Sunday, January 10, 2010

# அய்யய்யோ சென்னை .. குரல் வளையை நெரிக்கும் ஆட்டோ கட்டணம்
சென்னை தி.நகர் பனகல் பார்க் பேருந்து நிலையம். அலுவலக தினத்தின் பரபரப்பான காலை நேரம். ‘மருத்துவமனையில் இருந்து குணமாகி வந்து பேருந்தில் ஏறினேன். இறங்கியதும் மீண்டும் மருத்துவமனைக்கே போனேன். நான் ஏறியது மாநகரப் பேருந்தில்...’ என்ற கவிதைக்கு(?) இலக்கணம் வகுக்கும் சூழல்.

நெரிசலில் பஸ் ஏற முடியாத ஒரு பெரியவர், ஆட்டோவில் போக முடிவு செய்தார். ஓர் ஆட்டோக்காரரிடம் பேச, அவர் அநியாயக் கட்டணம் கேட்க, பெரியவர் கோபப்படவில்லை. மாறாக நியாயமான தொகையை அமைதியாகப் பெரியவர் சொன்னதும், ஆட்டோக்காரருக்கு வந்ததே கோபம்! நெருப்புத்துண்டங்களாய் வார்த்தைகள்!

‘‘யோவ்... பெரிசு... அவ்வளவுதான் தருவியா? உன்ன ‘தூக்கிட்டு’ப் போக?’’

அடுத்த நொடி பெரியவர் நெஞ்சில் கை வைத்தபடி கீழே உட்கார்ந்து கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார். ஆட்டோக்காரர் தொடர்ந்து ‘நியாயம் முழங்கிக்’ கொண்டிருந்தார். சீர்மிகு சிங்காரச் சென்னையில் அது அடிக்கடி நடக்கும் சம்பவம்தான். ஆட்டோக்காரர் கேட்கிற அநியாயத் தொகையை தராவிட்டால் இப்படிதான். ‘ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் கையில் பேட்ஜ் அணிந்து இருக்க வேண்டும். சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணக் கட்டணம் போக சரியான சில்லறையைத் தர வேண்டும். அனுமதி எல்லைக்கு உட்பட்டு பயணி எங்கே அழைத்தாலும் மறுக்காமல் போக வேண்டும். முக்கியமாக, பயணியிடம் ‘‘எங்கே போகணும்?’’ என்று அபசகுணமாகக் கேட்கக்கூடாது. பயணி சொல்லும்வரை அமைதியாக முகம் பார்க்க வேண்டும்’.

இதெல்லாம் எங்கே என்கிறீர்களா? இதே சென்னையில்தான், 1970களின் பிற்பகுதியில்! அன்றைக்கு அப்படி இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், இன்று எமனின் ஏவலர்கள் போல ‘தூக்கிக்’கொண்டு போக ஆசைப்படுவது ஏன்?

நின்று கொண்டிருக்கிற ஆட்டோவின் இடது புறம் ஏறி வலது புறம் இறங்கினால் கூட அம்பது ரூபாயில் ஆரம்-பிக்கிற அநியாயத்துக்கு யார் காரணம்? ஆட்டோக்களில் ‘மீட்டர் திருத்தப்பட்டது’ என்று எழுதியிருப்பார்கள். திருத்தப்பட்ட மீட்டரே அங்கு இருக்காது என்பது வேதனைக்குரிய தனி விஷயம்! ஆனால், ஆட்டோ டிரைவர்களை திருத்தவே முடியவில்லையே ஏன்?

பின்னணியில் பிசாசாய் இயக்கும் ஆளும் அரசியல், அதிகார வர்க்கம்தான் இதற்கெல்லாம் காரணம்.

இன்று தமிழ்நாட்டில் ஆட்டோவில் இருக்கிற எல்லா மீட்டர்களையும் ஒட்டு மொத்தமாகப் பிடுங்கி பழைய இரும்புக்கடையில் போட்டு பேரீச்சம்பழம் (தருவார்களா?) வாங்கிக்கொள்ளலாம்.

எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போடுவதில்லை. அட முன்பெல்லாம் தறிகெட்டு ஓடி, இதயத்தை தடதடக்கச் செய்யும் மீட்டராவது இருக்கும். இப்போது அது கூட இல்லை. முன்பு பயணி ஏறி, வண்டி கிளம்பியதும் ஒப்புக்காவது மீட்டர் போடுவார்கள். இப்போது அதுவும் இல்லை. புதிதாக ஆட்டோ ஓட்ட வருபவர்களுக்கு, ‘ஆட்டோவுக்கு மீட்டர் என்ற ஒரு வஸ்து இருந்ததே’ தெரியவில்லை.

