Monday, January 4, 2010

# வன்முறைக் களமாகும் தமிழ்த் திரையுலகம்





சினிமாவில் சண்டைக்காட்சிகள் என்பது, இறுதியில் எப்படியாவது அநியாயத்தை நியாயம் வெல்லும் என்று உணர்த்துவதற்காகவே வைக்கப்பட வேண்டியவை. அதன் நோக்கம் வன்முறை உணர்வை வளர்ப்பது அல்ல’ என்று படைப்பாளிகள் தெளிவாக உணர்ந்திருந்த காலகட்டம் ஒன்று உண்டு

எம்.ஜி.ஆர். படங்களின் சண்டைக் காட்சிகளில் நம்பியார் அடித்து, எம்.ஜி.ஆரின் முகத்தில் லேசான ரத்தக் கீறல் மட்டுமே வரும். கடைசியில் அதிக பட்சமாக நம்பியாரின் கடைவாயிலோ, அசோகனின் நெற்றியிலோ சற்றே ரத்தம் படர்ந்து இருக்கும். அது கூட முழுதாகத் தெரியாமல் கையை வைத்தோ கர்ச்சீப்பை வைத்தோ அழுத்திக்கொள்வார்கள். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் சண்டைக் காட்சியில் ஆர்.எஸ்.மனோகர் கையில் இருந்து சில துளிகள் ரத்தம் தரையில் சிந்துவது போன்ற ஒரு காட்சியில், தான் கொடுத்த உற்சாக எக்ஸ்பிரஷனுக்காக பின்னாளில் எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார் என்றே சொல்வார்கள்.

எப்படி அடித்து எப்படி அலற வைப்பது, உடம்பின் எந்தப் பகுதியை எப்படி உருட்டிப் பிதுக்கி நறநறவென முறிப்பது... எப்படியெல்லாம் அடிபட்டவனை விதவிதமாக அலற வைப்பது என்பதில் பெரிய பாடமே எடுக்கின்றன இன்றைய தமிழ்ப்படங்கள். அதுவும் இதைச் செய்வது கதாநாயகர்கள்.

அண்மையில் வந்த ‘ரேனிகுண்டா,’ ‘யோகி,’ ‘வேட்டைக்காரன்’ போன்ற படங்களில் காட்டப்படும் வன்முறையும், வன்முறையைச் செய்யும் விதங்களும், செய்யும் கதாபாத்திரங்களும், வன்முறை தவறு என்ற எண்ணத்தைச் சொல்வதைவிட, அவற்றை ஆர்வத்துடன் கவனிக்கும் மனோ நிலையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

‘ரேனிகுண்டா’ படத்தில் ஐந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு பெரிய ஆளைக்கூட உடம்பின் எந்தப் பகுதியில் எப்படி அடித்து, வீழ்த்திக் கொலைசெய்யலாம் என்று தொழில்நுட்பப் பாடமே எடுக்கின்றனர்.

ஒரு இன்ஸ்பெக்டர் நான்கு சிறுவர்கள் மீது தேவையில்லாமல் மிருக வெறி பிடித்து அலைகிறார். தவறு செய்கிற சமூக விரோதிகளுக்குத் துணை போவதும் அதைத் தட்டிக் கேட்க நினைப்பவர்களை உயிரைக் கொடுத்தாவது கொலை செய்ய அலைந்து திரிந்து சாதிப்பதும்தான் காவல்துறையின் கடமை என்று புதிய பாடம் எடுக்கிறார்கள், இந்தப் படத்தை உருவாக்கியவர்கள்.

‘யோகி’ படத்தின் ஒரு காட்சியில் ஒரு பச்சைக் குழந்தையை ஒரு கட்டெறும்புக் கூட்டமே குதறியெடுக்கும் காட்சியில், கொடூரமாக உண்மையாகவே குழந்தையின் உடம்பு முழுக்க நூற்றுக்கணக்கான கட்டெறும்புகளை மேயவிட்டு எடுத்திருக்கிறார்கள். குழந்தையின் உடம்பைக் கடித்துக் கொண்டிருக்கும் கட்டெறும்புகளை கதாநாயகன் பிடுங்கி எறிகிறான். குழந்தையின் வாயில் இருந்த ஒரு கட்டெறும்பை எடுக்கிறான். அந்தக் குழந்தை நிஜமாகவே அழுது அழுது முகம் வீங்கியிருப்பது படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது.

