Friday, April 29, 2011

# தாதா( சாஹிப் பால்கே)வுக்கு எல்லாம் தாத்தா

இயக்குனர் பால சந்தருக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்ற செய்தி வந்ததும் .....

இது ரொம்ப பொருத்தமான விருது . ஆனா இதுவே ரொம்ப லேட் . 'நூறாண்டுகளுக்கு ' முன்பே பாலச்சந்தருக்கு இந்த விருதை கொடுத்திருக்க வேண்டும் (அதாவது பால்கே பிறப்பதற்கு முன்பே?) என்று மாய்மாலம் பண்ணும் சில பல பத்திரிக்கைகள் ஒருபுறம் .

"அந்த விருதுக்கு உண்மையிலேயே பாலச்சந்தர் தகுதியானவர்தானா? உலகப் படங்களைப் பார்தது காப்பியடித்து கதைச்சுருக்கம் எழுதித் தருவதையே அனந்துவுக்கு வேலையாக கொடுத்து அவற்றை சுட்டு படங்கள் எடுத்தவர் ... அதையும் படமாக எடுக்காமல் , சினிமா என்பது கேமரா மொழி என்பதையே மறந்து ரேடியோ நாடகங்களை பிலிமில் எடுத்து பீம்சிங் ஸ்ரீதர் போன்ற மாபெரும் இயக்குனர் மேதைகள் உயர்த்தி வைத்த தமிழ் சினிமா உத்திகளை பல அடிகள் பள்ளத்தில் தள்ளியவர் ,...... தனது அதிமிகைப் படங்களின் வெற்றியின் மூலம் மகேந்திரன் பாரதிராஜா போன்ற இயக்குனர் சிற்பிகளையும் பின்னால் இழுத்தவர் ... அப்படிப்பட்ட பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது தருவது நியாயமா ?" என்று கொந்தளிக்கும் 'அறிவுஜீவி'கள் மறுபுறம் .....

இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே பக்கம் ஒதுக்கிவிட்டு .. உண்மையிலும் உண்மையான ஒரு விசயத்தைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது .

அதாகப் பட்டது நண்பர்களே .....!

ஆத்துத் தண்ணி கடைமடைப் பகுதிக்கு கடைசியாகத்தான் வரும் எனறால் அது யதார்த்தம் . ஆனால் சிறந்த சாதனைகளுக்காக தரப்படும் உயர்ந்த விருதுகளைக் கூட தகுதி . தரம் பார்க்காமல் வடக்கே இருந்து தெற்கே வரிசையாகக் கொடுத்து கடைசியில்தான் தமிழ்நாட்டுக் கலைஞனுக்கு தருவோம் என்றால் அப்படி செய்பவன் கூட மடையன்தான் . அதுவும் முதல் மடையன் அல்ல . அவன்தான் கடை(சி) மடையன் .

தாதா சாஹிப் பால்கே விருதும் அப்படித்தான் யுகக் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வந்தது . "சிவாஜியைப் பார்த்துதான் நடிப்பு என்றால் என்ன என்றே அறிந்தேன் " என்றும் "புராணங்களில் திரேதா யுகம் , கலியுக என்று பல யுகங்கள் இருக்கலாம் . ஆனால் நடிப்பு எனறால் அது ஒரே யுகம்தான் . அதான் பெயர் சிவாஜி யுகம் " என்றும் கூறிய கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு எல்லாம் தாதா சாகிப் பால்கே விருதைக் கொடுத்து விட்டு கடைசியாக சிவாஜிக்கு தாதா சாகிப் பால்கே விருதை தூக்கிப் போட்டார்கள்
.

சிவாஜிக்கு முன்பு ராஜ்குமாருக்கு கொடுத்தபோதே தாதா விருது , தாத்தா விருதாக வீரியம் இழந்தது .

இப்போது போய் கஞ்சா கருப்பு , சிசர் மனோகர் , கிரேன் மனோகர் போன்ற வளரும் நடிகர்களிடம் கூட உங்களுக்கு தாதா சாகிப் விருது வேணுமா இல்ல மூவாயிரம் ரூபா பணம் வேணுமா என்று கேட்டுப் பாருங்கள் . ":அந்த மானம் கெட்ட விருது நமக்கு எதுக்குண்ணே.. காசு இருந்தா நாலு காஞ்ச வயித்துக்கு சோறாவது போடலாம் " என்பார்கள் . தாதா சாஹிப் பால்கே விருதின் லட்சணம் அவ்வளவுதான் . அந்த விருதுதான் இப்போது பாலச்சந்தருக்கு வழங்கப் பட்டுள்ளது .
இருக்கட்டும் .

