்லாமா விளம்பரம் எடுப்பார்கள்?//

எடுக்கறாங்களே வரதராஜுலு சார்.//இப்போ விளம்பரங்கள் வரம்பு மீறி தான் வருது. மக்கள் அதைபார்ப்பாங்கன்னு எப்படி நம்பறாங்க. இவர்களை பற்றி புகார் எங்க சொல்வது???//
புதுகைத் தென்றல்....

உங்கள மாதிரி குல மகளிர் ஒரு பத்து பேரு ஒண்ணு சேர்ந்து காவல் நிலையம்,
கலெக்டர் அலுவலகம், தலைமைச் செயலகம் , சென்சார் போர்ட் அலுவலகம் ..
இங்கெல்லாம் புகார் பண்ணலாம்

Post a Comment