‘‘ஆட்டோவுக்கு கொடுத்தே சொத்து அழிஞ்சிடும்போல இருக்கே’’ என்ற பழைய நகைச்சுவை உண்மையாகிவிடுமோ என்ற பயத்தில், இயலாத நடுத்தர வர்க்கமும் ஏழை சனமும் இன்று தவிக்கிறது. தமக்குத் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பக்கத்து மாநிலத்தோடு ஒப்பீடு அட்டவணை போடும் முதலமைச்சருக்கும், அவரை அடியொற்றும் அமைச்சர்களுக்கும், ஆட்டோ விவகாரத்தில் மட்டும் ‘கிட்டப்பார்வை’ வியாதி.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்கள் அனைத்திலும் ஆட்டோக்கள் மீட்டர் அடிப்படையில்தான் இயங்குகின்றன. நாகரிகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட மும்பையில் டாக்ஸி, ஆட்டோ இரண்டிலும் மீட்டர் உண்டு. மேற்கொண்டு போட்டுத் தருவது என்பது ஆட்டோ ஓட்டுநரின் வேண்டுகோள், பயணியின் திருப்தி இரண்டும் சம்மந்தப்பட்ட விஷயமாகவே உள்ளது. நம் ஊரிலோ ஆட்டோ டிரைவர்கள் தமது ஆசைப்படி பயணியை ஏலம் எடுக்கும் அவலம்! கேரளாவில் இன்றும் மீட்டர் தொகை தவிர மிச்சக் காசை சில்லரை பைசா வரை சரியாக திருப்பித் தரும் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்டு.

ஆனால், தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாமல் ஆட்டோவில் ஏறுவது என்பது கூட, இம்மையில் அப்பாவி மக்கள் அனைவருக்கும் நரகமாகவே உள்ளது. மனிதனை மனிதனே இழுக்கும் அவலமான கை ரிக்ஷாவை ஒழித்தது இன்றைய முதல்வர்தான். அவருடைய சாதனைகளில் ஒன்றாக அது குறிப்பிடப்படுகிறது. இருக்கட்டும். சந்தோஷம். சைக்கிள் ரிக்ஷாக்களில் நேரம் அதிகமாகிறது என்ற நிலையில்தான் ஆட்டோக்கள் வந்தன. பெருகின. ஆனால், இன்று ஆட்டோ ஓட்டுநர்களிடம் சிக்குகிற அப்பாவி பொதுமக்கள் அவலமோ, கைரிக்ஷா இழுத்த முந்தைய தலைமுறைத் தொழிலாளர்களை விட மோசமாக உள்ளது.

இதற்கு கைரிக்ஷாவே இருந்திருக்கலாமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. அப்பாவிகள், கண்ணியமான தோற்றம் கொண்டவர்கள், தனி மனிதர்கள், பெண்கள்... தவிர்க்க முடியாத சூழலில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டை நெருங்குவது என்பது, மிக ரிஸ்கான விஷயம்.

முதலில் நாம் சொல்லும் இடத்துக்கு வரும் ‘மூட்’ ஆட்டோக்காரர்களுக்கு இருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர்கள் கேட்கும் தொகைக்கு மறு பேச்சில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். பத்து ரூபாய் குறைந்தாலும் ‘நீங்க’ என்ற மரியாதை ‘நீ’ என்று இறங்கிவிடும். அவர்கள் கேட்கும் தொகைக்கு ஒத்துக்கொள்ள மறுத்து, நகர்ந்தால் தேவையில்லாமல் பேசுவார்கள். தப்பிக்க முயன்று அமைதியாக வந்தாலும் கிண்டல், கேலி, வசவுகள் முதுகைத் துளைக்கும். கோபம் வந்தால் யாரிடம் புகார் செய்ய முடியும்?- போலீசாரிடம் தானே. அந்த ஆட்டோவே பினாமி பெயரில் போலீசாருக்குச் சொந்தமானதாக இருக்கும். பிரச்னை இங்கேதான் ஆரம்பிக்கிறது.

