Monday, January 4, 2010

# தமிழன் அவ்வளவு இளிச்சவாயனா?

தெலுங்கானா கோரிக்கையின் பின் விளைவுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய மாநிலக் கோரிக்கைகளும், மறு சீரமைப்புக் கருத்துக்களும் பெருகி வருவது தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. மறு சீரமைப்புக் கோரிக்கை வைக்க மற்ற எல்லோரையும்விட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக கட்டாயம் உள்ளது; ஏனெனில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதிகம் இழந்தது தமிழ்நாடுதான்

உண்மையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்துக்குச் சொந்தமான நிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால், தமிழ்நாடு மாநிலம் என்பது இன்றைய ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தைவிடப் பெரிதாக இருந்திருக்கும். கே.எம்.பணிக்கர் என்பவர் அன்று நேருவுடன் தனக்கு இருந்த ‘ரகசிய’ செல்வாக்கைப் பயன்படுத்தி பல தமிழ்ப்பகுதிகளை கேரளாவுடன் இணைத்தார். தமிழ் நிலப்பகுதியான ராயலசீமா முழுக்கத் தெலுங்கு மக்களை குடியேற்றி, அந்தப் பகுதிகளை ஆந்திராவுடன் இணைத்தனர் தெலுங்கு வாலாக்கள்.

கர்நாடக விஷயத்தில் தமிழனின் கதை புழுவுக்கு ஆசைப்பட்டு மீனை இழந்த கதையானது. பெங்களூர், கொள்ளேகால் (கொள்ளிடம் என்று பொருள்), குடகுப் பகுதிளை இழந்து வறண்ட பூமியான ஓசூரை நமக்குத் துப்பினார்கள். சுயபுத்தி இல்லாவிட்டாலும் சொல் புத்தியாவது வேண்டும் என்பார்கள். இன்று மற்ற மாநிலத்தவர் பேசுவதைப் பார்த்தாவது, தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு ரோஷம் வருமா என்று பார்த்தால், அது மேலும் மழுங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக ஒரு காரியம் நடந்துள்ளது.

“இளைத்தவன் வீட்டில் இருப்பதைப் பிடுங்கு; எல்லாம் முடிந்தால் எலும்பை உருவு” என்ற கதையாக, இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தெலுங்கர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். உடனே உப்புப் போட்டு சோறு தின்கிற சில பல தமிழர்கள் சேர்ந்து அந்த அநியாயக் கோரிக்கையை எதிர்த்து தடுத்து விரட்டியுள்ளனர். சந்தோஷமான செய்தி.

ஆனால் இதில் மிகப்பெரிய வருத்தம் என்ன வென்றால், இந்தப் போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததுதான். நம் போலீஸ் அனுமதியோடு நடந்த போராட்டம் இது. திட்டமிட்டு எல்லா விதத்திலும் தன் இனம் மொழி அழிக்கப்படுவது கண்டு உயிரின் விளிம்பில் நின்று ஈழ மக்கள் தனி நாடு கேட்டபோது, இங்கிருந்து இலங்கையின் இறையாண்மைக்காகக் கவலைப்பட்டவர்கள், தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரியை பிரிக்க போராட்டம் நடந்தபோது என்ன செய்தார்கள்?

எப்படி வந்தது இந்த தைரியம்? போராட்டத்திற்கு அரசு அனுமதி கொடுத்த அதிகாரிகள் யார்? எங்கே போச்சு நம் சொந்த இறையாண்மை?

தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர் ஆட்சியில், த மிழகத்தில் இருந்து ஒரு மாவட்டத்தைப் பிரிக்க நடந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி தந்துள்ளது என்றால்,

அடச்சீ...

எத்தனை அவமானம்-?

இது ஏதோ ஒருநாள் சம்பவம் அல்ல.

ஓர் இடத்து சம்பவமும் அல்ல.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்த் துறந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் இன்னொரு கோரிக்கை மிகக் கேவலமானது. சென்னை ஆந்திராவுக்கு வேண்டும் என்ற அநியாயமான கோரிக்கை அது.

இப்போதும் சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலுவின் சமாதி முன்பு, அவர் இறந்த தினத்தன்று கூடும் சில தெலுங்கு சமூக விரோதிகள் “அரவாடு சாவாலா, மதராஸ் காவாலா” என்று கோஷம் போடுகின்றனர். இதன் பொருள் “தமிழன் எல்லோரும் சாகவேண்டும், ஆந்திராவுக்கு சென்னை வேண்டும்”

சென்னையிலேயே மலையாளிகள் நடத்தும் ராஜ்யோத்சவ விழாக்களில் “காசர்கோடு முதல் கன்னியாகுமரிவரை ஐக்கிய கேரளம் அமைப்போம்” என்று வருடாவருடம் சபதம் எடுக்கின்றனர். கர்நாடக மாநிலம் உருவான நாளை வருடா வருடம் சென்னையில் கொண்டாடும் கன்னடர்கள், “நீலகிரி மாவட்டத்தை கர்நாடகாவுடன் இணைக்கும் நாள் விரைவில் வரும்” என்று சூளுரைக்கின்றனர்.

சென்னை நகரத்தை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று அன்று ஆந்திரர்கள் சென்னையில் கலகம் செய்தபோது, “இந்த அநியாயமான கோரிக்கைக்குத் துணை போகின்றவர்கள் வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிப்பேன்” என்று மிரட்டி அவர்களை அடக்கினார் அன்றைய சென்னையின் தகுதியான நகரத் தந்தை (மேயர்) செங்கல்வராயர்.

இன்று சென்னைக்கு ஆந்திரா கிருஷ்ணா நீர் தருவதன் பின்னணியில் மீண்டும் தண்ணீர் விஷயத்தில் மிரட்டி சென்னையை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்ற வஞ்சகத் திட்டம் இருந்தது. ஆனால், விஷயமே தெரியாமல் வீராணம் திட்டம் மூலம் அதற்குப் பாதி சாவு மணியடித்துவிட்டார்கள்.

இப்படி தமிழனிடம் இருந்து பிடுங்கியது போதாது என்று, மேலும் பிடுங்க அண்டை மாநிலத்தினர் திட்டம் போடுகின்றனர். அதன் அடுத்த வெளிப்பாடுதான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்று தெலுங்கர்கள் தைரியமாகப் போராடி இருப்பது. ஆனால், எதிர்த்துப் போராடி அடித்து விரட்டிய தமிழர்கள் புதிய சரித்திரத்தைத் தொடங்கி உள்ளனர். அவர்களின் பாத கமலங்களுக்குப் பணிவான வணக்கங்கள். சுயநலப் பேயான தமிழக அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. மக்கள் களமிறங்கியிருப்பது பெருமையாக உள்ளது. ஓர் அநியாயமான போராட்டத்துக்கு அனுமதியும் கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்த்த நிலையில், தமிழகத் தலைவர்கள்(?), தமிழினத் தலைவர்கள் இங்கு உண்டா என்று தேட வேண்டியுள்ளது.

இதே வேறு மாநிலமாக இருந்திருந்தால், அந்த மாநில முதல்வர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். புரியும்.

தமிழன் அவ்வளவு இளிச்சவாயனா?

2 comments:

PNS said...

Hi senthil,

I have seen this article today only. It is surprising me that no one has posted any comment for this post. It is really good one.

Pranav, Saudi

சு.செந்தில் குமரன் said...

what to do pranav?
most of our blog users are just timekillers and aimless buddies.

ok why to feel about others?

i am happy becoz u r there.

Post a Comment