Friday, January 22, 2010

# ஆஸ்கார் விருதுகள் சூட்சுமக் கயிற்றின் சூத்திரம்

ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக நமது ஏ.ஆர்.ரஹ்மான் ஒன்றுக்கு இரண்டாக ஆஸ்கார் விருதுகள் பெற்ற தங்கமயமான அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் நம்மை பெருமிதத்திலும் புல்லரிப்பிலும் திளைக்க வைக்கிறது என்பதில் என்றைக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை.

வழக்கமாக ஆஸ்கார் விருது பெறுபவர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பு, அழுகை, கோணங்கித்-தனமான சேட்டைகள் எதுவும் அவர் செய்யாதது... அன்பு, வெறுப்பு என்று, உலகளாவிய ஒரு தலை-வனைப்போல பேசியது ... சென்னைக்கு வெளியே போய்விட்டாலே வாயில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு பேசும் தலைகால் புரியாத தமிழர்களைப்போல் இல்லாமல், ‘என் தாயக மொழியில் சில வார்த்தைகளைப் பேச ஆசைப்-படுகிறேன்’ என்று கூறி ‘ எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று கூறியது, இதுபோன்ற செயல்-களால் ஆஸ்கார் விருதுக்கு ரஹ்மான் ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்துவிட்டார்.

ஆனால் ரஹ்மான் கொடுத்த சந்தோஷத்திற்கு வெளியே வந்து பார்த்தால்... நாம் காலம் காலமாக ஆஸ்கார் விருதுகளுக்கு அளவுக்கு அதிகமான மரியாதை தருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ரஹ்மானின் உண்மையான ரசிகர்களுக்கு மன சாட்சியுடன் ஒரு கேள்வி. ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசைதான் இதுவரை ரஹ்மான் தந்த மிகச்சிறந்த பின்னணி இசை என்று சொல்வீர்களா? தர்மசங்கடத்துடன் அமைதி காத்த உங்கள் நேர்மைக்கு நன்றி.

‘லகான்’ படத்தில் ரஹ்மான் வழங்கிய பின்னணி இசையின் முன்னால் ‘ஸ்லம்டாக்’ ஒன்றும் பெரிய சாதனை இல்லை. ஆனால் அந்நிய மொழிப்படங்கள் பிரிவில் ‘லகான்’ ஆஸ்கார்
விருதுக்குச் சென்றபோது, அந்த வருடம் அதைப் புறக்கணித்து
’ No man's land’ என்ற சுமாரான படத்துக்கு விருது கொடுத்தனர். ஏன்?

‘லகான்’ மட்டும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு, படத்தின் இறுதிக்காட்சி மட்டும் மாற்றப்பட்டு இருந்தால், அந்த வருடமே ரஹ்மான் ஆஸ்கார் விருதை அள்ளி இருப்பார். ‘லகான்’ புறக்-கணிக்கப்பட்டது ஏன்? க்ளைமாக்ஸை மாற்றினால்தான் விருது கிடைக்கும் என்பது ஏன்?

அதேபோல் இந்தியாவே ‘ஜெய்.. ஹோ’ என்று பாடி விட்டது. குஷ்பூ, ரம்பா, கலா மாஸ்டர் வரை அந்தப்பாட்டுக்கு ஆடி, நம்மை நடு நடுங்க வைத்து விட்டனர். ஆனால் ஜெய்.. ஹோ..? அட... இன்றைய ரஹ்மானை விடுங்கள்! முதல் படமான ‘ரோஜா’வில் அவர் போட்ட ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலின் கால் தூசுக்கு ஈடாகுமா ஜெய்... ஹோ?’ ஆனால் ரஹ்மான் ஆஸ்கார் விருதுக்காக, ‘ஜெய் ஹோ’ வரை காத்திருக்க வேண்டி இருந்தது ஏன்?

இதற்கெல்லாம் பதில் சொல்லும் முன்பு ஆஸ்கார் விருது பற்றி நன்கு விவரம் தெரிந்தவர்களின் மனசாட்சிக்கு ஒரு கேள்வி.