முன்பு ஆட்டோ என்பது, சார்பில்லாத பொதுமக்கள் ஈடுபட்ட தொழிலாக இருந்தது. அதுவரை எல்லாமே நன்றாக இருந்தது. பின்னர் அது மாறி கட்சிகளின் வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள் அதில் இறங்கின. பிரச்னை வந்து போலீசிடம் போனால் அரசியல் காரணமாக போலீசார் கண்டும் காணாமல் போக வேண்டி இருந்தது. பார்த்தது காவல்துறை. ‘நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும்? தனி கடை வைப்போம்’ அடுத்த கட்டமாக பெரிய போலீஸ் அதிகாரிகளின் பெயரிலோ அல்லது பினாமிகளின் பெயரிலோ ஆட்டோக்கள் பெருகுவதாகச் செய்திகள் வந்தன. இப்படியாக ஆட்டோ என்பது அரசியல்-வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் தொழிலானது.

இது தவிர, இருக்கவே இருக்கிறது நடிகர்களின் பெயர்கள், கட்சிகளின் அடையாளம், சாதிச்சங்கம் ஆதரவு போன்றவை. இவற்றில் ஏதோ ஒன்றின் பெயரில் ஒரு பலகையைத்திறந்து வைத்து, கும்பலாக பத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து விட்டால் போதும்.

பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம். வயிற்றில் அடிக்கலாம். யாரும் தட்டிக் கேட்க முடியாது. தவிர தேர்தல் சமயங்களில் ஊர்வலம் அணுப்புவது முதற்கொண்டு பணப்பட்டுவாடா வரை இந்த ஆட்டோக்காரர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள அரசியல்வாதிகளால் முடிகிறது. பிரதிபலனாக அடுத்த தேர்தல் வரை மக்களைச் சுரண்ட அரசியல்வாதிகளிடமிருந்து இந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி. ஆட்டோக்களால் பொதுமக்கள் அநியாயமாகச் சுரண்டப்படுவதற்கு இதுவே காரணம். தட்டிக் கேட்க ஆள் இல்லாததால் ஆட்டோ எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரனாக ஆகிறார்கள்.

இன்றும் நேர்மையான நல்ல ஆட்டோ டிரைவர்கள் இல்லாமல் இல்லை. லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பயணிகள் தவற விட்டாலும் ஒரு பைசா குறையாமல் திரும்ப ஒப்படைத்து, தருகிற வெகுமதியையும் மறுத்துவிட்டுப் போகிற நல்ல இதயங்களுக்கும் உண்டு. ஆனால், தவறானவர்கள் எழுப்பும் அராஜக ஆரவாரத்தால் பொதுமக்களின் மனம் கதறும் கதறல் ஒலிகளில், இந்த மனிதாபிமான மெல்லிசைகள் நம் காதுகளை எட்டுவதேயில்லை. என்ன செய்தால் நிலை மாறும்?

அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளின் பினாமிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அரசுப் பேருந்துப் போல ஆட்டோக்கள் அரசு வாகனமாக்கப்பட வேண்டும். டிரைவர்களுக்கு மாதச் சம்பளம். அல்லது படித்த இளைஞர்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி, ஆட்டோ வாங்க அரசுக்கடன். காவல் துறையில் உள்ளவர்கள், அவர்தம் குடும்பத்தினர் ஆட்டோ உரிமையாளராக இருக்கக்கூடாது. மீட்டருக்கு மேல் கேட்டு வற்புறுத்தினால் சிறைத் தண்டனை. இவையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை.

எல்லா ஆட்டோக்-களிலும் மீட்டர், சரியான கட்டணம், பயணிகளை தரக்குறைவாகப் பேசியதாகப் புகார்கள் வந்தால் விசாரித்து தயவு தாட்சண்யமற்ற தண்டனை..! இவற்றையாவது செய்ய வேண்டியது அரசின் கடமை.

மிகப் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர் தினசரி சந்திக்கும் இந்த அவல நிலையை மாற்றி, வெளியில் தெரியாமல் அவர்கள் வடிக்கும் கண்ணீரைத் துடைக்க வேண்டியது அந்த அரசின் கடமை. ஆட்டோக்களில் மீட்டர் பொறுத்துவோம் என்ற தனது முந்தைய அறிவிப்பை மனதில் நிறுத்தி தமிழக அரசு உடனடியாக இதைச் செய்து தனது தைரியத்தையும் நேர்மையையும் நிரூபிக்க வேண்டும்!

2 comments:

butterfly Surya said...

திமுக ஆட்சியின் அவலங்களில் இதுவும் ஒன்று.

சு.செந்தில் குமரன் said...

ஆம் .நன்றி சூர்யா

Post a Comment