ஆனால் இந்திய அளவில் வாழ் நாள் சாதனையாளருக்கான விருதை தாதா சாகிப் பால்கே பெயரில்தான் வழங்க வேண்டுமா? அவரை விட தகுதியானவர் யாரும் கிடையாதா? உண்டு . இருக்கிறார்ஒருவர் . அநியாயமாக மறைக்கப் பட்ட ஒரு சரித்திரம் அது .


ஒட்டுமொத்த இந்தியாவில் இந்தியர் அனைவரும் சமம் என்று வடக்கத்திவாலாக்கள் உண்மையிலேயே கருதி இருந்தால் இந்த தாதா சாகிப் பால்கே விருதை யார் பெயரில் வழங்கி இருக்கே வேண்டும் தெரியுமா? சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற தமிழனின் பெயரில்தான் வழங்கி இருக்க வேண்டும் . சாதனையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் விருது என்ற பெயரில் .

யார் இந்த சாமிக்கண்ணு வின்சென்ட்?

இன்று சினிமாவில் கோடி கோடியாகக் குவித்து மஞ்சள் குளிக்கிற அனைவராலும் நினைவு கூறப் படவேண்டிய தமிழன், இந்தியன்தான் சாமிக்கண்ணு வின்சென்ட் . ஆம்! .இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் இந்த சாமிக்கண்ணுதான். கண்ணு....... !

1883 ல் பிறந்த சாமிக்கண்ணு 1905 இல் தென்னக ரயில்வேயில் எழுத்தராக நம்ம திருச்சிராப் பள்ளி புகைவண்டி நிலையத்தில் பணியாற்றி வந்தார் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் செய்த பணி அவருக்கு திருப்தி தரவில்லை (ஆத்தாடி அன்னிக்கு அது எவ்வளவு பெரிய தொகை!)

அப்போது அவர் திருச்சியில் ஒரு பிரெஞ்சுக்காரரைச் சந்தித்தார் . பெயர் டூபான். டூபானின் தொழில் சினிமாப் படம் காட்டுவது (பார்றா !) இந்தியா, இலங்கை என்று பிரயாணித்துப் போய் சினிமா படம் காட்டி பிழைத்தவர் அவர் . டூபான் காட்டிய சில திரைப்படங்களைப் பார்த்த சாமிக்கண்ணுக்கு அந்த புதிய தொழில்நுட்பம் மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது .... சில்க் சுமிதாவின் பார்வை மாதிரி !. பிடித்துப் போனது.... பத்மினியின் நவரசம் மாதிரி !

ஆனால் டுபானுக்கு? நம்ம ஊர் பழக்கமில்லாத ஊர்.... புதிய சூழ்நிலை!

எனவே தன் வியாபாரத்தை தொடர முடியாத டூபான் தனது படம் காட்டும் கருவிகளையும், படச்சுருள்களையும் விற்க முடிவு செய்தார். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார் சாமிக்கண்ணு . இப்படியாக சினிமா எனும் சொர்க்க பூமி (நன்றி 'புதிய பாதை' பார்த்திபன்) ஒரு பிரஞ்சுக்காரன் கையில் இருந்து ஒரு இந்தியன் கைக்கு முதன்முதலாக வந்தது அப்போதுதான் .

டூபானிடம் இருந்து காசு போட்டு வாங்கிய படக் கருவிகளையும் படச்சுருளையும் கொண்டு சாமிக்கண்ணுவே ஒளிப் படங்களை காட்ட ஆரம்பித்தார்.

1897 ஆம் ஆண்டு லூமியர் சகோக்கள் இயேசுவின் வாழ்க்கை (the life of jesus christ ) என்ற படத்தை நொடிக்கு பதினாறு பிரேம்கள் என்ற மேனிக்கு தயாரிக்கிறார்கள் . இந்தப் படம் 1896 ஜூலை ஏழாம் தேதி முதன்முதலாக இந்தியாவில் திரையிடப் பட்டது

அந்தப் படத்தை சொந்தமாக ஒரு பிரதி வாங்கிய சாமிக்கண்ணு அந்தப் படத்தை இந்தியா முழுக்க போய் போட்டுக் காட்டினார் படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.(மதம் மாறிய கிறிஸ்தவர் அல்லவா? அவருக்கு பொருத்தமான படத்தைதான் காட்டி இருக்கிறார் . ஆமென்!)

தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த படமான "ரயிலின் வருகை' (மலைப்பாங்கான பின்னணி ரயில் ஒன்று நிலையத்தில் வந்து ரயில் நிற்க ஆட்கள் ஏறி இறங்குவதுதான் 46 செகண்ட் ஓடும் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் நாடு முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டினார் சாமிக்கண்ணு வின்சென்ட்

தவிர , அயல் நாடுகளிலிருந்து படச் சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார் சாமிக்கண்ணு . ( இவர் தயாரித்த படங்களுடன் சேர்த்து, மொத்தம் 136 வெளிநாட்டு மவுனப் படங்கள் தமிழகத்தில் காட்டப் பட்டுள்ளன ) தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவிஇருக்கிறார்

ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த ஒரு படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். . மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தி ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்.. படம் பார்ப்பதற்குகட்டணமாக அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கியிருக்கிறார் .

மவுனப் படம் என்பதால் அதன் கதையை விளக்குவதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கையில் குச்சியுடன் திரையருகே நிற்பாராம் சாமிக்கண்ணு .

(கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் மருதமுத்து மூப்பனார் என்பவர் இங்கிலாந்து சென்று அன்றைய இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து தமிழகத்தில் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்தி )

சும்மா குச்சியோடு நின்றதோடு நின்று விடவில்லை சாமிக்கண்ணு . படம் காட்டும் முறையில் பல புதுமைகளை அறிமுகப் படுத்தினார் அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) கொட்டகை சினிமா. ஒரு புது ஊருக்கு படம் காட்டச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிடுவார் . இப்படி டெண்ட் அடித்து படம் காட்டுவது இவர் செய்த பெரிய புதுமை

அது மட்டுமல்ல . சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் சினிமா காட்ட என்றே முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார்சாமிக்கண்ணு . (பெயரைப் பார்த்தீர்களா? தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சமர்ப்பணம்!) மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, வட இந்தியா , மலேசியா ,சிங்கப்பூர் , பர்மா ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார்.

மழைக்காலத்தில் டெண்டுக் கொட்டகை ஒழுகி படம் பார்க்க விடாமல் தொந்தரவு செய்வதைப் பார்த்த சாமிக் கண்ணு சினிமா காட்ட கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை முடிவு செய்து முதன்முதலில் (இந்தியாவில் என்று தாராளமாகச் சொல்லலாம்) 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (பின்னாளில் அதுதான் கோவை டிலைட் தியேட்டர் )இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்களாம் இந்தத் திரையரங்குக்கு .

சாமிக்கண்ணுவைப் பின்பற்றி சென்னையில் வெங்கையா என்பவரால் கெயிட்டி திரையரங்கம் கட்டப் பட்டது , நீண்ட ஆயுள் பெற்ற திரையரங்கம் இது )இதையடுத்து சென்னையில் மேலும் சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.

இங்கேதான் அந்த சம்பவம் பற்றி குறிபிட வேண்டியுள்ளது .

வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய ஏசுவின் வாழ்க்கை படத்தை பார்க்கிறார் ஒருவர் ,

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள , டிம்பகேஷ்வர் என்ற ஊரில் பிறந்து மும்பையிலும் பரோடாவிலும் கல்வி கற்று கோத்ரா நகரில் ஒரு போட்டோ கிராபராக வாழ்க்கையைத் துவக்கி, இந்திய தொல்பொருள் துறையில் டிராப்ட்ஸ் மேனாக பணியாற்றி ஓவியர் ராஜா ரவி வர்மாவிடமும் பணியாற்றி .....லூமியர் சகோதரர்களின் கீழ் பணியாற்றிய நாற்பது மேஜிக் பணியாளர்களில் ஒருவரான கார்ல் ஹெட்ஸ் என்பவரையும் சந்திக்கும் வாய்பையும் பெற்றிருந்த ....(கொஞ்சம் மூச்சு விட்டுக்கவா?)அவரின் பெயர் தண்டி ராஜ் கோவிந்த பால்கே . உங்கள் எல்லோருக்கும் உடனே புரிய வேண்டும் எனறால் தாதா சாஹேப் பால்கே !

நம்ம ஊரு வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய இயேசுவின் வாழ்க்கை படத்தைப் பார்தது கவரப் பட்டு சினிமா என்கிற தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்ட பால்கே, பிறகு படம் எடுக்கவே முடிவு செய்தார் . மும்பை காரனேஷன் அரங்கில் நடிக்கப் பட்ட புண்டளிக் என்ற மேடை நாடகத்தை முதன்முதலில் படம் பிடித்துப் பார்த்தார் பால்கே . (சத்தம் எதுவும் வராது . ஊமைப் படம்தான் )

1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் படமான அதாகப் பட்டது முதல் மவுனப் படமான ராஜா ஹரிச் சந்திராவை தயாரித்து 1913 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள், புண்டளிக் மேடை நாடகத்தை படம் பிடிதத , அதே மும்பை காரனேஷன் அரங்கில் போட்டுக் காட்டினார் .

