Tuesday, January 5, 2010

தமிழகத்தையும் இரண்டாகப் பிரிக்கலாமா?





ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பிரச்னை பெரிதாக வெடித்து போராட்டம், வன்முறை, தீ வைப்பு எல்லாம் நடந்து, கடைசியில், ‘‘இன்னும் நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்கத் தயார்’’ என்று சந்திரசேகர ராவும் அறிவித்துவிட்டார்.

தெலுங்கானா போராட்டம் பக்கத்து மாநிலப் பிரச்னையாக இருந்தாலும் சென்னை நகரச் சமைய-லறைகளையும் அது பாதித்தது. லாரிகள் ஸ்டிரைக் காரணத்தால், ஆந்திராவில் இருந்து காய்கறிகள் வராமல் போக, கத்திரிக்காயும், சேனைக்கிழங்கும் விலை எகிறியது என்கிறது கோயம்பேட்டுச் செய்திகள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தையும்நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கலாம்; தப்பில்லைஎன்ற தனது பழைய கோஷத்தை முன்னெடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். உடனே முதல்வர் கலைஞர் அதை மறுக்க, ஜெயலலிதாவும் அத்தி பூத்தாற்போல, கலைஞர் கருத்தையே கூறியுள்ளார். உடனே எல்லோரும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர். தங்கபாலுகூட தமிழகத்தின் மீதுஅக்கறைஇருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்- என்றால், பார்த்துக்கொள்ளுங்களேன்.

நிர்வாக வசதிக்காக மாநிலங்களைப் பிரிப்பது தவறு அல்ல. ஆனால், நோக்கம் முக்கியம். ‘‘காலகாலமாக நாங்கள் ஏனைய ஆந்திராவால் ஏமாற்றப்படுகிறோம். எங்கள் வறண்ட பகுதி மேலும் வறண்டு போகிறது’’ என்று தெலுங்கானா மக்கள் பிரிவினை கேட்பதில் கொஞ்சம் நியாயம் உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில்? எந்தப்பகுதி வாழ்கிறது? காலம்காலமாக இங்கே ஆளும் அரசியல்வாதிகள், தங்கள் சொந்த வசதிக்காகவும் சுயநலத்துக்காகவும் எல்லா கட்டுமானங்களையும் முன்னேற்றங்களையும் சென்னையிலேயே ஏற்படுத்தி மற்ற பகுதிகளை ஏய்த்து சென்னையையும் அளவுக்கு மீறி, வீங்க வைக்கின்றனர். இங்கே எந்தப் பகுதி பொறாமைப்படும்படி, எந்தப்பகுதி வாழ்கிறது? எதுவுமே இல்லை.

அப்படியானால் ராமதாஸ் சொல்லும்நிர்வாக வசதிஎது? வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று இரண்டாகப் பிரித்தால் அவருக்கு நல்லது. எவ்வளவு போராடியும் எல்லா முக்கியக் கட்சிகளோடும் மாறி மாறி கூட்டணி வைத்தும் தென் தமிழ்நாட்டில் அவரால் கட்சி வளர்க்க முடியவில்லை. வட தமிழகம் தனியாகப் பிரிந்தால் சாதி அரசியல் பலத்தால் இங்கே ஆட்சி பிடிப்பது அவரது கனவு. அட, முதலமைச்சர் ஆக முடியாவிட்டாலும் கூட்டணி ஆட்சியில் பங்குபெறலாமே. அவரிடமே தமிழகத்தை நெடுக்கு வாக்கில் வடக்கிருந்து தெற்காக, கிழக்குத் தமிழ்நாடு மேற்குத் தமிழ்நாடு எனப் பிரிக்கலாமா கேளுங்கள். அலறி அடித்து வேண்டாம் என்பார்.

‘‘40 எம்.பி.க்களாக இருக்கும்போதே நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. பல பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை. இரண்டாகப் பிரிந்தால் பலம் குறைந்து எதையும் சாதிக்க முடியாமல் போய்விடும்’’ என்ற, பி.ஜே.பி. துணைத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து யோசிக்க வைக்கிறது. ஆனால், முன்னாள் பி.ஜே.பி. அமைச்சரான ஜஸ்வந்த்சிங் மேற்கு வங்காளத்தை இரண்டாகப் பிரித்து கூர்க்காலாண்ட் மாநிலம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். உணர்வு ரீதியாக அவர்கள் எப்போதோ பிரிந்து விட்டனர் என்கிறார். இதையொட்டி நடந்த பந்த் காரணமாக டார்ஜிலிங் நகரமே ஸ்தம்பித்துப் போனது.