மற்ற மொழி திரைப்படங்களைத் தழுவிய திரைக்கதை, ஒலிக்கலவை, இசை, பாடல் தவிர மற்றபடி ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் பெற்ற மற்ற ஆஸ்கார் விருதுகள் நியாயமானவை என்று நம்புகிறீர்களா? இல்லையென்றால் இத்தனை விருதுகள் ஏன்?

இங்கேதான் இருக்கிறது இந்தக் கட்டுரையின் தலைப்பு. அதாங்க, ‘சூட்சுமக் கயிற்றின் சூத்திரம்’!

உலகின் எத்தனையே நாடுகள். அவற்றில் எத்தனையோ அற்புதமான படங்கள். ஆஸ்கார் விருது பெறும் படங்கள் எல்லாம் அருகில் நெருங்க முடியாத அளவுக்கு மிகச்சிறந்த திரைப்படங்கள். நமது ஆங்கில மோகம், ஆஸ்கார் விருதை நம்மிடம் பிரபலப்படுத்தி விட்டது.

ஆனால் ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்றால், படத்தின் தரம் எப்படி இருந்தாலும் அது ஆங்கிலப் படமாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியத் தகுதி. போனால் போகிறது என்று எஞ்சிய உலகத் திரைப்படங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு விருது.

ஹாலிவுட் படங்களானாலும் சரி, அயல்நாட்டுப் படங்கள் என்றாலும் சரி, ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்றால் (இங்கிலாந்து- அமெரிக்க) வெள்ளைக்காரனை மட்டம் தட்டக் கூடாது. அவனை, ‘போற்றிப் பாடடி பொன்னே...’ என்று புகழ வேண்டும். இன்னொரு நாடு பற்றிய படம் என்றால்... அந்த நாட்டைக்கேவலப்படுத்தி, வெள்ளைக்காரனை உயர்த்திச் சொன்னால்தான் விருது. இதுதான் கதை.

இந்தியாவில் இருந்து அந்நிய மொழிப்பிரிவில் ஆஸ்காருக்குள் நுழைந்த முதல் படம் ‘மதர் இந்தியா’. முதல் தமிழ்ப்படம், சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த ‘தெய்வ மகன்’.

நேற்று வரை தமக்கு அடிமையாக இருந்த ஒரு சேரி தேசத்தில் இருந்து ஒரு கறுப்பன் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. “முதல் வேடமான அப்பா சிவாஜியும், மூன்றாவது வேடமான சொகுசுப் பேர்வழி சிவாஜியும் ஒரே ஆளே அல்ல. ஒரே மாதிரி சாயல் கொண்ட இருவரை வைத்து இந்தியர்கள் ஏமாற்றி விட்டனர்” என்று அன்றைய ஆஸ்கார் அண்ணாச்சிகள் ‘கமென்ட்’ செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

ஆக, ‘மதர் இந்தியா’ என்ற இந்திப்படம் முதற் கொண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்குப் போன எந்தப்படத்திலும் அவர்கள் தேடிய அம்சங்கள் இல்லை. (‘காந்தி’ படத்தைக்கூட இறுக்கித்தான் பிடித்தனர். உன் வரலாற்றைச் சொல்லக்கூட வெள்ளைக்காரன் தேவைப்படுகிறான் என்ற தற்பெருமையோடு விருது கொடுத்தார்கள்.)

‘லகான்’?

அடிமை இந்தியாவில் வெள்ளைக்-காரர்கள் செய்த கொடுமைகளைச் சொன்ன படம். தன் ஊரின் நன்மைக் காக இந்தியக் ‘காட்டான்’கள் விளை-யாட்டில் வெள்ளைக்-காரர்களை, அதுவும் கிரிக்கெட் விளை யாட்டில் வெள்ளைக்காரர்களை ஜெயிப்பதாகச் சொன்ன படம். எப்படிக் கிடைக்கும் விருது? விடுவார்களா? படத்தின் கிளைமாக்ஸை மாற்றி கிரிக்கெட்டில் இந்தியர்கள் தோற்று வெள்ளைக்காரர்கள் ஜெயிப்ப-தாகக் காட்டியிருந்தால்... கண்டிப்பாக ‘லகான்’ ஆஸ்கார் விருதோடு வந்திருக்கும்.