முன்பு ஓர் இயக்குநர், ஒரு படத்திற்காக நிஜமாகவே ஒரு நாயை வெட்டிப்போட்டார் என்பார்கள். அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டார் ‘யோகி’ இயக்குநர்.

டைரக்ஷன் என்பது படப்பிடிப்புக்காக நடக்காத ஒன்றை நடப்பதுபோல் காட்டுவதுதான்; உண்மையாகச் செய்து அதைப் படம்பிடித்துக் காட்டுவது அல்ல. அப்படிச் செய்தால், கேமரா வைத்திருக்கும் மனநோயாளிகளுக்கும் இயக்குநர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்பதை இவர்கள் உணராமல் போனது ஏன்? என்று தெரியவில்லை.

‘நான் அவனில்லை’ பாகம் 2 ம் சரி; முதல் பாகமும் சரி... நியாயம் சொல்வதுபோல அநியாயத்தை ஊக்குவிக்கும் புத்திசாலித்தனமான விஷயங்கள்தான்.

பேராசைக்கார பெண்களை ஒருவன் அநியாயமாக ஏமாற்றுவானாம். அவர்களின் பேராசையைக் காட்டியே, தான் செய்த தவறை நியாயப்படுத்துவானாம். ஒரு பெண் தனக்குக் கணவனாக வருபவன் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு என்ன இருக்க முடியும்? ஆனால், அந்தப் பாவத்திற்காக ஒருவன் ஒரு பெண்ணை சிதைக்கலாம் என்பதுதான் ‘நான் அவனில்லை’ படம்!

'Discourtest is not a legal offence' என்பது ஒரு புகழ்பெற்ற சட்டவாக்கியம். ‘‘அநாகரிகக் குணம் என்பது சட்டவிரோதமான நடவடிக்கை இல்லை’’ என்பது இதன் பொருள். ஒரு பெண் தனக்கு வரவேண்டிய கணவன் நல்லவனா என்பதை விட, பணக்காரனா என்பதுதான் முக்கியம் என்று நினைத்தால், அது அநாகரிகமான செயல்தான். அதற்கு சட்டத்தில் தண்டனை இல்லை. ஆனால், ஆறு மாதத்துக்கு ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்வதும், கற்பைச் சூறையாடுவதும் கடுங்காவல் தண்டனைக்குரிய குற்றம். இதை மறைத்து அநாகரிகத்தின் பதிலடியாகக் குற்றத்தை நியாயப்படுத்தும் ‘நான் அவனில்லை’ போன்ற படங்கள், திருட்டு மாப்பிள்ளைகள் உருவாகக் காரணமாகின்றன. (‘நான் அவனில்லை’... இது நியாயமில்லை. மூன்றாம் பாகம் எடுத்துவிடாதீர்கள். புண்ணியமாகப் போகட்டும்!)

தாலிகட்டிய மனைவிக்கும், பிள்ளைக்கும், மனைவியின் குடும்பத்துக்கும், ஊருக்கும் தீமைகள் செய்த ஒருவனை கடைசியில் குற்றவாளி என்று நிரூபித்து, அவனை அடித்துக்கொல்லாமல் புறக்கணித்துவிட்டு ஊரே விலகி நடக்க, அந்தப் பெருந்தன்மையின் கனம் தாள முடியாமல், அந்தக்குற்றவாளி ஊரில் உள்ள ஒவ்வொருவர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்கும், ‘சின்னக் கவுண்டர்’ படத்தின் இறுதிக் காட்சி, இன்னும் மனதில் கோபுரமாய் நிற்கிறது.

அதில் வில்லனாக நடித்த அதே சலீம்கவுஸ் இப்போது வில்லனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘வேட்டைக்காரன்.’

கையில் கிடைக்கிற பொருள்களை வைத்து எப்படி எப்படியெல்லாம் கொடூரமான உடனடி ஆயுதம் தயாரித்து, குரூரமாக அடித்துக் கொல்லலாம் என்று ஸ்பெஷல் கிளாஸ் நடத்துகிறார்கள் இப்படத்தில்.