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகள் தமிழகம் பிரிக்கப்படலாமா என்ற கருத்தை எதிர்த்தும் ஆதரித்தும் கூறும் கருத்துக்கள் எல்லாம் சுயநல அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தைப் போல, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கருத்து, செயல்படுத்த வேண்டிய ஒன்று. ‘‘மொழிவாரி மாநிலங்களைத் திருத்தி அமைக்க வேண்டும்’’ என்கிறார் அவர். அதற்கு ஏற்ப பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பீகாரில் இருந்து பிரிந்து போன ஜார்க்கண்ட் மாநிலத்தை மீண்டும் பீகாருடன் இணைக்க வேண்டும் என்கிறார் அவர். அதோடு ‘‘மாநில மறுசீரமைப்பு கமிஷன் வேண்டும்’’ என்கிறார் அவர்.

உண்மையில் மாநில மறுசீரமைப்பு கமிஷன் கோரிக்கையை எழுப்ப அதிகத் தகுதி, உரிமை, அவசியம் எல்லாம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். ஏனெனில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதிகம் ஏமாற்றப்பட்டது தமிழ்நாடுதான். மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக முதலில் அமைக்கப்பட்ட ஒரு கமிஷன் சொன்னபடி ‘‘நிலம் யாருக்குச் சொந்தம் என்பது முக்கியமல்ல. வாழும் மக்களில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கிறார்களோ, அந்த மாநிலத்தோடு இணைக்கப்படும்’’ என்று கூறி, தமிழர்களின் பாரம்பரிய நிலமான ராயலசீமாவைதெலுங்கு மக்களைத் தொடர்ந்து குடியேற்றியே சாதித்து ஆந்திராவுடன் சேர்த்தனர்.

அதே தமிழககேரளப் பிரச்னையின்போது, ‘‘மக்கள் பேசும்மொழி முக்கியம் இல்லை. நிலத்தின் உரிமையாளர்கள் யார் என்பதே முக்கியம்’’ என்று புதிய கமிஷன் அமைத்து அப்படியே திருப்பிப் போட்டு, நெய்யாறு, நெடுமங்காடு, முல்லைப்பெரியாறு, பீர்மேடு போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களையும் அடித்து உதைத்து கேரளாவுடன் சேர்த்துக்கொண்டனர். கண்ணகி கோயிலே கேரளாவுக்குள் போனது. இன்னும் கொடுமையாக பெங்களூர் என்ற தமிழ் நிலப்பகுதி கர்நாடகாவின் தலைநகராகவே மாறியது. குடகு மக்கள் கலாசாரம் பூர்வீகம் காரணமாக, தமிழகத்தோடு இணையவேண்டும் என்று விரும்பியும், வலுக்கட்டாயமாக கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டனர். தமிழகத்துடன் சேரவேண்டிய காவிரி உற்பத்தியாகும் குடகுமலை கர்நாடகாவோடு போனது. இதைச் சாதித்துக் கொடுத்தவர் விஸ்வேஸ்வரய்யா. தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அன்று அதை வேடிக்கை பார்த்தனர்.

அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நமக்கு காவிரி பிரச்னையே கிடையாது. காவிரி உற்பத்தியாகும் நிலம் தொடங்கி முடியும் வரை தமிழகமாகவே இருந்திருக்கும்.

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை விட வலுவான குரலில் மாநில மறு சீரமைப்புக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழக முதல்வர் கலைஞரோ, ‘‘மாநிலப் பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்ற சொல்லோடு தனது கடமையை முடித்துக்கொள்கிறார். அவர் மட்டுமல்ல...

தமிழையும், தமிழ் இனத்தையும், தமிழ் நிலத்தையும் நேசிப்பதாக வாய்ச்சவடால் பேசும் எல்லா தமிழக அரசியல்வாதிகளும், இந்த நேரத்தில் தெலுங்கானா பிரச்னையைப் பயன்படுத்தி நிதீஷ்குமாரைப்போலவே மாநில மறுசீரமைப்புக்குக் குரல்கொடுத்து, தமிழகம் இழந்த நிலங்களை மீட்கப் போராடவேண்டிய தருணம் இது.

அரசியல்வாதிகளுக்கு முன்பு மக்களே இதை ஆரம்பித்துவிட்டனர். அன்று அநியாயமாக ஆந்திராவிடம் சிக்கிக்கொண்ட தமிழகப் பகுதிகளில் சத்தியவேடு, நாகலாபுரம், பிச்சாட்டூர் உள்பட 163 கிராமங்களை தமிழகத்துடன் இணைக்கக்கோரி கடந்த 13, 14ம் தேதிகளில் மக்களே நான்கு மணிநேரம் போக்குவரத்தை நிறுத்திப் போராடியுள்ளனர். ஈழத்தமிழருக்காகப் போராடிய சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்துத் துவைத்ததுபோல், இந்தப் போராட்டத்தையும் ஒடுக்காமல் இருப்பது அனைவரின் கடமையாகும்.

ஆக, தமிழக அரசியல் தலைகளே! ஏற்கெனவே பிரிந்து கிழிந்துப்போன பகுதிகளை மீண்டும் இழுத்துப்பிடித்து இறுக்கமாகத் தைக்கிற வழியைப் பாருங்கள். இருப்பதைப் பிரித்துக் கிழிப்பது இருக்கட்டும்!

