Monday, January 18, 2010

# எம்.ஜி.ஆரின் சுவையான பேட்டி(கள்)
அமரர் எம்.ஜி.ஆர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்த பேட்டிகளை, எஸ்.கிருபாகரன்
தொகுத்து வழங்க, 'எம்,ஜி,ஆர் பேட்டிகள்' என்ற பெயரில் ஆழி பதிப்பகம் நூலாக‌
வெளியிட்டிருக்கிறது. அதிலிருந்து கொஞ்சம்...நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம்? அதில் ஏற்ற வேடம்?


‘மனோகரா’ நாடகம். மனோகரன் வேஷம்.

பெண்வேஷம் போட்டு நாடகங்களில் நடித்தது உண்டா?

உண்டு.

உங்கள் அன்னையார் இப்போது உயிரோடு இருந்தால்?


என் நிலைமைக்காக மிகவும் அனுதாபப் பட்டிருப்பார்.

உங்கள் சொந்த வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனை?

ஒரு பெண் என்னைக் காதலித்ததுதான். தயவு செய்து இதற்குமேல் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்.

உங்களை உயர்த்தியது எது?

பருவம்.

உங்கள் தொழிலில் பெரிய சவாலாக இருந்தது எது?


என்னை அழிக்க விரும்பிய எதிரிகளின் நட்பு.

உண்மை அழிந்த பின்பு நிலைத்திருப்பது என்ன?


உண்மைதான். ஏனென்றால் அது அழிவது கிடையாது.

மதுவை விடக்கொடியது எது?

அதை அருந்தும் மனம்.

நன்றியில்லாத ஒருவனை நன்றியுள்ளவனாக ஆக்குவது எப்படி?


நாம் நன்றி உள்ளவராக நடந்துகொள்வதன் மூலம்.

உங்களால் பாதிக்கப்பட்டவர் யாராவது உண்டா?

நானே இருக்கிறேனே, போதாதா?

உங்களுக்குக் கவிதை பிடிக்குமா?


கவிதையும் பிடிக்கும்.

தங்களுக்குக் குழந்தை பிறந்தால்?


முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும்.

உங்களுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுத்தபோது அதை நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?


உண்மை.

சாதிவெறியைத் தூண்டிவிடும் தமிழ்த் தலைவர்களுக்கு உங்கள் பதில் யாது?-


அவர்கள் தமிழை வணங்காதவர்கள்.

சில சமயம் நீங்கள் கவிஞர்களுக்கே பல்லவி எடுத்துத் தருவீர்களாமே?


பல்லவி எடுத்துக் கொடுப்பது கிடையாது. கருத்துச் சொல்வது உண்டு-.

ரசிகன், தொண்டன், உடன்பிறப்பு இம்மூன்றில், எப்படி அழைப்பது உங்களுக்குப் பிடிக்கும்?

நான் எழுதும் கடிதத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறேனே அப்படி.

கோழை எதைச் சாதிக்கிறான்?


வீரனை வெளிக்காட்டுகிறான் அல்லவா?

ஒரு தமிழ்ப்பெண் எப்படி நடந்துகொண்டால் அவளது வாழ்வு பிறர் பார்த்து மதிக்கும்படி இருக்கும்?

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பெண்ணும் திண்மைஉண் டாகப் பெறின்’ என்ற குறள் நெறியைப் பின்பற்றி நடப்பதே மதிப்புத் தருவதாகும்.

திருமணமான பெண் வேலை செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன?

திருமணமான பெண் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

உங்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?

பிறரால் அனுதாபப்பட வேண்டிய ஒருவன்.

இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைக் கொடுத்திருப்பது ஏன்?

அவன் மீதுள்ள அவ நம்பிக்கையால்.

ஜிம்மி கார்ட்டரின் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


உலக அரசியலுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என நினைக்கிறேன்.

உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன். உங்களுடைய சம்மதம் தேவை?


என் வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தைக் காப்பாற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான்.

அறிவுள்ளவன் யார்?


தன்னை அறிந்தவன்.

நண்பர்களைக் கவர்வது எப்படி?

தூய்மையான நட்பைக்கொண்டு.

முயற்சி இல்லாமல் கிடைப்பது எது-?

மரணம்!

துன்பத்திலேயே அதிகத் துன்பம் எது?


நன்றி கொன்றவர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் துன்பம்.

நீங்கள் அரசியலில் நுழையக் காரணமானவர் யார்?

சுபாஷ் சந்திரபோஸ்.

ஏழை ஒருவன் நடிகையை மணக்க முடியுமா?


நடிகையரிலும் ஏழை நடிகை இருக்கிறார் அல்லவா?

மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தது உண்டா?


உண்டு. நாடக கம்பெனியில் இருந்தபோது-.

தங்களால் வாழ்வு பெற்றவர்கள் தங்களையே தூற்றுகிறார்களே?


அது அவர்களது இயற்கை. காலம் மாறும். காத்திருப்போம்.

தாங்கள் சிறந்த நண்பர் என்று யாரைக் கருதுகிறீர்கள்?


அறிவை.

நீங்கள் இறக்கும்போது உங்கள் கடைசி ஆசை என்னவாக இருக்கும்??


பிறவாதிருக்கவேண்டும் என நினைப்பேன் என இப்போது சொல்கிறேன். அப்போது என்ன நினைப்பேனோ?

No comments:

Post a Comment