படத்தின் இன்னொரு வில்லன் அண்ணா சாலையில் வாகனத்தில் போகும்போதுகூட யாராவது அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் தூக்கி வரச்சொல்லி அனுபவிப்பாராம். கடன், ஃபைனான்ஸ் என்று இதற்கு சப்பைக்கட்டுக் காட்சிகள். நட்சத்திர ஓட்டல் பார்களிலும் சில நிழலான இடங்களிலும் நடைபெறும் செயல்களை எல்லாம் ஒரே ரோட்டில் பட்டப்பகலில் நடப்பது போல காட்டுவது என்ன நியாயம்? இல்லை அப்படி யாராவது உருவாகவேண்டும் என்பது இவர்களின் ஆசையா?

‘‘ஏன் இப்படிக் கெட்டுப் போனீர்கள்? சமுதாயத்தையும் கெடுத்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘எந்தப் படத்தைப் பார்த்து சீதையை ராவணன் தூக்கினான்?’’ என்பார்கள். ஆனால், ‘‘ராமாயணம் படித்து ‘மூட்’ ஆகி ஒரு பெண்ணைக் கற்பழித்தான்’’ என்று எந்தக் குற்றவாளியும் கோர்ட்டில் சொல்லவில்லை. ஆனால், ‘‘ ‘நூறாவது நாள்’ படம் பார்த்துக் கொலை செய்தேன்’’ என்று கூறியதுதான் உண்மை.

ஒரு காலத்தில் நாம் இந்தி சினிமா என்றால் இளக்காரமாக கேவலமாகப் பார்த்தது உண்டு. அது நியாயமாகவும் இருந்தது. திலகங்கள், சிகரங்கள், இமயங்கள் காலம் வரை நமக்கு அந்தத் தகுதியும் இருந்தது.

ஆனால் இன்று, ‘ப்ளாக்,’ ‘லியர்,’ ‘ஃபா’ படங்கள் மூலம் எல்லா வகையிலும் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார் நான்தான் என்று நிரூபித்துக் கொண்டுள்ளார் அமிதாப் பச்சன்

. தமிழ் சினிமா படைப்பாளிகளே! நீங்கள் எப்போது திருந்தப் போகிறீர்கள்?

திரைப்படம் என்ற பெயரில் நீங்கள் போடும், ‘கொத்து’ பரோட்டாக்களை காலம் குப்பையில் தள்ளிவிடும்.

கவனத்தில் கொள்ளுங்கள்!

1 comment:

சு.செந்தில் குமரன் said...

நல்லதொரு கருத்து hands of

நல்லதொரு கருத்து
hands of you

* பதில்எழுது

செவ்வாய், 05/01/2010 - 1:40pm — dharshi
dharshi's படம்
இது போன்ற பதிவுகள் தற்போதைய

இது போன்ற பதிவுகள் தற்போதைய சமுதாயத்திற்கு மிகவும் தேவை மிக்கநன்றி

* பதில்எழுது

செவ்வாய், 05/01/2010 - 5:17pm — su.senthilkumaran
su.senthilkumaran's படம்
நன்றிகள்

இருவருக்கும் இதயமார்ந்த நன்றிகள்

* மாற்று
* பதில்எழுது

செவ்வாய், 05/01/2010 - 7:27pm — VISWAM
VISWAM's படம்
அருமையான அலசல். ஹீரோ

அருமையான அலசல். ஹீரோ வில்லனைவிட கொடுமைக்காரனாக மாறுவது தமிழ்படங்களில் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

* பதில்எழுது

புத, 06/01/2010 - 12:07pm — su.senthilkumaran
su.senthilkumaran's படம்
நன்றி விஸ்வம்

நன்றி விஸ்வம், உங்கள் கருத்துக்கு

* மாற்று
* பதில்எழுது

புத, 06/01/2010 - 6:15pm — paramaswari
paramaswari's படம்
ஆஹா! அருமை. என் மனதில்

ஆஹா! அருமை. என் மனதில் உதித்த‌ உணர்வுகளை அப்படியே வடித்தெடுத்திருக்கும் உங்கள் பாங்கு அருமை நண்பரே!

Post a Comment