சரி... ‘ஸ்லம்டாக்’ படத்திற்கு ஏன் இத்தனை விருதுகள்?

மும்பையில் இந்து, முஸ்லிம் காழ்ப்புணர்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய்வரை பரிசு பெற்று-விட்ட ஒரு முஸ்லிமை போலீஸ் சந்தேகப்பட்டு கைது செய்வார்களாம். என்ன லாஜிக் இது? இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர். அறிவாளியாக இருந்தாலும் இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பிரச்னை தான். தவிர வறுமை, சகதி, நரகல், பிச்சை, பாலியல் தொழில், வன்முறை, கொடூரம், சிசுக்கொடுமை போன்றவை இந்தியாவில் இன்னும் உள்ளன என்று பிரபலப்படுத்துவதில் ஆஸ்கார்
மாமாக்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.

‘அலெக்ஸாண்டர்’ என்ற ஒரு ஹாலிவுட் படம். மாவீரன் அலெக்ஸாண்டர் எப்படி கடைசியில் அன்றைய இந்திய அரசனான போரஸிடம் கேவல-மாகத் தோற்றுப் போனான் என்பதைக் கள்ளங்கபடமில்லாமல் காட்டிய படம்.

பல்வேறு தொழில்-நுட்பங்-களி-லும் சிறப்பு வாய்ந்த அந்தப்-படத்-திற்கு, மேற்-சொன்ன கிளைமாக்ஸ் காரணமாகவே ஒரு விருதுகூட தராமல் புறக்கணித்தவர் கள்தான் ஆஸ்கார் ஆட்கள். ஆஸ்கார் தேர்வுக் கமிட்டியின் இனவெறி உணர்விற்கு இன்னும் உதாரணங்கள் சொல்லலாம். சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது கொடுத்-தார்கள். சத்யஜித்ரேவின் நோக்கம் வேறு. ஆனால் அவரது படங்களில் சொல்லப்பட்ட இந்தியாவின் வறுமை, சிறந்ததாகக் கூறப்படும் இந்தியக் குடும்ப உறவுகளில், அவரது படங்கள் சொன்ன சிக்கல்கள் இதையெல்லாம் வெள்ளையர்கள் வேறுகோணத்தில் ரசித்ததாலேயே அவருக்கு விருது கொடுத்தனர்.

அதனால்தான் அதே இந்தியக் குடும்ப உறவுகள், இந்தியச் சமுதாயம் இவற்றின் மேன்மையைச் சொன்ன சாந்தாராமை அவர்கள் கண்டு கொள்ள-வில்லை.

‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த அசாருதீன் முகமது இஸ்மாயில் என்ற சிறுவன் இன்னும் சேரியிலேயே வாழ்கிறான். ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு அவன் இந்தியா திரும்பி னான். உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் பிரமுகர்-கள் அவனைப் பார்க்க விரும்பினர். ஆனால் பயண களைப்பு மற்றும் மனநிலை மாற்றத்தால், அவன் ‘யாரையும் பார்க்க மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தபடி, வீடியோ கேம்ஸ் வைத்து விளையாடப் போய்விட.. காத்திருக்கும் பத்திரிகை-யாளர்கள் மற்றும் பிரமுகர்கள் தவறாய் நினைப்பார்களே... என்ற பதற்றத்தில் அவனது தந்தை அவனை அடித்து உதைத்துவிட்டார். ‘குழந்தையை அடித்து உதைத்தது தவறுதான் மறுக்கவில்லை. ஆனால், இந்தச் செய்திக்கும் புகைப் படங்களுக்கும் ஹாலிவுட் ஆங்கிலப் பத்திரிகைகள் தந்த முக்கியத்துவம் அபாரம்.’ ‘பாத்தீர்களா? இந்தியா என்றாலே இப்படித்தான்’.

ஒருவேளை அந்தப்பையன் யாரையும் சந்திக்க மறுத்து, சந்திப்பு ரத்து ஆகியிருந்தால்? அதையும் அவர்கள் செய்தியாக்குவார்கள். ‘நிருபர்களைச் சந்திக்க மறுத்த ஸ்லம் ஆக்டர் பார்த்தீர்களா? இந்தியா என்றாலே இப்படித்தான்’ஆஸ்கார் விருது தருவோரின் மனநிலை இதுதான்.