2 comments:

சீ. பிரபாகரன் said...

தமிழன் இழந்த மண்ணையும், உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதும், குறிப்பாக மானமுள்ள தமிழர்களுக்கு பொறுப்பு சற்று கூடுதலாகவே உள்ளது என்பதும் உண்மை.

இருப்பினும் தமிழ்நாட்டு தமிழன் இழந்த உரிமைகளை மீட்க எந்தத்தலைவரின் பின்னால் செல்லவேண்டும் என்பதே தற்போதுள்ள பிரச்சனை. மேலும் தமிழ்நாட்டில் தமிழினத்தை சுரண்டி கொழுத்து தமிழினத்தை காட்டிக்கொடுக்கும் கருணாநிதி கும்பலின் ஆளுமை இருக்கும்வரை தமிழனின் எந்த உரிமையும் மீட்டெடுக்க முடியாது என்பதை இனமாமுள்ளவர்கள் உணரவேண்டும்.

“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற குரல் தமிழ்நாட்டுக்குள்ளும் பரவலாக தற்போது ஒளிக்கிறது. தமிழ்நாட்டில் வடக்கு வாழவில்லை என்பதே உண்மையிலும் உண்மை.

வடதமிழ்நாட்டில் தமிழனுக்கு இருந்த உரிமைகள் அனைத்தும் வளர்ச்சி முன்னேற்றம் என்ற பெயரால் தமிழனள்ளாத அன்னியர்களிடம் விற்கப்படுகிறது என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் மருத்துவர் இராமதாசுதான் சாதிபற்றோடு இருப்பது போலவும் மற்ற சாதியினர் சாதியே பார்க்காதவர்கள் என்பது போலவும் ஒரு பொய் பிரச்சாரம் வன்னியரல்லாத பிற சாதிவெறியர்களால் பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் தான்சார்ந்த சாதி சங்கத்தோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொள்ளாத தலைவர் யார் யார்? தொழிலதிபர்கள் யார் யார்? அமைச்சர் பெருமக்கள் யார் யார்? சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் யார்? சிந்தனையாளர்கள் யார் யார்? எழுத்தாளர்கள் யார் யார்? பகுத்றிவாளர்கள் யார் யார்? என தங்களால் கூறமுடியுமா? கூட்டிக் கழித்துப்பார்த்தால் உண்மையான பெரியார் தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

தமிழ்நாட்டில் உண்மையாக சாதிபற்றற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதை தாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வடதமிழகம் தென் தமிழகம் என்று இரண்டு மாநிலங்கள் வேண்டும் என்ற கோரிக்கை மருத்துவர் இராமதாசு மட்டும் வைத்த கோரிக்கை அல்ல. மருத்துவர் சேதுராமனும் வைத்த கோரிக்கைதான். மேலும் இந்த கோரிக்கை இவர்கள் முன்வைத்த கோரிக்கையல்ல தமிழ்நாட்டில் ஆங்காங்கே கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வைக்கப்படும் கோரிக்கைதான் என்பதை தாங்கள் உணரவேண்டும்.

எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் தன்னை யார் என்று உணர்ந்து, தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்ற உணர்வும் தமிழனின் மண்ணும் உரிமைகளும் மீட்கப்படவேண்டும் என்ற உணர்வும் ஒவ்வொரு தமிழனுக்கும் வேண்டும் என வேண்டுகிறேன்.

சு.செந்தில் குமரன் said...

அன்பு நண்பர் பிரபாகரனுக்கு ..
உங்கள் பெயருக்காக ஒரு முறை உங்களை மதிக்கிறேன். உணர்வுக்காக
மற்றொரு முறை மதிக்கிறேன்.
(நீங்கள் மட்டும் தங்க பாலுவுக்காக வாதாடி இருந்தால் நான் உங்களிடம் பேசும்
முறையே வேறு. )
உங்கள் கருத்துகளை முற்றிலும் தலை வணங்கி ஏற்கிறேன்.
உங்கள் ஆழ்ந்த பார்வையை மதிக்கிறேன்.
என் கருத்து என்னவென்றால் மாநிலப் பிரிப்பு மூலம் மேலும் பின்னாளில்
சாதி மோதல்கள் மாநில எல்லைகள் என்ற பெயரில் பிரிந்து , தமிழனிடம் இருக்கிற‌
அரைகுறை இன உணர்வும் பிரிந்து விடக் கூடாது . சீரங்கம் தீவு யாருக்கு
என்று வட, தென் தமிழகங்கள் அடித்துக் கொள்ளக் கூடாது அல்லவா?
மராட்டியத்தின் தலை நகர் மும்பை என்று இருந்தாலும் அதே நேரம் மற்ற
நகரங்களும் திட்ட மிட்டு வளர்க்கப்படுவது போல, இங்கும் செய்யலாம் ; பிரிக்கத்
தேவையில்லை என்பதே எனது கருத்து .

Post a Comment