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் அந்த ஹரி சந்திரா .

படம் எடுத்த பால்கே பெயரால் வருடா வருடம் கம்பீர திரை விருது

அதில்தான் நம்ம சிவாஜிக்கு தர வேண்டிய சமயத்தில் தந்து கவுரவப் படுத்தாமல் தோலான் துருத்திகெல்லாம் கொடுத்து விட்டு கடைசியாக தூக்கிப் போட்டார்கள் .

ஆனா அந்த பால்கே வுக்கே படம் எடுக்க தூண்டுதலாக இருந்த ... பால்கேவுக்கு சினிமா சொல்லிக் கொடுத்த முதல் இந்திய சினிமாக்காரர் வின்சென்ட் சாமிக்கண்ணு பேரால் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் விருதாவது உண்டா?

ஒருவேளை வின்சென்ட் சாமிக்கண்ணு அந்தக் கால ராமேஸ்வரம் மீனவரோ என்னவோ?

பால்கேவுக்கு படம் காட்டியதோடு நின்றிருந்தால் கூட சாமிக்கன்னுவைப் புறக்கணிப்பதற்கு ஒரு சொட்டை சொள்ளை காரணமாவது கிடைக்கும் .

ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்த சாமிக்கண்ணுவின் சாதனைகளைச் சொல்லவா?

தாங்குவீர்களா?


கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. . தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு தர அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமியின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப் பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.

சினிமா துறைக்கும் சாமிக்கண்ணு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல

ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்க்கேற்றபடி புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, 1933 இல் கல்கத்தா சென்று வள்ளி திருமணம் என்ற பேசும்படத்தை தயாரித்தார் . புகழ்பெற்ற நடிகை நடிகை டி பி ராஜ லட்சுமி , வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் அப்போதே தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது அந்தப் படம் . . அதன் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணு தனது வெரைட்டி ஹால் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் .

இதோடு போச்சா ?1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார்.(அப்படியும் புறக்கணிச்சுட்டாங்களே ) மொத்தம் பதினெட்டு திரையரங்குகள் வைத்திருந்தார் சாமிக்கண்ணு .

பின்னாளில் பெறும் புகழ் பெற்று தமிழ் சினிமா நாயகர்கள் பலரை உருவாக்கிய சென்ட்ரல் ஸ்டுடியோஸ் 1937 இல் கோவையில்தொடங்கப் பட்டபோது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார்.

இப்படிப் பட்ட ஒரு மாபெரும் சினிமாக்காரனை மறைத்து விட்டுதான் தாதா சாஹிப் பால்கேவை மட்டு தூக்கிப் பிடித்தார்கள் தாதாத்தனமாக !


இப்போது சொல்லுங்கள் தாதாசாஹிப் பால்கே விருது யார் பெயரால் வழங்கப் படவேண்டும் . இந்த உண்மையை உரக்கச் சொல்லிவிட்டு அப்புறம் நம்மவர்கள் விருது வாங்கப் போகட்டும் .

2 comments:

ராஜ நடராஜன் said...

முன் பாதி விவாதக்குடையது என நினைக்கிறேன்.நிலைத்து விட்ட ஒன்று என்பதால் மட்டுமே தாதா பால் சாகேப் விருது பிரபலமாயிருக்கிறது.விருதுகளின் பின்னாள் உள் அரசியல் இருப்பதை காங்கிரஸ் என்றே கட்டி அழுத சிவாஜிக்கு கிடைக்காமல் பாரத் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட வரலாறும் நிகழ்ந்த ஒன்றுதான்.

காலம் கடந்தாவது பாலசந்தருக்கு விருது கிடைத்ததில் பெருமை கொள்ளலாமே?

இரண்டாம் பாதிதான் உங்க இடுகைக்கு வலிமை சேர்க்கிறது.புதிய தகவல்களுக்கு நன்றி.

சு.செந்தில் குமரன் said...

நன்றி ராஜ நடராஜன் . முதல் பாதி உங்கள் எனது நமது சமூகத்தின் பிரதிபலிப்பு (நான் என்ன செய்யட்டும்?) இரண்டாம் பகுதி எனது த்கிரட்டிய கருத்துக்கள் . பாராட்டுக்கு நன்றி .
அப்புறம் .. அது என்ன?
//காலம் கடந்தாவது பாலசந்தருக்கு விருது கிடைத்ததில் பெருமை கொள்ளலாமே?//
காலங்கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் . சொன்னது நான் இல்லை . இந்திய அரசியல் சட்டம்

Post a Comment