இருக்கட்டும். தவிர, ரொம்ப காலமாக ஆஸ்கார் விருதுகள் பற்றி ஒரு தவறான கருத்தை கமல்ஹாசன் கூறி வருகிறார். ‘அந்நிய மொழிப் பிரிவு படங்களில் அவர்கள் தரும் ஒரு ஆஸ்கார் விருது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஹாலிவுட் படங்களில் பணியாற்றி ஆஸ்கார் விருது பெறுவதுதான் சாதனை. (இதைத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் சாதித்துவிட்டார்) அதுதான் பெருமை”.

கமலின் இந்தக் கருத்து எப்படித் தவறு என்று பார்ப்போம்.

உதாரணமாக ஆந்திர அரசு தெலுங்குப் படங்-களுக்காக, ‘நந்தி ’விருது தருகிறது. ஆக, ‘நந்தி’ விருது பெறவேண்டும் என்றால் அது தெலுங்குப் படமாக இருக்க வேண்டும். தெலுங்கில் ஆண்டுக்கு எத்தனை படம் எடுக்கின்றனர். 200..? 300..? சரி 300 என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

அதே ஆந்திர அரசு, “நாங்கள் இனி ‘நந்தி’ விருதுகளில் இந்தியாவின் மற்ற அனைத்து மாநில படங்களுக்கும் சேர்த்து ஒரு விருது தருகிறோம் என்று கூறினால்... மலையாளம், இந்தி, மராத்தி, போஜ்பூரி, குஜராத்தி, அசாமி, ஒரியா என்று ஒரு ஆண்டுக்கு தயாரிக்கப்படும் படங்கள் எத்தனை? சுமார் 800?

இப்போது சொல்லுங்கள் எந்த விருதுக்குப் போட்டி அதிகம் இருக்கும்? அயல்-மொழி படங்களின் பிரிவுக்குத்தானே! அதுபோலத்தான் நேரடி ஆஸ்கார் விருது என்பது ஹாலிவுட் படங்களுக்கு மட்டும்! ஆனால், அயல்மொழி படங்களுக்கான ஆஸ்கார் விருதில், ஈரான், ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற அற்புதமான திரையுலகங்-களின் படங்கள் எல்லாம் மோதும். ஆக, அதில் ஒரு விருது என்றாலும் அதன் மதிப்பே தனி. ஆகக் கூடி...

ஆஸ்கார் விருதுகளில் வேறு எந்த இந்தியருக்கும் அல்லாத ரஹ்மானுக்கு மட்டுமே உள்ள பெருமைகள் இரண்டு.

அதாவது சத்யஜித்ரே பெற்றது கௌரவ ஆஸ்கார் விருது. போட்டியில் வென்ற ஆஸ்கார் அல்ல. தொழில்-நுட்ப ஆஸ்கார் என்றால் இதுவரை வேறு எந்த இந்தியரும் ஆஸ்கார் விருதை தனியாகப் பெற்றது இல்லை. ‘காந்தி’ படத்திற்காக உடையலங்கார விருது பெற்ற பானு அதையா கூட அதை ஜான் மோல்லோ என்ற வெள்ளைக்காரருடன் சேர்ந்துதான் பெற்றார். இப்போது விருது பெற்றுள்ள ரசூல்பூக்குட்டியும் அப்படியே. ஆனால், ரஹ்மான் பெற்றிருப்பது தனி விருது. அவருக்கு மட்டும் சொந்தம்.

இரண்டாவது ஒரே வருடம் இரண்டு விருதுகள்! எனவே, ஆஸ்காரைவிட ஏ.ஆர்.ரஹ்மான்தான் உசத்தி.

ஆதலால்... நாம் ஆஸ்கார் விருதுகளை ஓவராகக் கொண்டாடத் தேவையில்லை. விருது பெற்ற ரஹ்மான் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அதை எப்படி எதிர் கொண்டாரே... அந்த அளவு ஆஸ்கார் விருதுகளை மதித்தால் போதும்!

No comments:

Post a Comment